தமிழ்நாட்டில் பணியாற்றும் இளங்கலை படித்த மருத்துவர்களுக்கு முதுகலை மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது அரசு மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 30 துறைகளில் எம்.டி., எம்.எஸ்., முதுநிலை மருத்துவப் படிப்புகள் உள்ளன. இவற்றில் அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கான 50 சதவீதம் போக, மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இவற்றில் அரசு மருத்துவர்களுக்கு (Service Quota) 50% வழங்கப்படுகிறது, மீதமுள்ள 50 சதவீத இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. சர்வீஸ் கோட்டாவில் படிப்பவர்கள், படித்து முடித்துவிட்டு மீண்டும் அரசு மருத்துவமனைக்கே பணிக்கு வந்துவிடவேண்டும். இந்த நடைமுறை செயல்பாட்டில் இருந்துவந்தது. இந்நிலையில், ஜூலை முதல் வாரம் வெளிவந்த ஒரு அரசாணை, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளம் மருத்துவர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.
அந்த அரசாணையில், அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பணியாற்றியபடி முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு தேர்வெழுதி வெற்றிபெறும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படும் சர்வீஸ் கோட்டாவில் இனிமேல் பொதுமருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, மகப்பேறு, குழந்தை நலம், மயக்கவியல் உள்ளிட்ட 10 முதுநிலைப் படிப்புகள் மட்டும்தான் இடம்பெறும். அவற்றில் ஒன்றைத்தான் தேர்வு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள பிரிவுகளில், அதாவது காது, மூக்கு, தொண்டை பிரிவு, கண் மருத்துவம், அவசர சிகிச்சை பிரிவு, தோல் சிகிச்சை பிரிவு, சர்க்கரை நோய் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் இளம் அரசு மருத்துவர்கள் சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க முடியாது. ஓராண்டுக்கு நிறுத்திவைக்கப்படுகிறது எனச்சொல்லியுள்ளது.
இதுகுறித்து அரசு மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த மூத்த மருத்துவர்கள் சிலர், "அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து கிட்டத்தட்ட 20 துறைகளின் படிப்புக்களை எடுத்து விட்டனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் இளநிலை மருத்துவர்கள் மேற்படிப்புகளை இனிமேல் படிக்க வேண்டுமென்றால் பொதுக் கலந்தாய்வில் பங்கேற்றுத்தான் படிக்க முடியும். இளங்கலை முடித்த மருத்துவர்கள் அரசு பணியில் சேரும்போது 2, 3 ஆண்டுகள் கிராமப்புறங்களிலும், மலைவாழ் பகுதி களிலும் மிகுந்த சிரமத்துக்கு இடையே பணியாற்றுகின்றனர். இன்று கிராமப்புற மருத்துவ சேவையில், சுகாதாரக் கட்டமைப்பில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்றால் மருத்துவர்களின் அர்ப்பணிப்பான உழைப்பு தான் காரணம். அவர்களின் உழைப்பைப் பாராட்டும்விதமாக சர்வீஸ் கோட்டா இருக்கிறது. வேலை செய்துகொண்டே தேர்வுக்கு படித்து நீட் எழுதி தேர்ச்சி பெற்று முதுநிலை படிப்புக்கு வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு இனி சர்வீஸ் கோட்டா இல்லையென்பது எப்படி சரியாகும்?.
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர் களுக்கான இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உறுதிப்படுத்தியுள்ளது. அப்போது இதே தி.மு.க. அரசு சர்வீஸ் கோட்டாவுக்கு ஆதரவாக வாதாடி நல்ல தீர்ப்பைப் பெற வழி செய்தது. இப்போது எதிர்மறையாக முடிவு எடுக்கிறது. ஓராண்டு மட்டுமே இந்த நிலை எனச் சொல்கிறது, இதில் நம்பிக்கையில்லை. இது தொடரும். பிற்காலத்தில் மற்ற துறைகளிலும் இதனை நடைமுறைப்படுத்துவார்கள். இதனால் வருங்காலங்களில் அந்த துறையில் மருத்துவர்கள் பற்றாக்குறை தான் ஏற்படும்.
இந்த 20 துறைகளைப் பட்டியலிருந்து நீக்கக் காரணம், இந்த படிப்புகளைப் படிக்கும் அரசு மருத்துவர்களுக்கு அரசுத்துறையில் பணியாற்ற போதிய இடங்கள் இல்லை என்கிறது. அதாவது, தேவைக்கு அதிகமாக மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்கிறது. இது அப்பட்டமான பொய் இல்லையா? அரசு மருத்துவமனைகளில் பல்வேறு துறைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல மருத்துவர்கள் நியமனம் இல்லை. தமிழ்நாட்டில் இப்போது மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட புதிய கல்லூரிகளில் பல துறைகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. ஏற்கெனவே உள்ள துறைகளில் மருத்துவர்கள், பேராசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. கூடுதலாக மருத்துவர்களை நியமிக்காமல், அவர்கள் பணியாற்ற இடங்கள் இல்லை என்கிறது. அரசு சொல்வது உண்மையென்றால் சுகாதாரத்துறை வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?'' எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
சுகாதாரத்துறையின் இந்த அரசாணையால் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையில் எதிர்காலத்தில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பு மருத்துவர்கள் தட்டுப்பாடு ஏற்படும்போது மக்கள் தான் பாதிக்கப்படுவர். அப்போது சுகாதாரத்துறை 20 ஆண்டுகள் பின்னோக்கிப் போயிருக்கும். இத்தனை ஆண்டு களாக எந்த எதிர்பார்ப்புமின்றி, ஏராளமான மருத்துவர்களின் உழைப்பாலும், தியாகத்திலும் எழுப்பப்பட்டு, உயர்ந்து நிற்கும் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்க வேண்டாம். அதனால் இந்த அரசாணையை உடனே அரசு திரும்ப பெற வேண்டும் என்கின்றனர். அரசு பரிசீலிக் குமா?