தனுஷ் -செல்வராகவன் இருவரும் இணைந்து விரைவில் ஒரு படம் பண்ணவேண்டும் என ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் கூறிவந்தனர். இந்நிலையில், தனுஷை வைத்து படம் ஒன்றை இயக்கப்போவதாக செல்வராகவன் அண்மையில் அறிவித்தார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் செல்வராகவனின் 12-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு "நானே வருவேன்' எனப் பெயரிடப்பட்டதோடு, அதன் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.
ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில், தனுஷுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. அதில் ஒரு கதாநாயகியாக நடிகை தமன்னா நடிக்க வுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சூழலில், படத்தின் கதைக்களம் தயாரிப்பாளர் தாணுவுக்கு திருப்தியைத் தராததால், "புதுப்பேட்டை'’ மாதிரி ஒரு தாதா கதையை அவர் உருவாக்கச் சொன்னதாகவும், அதற்காக செல்வராகவன், கதையில் சில மாறு தல்களைச் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. "பீஸ்ட்', "சாணிக்காயிதம்' படங்களில் பிஸியாக நடித்துவந்த செல்வராகவன், தற்போது அந்த பணிகளை முடித்துள்ளதால் இப்படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்த வுள்ளாராம். இவற்றிற்கிடையே, இப்படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், தனுஷ் இப்படத்தில் இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின், ஆண்ட்ரியாவை வைத்து "பிசாசு 2' படத்தை இயக்கிவருகிறார். "ராக்ஃபோர்ட் எண்டர்டெயின் மெண்ட்' சார்பில் முருகானந்தம் தயாரிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத் தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ள சூழலில், இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மிஷ்கின் அடுத்தாக இயக்கும் படம் குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மிஷ்கினின் அடுத்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. "பிசாசு 2' படத்தை தயாரித்துவரும் "ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்க உள்ளதாம். "பிசாசு 2' படத்தின் ரிலீஸ் நெருங்கும்போது, மிஷ்கின் - எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிகர் விதார்த்தும் இப்படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.
சமந்தாவின் பாலிவுட் பார்வை!
சமந்தா - நாகசைதன்யா விவகாரத்திற்கான காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல விவாதங்கள் நடைபெற்று வந்தன. அதில் பெரும் பான்மையானவை சமந்தாவை தாக்கியே இருந்தன. இந்த சூழலில், தனக்கு ஆதரவாக நின்ற ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அத்தகைய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், "என் மீது இடைவெளியில்லா தாக்குதல்கள் நடக்கின்றன. ஆனாலும், அவற்றால் நான் உடைந்து போகமாட்டேன்'' என சமந்தா ஒரு பதிவினை வெளியிட்டார். மேலும், விரைவில் அவர் முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தவுள்ளதாக அவரது தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. அந்தவகையில், தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க சமந்தா ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக "காத்துவாக்குல ரெண்டு காதல்' மற்றும் தமிழ், தெலுங்கில் தயாராகும் "சாகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்த நிலையில், விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு முதல்முறையாக இந்த இந்தி படத்தில் நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டுள்ளாராம். "பேமிலிமேன் 2' வெப் தொடர் மூலம் இந்தி ரசிகர்களிடம் அறிமுகமான சமந்தா, தொடர்ந்து சில இந்தி படங்களுக்கான கதைகளைக் கேட்டு வந்ததாகவும், அவற்றில் ஒரு கதையைத்தான் தற்போது ஓ.கே. செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பாலிவுட்டில் சமந்தா அறிமுகமாகும் இந்த புதிய படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
-எம்.கே.