சென்னை மயிலாப்பூர் இரட்டைக் கொலைச் சம்பவம் சென்னை நகரில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. குஜராத்தில் பிரபல ஃபைனான்ஸ் கம்பெனிகளுக்கு ஆடிட்டராக இருந்துவரும் ஸ்ரீகாந்தும் அவரது மனைவி அனுராதாவும் மயிலாப்பூர் துவாரகா காலனியிலுள்ள பங்களாவில் தனியாக வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகனும், மகளும் அமெரிக்காவில் மருத்துவர்களாகப் பணியாற்றுகிறார்கள். மகளின் பிரசவத் திற்காக 6 மாத காலமாக அமெரிக்காவில் இருந்துவிட்டு, கடந்த 7-ம் தேதி அதிகாலையில் சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.
அதன்பின் இருவரையும் அமெரிக்கா விலுள்ள மகள் தொடர்புகொள்ள முயற்சிக்க, இருவரின் போனும் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்ததால், அடையாறிலுள்ள உறவினர் திவ்யாவிடம் விசாரித்திருக்கிறார். வீட்டுக்கு வந்து அவர் பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. எனவே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதையடுத்து மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள். வீட்டினுள் ஆங்காங்கே ரத்தத் துளிகள் சிதறியிருந்ததால், ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்த போலீசார், ஸ்ரீகாந்தின் கார் ஓட்டுநர் பதம்லால் கிருஷ்ணா மீது சந்தேகப்பட்டனர். ஆனால் அந்த ஓட்டுநர், சிறுவயதிலிருந்தே சொந்த மகன்போல் அங்கே வளர்ந்துவருவதாக ஸ்ரீகாந்தின் மகள் தெரிவித்தார்.
எனினும் சந்தேகம் தீராத போலீசார், கிருஷ்ணாவின் செல்போன் சிக்னலை ஆய்வு நடத்தியதில், அவரது செல்போன் சிக்னல் மூலம் சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திராவுக்கு பதம்லால் கிருஷ்ணா தப்பிச் செல்வதை அறிந்த போலீசார், ஆந்திரா வழியிலுள்ள காவல் நிலையங்களுக்கு கிருஷ்ணா வின் புகைப்படம், கார் எண் விவரங்களைத் தெரிவித்தனர். அதையடுத்து ஓங்கோல் அருகே காரை மடக்கிய போலீசார், மயிலாப்பூர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். புகாரளித்த ஆறே மணி நேரத்தில் குற்றவாளிகளை மடக்கிப் பிடித்த போலீசார், அவர்களிடமிருந்து ஏராளமான தங்க, வைர நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தங்களுடைய இடம் ஒன்றை விற்றதன்மூலம் 40 கோடி ரூபாய் பணம் கிடைத்தது குறித்து ஸ்ரீகாந்தும் அவர் மனைவியும் கிருஷ்ணா இருக்கும்போதே பேசியிருக்கிறார்கள். 40 கோடி என்றதும் அவ்வளவு காலம் வளர்த்த பாசமெல்லாம் காணாமல்போக, அப்பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டான் கிருஷ்ணா. முதலில் தனது தந்தை பதன்லால் சர்மாவையும் குடும்பத்தையும் கடந்த மாதமே நேபாளத்திற்கு அனுப்பிவிட்டான். தனக்கு கூட்டாளியாக ரவியை அழைத்துவந்த கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் தம்பதியை கொலை செய்து புதைப்பதற்காக நெம்மேலி அடுத்துள்ள சூளேரிக்காட்டில் ஸ்ரீகாந்துக்கு சொந்தமான பண்ணை வீட்டில் குழியும் தோண்டிவைத்துவிட்டான்.
விமான நிலையத்திலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு ஸ்ரீகாந்த் தம்பதியை வீட்டிற்கு அழைத்துவந்த கிருஷ்ணா, வீட்டில் ஏற்கெனவே காத்திருந்த ரவியுடன் சேர்ந்து, முதலில் ஸ்ரீகாந்தை பின்புறத்திலிருந்து மண்வெட்டியின் கட்டையால் தாக்கிக் கொன்றான். அவர் மனைவி அனுராதாவை கிரிக்கெட் மட்டையால் இருவரும் தாக்கிக் கொன்ற னர். பின்னர் அவர்களிடமிருந்த கொத்துச்சாவியை எடுத்து, மூன்றடுக்கு லாக்கரில், திறக்கமுடிந்த இரண்டு லாக்கர்களிலிருந்து 1000 சவரன் தங்க நகைகளையும், 60 கிலோ வெள்ளிப் பொருட்கள், பிஸ்கெட்டுகள், 10 வைரக் கம்மல்கள், பிளாட்டின வளையல்கள் என 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்களைக் கொள்ளையடித்துள்ளனர்.
பின்னர், பண்ணை வீட்டில் தோண்டப்பட்ட 7 அடி ஆழக்குழியில் சடலங்களின் இடுப்புப் பகுதியை உடைத்து ஒன்றன்மேல் ஒன்றாக உட்கார வைப்பதுபோல் குழிக்குள் இறக்கி, போர்வையால் மூடி, பின்னர் மண்ணால் புதைத்துள்ளனர். தம்பதியரின் செருப்புகள், ரத்தக்கறை ஆடைகளை பண்ணை வீட்டின் பின்புறத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு இன்னோவா காரில் நகைகளோடு நேபாளத்துக்குத் தப்பிச் செல்லும் வழியில் பிடிபட்டனர்.
சென்னை காவல் தெற்கு கூடுதல் ஆணையர் கண்ணன் ஐ.பி.எஸ். மேற்பார்வையில், திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன் முன்னிலையில், வீடியோ பதிவுகளுடன் இரண்டு சடலங்களையும் தோண்டி எடுத்து உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். குற்றவாளிகள் துரிதமாகக் கைது செய்யப்பட்ட போதும், 40 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை விற்றது குறித்த விவரங்களை விசாரணையின்போது குற்றவாளிகள் கூறினார்களா? அந்த 40 கோடி ரூபாய் யாரிடம் இருக்கிறது? நகைகளை மட்டும் பிடித்த போலீசாரிடம் பணம் சிக்கவில்லையா? வீட்டுச்சாவியே குற்றவாளியிடம் இருக்கும் நிலையில், ஸ்ரீகாந்த் தம்பதிகள் வரும்வரை குற்றவாளிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? கொலை செய்யவேண்டிய அவசியமென்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
குற்றவாளிகளை போலீசார் 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். காவல்துறையின் இந்த விசாரணை உண்மையை வெளிக்கொண்டு வருமா? அல்லது 40 கோடி ரூபாய் விஷயத்தை மறைக்கவா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
இது குறித்து ஆய்வாளர் ரவியிடம் கேட்டபோது, "தொடர்ந்து விசாரணை நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம். விசாரணை முடிவில், 40 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்றது உண்மையா? அந்தப் பணம் எங்கிருக்கிறது என்பது குறித்தெல்லாம் தெரியவரும்'' என்றார்.