(113) அவளுக்கென்ன அழகிய முகம்!
சோழநாட்டு அமைச்சர் சீனக்கன் உடல் எரிந்துகொண்டிருந்த சிதையில் குதித்து தன் உயிரைவிட்டார் பொய்யா மொழிப் புலவர். உடன் கட்டை ஏறும் அளவிற்கு அன்பும், அழுத்தமும் கொண்டதாக இருந்தது அவர்களின் நட்பு.
அதேபோல கோப் பெருஞ்சோழனும், பிசிராந்தை யாரும் ஒரே இடத்தில் சமாதி ஆனதும்... "புறநானூறு' சொல்லிப் புலம்புகிற உண்மை.
‘"காதல் கோட்டை'’ படத்தில் அஜித், தேவயானி இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமலே காதலர்கள் ஆனார்கள். க்ளைமாக்ஸில் தான் இருவரும் ஒருவரை யொருவர் நேரில் பார்த்து, இணைவார்கள்.
அந்தக் காலத்தில்... கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும் ஒருவரை யொருவர் நேரில் பார்க்காம லேயே உயிர் நண்பர்களானார் கள்.
பாண்டிய நாட் டில் பிறந்த புலவர் பிசிராந்தை யார், கோப்பெருஞ் சோழ னின் தழைத்தோங்கும் ஆட்சியையும், அவர் செய்து வரும் தான தர்மங்களையும் கேள்வியுற்று... அவரைப் புகழ்ந்து பல பாடல்களை எழுதிவந்தார்.
தன்னை நேரில் பார்க் காமலே... பரிசு பெறுவதற்காக பாடல் புனையாமல், தனது ஆட்சி நிர்வாகத்தையும், தனது செயல்களையும், உயர்வாக பாடி வரும் பிசிராந்தையாரை, தன் உயிரினும் மேலான நண்பனாக மனதில் ஏற்று, வாழ்ந்துவந்தார் கோப்பெருஞ்சோழன்.
ஒருமுறை அவருக்கும், அவர் பெற்ற புதல்வர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. போர் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதனை அறிந்த சோழநாட்டுப் புலவர் புல்லாற்றூர் எயிற்றினார், மன்னனை நேரில்கண்டு, போர் புரியும் எண்ணத்தை மாற்றி, மன்னன் மனதில் அமைதியை அரங்கேற்றினார்.
போர் புரியாமல் இருக்க சமாதானமானாலும், உறவுகளால் உண்டான வலி, மன்னனின் மனதை வாட்டியபடி இருந்தது. அத னால் தனது அரசு, உறவுகள் அனைத்தையும் துறந்தார். வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து, உயிர் துறக்க முடிவு செய்தார்.
அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டபோது.... தான் கண்ணால் கண்டிராத, உள்ளத்தால் உணர்ந்திருந்த உயிர் நண்பன் பிசிராந்தையாரின் நினைவு மன்னனுக்கு வந்தது. தன்னைச் சூழ்ந்திருந்தவர்களைப் பார்த்து... ""பாண்டிய நாட்டில் வாழ்ந்து வரும், பிசிராந்தையார் எனது உயிர் நண்பன். நான் உயிர் மடிகிற நிலையை அறிந்தால் அவன் இங்கு வராது இருக்கமாட்டான். என் மரணத்திற்கு முன்பாக அவனைப் பார்த்துவிட வேண்டும். என் முடிவை அவனால் தாங்க முடியாது. ஆகவே, என் சமாதிக்குப் பக்கத்திலேயே.. அவனுக்கும் ஓர் இடத்தை ஒதுக்குங்கள்'' என்றார்.
செய்தியறிந்து பிசிராந்தையார் வந்தார்.
""என்னுயிர் நண்பா... என் இதயத்தில் வீற்றிருக்கும் தெய்வமே! உன்னை நேரில் பார்த்ததும் என் ஜென்ம சாபம் போய்விட்டது, புனிதனாகிவிட்டேன். இதோ... என் உயிரை உன்னிடம் ஒப்படைக்க வந்துவிட்டேன்...'' என்றார்.
நண்பனை பெருமையோடு பார்த்த மன்னன்... சற்று சிந்தித்தான்.
""நண்பா... நான் அனைத்தும் அனுபவித்து முடித்துவிட்டேன். ஆனால் நீயோ, மனைவியை தனித்து விட்டுவிட்டு, ஊர் ஊராகச் சென்று, மக்கள் நல்வாழ்விற்கான அறநெறிகளை போதித்துவருகிறாய் என்பதை நான் அறிவேன். நீ உன் இல்லாளுடன் இனிய வாழ்க்கை வாழ்ந்து, மக்கட் செல்வம் பெற்றபிறகு வருவாயாக...'' என அன்புக் கட்டளையிட்டான்.
அதை ஏற்ற பிசிராந்தையார், தன் நாடு திரும்பினார்.
இனிய இல்லறம் கண்டு, அதன் பலனாக மக்கட் செல்வம் பெற்றுவிட்டு, கோப்பெருஞ் சோழனைத் தேடி வந்தார்.
அங்கே... சோழனின் நடுகல் (சமாதி வைக்கப்பட்ட இடம்) இருப்பதைக் கண்டு அலறித் துடித்தார். அழுது புலம்பினார். ‘"இனியும் வாழ்வேனோ... இதோ நானும் உன்னிடம் வருகிறேன்'’ என்றவர்... தனக்காக நண்பன் சோழன் ஒதுக்கச் சொல்லியிருந்த இடத்தில் படுத்து, உயிர் நீத்தார் பிசிராந்தையார்.
ஆண்டியாகினும், அரசராகினும் அன்பால் ஈருயிர் ஓருயிரானபோது... அவர்களைப் பிரிக்க யாரால் முடியும்?
ஒருவரையொருவர் பார்த்திராத நட்பின் சிறப்பை, வள்ளுவன் வாய்மை இப்படிச் சொல்கிறது.
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்’
நட்பு கொள்வதற்கு தொடர்பும், பழக்கமும் வேண்டியதில்லை. ஒருமித்த அன்புணர்ச்சியே, நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும். இதுவே வள்ளுவன் சொல்லும் வாய்மை.
கவி கே.பி.காமாட்சி சுந்தரம் அவர்கள் என்னுடைய மூத்த சகோதரர்.
"ஓ ரசிக்கும் சீமானே, ‘புதுப் பெண்ணின் மனதைத்தொட்டுப் போறவரே', "தேனுண்ணும் வண்டு மாமலரைக் கண்டு'’போன்ற இன்றும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கக்கூடிய திரைப்பாடல்களை எழுதியவர். "பராசக்தி'’படத்தில் பூசாரியாக நடித்தவர். இப்படி பாடலாசிரியராகவும், நடிகராகவும், புகழ்பெற்ற காமாட்சி அண்ணன் பற்றி ஏற்கனவே "சினிமா சீக்ரெட்'டில் எழுதியிருக்கிறேன்.
அவர் சென்னை -தி.நகரில் குடியிருந்தபோது, அவருடைய வீட்டில் தங்கியிருந்து, நான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பைத் தேடிக்கொண்டி ருந்தபோது... நடந்த மறக்கமுடியாத ஒரு சங்கதியைச் சொல்கிறேன்.
1954-55-ஆம் ஆண்டுகளில் காமாட்சி அண்ணனின் வீட்டில் தங்கி சினிமா வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வயது 24. காமாட்சி அண்ணன் எவ்வளவு சம்பாதித்தாலும் குடித்தே அழித்துவிடுவார். அவரின் மனைவி பாமா அவர்கள் குடும்பம் நடத்த படாத பாடுபடுவார். பாவம் அண்ணன் என்ன செய்வார்... அவரின் முதல் மனைவி இறந்த கவலையே அவரை குடிகாரனாக்கியது. அண்ணன் வீடு இவ்வளவு கஷ்டத்தில் இருந்த நேரத்தில்தான் நான் அங்கு தங்கியிருந்தேன். ஒருவேளைச் சாப்பாடு கிடைக்கும். ஆனால்... குளிப்பதற்கு தாராளமாக தண்ணீர் வசதி வீட்டில் உண்டு.
எங்கள் வீட்டு குளியலறையும், பின்புற வீட்டு குளியலறையும் பக்கம் பக்கமாக இருந்தது.
ஒருநாள் நான் குளித்துக்கொண்டிருந்த போது...
"சந்தோஷம் வேண்டும் என்றால்... என்னைக் கொஞ்சம் பாரு... கண்ணால்'’ என்கிற ‘"தேவதாஸ்'’ படத்தின் பாடல்... இனிமையான பெண் குரலில் பக்கத்து பாத்ரூமிலிருந்து ஒலித்தது. அந்தப் பெண் நீரை மொண்டு குளிக்கும் சத்தமும் கேட்டது.
"சந்தோஷம் வேணும்தான்... கண்ணால பாத்திருவோம்'’என நான் ஏறிட்டுப் பார்த்தேன்.
கழுத்துக்குமேல்... பூர்ண சந்திர பிம்பம் போல... பிரகாசம் பொங்கும்... அப்படியொரு அழகிய முகம் தெரிந்தது.
இமைக்க மறந்துபோய் நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்...
எதிர்பாராதவிதமாக அந்தப் பேரழகி, அவளைப் பார்த்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்து சிரித்தாள்... நானும் சிரித்தேன். அவள் குளித்துவிட்டு கிளம்பினாள். நானும் குளித்துவிட் டுக் கிளம்பினேன். அந்த குளியல் நேரத்தை தெரிந்து வைத்துக்கொண்டேன்.
மறுநாள் காலையில்... அவள் குளிக்கும் நேரத்தில் நானும் குளித்தேன். அவள் என்னைப் பார்த்து சிரித்தாள். நானும் அவளைப் பார்த்து சிரித்தேன்.
அன்று இரவெல்லாம் அவளின் சிரித்த முகம், என் முன் தோன்றி... தூக்கத்தைக் கலைத்தது.
மூன்றாவது நாள்... அதே நேரத்திற்கு குளிக்கச் சென்றேன். ஆனால் அவள் குளிக்க வரவில்லை. குளிக்கப் பிடிக்காமல்... அவள் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
இந்திப் பாடல் ஒன்று ஒலித்தது. ஆனால் அது அவளின் குரலாக இருக்கவில்லை. பாட்டும், அவள் வீட்டுக்குள்ளிருந்து வந்தது.
அடக்க முடியாத ஆவலோடு கஷ்டப்பட்டு... எட்டிப் பார்த்தேன்.
வீட்டின் மையப்பகுதியில் அவளின் தாயார் இந்திப் பாடலைப் பாடிக்கொண்டிருக்க... அவளோ, நடிகை ஹெலன் போல கவர்ச்சியான உடையில் துள்ளித் துள்ளி ஆடிக்கொண்டிருந் தாள். வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த எனக்கு, அவளின் ஆட்டம் மூலம் ஒன்று புரிந்தது. அது... அந்தப் பெண் நடிகையாக இருப்பாள்’ என்பதுதான்.
நான்காம் நாள் காலையில்... அவள் குளிக்க வந்தாள், என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே. சிரிப்பிலேயே பரிட்சயம் ஏற்பட்டுவிட்டதால்... நானும் நன்றாகவே சிரித்தேன். குளித்துவிட்டு அவள் கிளம்ப... நானும் குளித்துவிட்டு வந்தேன்.
அன்றிரவு ஒரு முடிவு செய்தேன்.
"நாம அன்றாடம் வறுமையில போராடி வாழ்க்கைய ஓட்டுறதவிட... இந்த சிரிப்பழகியை எப்படியாவது காதலிச்சு கல்யாணம் பண்ணிக் கிட்டா... சினிமா நடிகனாகும் நம்மளோட லட்சி யம் நிறைவேறும். அவளோட அழகுக்கு சீக்கிரமே சாவித்திரி போல பெரிய நடிகையாகிடுவா. காரு, பங்களானு வசதியோட வாழலாம். எனக்கு நடிக்கிறதுக்கு ஈஸியா சான்ஸ் வாங்கித் தந்திடுவா... அதுக்காகத்தானே நாம மெட்ராஸுக்கு வந்திருக்கோம்'’ என்கிற ஆசையில் என் தரித்திர புத்தி தாண்டவமாடியது.
அவளை தனிமையில் சந்தித்து பேசிவிட முடிவுசெய்தேன். அதன்படி முயற்சியும் எடுத்தேன்...
அழகுப் பெண்ணின் தாயார் என்னிடம் வைத்த கோரிக்கை...