ற்கனவே திருமணமான பெண், தன்னுடைய பேரனை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் என்கின்ற விபரம் தெரிந்த நிலையில்... தற்கொலை செய்துகொண்டுள்ளார் தாராபுரம் மண்டல்புதூரை சேர்ந்த தாத்தா. இந்த விவகாரம் விஸ்வரூபமெடுக்கவே பேரன் மட்டுமல்ல, மாட்டு வியாபாரி தொடங்கி எஸ்.ஐ.வரை திருமணம் செய்து ஏமாற்றிய "கல்யாண ராணி'யின் விபரம் வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

dd

"21-06-2024 அன்று மாலையும், கழுத்துமாக ஒரு பெண்ணை கூட்டி வந்தான் மகேஷ் அரவிந்த். கூடவே மணப்பெண்ணின் தோழி ஒருவர். நீண்டநாட்களாக பெண் பார்த்து சலித்து ஓய்ந்துபோன நிலையில் அவனாகவே காதலித்து திருமணம் செய்துகொண்டு வந்ததால் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவழைத்து மருமக ளாகவே பாவித்தோம் அவளை. வீட்டிற்கு வந்த மருமகளுக்கு பரிசளிக்க "வி.எல்.எஸ்.' நகைக்கடைக்கு சென்று 7 பவுனில் தாலிக்கொடி, 4 பவுனில் செயின் மற்றும் 1 பவுனில் மோதிரமென வாங்கி அவளுக்குக் கொடுத்தோம். அதற்குப் பிறகுதான் அவளது பெயர் "சத்யா'ன்னு தெரிந்தது. சொந்த ஊர் கொடுமுடி. அப்பா பழனிச்சாமி இறந்துவிட்டதும் தெரியவந்தது. நல்லாத்தான் இருந்தாள். கல்யாணம்தான் நாம் செய்து வைக்கலை. திருமண வரவேற்பு விருந்தையாவது "ஜாம் ஜாம்னு' செய்யலாம் என அதற்கான ஏற்பாடுகளை செய்தோம். அப்பா தான் இல்லை.! வேற சொந்தக்காரங்க பெயர் முகவரி கொடு, நாம பேசி "ரிஷப்சனுக்கு' வரக் கூறலாமென சத்யாவிடம் கேட்டோம். அவ எந்த பதிலும் சொல்லலை. மகேஷிடம் கூறி கேட்டு சொல்லச் சொன்னேன். அதில் இருவருக்கும் சண்டை வர... எங்களுக்கு லேசா டவுட் வந்தது.

ஏற்கனவே ஊர்க்காரக "முத்துன பெண்ணாக' இருக் கிறாள் வயசு கூட இருக்குமோன்னு சந்தேகப்பட்டு கேட் டாக. அது உறுதியானது மாதிரி அவளை ஊரில் விசாரிச்ச தில் அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயம் எங்களுக்கு தெரியவந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் மனமுடைந்த நிலையில், தாத்தா கருப்பசாமியும் தற்கொலை செய்துகொண்டார்'' என்கிறார்கள் ஏமாற்றப்பட்ட மகேஷ் அரவிந்தின் உறவினர்கள்.

Advertisment

இதே வேளையில், "உன்னுடைய ஆதார் கார்டை கொடு, முகவரி மாற்றணும்'னு மகேஷ் அரவிந்த் கேட்க, சத்யாவும் ஆதார் கார்டை கொடுத்திருக்கின்றார். அதில் சத்யாவின் வயது 40 என்றும், கணவர் இருக் கிறார் எனவும் தெரியவர... ஷாக் ஆகியிருக் கின்றார். மறுபக்கம் தாத்தாவின் தற்கொலை! வேறு வழி தெரியாமல் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை மகேஷ் அரவிந்த் நாட, தான் ஏமாற்றப்பட்டது தொடங்கி சத்யாவின் கல்யாண மோசடிகள் அனைத் தும் வெளிப்பட்டுள்ளது.

மகேஷ் அரவிந்தால் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகாரில், "தீவன கம்பெனி ஒன்றின் ஏஜென்சியை மண்டல் புதூரில் வைத்துள்ளேன். 29 வயதான எனக்கு மணப்பெண் அமையவில்லை என்பதால் பலதரப்பட்ட ஆன்லைன் ஆப்களில் மணமகள் வேண்டி என்னுடைய விபரங்களுடன் ஜாதகத்தையும் பதிவு செய்து வைத்துள்ளேன். அப்பொழுதுதான் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் அன்பே (ஆய்க்ஷங்) ஆப் மூலம் காதல் துணையைத் தேடிக்கொள்ளலாம் என்பதை அறிந்து இணைந்தேன். இதில் கொடுமுடி யைச் சேர்ந்த சத்யாவின் அறிமுகம் கிடைக்க, அவரும் என்னுடைய வயதுதான் என்றுகூற பழக்கம் ஏற்பட்டது.

dd

Advertisment

ஒருகட்டத்தில் நான் சத்யாவிடம் என்னுடைய காதலைக் கூற, அவரும் காதலை ஏற்றுக்கொண்டதாக கூறினார். 20-06-2024 அன்று என்னுடைய அலுவலகம் வந்த சத்யா, தன்னுடைய வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளதாகவும், உடனடி யாக திருமணம் செய்துகொள்ள நெருக்கடி கொடுப்பதாகவும் கூறினார். உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். அப்பொழுது அவருடைய தோழி தமிழ்ச்செல்வியும் உடனிருந்தார். இப்பவே பழனிக்கு சென்று திருமணம் செய்து கொள்ளுங்கள் என ஐடியாவும் கொடுத்தார் அவர். மறுநாள் தொப்பம்பட்டி பிரிவில் நானும் சத்யாவும் காத்திருந்த நிலையில், எங்களை வாடகைக் காரில் அழைத்துக் கொண்டு பூசாரிகவுண்டன் வலசிலுள்ள வீரமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றார் தமிழ்ச்செல்வி. அங்கு சத்யாவிற்கு தாலி கட்டி வீட்டிற்கு அழைத்து வந்தேன். அவளுடைய ஆதாரும், செல்போனும் தான் அவள் யார் என்பதை எனக்கு தெரிய வைத்தது'' என்கின்றது.

இதுகுறித்துப் பேசிய மகேஷ் அரவிந்தோ, "நான்தான் அவளிடம் என்னுடைய காதலை கூறி னேன். நம்பிக்கை வைத்திருந்தேன். போலீஸ் வசமுள் ளது வழக்கு'' என்றார். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், "2012-ம் ஆண்டு ராஜேஷ் என்பவரை திருமணம் செய்ததில் பெண் குழந்தை உள்ளது என்று கூறியிருக்கின்றார் சத்யா. மேலும், 2010ம் ஆண்டு சென்னையை சேர்ந்த அருண், கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரைச் சேர்ந்த மாட்டு வியாபாரி ராஜமாணிக்கத்தின் மகன் பிரகாஷ், கரூரைச் சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் கார்த்திக் மற்றும் டி.எஸ்.பி. ஒருவர், மதுரை காவலர் என இவர் திருமணம் செய்து ஏமாற்றிய பட்டியல் நீள போலீஸாருக்கோ தலை கிறுகிறுத்துள்ளது. இதேவேளையில், சத்யாவும் தமிழ்ச்செல்வியும் எஸ்கேப்பாகியது தனிக்கதை.

"இன்னும் திருமணம் ஆகவில்லையே என ஏங்கும் ஆண்கள் தான் சத்யா மற்றும் தமிழ்ச்செல்வி யின் குறி. திருமணம் ஆகாதவர்களை டார்கெட் செய்து அவர்களை தங்களுடைய வலையில் வீழ்த்தி அவசர திருமணம் செய்து, சில நாட்களிலேயே சண்டை போடுவது இவர்களின் வழமையான திட்டம். தம்பதிகளுக்குள் சண்டை வலுக்கும் பட்சத் தில் வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்கின்றனர் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்து சமரசம் செய்துகொண்டு நகையை கைப்பற்றிக்கொண்டு போவார்கள். இவர்களால் பாதிக்கப்பட்டோர் ஏராளம் என்கின்றது விசாரணை டீம்.

படங்கள்: விவேக்