காலகாலமாக இயற்கையோடு இயைந்து, வனப்பகுதியில் வாழ்ந்துவருபவர்கள் தான் ஆதிவாசிகளான பழங்குடியினர் எனப்படும் மலைவாழ் மக்கள். அதே வனப்பகுதியைப் பாதுகாப்பதற்கான அதிகார அமைப்பு தான் வனத்துறை நிர்வாகம். தற்போது, புலிகளைப் பாதுகாக்கிறோம் என்ற நோக்கில், அடர்ந்த வனப்பகுதியில் வாழ்ந்துவரும் அப்பாவி ஆதிவாசி மக்களை அவர்களின் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றியதோடு அவர்களுக்கு உரிய நிவாரணங்களும் வழங்கப்படவில்லையென்று புகார் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் அடர்ந்த வனப்பகுதியிலிருக்கும் புலியாயும், நாகம்பள்ளி, குண்டித்தால், மண்டகரை, பெண்ணை உள்ளிட்ட ஏழெட்டு வனக் கிராமங்களில் வசித்த சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட காட்டு நாயக்கர், பளியன், பெட்ட குறும்பர், மவுண்டன்செட்டி, இருளர் பழங்குடியின மக்களை கடந்த 2012-ல் கட்டாயமாக வெளியேற்றியது வனத்துறை.
அந்த மலைமக்களுக்கு வன உரிமை சட்டப்படி எந்த சட்டப் பாதுகாப்பும் செய்யப்படாமல் ஏதோவொரு வனப்பகுதியைக் காட்டி, இங்க எல்லாரும் இருந்து கொள்ளுங்கள் என அடையாளப்படுத்திவிட்டுப் போய்விட்டது வனத்துறை. அதில் அவர் களுக்கான இழப்பீட்டுத் தொகையை முறையாக வழங்காமல், வனத்துறையின் அதிகாரிகள் மற்றும் அவர்களின் சார்பாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் அந்த மக்கள். கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து நீதி கேட்டுப் போராடிவரும் அம்மக்களுக்காக தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள், கட்சிகள் களமிறங்கியுள்ளன. கடந்த வாரம் கூடலூர் காந்தி திடலில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் கலந்துகொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவிக்கையில், "நாங்கள் காலங்காலமாக வாழ்ந்த மலை கிராமத்தை, புலி வந்துவிட்டது எனக்கூறி வனத்துறை அதிகாரிகள் காலி செய்துவிட்டார்கள். புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை என வனவிலங்குகளோடு தான் எங்கள் வாழ்வும் உள்ளது. எந்த விலங்கும் எங்களுக்கு எதிரி கிடையாது. அதேபோல் விலங்குகளும் எங்களை எதிரியாகப் பார்க்க வில்லை. ஆனால் அரசாங்கம் தான் மக்கள் அங்கு இருக்கக்கூடாது என உத்தரவு போடுகிறது. எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டு, புறம்போக்கு நிலத்தைக் காட்டி, இங்கு இருந்து கொள்ளுங்கள் எனக் கூறினார்கள். முறையான பட்டாவும் இல்லை, வீடும் கட்டித்தரவில்லை. எந்த அடிப்படை வசதியுமில்லாமல் பூர்வீக இடத்திலிருந்து துரத்திவிட் டார்கள். வன உரிமைச் சட்டத்திலுள்ள பாதுகாப்புகளைக்கூட எங்களுக்கு அரசாங்கம் செய்து தரவில்லை. எங்கள் குடும்பம் காட்டை நம்பி பசியாறும் குடும்பம். காடுகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து நாங்கள் வாழ்கிறோம். அப்படிப்பட்ட எங்களை நடுத்தெருவில் விட்டது எந்தவகையில் நியாயம்?'' எனக் கேட்கிறார்கள்.
"கார்ப்பரேட் முதலாளிகள் அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள் அல்லது அந்த அரசாங்கம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. அப்பாவி மக்களை மிக எளிதாக இந்த அரசாங்கம் ஏமாற்றுகிறது. காடுகளை பல வகையாக வனத்துறை பிரிக்கிறது அதில் கோர் ஜோன் எனப்படும் அடர்ந்த மையப் பகுதியில் வாழும் மலை மக்களை, விலங்குகள் வாழ்வதற்கு தடையாக இருக் கிறார்கள் என்ற காரணத்தைக் காட்டி வெளி யேற்றுகிறார்கள். இது தவறான நடவடிக்கை. அப்படியே வெளியேற்றினாலும் அவர்களுக் கான மறுவாழ்வு, மறு குடியேற்றம் போன்ற நடவடிக்கைகளை வனத்துறை செய்து தருவதில்லை. இழப்பீடு எனப் பத்து லட்சத்தை கொடுத்து வெளியேற்றி விட்டார்கள். ஆனால் அம்மக்களின் வாழ்வியல் தேடலை வைத்து எவ்விதக் கணக்கீடும் இல்லாமல் துரத்துவது அநியாயம்.
உதாரணத்திற்கு, ஒரு விபத்து நடந்தால், அதில் 60 வயது மதிக்கத்தக்கவர் இறந்தால் அவரின் குடும்பத்திற்கு இழப் பீட்டுத் தொகை என நிர்ணயிக்கும் தொகையைவிட, 30 வயதான வரின் இறப்புக்கு கூடுதல் இழப்பீட்டுத்தொகையை நீதிமன்றம் நிர்ணயிக்கும். இந்த வகையான நிலைபாட்டைக்கூட வனத்துறை செய்யவில்லை. வன உரிமைச் சட்டப்படி, 2005 டிசம்பர் 13-க்கு முன்பாக வனப்பகுதியில் விவசாயம் செய்துவந்தவர்களுக்கெல்லாம் பட்டா கொடுக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மாறாக அங்குள்ள மக்களை வெளியேற்றுவதில் தான் குறியாக உள்ளார்கள்.
உல்லாச மாளிகைகள், காட்டேஜுகள் கட்டுவதற்கான சுற்றுலாத்தலமாகத்தான், கமர்சியல் நோக்கில் வனப்பகுதியை அரசாங்கம் பார்க்கிறது. அது தவறு. வனமென்பது இயற்கை அளிக்கும் கொடை. மலைவாசிகள் அங்கு வாழ்ந்தால்தான் அந்த மலைப்பகுதி உயிரோட்டமாக இருக்கும். மலைவாசிகளும், அங்கு வாழும் அனைத்து உயிரினங்களும், யாரும் யாருக்கும் எதிரி அல்ல என்பதை அரசு உணர வேண்டும். பாதிக்கப்பட்ட இந்த பழங்குடி மக்களுக்கு உரிய நிவாரணமும், நீதியும் அரசு உடனே வழங்கிட வேண்டும்'' என்றார், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மூத்த தலைவரான வி.பி.குணசேகரன். காடும், மலையும் அதன் இயல்பான தன்மையோடு இருக்கும்படி விடப்பட வேண்டும். அங்குள்ள ஆதிவாசிகளான பழங்குடியினர் அங்கு வசிப்பதே இயற்கை வழியிலான தீர்வென்பதை அரசாங்கமும், வனத்துறை அதிகாரிகளும் உணர வேண்டும்.