(85) மூன்றெழுத்து நண்பர்கள்!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.-சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்ப தேவர் நட்பு பற்றி ஏற்கனவே "நக்கீரன்'’ இதழில் ‘"சினிமா சீக்ரெட்'’ தொடரில் விரிவாக எழுதியிருக்கிறேன். அது புத்தகமாக வெளிவந்து விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் அதை படிக்கத் தவறியவர்களுக்காக இதோ...

இரு நண்பர்கள்’ நட்பைப் பற்றி எழுதி வரும்போது... எம்.ஜி.ஆர்.-தேவர் நட்பை விட்டுச்செல்ல பேனா மறுக்கிறது. எனவே சுருக்கமாக எழுதுகிறேன். "சினிமா சீக்ரெட்'டில் சொல்லாத விஷயத்தையும் சேர்த்துச் சொல்கிறேன்.

தேவர் அவர்களிடம் நான் தொழில் செய்துவந்த காலத்தில்... என்னிடமும், எழுத்தாளர் தூயவனிடமும் சில ரகசியங்களை தேவர் சொல்லுவதுண்டு. அப்படி சொன்னதைத்தான் உங்களிடம் எழுதி ஒப்படைக்கிறேன்.

Advertisment

எம்.ஜி.ஆர். தேவர்... மூன்றெழுத்து நண்பர்கள், முகம் சுழிக்கா வள்ளல்கள்.

கோயம்புத்தூர் "ஜுபிடர் பிக்ஸர்'ஸில் எம்.ஜி.ஆரும், தேவரும் நடித்துக்கொண்டிருந்த போது... ஓய்வான நேரத்தில் தங்களின் எதிர்காலம் குறித்தோ, நடிப்புத்துறையில் நடந்த சம்பவங்கள் குறித்தோ பேசுவது வழக்கமாம்.

அப்படி ஒருநாள் பேசிக்கொண்டிருந்தபோது.... எம்.ஜி.ஆரிடம் தேவர் ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.

Advertisment

""நான் மாருதி உடற்பயிற்சி கூடத்துல பயிற்சி செஞ்சிக்கிட்டிருந்தபோது என் மேல ஒரு காகித பொட்டலம் வந்து விழுந்தது. பொட்டலத்தைப் பிரிச்சுப் பார்த்தேன். மூணு சவரன் சங்கிலி இருந்தது. "யாரு இதை என்மேல போட்டது'னு நான் சுத்திமுத்தி பார்த்தபோது... ஒரு பெண் என்னைப் பார்த்து சிரிச்சிட்டுப் போனாள். அந்த இடத்துல வேற யாரும் இல்லை. ‘"இவதான் சங்கிலிய போட்டிருக்கணும்.... சங்கிலிய கொடுத்திட்டு எச்சரிக்கை செய்யலாம்'னு போனேன்.

அந்தப் பெண்ணுக்கு கணவனும், இரண்டு குழந்தைகளும் இருப்பதைப் பார்த்து எனக்கு உடம்பு நடுங்கிப்போச்சு. அப்படியே திரும்பி வந்துட்டேன். இதோ... இதுதான் அந்தச் சங்கிலி'' என தேவர் சொல்ல...

""இந்த மாதிரி விஷயங்கள்ல நீங்க ஜாக்கிரதையா இருக்கணும். இப்படிப்பட்ட ஊமைச் சிரிப்புல ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். நான் நாடகத்துல நடிச்சிக்கிட்டிருந்தபோது... 13 வயசுப் பெண்... தன் தோழியோடு போகும்போது என்னைப் பார்த்து சிரிச்சது. ஒரே காம்பவுண்ட்டுல எங்க வீடும், அந்தப் பெண்ணோட வீடும் எதிரெதிரே இருந்தது. நான் அவளைப் பார்க்கும் போதெல்லாம் ‘"சிரிக்கலாமா? வேணாமா?'னு தயக்கத்தோட சிரிச்சேன். அப்போ எனக்கு பதினாறு வயசு இருக்கும். எல்லா இளைஞனுக்கும் ஏற்படுற உணர்ச்சி எனக்கும் ஏற்படத்தானே செய்யும்.

ஒருநாள்... சாப்பிட்ட இலையை வெளியே போடவந்தவள் என்னைப் பார்த்து சிரிச்சிக்கிட்டே போனாள். எனக்கு ஒருமாதிரி ஆகி... அவள் திரும்பி வரும்போது... அவளின் கையைப் பிடிச்சேன். "ஹும்'’எனச் சொல்லி கையை உதறிவிட்டுப் போனாள்.

இந்தச் சம்பவத்தை நண்பர்களிடம் சொன்னேன். ‘"இதுக்கு மேலயும் ஒரு பெண் எப்படி தன்னோட சம்மதத்தைச் சொல்ல முடியும்? தொடர்ந்து முயற்சி செய்'’என்று என்னை உசுப்பேத்தினாங்க. அவள் எங்கெங்க நிற்கிறாளோ... அங்கெல்லாம் நானும் போய் நின்னேனே தவிர... வாய்விட்டு கேட்க முடியல. எனக்கிருந்த பயமெல்லாம்.. ‘"என் தாயாருக்குத் தெரிஞ்சா... அவங்களோட கடுமையான கோபத்துக்கு ஆளாவேனே...'’என்பதுதான்.

இப்படியே... பார்க்கிறதும், சிரிக்கிறதுமா... ஜவ்வா ஒரு வருஷம் ஓடிவிட்டது.

ஒரு நாள்... அந்தப் பெண்ணோட வீட்டு முன்னாடி பெண்கள் கூட்டமா நின்னிருந்தாங்க. என் அம்மாகிட்ட விசாரிச்சப்போ... அந்தப் பெண் ருதுவாகிவிட்டதாக சொன்னார்கள்.

kalaiganam

அங்கே வந்த ஒரு மூதாட்டி... "உம் பொண்ணு இதுவரைக்கும் சின்னப்பொண்ணா இருந்தா. இப்ப பெரிய மனுஷியாகிட்டா... அவளை கண்ணும், கருத்துமா கவனிச்சுக்க. இல்லேன்னா... ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகிப்போயிடும்'னு சொல்லிட்டுப் போனாங்க. அந்த மூதாட்டி சொன்னது என் மனதில் ஒரு கலவரத்தை ஏற்படுத்திவிட்டது. அந்த நிமிஷமே ‘"வேணாம்டா சாமீ'னு என்னோட காதல் முயற்சிக்கு முடிவு கட்டீட்டேன்'' என தேவரிடம் எம்.ஜி.ஆர். சொன்னாராம்.

""அதுசரி முருகா... அறியாப் பருவத்துல நடந்தது உங்க காதல். என் சமாச்சாரம் என்ன?னு எனக்கே தெரியலையே''

""கொஞ்சம் பொறுமையா இருங்க. இந்தச் செயினை அந்தப் பெண்கிட்டயே திரும்ப கொடுத்திடுறதுதான் நல்லது''

""எப்படி கொடுக்கிறது? யார் கொண்டுபோய் கொடுக்கிறது? அவளோட புருஷனுக்கு ஆட்டுக்கொம்பு மீசை இருக்கு. நினைச்சாலே பயமா இருக்கு முருகா'' என தேவர் சொல்ல...

இருவரும் சிறிதுநேரம் யோசித்து... அந்த ஏரியாவில் இருக்கிற பிரசவம் பார்க்கிற ஒரு ஆயாவிடம் விஷயத்தைச் சொல்லி, சங்கிலியை கொடுத்துவிடுவதென முடிவெடுத்தார்கள்.

அதன்படியே ஆயாவைச் சந்தித்தார்கள்.

"பயப்படாதீங்க... இதுல ஏதோ குழப்பம் இருக்கு.. என்னா?னு தெரிஞ்சிக்கலாம்' எனச் சொல்லி சங்கிலியை வாங்கிக்கொண்டு போயிருக்கிறார்.

எம்.ஜி.ஆரும், தேவரும் பிரசவ வலியில் தவிப்பவர்களைப் போல... பதட்டத்துடன் ஒருவருக்கொருவர் பேசக்கூட செய்யாமல் இருந்திருக்கிறார்கள்.

சிறிது நேரத்தில் சிரித்தபடி வந்த ஆயா... “"தம்பிங்களா... நடந்த சமாச்சாரமே வேற. நீங்க உடற்பயிற்சி செய்ற இடத்துல ஒரு விதவைப் பொண்ணு இருக்கு. பாவம்... முப்பது வயசுகூட ஆகல. அந்தப் பொண்ணு மாடியிலருந்து சின்னப்பன் மேல செயினை வீசினதை... இந்தப் பெண் பார்த்திருக்கா. இதென்ன கூத்தா இருக்குனு வஞ்சகம் சூது இல்லாம சிரிச்சிருக்கா. அம்புட்டுதான் விஷயம். சின்னப்பா நீ உடற்பயிற்சி செய்றதை நானே பார்த்து ரசிச்சிருக்கேன். அதனால... கொஞ்சநாளைக்கு சின்னஞ்சிறுசுக இல்லாத பக்கமா உடற்பயிற்சிய வச்சுக்க' என கிண்டலாகச் சொன்ன ஆயா... “"ஆமா... இந்தத் தம்பி யாரு? செக்கச்செவேல்னு இருக்கு?' என எம்.ஜி.ஆரைப் பார்த்து கேட்க...

"என்னோட சிநேகிதன்' என தேவர் சொல்ல...

"உன்னைவிட இந்த தம்பிதான் நல்லாருக்கு. அந்த விதவை பைத்தியம் செயினை இந்த தம்பிமேலதான் போட்டாளா?' என கிண்டல் செய்திருக்கிறார் அந்த ஆயா.

எம்.ஜி.ஆரும், தேவரும் ஒளிவு மறைவற்ற நண்பர்களாக அடிப்படைக் காரணமே தேகப்பயிற்சிதான். இருவருமே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அக்கறை காட்டுவார்கள். மாருதி தேக பயிற்சி நிலையத்தில்தான் இருவரும் நண்பர்களாகியிருக்கிறார்கள்.

தேவர் எப்போதும் முண்டா பனியனும், அரைக்கால் காக்கி டவுஸரும் அணிந்து, தன் கட்டுக்கோப்பான உடம்பை காட்டியபடியே, பயில்வான் நடை நடப்பது வழக்கம். இதனால் சக நண்பர்களிடம் பாராட்டு கிடைத்ததுடன்... சினிமாவில் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

ஜுபிடர் நிறுவனத்தில் தேவருக்கு மாதச் சம்பளம். எம்.ஜி.ஆருக்கு... அவர் ஏற்கிற வேஷத்தைப் பொறுத்த சம்பளம்.

அந்தக் காலத்தில் இனிமையாக பாடத் தெரிந்தவர்களுக்குத்தான் நாடகத்தில் கதாநாயக வேஷம் கிடைக்கும். எம்.ஜி.ஆரும் சிறுவயதில் பாடி நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு விரைவிலேயே மகரக்கட்டு... அதாவது... குரல் முற்றுதல் ஏற்பட்டுவிட்டது. மென்மையான... இனிமையான குரல் மாறி... ஆணுக்கான குரல் வந்துவிட்டது.

மகரக்கட்டு வந்துவிட்டால்.. கதாநாயகனா நடிக்கவைக்க மாட்டார்கள். கூட்டத்தோடு கூட்டமாக... ஏதாவது ஒரு கேரக்டரில் நடிக்கிற வாய்ப்பே கிடைக்கும். கதாநாயகனாக இருந்தபோது நாடகக் கம்பெனி தந்துவந்த சிறப்புச் சலுகைகளும் நிறுத்தப்பட்டுவிடும். சம்பளம் குறையும்... சாப்பாடு மட்டும் கிடைக்கும். நாடகத்தில் நடிக்க வருகிறவர்களில் 90 சதவிகிதம் பேர்கள் வீட்டில் சாப்பாட்டிற்கு வழி இல்லாதவர்கள். தொடர்ந்து... கிடைக்கிற வேஷத்தில் நடித்தபடி நாடகக் கம்பெனி சாப்பாட்டில் வாழ்க்கையை கடத்துவார்கள். "கதாநாயகனாக... கம்பெனியில் முக்கியத்துவமுள்ள ஆளாக இருந்துவிட்டு... இப்போது தகுதி குறைவோடு இருப்பதா?'’என மன வேதனைப்படுபவர்கள்... நாடகத்திலிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள்.

எம்.ஜி.ஆர்., தன் வீட்டின் வறுமையை உணர்ந்து... நாடகக் கம்பெனியிலேயே இருந்து கிடைக்கிற வேஷங்களில் நடித்து... அதில் தன் திறமையை வளர்த்தும், நிரூபித்தும் வந்தார்.

ஒருகட்டத்தில் நாடக வாழ்க்கையிலிருந்து... சினிமாவை நோக்கி வந்தபோது, ‘"உடற்கட்டை பேணினால்தான் அதற்கேற்ப கேரக்டர்கள் பெற்று... வருமானம் பார்க்க முடியும்'’ என முடிவுசெய்த எம்.ஜி.ஆர்., தேகப்பயிற்சியில் அக்கறை காட்டினார். தன்னைப்போலவே சின்னப்ப தேவரும் உடற்கட்டை பாதுகாத்து வருவதை அறிந்து... தேகப் பயிற்சிக்கூடத்தில் தேவருடன் அறிமுகமானார். நாளடைவில் இருவரும் உயிருக்குயிரான நண்பர்களானார்கள்.

எம்.ஜி.ஆரும் தேவரும் பரஸ்பரம் தங்கள் நட்பிற்குச் செய்த மரியாதை...