2019 டிசம்பர் 06, அண்ணல் அம்பேத்கர் நினைவுதினம். அன்றைய தினமே நீலச்சட்டை பேரணியையும், சாதி ஒழிப்பு மாநாட்டையும் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த தோழர்கள். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில், கோவை மாநகரக் காவல்துறையிடம் அனுமதிகேட்டு சென்றபோது, பாபர் மசூதி இடிப்பு தினம் எனச்சொல்லி மறுத்துவிட்டனர்.
டிசம்பர் 26, 2020 ஜனவரி என இரண்டுமாத அலைக்கழிப்புக்குப் பிறகு திட்டமிட்டபடி, பிப்ரவரி 09-ந் தேதி மாலை 3 மணியளவில் கோவை அவிநாசி சாலையில் நீலச்சட்டைப் பேரணி தொடங்கியது. ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் பேரணியைத் தொடங்கி வைத்தார். வயது வித்தியாசமின்றி நீலச்சட்டை அணிந்த 20 ஆயிரம்பேர் பேரணியில் கலந்து கொண்டனர். பறையிசை முழங்க, சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரியக் கலைகளை செய்தபடியே, பேரணி முன்னேறியது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், சாதி ஒழிப்பை வலியுறுத் தும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் அதிர்வுடன் முழங்கினர். பேரணியை ஆதரித்து Ambedkar Blue Shirt Rally என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.
பேரணியின் நிறைவாக பாலசுந்தரம் சாலையில் சாதி ஒழிப்பு மாநாடு நடந்தது.
மாநாட்டு மேடையில் பேசிய கு.ராம கிருஷ்ணன், ""சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங் கள் நிற்க வேண்டுமெனில், அந்த சட்டத்தை திரும்பப் பெறுவதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை'' என்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், “""சாதி, மதத்தின் பெயரால் மனிதத்தை படுகொலை செய்யும் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெரியாரைத் தவிர்த்துவிட்டு தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க முடியாது'' என அனல்பறக்கப் பேசினார். “""சாதி மதத்தை ஒழித்து ஜனநாயகம் உருவாக்க சேர்ந்து உழைப்போம்'' என்று அழைப்புவிடுத்தார் மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா.
""வானமும், கடலும் எல்லோருக்கும் சமமாய் நீல நிறத்தில் காட்சியளிக்கிறதே, அந்த சமத்துவத்தை வலியுறுத்தியே நீலச்சட்டையுடன் வந்திருக்கிறோம்'' என கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டார் தமிழ்ப்புலிகள் நாகை திருவள்ளுவன். மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, “""குடியுரிமைத் திருத்தச் சட்டம், இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல என்பதை உணர்ந்ததால்தான், எல்லா மக்களும் ஒன்றுதிரண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பொருட்படுத்தாமல், மனுதர்ம ஆட்சியை மீள் கட்டமைப்பு செய்வதில்தான் ஆர்வமாக இருக்கிறது மத்திய அரசு'' என்றார்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசுகையில், “""அமித்ஷாவும், மோடியும் வெறும் கருவிகள்தான். அவர்களை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் இயக்கிக் கொண்டிருக்கிறார். என்ன இயக்கினாலும், பெரியார் மண்ணின் குணாதிசயத்தை எந்தக் கொம்பனாலும் மாற்றமுடியாது'' என்றார் ஆணித்தரமாக.
இறுதியாகப் பேசிய வி.சி.க. தலைவர் தொல்.திருமா வளவன், ""திருச்சியில் கருஞ்சட்டை, கோவையில் நீலச்சட்டை மாநாட்டைப் போல, இந்தக் கூட்டமைப்பு செஞ்சட்டைப் பேரணியையும் நடத்திக்காட்டும். சாதி ஒழிப்பு இந்த மாநாட்டின் நோக்கம். நாடகக் காதல் என்பவர்களும், கூலிப்படை வைத்து ஆட்களைக் கொல்பவர்களும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இல்லா விடினும், அவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள்தான். அவர்களை இந்த மண்ணில் காலூன்ற விடமாட்டோம்'' என முழக்கமிட்டார்.
மாநாட்டில் இரண்டு ஜோடி களுக்கு சுயமரியாதைத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. நிறைவாக, கோவையில் குடிநீர் விநியோக உரிமை யை பிரான்சைச் சேர்ந்த சூயஸ் நிறு வனத்திற்கு வழங்கியதைக் கண்டிப்பது. தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுக்காத நடிகர் ரஜினிகாந்த், தமிழர் போராட்டங்களை இழிவுபடுத்திப் பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என வலியுறுத்துவது உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாலை மங்கி இருள் படர்ந்திருந்த வேளையிலும், நிலமெங்கும் நீலம் பரவியிருந்தது.
-அருள்குமார்