பாராளுமன்றத் தேர்தலோடு நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில், மிகப்பெரிய வெற்றியைப் பெற்று நான்காவது முறையாக வரும் 9ஆம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் பவன் கல்யாணின் கட்சியோடு கூட்டணி போட்டுப் போட்டியிட்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, மொத்தமுள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் 135 தொகுதிகளில் அறுதிப்பெரும்பான்மை வெற்றியைக் கைப்பற்றியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி, சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போலவே பாராளுமன்றத் தேர்தலிலும், மொத்தமுள்ள 25 தொகுதிகளில் பதினாறு தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வால் பாராளுமன்றத்தில் தனித்த பெரும்பான்மையைப் பெற இயலவில்லை. கூட்டணிக்கட்சிகளின் தயவால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்கவேண்டிய சூழலில், தெலுங்கு தேசம் கட்சி முக்கியத்துவம் பெறுகிறது. இன்னொருபுறம், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கட்சிகள், 232 தொகுதிகள் வரை வெற்றிபெற்றுள்ள நிலையில், அக்கூட்டணியும் ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் இருக்கிறது. தெலுங்கு தேசம் கட்சியைப் பொறுத்தவரை, தி.மு.க.வோடு நட்புறவாக இருந்த கட்சி என்பதால், சந்திரபாபு நாயுடுவின் வெற்றிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இத்தேர்த-ல் சந்திரபாபு நாயுடு பெற்ற வெற்றி, அவரை மீண்டும் முதல்வராக்கியதோடு, மத்தியில் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் கிங்மேக்கராகவும் மாற்றியுள்ளது.
கடந்த 2019 ஆந்திர மாநில தேர்தலில் 151 இடங்களில் வெற்றிபெற்று அசுர பலத்துடன் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெகன், அடுத்த ஐந்தே ஆண்டுகளில் தற்போது நடைபெற்ற தேர்த-ல், 175 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். தெலுங்கு தேசம் கூட்டணியில் போட்டியிட்ட பவன் கல்யாணின் ஜனசேனா 21 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. சந்திரபாபு நாயுடுவின் இமாலய வெற்றிக்கும், ஜெகன்மோகன் ரெட்டியின் படுதோல்விக்கும் ஜெகனின் ஆட்சிக்காலத்தில் சந்திரபாபு நாயுடுவை சீண்டிப்பார்த்ததே முக்கிய காரணமானது. ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததுமே ஆந்திராவின் தலைநகராக இருந்த அமராவதிக்கு பதிலாக விஜயவாடாவை தற்கா-கத் தலைநகராக அறிவித்தார். அமராவதி நகருக்கருகே கிருஷ்ணா நதிக்கரையில் சந்திரபாபு நாயுடு 1.38 ஏக்கரில் கட்டியிருந்த பிரமாண்ட பங்களா, விதியை மீறி கட்டப்பட்டதாகக் கூறி நோட்டீஸ் அனுப்பினார். அமராவதி நில முறைகேடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவை ஆந்திர சி.ஐ.டி. போலீசார் ஏ1 குற்றவாளியாக அறிவித்தனர். மேலும் சந்திரபாபு நாயுடு கொண்டுவந்த சோலாவரம் திட்டத்தை நிறுத்தியதோடு, என்.டி.ஆர். பெயரில் கொண்டுவந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை ஒய்.எஸ்.ஆர்.ஆரோக்யஸ்ரீ என்று பெயர் மாற்றம் செய்தார் ஜெகன்.
இப்படி தொடர்ச்சியாக தெலுங்கு தேசத்தை டார்கெட் செய்துவந்த நிலையில், கடந்த 2021, நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற விவசாயத்துறை சார்ந்த சட்டமன்ற விவாதத்தில், அமைச்சர் அப்பல ராஜூ, ஹெரிடேஜ் நிறுவனத்துடன் தொடர்புபடுத்தி சந்திரபாபு நாயுடு மீது குற்றச்சாட்டு வைத்தார். இவ்விவகாரத்தில் எழுந்த காரசார விவாதம் ஒரு கட்டத்தில், சந்திரபாபு நாயுடுவையே நிலைகுலையச் செய்தது. இறுதியாக சந்திரபாபு நாயுடு, ""தனிப்பட்ட ரீதியில் எனது மனைவி மற்றும் குடும்பத்தினரை விமர்சிக்கிறார்கள். இழிவுபடுத்துகிறார்கள். எனது மானம், மரியாதைக்காக போராடுவேன். பேரவையி-ருந்து வெளிநடப்பு செய்கிறேன். சட்டப்பேரவைக்கு இனி நான் திரும்பினால் முதல்வராக மட்டுமே திரும்புவேன்'' என்று சபதமிட்டு வெளிநடப்பு செய்தார். பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசியபோது, ""கடந்த 2 ஆண்டுகளாக ஆளுங்கட்சியினர் என்னை அவமானப்படுத்திவருகிறார்கள். என் மனைவியை தகாத வார்த்தைகளால் அவதூறு செய்கிறார்கள்'' எனக் கூறியபோது கண்ணீர் சிந்தினார். ""இனி மக்கள் ஆதரவோடு வெற்றிபெற்ற பிறகே சட்டப்பேரவைக்கு வருவேன்'' எனக் கூறியவர், அதன்பின்னர் சட்டப்பேரவைக்கே செல்லாமல் தவிர்த்தார்.
இந்நிலையில், கடந்த 2014 19ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில், ஆந்திர மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தில் சில நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்காக 10 சதவீதம் லஞ்சம் பெற்ற வழக்கில், ரூ.317 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக ஆந்திர சி.ஐ.டி. போலீசார் குற்றச்சாட்டு வைத்தனர். அதற்காக கடந்த 2023 செப்டம்பர் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடுவை சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இவ்வழக்கில் அக்டோபர் இறுதியில் ஜாமீனில் வெளிவந்தார். இந்த கைது நடவடிக்கை, சந்திரபாபு நாயுடு மீது அனுதாபத்தையும், ஜெகனின் ஆட்சி மீது அதிருப்தியையும் மக்களிடம் ஏற்படுத்தியது. மேலும், ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திரத் தலைநகர் மாற்றத்திலும், நகர்ப்பகுதி மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவதிலும் சரிவரச் செயல்படவில்லையென்ற அதிருப்தியும் உள்ளது. இவற்றையெல்லாம் துருப்புச்சீட்டாகப் பிடித்துக்கொண்ட சந்திரபாபு நாயுடு, வலுவான கூட்டணியை அமைத்து ஜெகன்மோகன் ரெட்டியை வீழ்த்தி, தனது சபதத்தை நிறைவேற்றி முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார்!