(84) வியக்க வைத்த விஜயகாந்த்-ராவுத்தர் நட்பு!

ரசியல் ரீதியான விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தனிப்பட்ட முறையில் பழகிப் பார்த்தால்... விஜயகாந்த் அவர்கள் மிகவும் நல்லவர் என்பதை அறியமுடியும்.

விஜயகாந்த் முறைத்தால்... விஸ்வாமித்திரர். சிரித்தால்... குழந்தை. இது முகத்தில் மட்டுமல்ல... அகத்திலும்தான்.

நட்பின் உயர்வை, அதன் புனிதத்தை பல கதைகளில் பார்த்திருக்கிறோம்... படித்திருக்கிறோம்.

Advertisment

பரம ஏழையாக இருந்த நண்பன் குசேலனை, குபேரனாக்கி மகிழ்ந்தார் கிருஷ்ண பரமாத்மா என்பது புராணக் கதை.

பசியும் பட்டினியுமாக வாழ்ந்த நண்பர்கள் எம்.ஜி.ஆர். அவர்களும், சின்னப்ப தேவர் அவர்களும்.

ஒருநாள்... எம்.ஜி.ஆர். வீட்டில் சாதம் வடிக்க அரிசி இல்லை. எம்.ஜி.ஆரின் அம்மா சத்தியா தாய் தவியாய் தவித்துக்கொண்டிருந்தபோது...

Advertisment

சின்னப்ப தேவர் தன் வீட்டிலிருந்து அரைப்படி அரிசியை எடுத்துவந்து சத்தியா தாயிடம் கொடுத்தார். அன்றையநாள் பசி தீர்த்த வள்ளல் தேவரை மறவாத எம்.ஜி.ஆர்., தான் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றபோது... திக்கற்ற நிலையிலிருந்த தேவருக்கு ‘"தாய்க்குப்பின் தாரம்'’ என்ற படத்திலிருந்து, 16 படங்களில் நடித்துக் கொடுத்து, தேவரை கோடீஸ்வரராக்கி அழகு பார்த்தார்.

இதுபோல இன்ப துன்பங்களில் இணைபிரியாத நண்பர்களானவர்கள் விஜயகாந்த் அவர்களும், இப்ராஹிம் ராவுத்தர் அவர்களும்.

’சினிமாவில் நடித்தே ஆகவேண்டும்’ என்ற விஜயகாந்த்தின் ஆர்வத்திற்கு அல்லும், பகலும் அயராது பாடுபட்டவர் இப்ராஹிம் ராவுத்தர். எடுத்த லட்சியத்தை நிறைவேற்ற இந்த நண்பர்கள் படாதபாடில்லை... காணாத கஷ்டமில்லை.

லட்சியம் நிறைவேறி, விஜயகாந்த் தமிழ் சினிமாவில் உயர்ந்த அந்தஸ்தை பெற்றவுடன் நண்பனுக்கு ‘"ராவுத்தர் ஃபிலிம்ஸ்'’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து வைத்து... தொடர்ந்து படங்கள் தயாரிக்கவும் வைத்து... ராவுத்தரை கோடீஸ்வரனாக்கி அழகு பார்த்தார்.

டிகர் -தயாரிப்பாளர் என இரு நண்பர்களும், இரு நட்சத்திரங்களாக ஒளி மங்காமல் பிரகாசித்துக் கொண்டிருந்த நேரத்தில்... ராவுத்தர் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார்.

"ராவுத்தர் இறந்துவிட்டார்'’ என்ற செய்தியைக் கேட்டதும்... விஜயகாந்த், தான் முகம் பார்த்துக்கொள்ளும் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்துவிட்டது போலாகி... அலறித் துடித்துவந்து... நண்பனைப் பிணக்கோலத்தில் பார்த்ததும்... ‘"அடேய்... என்னை விட்டுப் போயிட்டியே'’என்று உள்ளத்தால் அழுதார். ‘"அடுத்த ஜென்மத்திலும் நாம் நண்பர்களாகவே இருப்போம். அப்போது நான் முதலில் உன்னைவிட்டுச் செல்வேன். அப்போது உனக்கு புரியுமடா... நண்பனின் பிரிவும், வேதனையும்'’ என உள்ளம் அரற்றுகிறது. கண்களில் கண்ணீர் கசிந்தபடியே இருக்கிறது.

தாங்க முடியாத வேதனையை வெளியே சொல்ல முடியாதவராக சுருண்டுவிட்டார் விஜயகாந்த்.

இதை நான் நேரிலேயே கண்டேன்.

நட்பின் தனிமை விஜயகாந்த்தை வாட்டிக்கொண்டிருக்கிறது.

இருவரும் கூடித்திரிந்ததும், குலவி மகிழ்ந்ததும், கஷ்டத்தில் திசை தெரியாது... விழிபிதுங்கி எங்கெங்கோ சென்றதும், நின்றதும்... விஜயகாந்த்தால் மறக்கவா முடியும்?

நட்புக்கு இலக்கணமாக விஜயகாந்த்தும், இப்ராஹிம் ராவுத்தரும் வாழ்ந்துவந்தார்கள் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோமே...

kk

ந்த இனிய நண்பர்களுடன் எனக்கிருந்த தொடர்பைச் சொல்லுகிறேன்.

நான் தொடர்ந்து படங்கள் எடுத்துக்கொண்டிருந்த காலத்தில்... விஜயகாந்த்தை வைத்து ஒரு படம் எடுக்க முடிவுசெய்து, என் மேனேஜரிடம் சொன்னேன்.

""ராவுத்தருக்கு ஒரு போன் போட்டு பேசிட்டா வேலை முடிஞ்சிடும்''

""ஏன்? விஜயகாந்த்தை நேர்ல பார்த்து பேசமுடியாதா?''

""விஜயகாந்த்தை பார்ப்பதும், ராவுத்தரை பார்ப்பதும் ஒண்ணுதான். இன்னும் சொல்லப்போனால்... ராவுத்தர் என்ன சொன்னாலும் விஜயகாந்த் ஓ.கே. சொல்லிடுவார். அந்தளவுக்கு நம்பிக்கையானது அவங்களோட நட்பு'' என்றார் என் மேனேஜர்.

இவர்களின் நட்பின் வலிமையைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருந்ததால்... ராவுத்தரின் அலுவலகத்திற்குச் சென்றேன்.

எழுந்து நின்று வரவேற்ற ராவுத்தர்... ""அண்ணா... திடீர்னு வந்திருக்கீங்களே... உட்காருங்க. முதன்முதலா எங்க ஆபீஸுக்கு வந்திருக்கீங்க. என்ன சாப்பிடுறீங்க?'' என மகிழ்ச்சியும், பதட்டமுமாக வரவேற்று உபசரித்தார்.

""என்ன விஷயம்ணே?''

""தம்பி விஜயகாந்த்தை வச்சு ஒரு படம் எடுக்க நினைக்கிறேன்...''

""இதுக்காக நீங்க ஏன் வரணும்? ஒரு போன் பண்ணீருந்தாலே போதுமே.... விஜி இப்ப ஷூட்டிங்ல இருக்கார். நாளைக்கி காலைல அவரை உங்க ஆபீஸுக்கு அனுப்பிவைக்கிறேன்'' என்றார் ராவுத்தர்.

நான் தலையாட்டிவிட்டு கிளம்பினேன். கூடவே வந்து... கார் கதவையும் திறந்துவிட்டு... வழியனுப்பி வைத்தார்.

றுநாள் காலையில்.... உதய ஒளிபோல ""அண்ணே...'' என்று கம்பீர குரல் கொடுத்தபடியே விஜயகாந்த் வந்துவிட்டார். எனக்கு வியப்பாக இருந்தது. அவரை வரவேற்று அமரவைத்தேன்.

""இப்ராஹிம் சொன்னாப்ல... உங்க கம்பெனியில எப்ப நடிப்போம்னு நானும் காத்திருக்கேன்'' என்று முகம் மலர என்னையே பார்த்தார்.

டீ வந்தது. இருவரும் சாப்பிட்டபடியே... ""ஒரு நல்ல கதை... ரெண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட். அதுல நீங்க மெயின் ஹீரோவா நடிக்கணும்'' என்றேன்.

""அண்ணே... இப்போ ரெண்டு மூணு படங்கள்ல நான் தனி ஹீரோவா நடிச்சுக்கிட்டிருக்கேன். அதுமாதிரி தனி ஹீரோவா நடிக்க ஒரு வாய்ப்பு கொடுங்க'' என்றார்.

வேகமாக வளர்ந்துகொண்டிருந்தார் விஜயகாந்த் அப்போது. அதனால் அவர் தனி ஹீரோ சப்ஜெக்ட்டை எதிர்பார்த்தது முழுக்க நியாயமாக எனக்குப் பட்டது.

""இப்போ... டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டை சொல்லித்தான் ஃபைனான்ஸ் வாங்கியிருக்கேன். அதனால இந்தப் படத்தை நான் முடிச்சிட்டு... அடுத்த படம் உங்களை வச்சு ஆரம்பிக்கிறேன்'' என்றேன்.

""நிச்சயமா நீங்க என்னை வச்சு படம் எடுக்கணும்'' எனச் சொல்லிவிட்டு கிளம்பினார்.

அதன்பிறகு என்னுடைய சூழ்நிலை அப்படியும், இப்படியுமாக இருந்தது. அதனால் விஜயகாந்த்தை வைத்து படம் தயாரிக்க முடியவில்லை. ஆனாலும் காலப்போக்கில்... கங்கை அமரன் இயக்கத்தில் "கோவில் காளை', பி.வாசு இயக்கத்தில் "சேதுபதி ஐ.பி.எஸ்.', விக்ரமன் இயக்கத்தில் "வானத்தைப் போல'’மற்றும் கே.பாக்யராஜ் இயக்கத்தில் "சொக்கத் தங்கம்'’ஆகிய விஜயகாந்த் நடித்த படங்களின் திரைக்கதையில் என் ஒத்துழைப்பு இருக்கிறது என்பது பெருமைதானே.

விஜயகாந்த் கட்சி தொடங்கி அரசியலிலும் பிரபலமாகிவிட்டார்.

இந்த நேரத்தில் என் உதவியாளர் ஷாலப்பா ஒரு சினிமா கம்பெனியை ஆரம்பித்து, பட வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அந்த அலுவலக இடம் ஒத்திக்கு எடுக்கப்பட்டிருந்தது. கட்டிட உரிமையாளருக்கும், ஷாலப்பாவுக்கும் இடையே பிரச்சினை. "கம்பெனியை காலி பண்ணிடுறேன்... நான் ஒத்தியாக கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுங்க'’என ஷாலப்பா கேட்க... உரிமையாளரோ பணத்தை தராமல் இழுத்தடிக்க... பெரிய தகராறு ஆகும்போல இருந்தது. அந்த இட உரிமையாளர் விஜயகாந்த்தின் கட்சியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. நான் ஷாலப்பாவை அழைத்துக்கொண்டு... படப்பிடிப்பில் இருந்த விஜயகாந்த்தை சந்திக்கச் சென்றேன். கேமரா முன்பு நடித்துக்கொண்டிருந்தவர், என்னைப் பார்த்ததும்... கேமராவை நிறுத்தச் சொல்லிவிட்டு வந்து, விசாரித்தார். விஷயத்தைச் சொன்னேன்.

உடனே கட்சி ஆபீஸுக்கு போன் செய்து... ‘பணத்தை உடனே திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்யும்படி’ சம்பந்தப்பட்ட நபருக்கு அறிவுறுத்தும்படி சொன்னார்.

அடுத்தநாளே... ஒத்திப்பணம் கைக்கு வந்துவிட்டது.

என் மகனின் திருமணத்திற்கு பி.ஆர்.ஓ. மூலம்தான் விஜயகாந்த்திற்கு பத்திரிகை கொடுத்து அனுப்பினேன். ஆனாலும் மறக்காமல் வந்து... பரிசுப்பொருள் தந்து வாழ்த்தினார்.

எதற்கு இதையெல்லாம் சொல்கிறேனென்றால்... நான் விஜயகாந்த்தை வைத்து படம் எடுக்க முடியவில்லை. என்றாலும் அவர் என்மீது வைத்த மரியாதை குறைந்ததே இல்லை. நிலைத்தே இருக்கிறது.

கோதரி பிரேமலதா அவர்கள்... விஜயகாந்த்திற்கு கிடைத்த பொக்கிஷம். இல்லறம் காத்து வரும் எழிலரசி. அரசியலிலும் அவர் முன்னிலைக்கு வரும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. சமீப காலங்களில் பேட்டி கொடுப்பதையும், பொதுக்கூட்டங்களில் பேசுவதையும் நான் பார்த்தேன். மகிழ்ச்சியுற்றேன். வேலுநாச்சியின் வீராவேசமும், விவேகத்தின் முதிர்ச்சியும் அவரின் பேச்சில் இருக்கவே செய்கிறது.

தம்பி விஜயகாந்த் உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசாத வெள்ளை உள்ளம் உள்ளவர். பொதுமேடைகளில் உண்மையை வெளிப்படையாகப் பேசிவருவது, சில அரசியல்வாதிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துவதால்... ஆகாத வார்த்தைகளை அள்ளிப்போடுகிறார்கள். தம்பி விஜயகாந்த் அதற்கெல்லாம் அஞ்சாத சிங்கமாகவே வாழ்ந்துவருகிறார் என்பதை அறிவாற்றல் உள்ளவர்கள் அறிவார்கள்.

விஜயகாந்த் வாழ்க... அவர் புகழ் வளர்க!

எம்.ஜி.ஆர்.-தேவர் நட்பு குறித்து நான் ஏற்கனவே "சினிமா சீக்ரெட்' தொடரில் விரிவாக எழுதி... அது புத்தகமாக வெளியாகியிருந்தாலும்... இரு நண்பர்களின் நட்புக் கதையில் அவர்களின் நட்பை தவிர்க்க முடியாதே.