தமிழகத்தில் இந்த ஆண்டில் இதுவரை 595 கொலைகள் நடந்துள்ளன. ‘தமிழகம் கொலைக்களமாக மாறி வருகிறது'’ என அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பாக குற்றச்சாட்டு எழுப்பியிருக்கிறார். கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து பேட்டியளித்த இளங்கோவனின் ஆதரவாளர் பொன். கிருஷ்ணமூர்த்தி, "திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலையில் குற்றவாளிகளை ஏன் கண்டுபிடிக்கவில்லை என கார்த்தி சிதம்பரம் ஏன் முதல்வரை சந்தித்து கேள்வி கேட்கவில்லை?' என கேட்டிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன், சேலம் அ.தி.மு.க. பகுதி செயலர் சண்முகம், மதுரையில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் பலசுப்பிரமணியன், ஜூலை 28ஆம் தேதி மட்டும் கடலூர், திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த அ.தி. மு.க.வின் பத்மநாபன், சிவகங்கை பா.ஜ.க. பிரமுகர் செல்வக்குமார், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஜாக்சன் என மூன்று அரசியல் கட்சிப் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் கொலை யாளிகளுக்கு வெடிகுண்டு வாங்கித்தந்த மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் போலீசார் ஆக்டிவாக இருக்கிறார்கள். திருநெல்வேலி காங்கிரஸ் மா.தலைவர் ஜெயக்குமார் கொலையில் இதுவரை குற்றவாளிகளில் ஒருவரைக் கூட போலீசாரால் பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? என போலீஸ் வட்டாரத்தில் கேட்டபோது, “கடலூர் பத்மநாபன் படுகொலை என்பது பழிக்குப்பழி வாங்க நடந்த ஒரு படுகொலை. கடந்த ஆண்டு கடலூரில் நடந்த வளைகாப்பு விழாவில் நடனம் ஆடியது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரோடு பத்மநாபன் தகராறு செய்தார். அந்தத் தகராறில் பாஸ்கர் வெட்டிக் கொல்லப் பட்டார். பாஸ்கர் கொலைக்குப் பழிவாங்க இன்னொரு கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு வந்த பத்மநாபனை வெட்டிக் கொலை செய்தார்கள் பாஸ்கரின் நண் பர்கள்.
சிவகங்கையில் செல்வக் குமார் என்கிற பா.ஜ.க. பிரமுகரை முகம் சிதைத்து மூன்று பேர் வெட்டிக் கொலை செய்திருக்கிறார் கள். கன்னியாகுமரி ஜாக்சன் படுகொலையில் ராஜ்குமார் என்பவர் ஈடுபட்டிருக்கிறார். ராஜ்குமாருக்கும் ஜாக்சனுக்கும் முன் விரோதம் இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இப்படி அனைத்துக் கொலைகளுக்கும் முன் விரோதத்தை சாட்சியமாகக் கொண்டால் கொலைகளைத் தடுப்பது எப்படி என்கிற கேள்வி எழுகிறது. அரசியல் கட்சிகளில் ரவுடிகள் உறுப்பினர் களாகவும், தலைவர்களாகவும் இருப்பதால் அவர்கள் முன் விரோதத்தால் படுகொலை செய்யப்பட்டாலும் அந்தக் கொலை அரசியல் படுகொலையாக மாறி விடுகிறது.
தமிழக பா.ஜ.க.வில் மட்டும் 125 ரவுடிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அதில் 50க்கும் மேற்பட்டோர்கள் பல கொலைகளைச் செய்த ஆ கிளாஸ் ரவுடிகள். ஒவ்வொருவர் பேரிலும் பல கொலை வழக்குகள் இருக்கின்றன. இவர்களால் கொலை செய்யப்பட்டவர்கள் பழிக்குப்பழி வாங்க கொலை செய்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஈடுபட்டவர்களில் பலர் வழக்கறிஞர்கள். கொலைகளில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவது, அவர்கள் கைது செய்யப்படுவது என புதிய ட்ரெண்டையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உருவாக்கியுள்ளது.
கொலை வழக்குகளில் நிலவும் முன் விரோதத்தை கண்டுபிடிக்க போலீசிடம் சரியான மெக்கானிசம் இல்லை. ஆம்ஸ்ட்ராங் கொலையில் ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் இருந்த மாநில ரீதியான ரவுடிகளின் குற்றத் தடுப்பு முன்னறிவுப் பிரிவு தோல்வியடைந்தது. ரவுடிகள் அணி சேர்வது, பணப் பரிமாற்றம் செய்வது, வெடிகுண்டுகளை வீசுவது என எதையுமே இந்த நுண்ணறிவுப் பிரிவால் முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் மேல் உள்ள நீதிமன்ற வாரண்டுகள் என்ன? அந்த வாரண்டுகளுக்காக அவர்கள் நீதிமன்றங்களில் ஆஜராகிறார்களா? என்பதை கண்காணிக்கும் அமைப்பு காவல்துறையில் இல்லை. முன்பெல்லாம் ஒரு ரவுடிக்கு ஒரு போலீஸ் என நியமித்து அவனது அசைவுகளை கண்காணிக்கும் வழக்கம் தமிழக போலீசாரிடம் இருந்தது. இப்பொழுது அந்தப் பழக்கம் கைவிடப்பட்டு விட்டது. இதுதான் அரசியல் படுகொலைகள் நடப்பதற்கு அடிப்படையான காரணம்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர் புடைய அஞ்சலை என்கிற ரவுடியை பா.ஜ.க. மா.த. ஆதரித்தார். மலர்க்கொடி என்கிற ரவுடி அ.தி.மு.க.வில் பகுதி துணைச் செயலாளராக எடப்பாடியிடம் நெருங்கும் அளவிற்கு அ.தி. மு.க.வில் கோலோட்சினார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் அளவிற்கு செல்வாக்குப் பெற்றவராக இருந்தார். படப்பை குணா என்கிற ரவுடியின் வீட்டுக்கே முன்னாள் பா.ஜ.க. மத்திய அமைச்சர் ஒருவர் சென்று வந்தார். பா.ஜ.க.வில் இருக்கும் தூத்துக்குடி ராதாகிருஷ்ணன் என்பவர் மீது மட்டும் 33 வழக்குகள் இருக்கின்றது. இப்படி அரசியல் தலைவர்கள் ரவுடிகளை ஆதரிக்கலாமா? என அரசியல்வாதிகளை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள் போலீசார்.
போலீஸ் அதிகாரிகளில் சிலர் சாதிப் பாசத்தால் ரவுடிகளுக்கு துணையாக செயல்படுகிறார்கள் என போலீசாரை விமர்சிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மொத்தத்தில் காவல்துறை முழுவதுமாக சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதே தமிழகத்தின் தற்போதைய நிலைமை.