ந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு பா.ஜ.க.வின் வீரியம் கூடியிருக்கிறது. அடுத்து ராமர்கோவில் திறப்பு, அதன்பிறகு அகண்ட பாரதம் என இந்தியாவைத் தாண்டி தனது வியூகங்களை பா.ஜ.க. பரப்புகிறது. ஆனால் பா.ஜ.க.விற்கு நெருடலாக இருப்பது தென் மாநிலங்களில் பா.ஜ.க. அடைந்த தோல்வி. அதற்காக தனது சக்கர வியூகத்தை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மேதாவிகள் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் பேசும்போது "தெலுங்கானாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி எனது அரசியல் எதிர்காலத்தையே சிதைத்துவிட்டது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு வட மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெறாமல் போயிருந்தால் இந்நேரம் என்னையும் எனது குரு பி.எல்.சந்தோஷையும் தென் மாநிலத் தோல்விக்காக பா.ஜ.க. தலைமை பந்தாடி இருக்கும். வட மாநில வெற்றி எங்களை காப்பாற்றி இருக்கிறது' என புலம்பியிருக்கிறார்.

ss

வட மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு வாழ்த்து செய்தியை ஓ.பி.எஸ். தெரிவித்திருக்கிறார். எடப்பாடி அதைப்பற்றி ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் எடப்பாடிக்கு கீழே உள்ள அ.தி.மு.க. தலை வர்களான தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் பா.ஜ.க.வின் வெற்றிக்கு, அவர்களுக்கு நெருக்கமான மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

வேலுமணி நேரடியாக அமித்ஷாவின் பர்சனல் நம்பருக்கே தொடர்புகொண்டு நிர்மலா சீதாராமனை பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசினார். அமித்ஷாவும் அவரிடம் சந்தோஷமான மூடில் பேசினார். அமித்ஷா விடம் பேசிய பிறகு அ.தி.மு.க. தலைவர்கள் பேசியது தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும் தற்போதைய கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணனிடம். கொங்கு பகுதியைச் சேர்ந்த இவர் இயல்பாகவே அ.தி.மு.க. ஆதரவாளர். இவர் ஒரு விழாவில் வெளிப்படையாகவே “"அ.தி.மு.க. இல்லையென்றால் பா.ஜ.க. தமிழ்நாட்டில் தேறாது. வானதி நீ கெட்டியாக வேலுமணியைப் பிடித்துக்கொள்''’என்று அட்வைஸ் செய்தார். சி.பி.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் "ஸ்ரீதேவி எர்த் மூவர்ஸ்' என்கிற நிறுவனத்தின் கொங்கு நாட்டு தொழிலதிபரும், பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் பாலமாக இருப்பவரின் குடும்பத்து திருமண விழாவில் கலந்துகொண்டார். சேலத்தில் நடைபெற்ற அந்தத் திருமணத்தில் அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அங்கு அ.தி.மு.க., பா.ஜ.க.விடையே மறுபடியும் கூட்டணி அமைவது தொடர்பாக விரிவான ஒரு பேச்சு வார்த்தையை சி.பி.ராதாகிருஷ்ணன் நடத்தினார். ஸ்ரீதேவி எர்த் மூவர்ஸ் முதலாளியும் அந்த பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தார்.

ஐந்து மாநில தேர்தல் நடப்பதற்கு முன்பு நடந்த இந்த சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையை சி.பி.ராதாகிருஷ் ணன் தேர்தல் வெற்றிக்குப்பின் இப்போது தொடர்கிறார். தி.மு.க. அரசு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் அங்கிட் திவாரி என்கிற அமலாக்கத்துறை அதிகாரியைக் கைது செய்தது. அதன் தொடர்ச்சியாக அவருடன் தொடர்பில் இருந்த அமலாக்கத்துறையின் இணை இயக்குனரை கைது செய்ய முயற்சிப்ப துடன், அதற்காக அங்கிட் திவாரியை போலீஸ் காவலில் எடுத்து அவரிடம் வாக்குமூலம் வாங்குவது ஆகியவை தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜ.க. தரப்பை கடும் கோபத்தில் ஆழ்த்தி யிருக்கிறது.

"தி.மு.க.வை அப்படியே விட்டுவிட் டால் நல்லது அல்ல. அ.தி.மு.க., பா.ஜ.க. பிளவால் தி.மு.க. குளிர் காய்கிறது. 2024 தேர்த-ல் 40 தொகுதிகளிளிலும் ஜெயித்துவிடலாம் எனக் கணக்குப் போடுகிறது. அதை முறியடிக்க அ.தி.மு.க., பாஜக கூட்டணி அமைவது அவசியம். கர்நாடகத்தில் குமாரசாமி யுடன் கூட்டணி வைத்ததால் 17 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெறும் சூழல் உருவாகியுள்ளது. தெலுங்கானா வில் சந்திரசேகர ராவுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் ஆட்சியையே கவிழ்த்துவிடும் நிலைமையை உருவாக்க முடியும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது பா.ஜ.க. தரப்பில் பலரும் முன்வைக்கும் வாதங்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எடப்பாடி, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் மைனாரிட்டி ஓட்டுக்கள் வராது. இப்போதுள்ள நிலையே நீடித்தால் 18 தொகுதிகளில் தி.மு.க. ஆட்சி மீதான அதிருப்தியைப் பயன்படுத்தி அ.தி.மு.க. வெற்றி பெறும். வெற்றி பெற்றபிறகு அ.தி.மு.க., பா.ஜ.க.விற்கு ஆதரவு கொடுக்கும். இதுதான் அ.தி.மு.க.வின் நிலை. ஆனால் இதை பா.ஜ.க. ஏற்கத் தயாராக இல்லை. ஜனவரி மாதம் நடை பெறவுள்ள ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அனைத்து மாநிலங்களிலும் உள்ள வி.ஐ.பி.க்களை பா.ஜ.க. அழைக்கிறது. அதில் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் அடங்குவார்கள்.

பிரதமர் நேரடியாக விடுக்கும் இந்த அழைப்பை ஏற்று எடப்பாடி செல்வாரேயானால் ராமர்கோவில் விழாவில் மறுபடியும் கூட்டணி மலரும் என்கிறார்கள் பா.ஜ.க.வினர். இல்லையென்றால் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் அ.தி.மு.க. மீது பாயும் என மிரட்டுகிறார்கள். ‘அய்யோ... அமலாக்கத்துறை வேண்டாம்’ என அலறும் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் ‘பா.ஜ.க.வுடன் கூட்டணி அமையுங்கள்’ என எடப்பாடிக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்து வருகிறார்கள். எடப்பாடியும், பா.ஜ.க.வுடன் உறவை புதுப்பிக்கலாமா? என ஆலோசித்து வருகிறார்' என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

_______

Advertisment

இறுதிச் சுற்று!

மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தடையின்றி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து அமைச்சர்கள் நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் இரவு பகல் பாராமல் நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டபடி இருந்தனர். நிவாரணப் உதவிகள் கிடைக்கிறதா ? பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்களா ? என்பதை கண்காணித்து, பிரச்சனைகள் இருப்பின் அவைகளை உடனுக்குடன் சரிசெய்யப்பட வேண்டும் என்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மண்டல வாரியாக நியமித்திருந்தார் ஸ்டாலின். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் களத்தில் இறங்கி மீட்பு பணிகளிலும் நிவாரண பணிகளிலும் துரிதமாக இயங்கினர். இதற்கிடையே நிவாரண உதவிகள் வழங்கிட முதல்வர் ஸ்டாலினும் களத்தில் இறங்கினார். புதன் கிழமை (6-12-2023) காலை, ஓ.எம்.ஆர். சாலையில் இருக்கும் கந்தன் சாவடி, வேளச்சேரி அருகே உள்ள தரமணி உள்ளிட்ட தென்சென்னையின் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை சரி செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிடக்கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 6-ந் தேதி கடிதம் அனுப்பியிருக்கிறார் ஸ்டாலின். அந்த கடிதத்தில் பாதிப்புகள் குறித்த முழு விபரங்களும் தற்காலிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

-இளையர்

Advertisment