பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "வேலூர் மாநகராட்சியில் எங்கள் கட்சியின் 24-வது வார்டு வேட்பாளர் பரசுராமனை தி.மு.க. மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ, வேலூர் மாநகரச் செயலாளர் கார்த்தி எம்.எல்.ஏ. இருவரும் கடத்திச் சென்று, "போட்டியிலிருந்து விலகவேண்டும், இல்லையேல் தொழில் செய்ய முடியாது' என மிரட்டியுள்ளார்கள். இது கண்டிக்கத்தக்கது. மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் வெற்றிபெறுவதுதான் ஜனநாயகம். செல் வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். பா.ம.க. வேட்பாளரை மிரட்டியவர்கள் மீது தேர்தல் ஆணையம், காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த ட்விட் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கவனத்துக்குச் சென்றதும், வேலூர் தி.மு.க. மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ.வை அழைத்து விசாரித்தனர். அவர் நடந்ததைத் தெரிவித்ததும், அதனை அப்படியே வெளிப்படுத்துங்கள் எனச்சொன்னதும் நந்தகுமார், தனது ட்விட்டர் பக்கத்தில், "பா.ம.க. வேட்பாளர்தான் எங்களிடம் வந்து சீட் கேட்டார். பா.ம.க. சின்னத்தில் நின்றால் வெற்றி பெறமுடியாது, உதயசூரியன் சின்னம் தந்தால் நான் தி.மு.க.வில் இணைகிறேன் எனச் சொன்னார். நாங்கள் எங்கள் கட்சி வேட் பாளருக்கு சின்னம் ஒதுக்கிவிட்டோம் எனச் சொன்னோம். பா.ம.க. வேட்பாளரை கடத்திச்சென்று வெற்றிபெறும் நிலையில் தி.மு.க. இல்லை, அவரை மிரட்டவேண்டிய அவசியம் இல்லை''’என மறுத்தார்.
வேலூர் மாவட்ட பா.ம.க. மா.செ. இளவழகன், “"எங்கள் வேட்பாளர் ஆம்புலன்ஸ் தொழில் செய்கிறார். நீ வாபஸ் வாங்கவில்லை யென்றால் தொழில் செய்ய முடியாது என மிரட்டினார்கள், அதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்''’என எஸ்.பி.யிடம் புகார் தந்தார்.
இதில் கடுப்பான மா.செ. நந்தகுமார், வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தி.மு.க. மா.செ.விற்கு சொந்தமான ஹோட்டலுக்கு பா.ம.க. வேட்பாளர் பரசுராமன் பிப்ரவரி 5-ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு வருவதும், அவரை காங்கிரஸ் வேலூர் மாநகர தலைவர் டீக்கா ராமன் வாசலில் வந்து அழைத்துச் சென்று அலுவலக அறையில் அமரவைப்பதும், அங்கு ஏற்கனவே அமர்ந்திருந்த தி.மு.க. மாநகரச் செயலாளரான வேலூர் எம்.எல்.ஏ. கார்த்தியுடன் உரையாடுவதும், அந்த அறைக்கு தி.மு.க. மா.செ.வும், எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார் வந்ததும் இருவருக்கும் பா.ம.க. வேட்பாளர் சால்வை அணிவித்து உரையாடுவதும் இருந்தது. இது பா.ம.க.வை அதிர்ச்சியடையச் செய்தது.
டாக்டர் ராமதாஸின் ட்வீட் அறிக்கைக்கு, வீடியோ ட்விஸ்ட் தந்த அதிர்ச்சி வைத்தியத்தின் எபெக்ட் தீருவதற்குள் 7-வது, 8-வது வார்டுகளின் தி.மு.க. வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, அ.தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் வாங்கி தி.மு.க. வேட்பாளர் களை அன்னபோஸ்டாக வெற்றிபெற வைத்திருக்கின்றனர்.