/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/latalikhan.jpg)
(4) பார்க்கப் பார்க்கத்தான் புடிக்கும்!
அண்ணா அவர்களுக்குப் பிறகு, வசனங்களால் என் மனதைத் தொட்டவர்கள் நிறையப்பேர் இருந்தாலும் அதில் முதல் மூன்றுபேர் கலைஞர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன், கே. பாலசந்தர்.
மூவரிலும் முதல்வரும் கலைஞர் தான் மூலவரும் கலைஞர்தான்.
கே.எஸ். கோபால கிருஷ்ணன் அவர்களின் வசனங்கள் குடும்ப உறவுகளை, மனித நேயங்களை உரக்கச் சொன்னது.
எத்தனை படங்கள், எப்படியெல்லாம் வசனங்கள். நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.
இதயங்களை குத்திக் கிழிப்பது போல, இதயங்களை பிசைந்தெடுப்பதைப் போல, தமிழ்நாட்டிலுள்ள அத்தனை குடும்பங்களையும் எட்டிப் பார்ப்பதுபோல, அவர்களுடனேயே வாழ்ந்ததுபோல இருக்கும் அவரது வசனங்கள். கண்களை குளமாக்கியது அவரது வசனங்கள்.
"பணமா பாசமா' என்ற படத்தில் கதாநாயகி அப்பாவிடம் கூறுவாள்...
"நான் காலேஜ் போறப்ப ஒருத்தன் என்னையே பார்த்துக்கிட்டிருக்காம்பா''
அதற்கு அப்பா கேட்பார்.
"அவன் உன்னையே பார்க்கிறான்கிறது உனக்கெப்படிம்மா தெரியும். நீ அவனைப் பார்க்கிறதுனாலதான?''
"பூவா தலையா' படத்தில் திமிர் பிடித்த மாமியாரின் காலில் விழுவார் குதிரை வண்டி ஓட்டுகிற மருமகன் நாகேஷ்.
திமிர் பிடித்த அத்தை சொல்வார்.
"உங்களுக்கு ரொம்ப பணிவு மாப்ள''
நாகேஷ் பட்டென்று பதில் சொல்வார்... "இன்னும் குனிஞ்சு கும்பிடுவேன் அத்தை... அதுக்குள்ள தரை வந்திருச்சு.''
இந்த வசனங்களுக்கு திரையரங்குகளில் விசில் பறக்கும்.
"படிக்காத மேதை' நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படம். வசனம் எழுதியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதல் முதலாக படம் பிடிக்கப்பட்ட காட்சி ரொம்பவும் பிரபலமான நெஞ்சை உருக்கும் காட்சி. வீட்டு முதலாளி ரங்காராவ், வேலைக்காரன் சிவாஜியை "வீட்டை விட்டு வெளியே போய்விடு' என்று சொல்லவேண்டிய காட்சி. முதலாளி, வேலைக்காரன் போல இல்லாமல் ஒருவரை ஒருவர் உறவுபோல நேசித்தவர்கள். வீட்டை விட்டுப் போகச் சொல்லவேண்டிய சூழ்நிலை
"நிஜமாவே போகச் சொல்றீங்களா மாமா'' என்று அதிர்ச்சியோடு சிவாஜி கேட்பார்.
படம் பார்த்தால்தான் அந்தக் காட்சியின் அருமை புரியும்.
"இந்தக் காட்சியைத்தான் முதலில் படமாக்குவது என்று முடிவு செய்திருக்கிறோம். வசனம் எழுது'' என்று தயாரிப்பாளர் சொன்னவுடன், கதையை முழுவதும் அசை போட்டுவிட்டு பதறிப்போய் தழுதழுத்த குரலில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் தயாரிப்பாளரிடம் சொன்னாராம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/latalikhan2_0.jpg)
"குடல புடுங்கி வைக்கச் சொல்றீங்களே முதலாளி''
வசனம் எழுத ஆரம்பிக்கும் முன்பே சொன்ன ஜீவனுள்ள வார்த்தைகள். இதயத்தை பிடுங்கி வைப்பதுபோல நம்மை நடுங்க வைத்த வசனம். அந்தக் காட்சியின் ஜீவனை அவர் வெளிப்படுத்திய விதம் தெரிந்து பிரமித்துப் போனேன். அப்பொழுதெல்லாம் நினைப்பேன்... கே.எஸ். கோபாலகிருஷ்ணன் போல குடும்பக் கதைகளுக்கு எழுதுகிற வசனகர்த்தாவாக ஆகலாமா என்று!
ஆனால் என்னைக் கலைஞர் விடவில்லை.
கலைஞர் என்னை நேரில் வந்து தடுக்கவில்லை. என் நெஞ்சில் புகுந்து தடுத்தார்.
"என்னைப் போல ஆகவேண் டும் என்று லட்சியத்தோடு இருந்த நீ, ஏன் மாற்றிச் சிந்திக்கிறாய்' என்று கேட்டார்.
அவரைப்போல ஆக முடி யாது என்று தெரியும். ஆனால் அவர் போட்டுக் கொடுத்த பாதையில் பயணப்பட வேண்டும் என்ற எண்ணத்தை ஏன் மாற்றவேண்டும் என்று நினைக்கும்பொழுது இயக்கு நர் சிகரம் கே.பாலசந்தர் இடையிலே வந்தார்.
இயக்குநர், கதாசிரியர் என்பதையெல்லாம் தாண்டி, அவர் எழுதிய வசனங்கள்தான் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. முதன் முதலில் அவர் எழுதிய படம் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த "தெய்வத்தாய்'. ஆனால் அந்தப் பாலசந்தரா இவர் என்று வியக்க வைத்தது அவர் அடுத்தடுத்து எழுதி இயக்கிய படங்கள்.
"அவள் ஒரு தொடர்கதை', "அரங்கேற்றம்', "அபூர்வ ராகங்கள்', "மூன்று முடிச்சு', "தண்ணீர் தண்ணீர்', "வறுமையின் நிறம் சிவப்பு...' என்று பல படங்கள்.
100 படங்களைத் தாண்டியவர். இளம் வயதில் என் மூளையை உசுப்பேற்றியவர்.
எனது ஊர் கம்பம். இப் பொழுது தேனி மாவட்டம். நான் மாணவனாக இருந்த காலகட் டங்களில் கே.பாலசந்தர் படங்கள் வந்தால் ஒரே வரியில் விமர்சனம் செய்வார்கள்... ஹைலிக்ளாஸ் படம் என்று. லோ க்ளாஸுக்குப் புடிக்காது என்பார்கள். புடிக்காது என்பதைவிட புரியாது என்பார்கள்.
ஆனால் எனக்குப் புடிக்கும். என்னுடைய நண்பர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் வந்தால்தான் அவர்கள் ஓடி ஓடிப்போய் பார்ப்பார்கள்.
நான் அந்தப் படங்களையும் பார்ப் பேன். கே.பாலசந்தர் படங்களையும் ஓடி ஓடிப் பார்ப்பேன். இப்பொழுது தனுஷ் பட வசனம் மாதிரி, கே.பாலசந்தர் படங்களைப் பார்க்கப் பார்க்கத்தான் புடிக்கும். அப்படித்தான் நானும் பார்த்தேன். ஒரே படத்தை பல தடவை பார்த்தேன். அவ ருடைய வசனங்களுக்காகவே பார்த்தேன்.
நான் திரையுலகிற்கு வருவதற்கு முன் அவரது வசனங்களைக் கேட்டுப் பிரமித் தேன். திரையுலகிற்கு வந்த பிறகு பிரமித்துக் கொண்டேயிருந்தேன். மத்திய அரசின் கணக்கியல் அலுவலகத்தில் (ஏ.ஜி.எஸ். ஆபீஸ்) வேலை பார்த்த ஒரு அரசு ஊழியர், திரையுலகிற்கு வந்து, மக்களின் வாழ்க்கை கணக்கை அற்புதமாக எழுதிக் காட்டினார்.
எம்.ஜி.ஆர். படம், சிவாஜி படம், ஏவி.எம். படம், தேவர் ஃபிலிம்ஸ் படம் என்று நடித்தவர்களின் பெயரில், தயாரித்த கம்பெனிகளின் பெயர்களையும் குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் அவரது படங்கள் "கே.பாலசந்தர் படங்கள்' என்றுதான் பேசப்பட்டது.
"இரு கோடுகள்' படத்தில் ஜெமினிகணேசன், சௌகார் ஜானகி இரண்டுபேர் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/latalikhan1.jpg)
ஃபைல், லைப்... இந்த இரண்டு சொற்களை வைத்து விளையாடியிருப்பார்.
"அவள் ஒரு தொடர்கதை' படம் பார்த்து நான் எத்தனை தடவை கை தட்டினேன் என்பது எனக்கே நினைவில்லை.
அந்தப் படத்தின் கதாநாயகி சுஜாதா, அவருடைய தோழி "படாபட்' ஜெயலட்சுமி. படாபட் ஒரு காரை மறித்து லிஃப்ட் கேட்பார். காரை ஓட்டி வந்தவன் நிறுத்துவான். "வாடி கார்ல போகலாம்' என்று படாபட், சுஜாதாவிடம் கேட்பார்.
"காரை ஓட்டி வந்தவன் யார்?'' என்று சுஜாதா கேட்பார்.
"யாருக்குத் தெரியும்'' என்பார் படாபட்.
"உன்னைப் பார்த்து சிரிக்கிறாரே'' என்று கேட்பார் சுஜாதா.
"பொண்ணுன்னா பொணம் கூட சிரிக்கும்'' என்பார் படாபட்.
"பொணம் கூட பிரயாணம் பண்ண நான் தயாரா இல்ல'' என்பார் சுஜாதா
. தியேட்டரில் கைதட்டலும், சிரிப்பும் கலந்து கேட்கும்.
ஒரு காட்சியில்... "என்ன... பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி இவ்வளவு கர்வமா இருக்கா?'' என்று கேட்பார்.
"ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி கர்வமா இருக்கலாம்... கர்ப்பமாத்தான் இருக்கக்கூடாது'' என்று பதில் சொல்வார் சுஜாதா.
தியேட்டர் குலுங்கிப்போய் நிமிரும்.
அந்த நேரங்களில் கே.பாலசந்தர் போல வசனகர்த்தாவாக வேண்டும் என்று நினைப்பேன். அது நினைப்போடு நின்றுவிடும். அப்பொழுதெல்லாம் என் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவாறு கலைஞர் சிரித்துக்கொண்டிருப்பார். அதனால் கே.பாலசந்தர் அவர்களுக்கு நான் ஒரு ரசிகனாகவே இருந்துவிட்டேன்.
இந்த இடத்தில் நான் திரையுலகிற்கு வந்து பாராட்டப்படுகின்ற வசனகர்த்தாவாக வளர்ந்து வரும்பொழுது கே.பாலசந்தர் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்புகளைச் சொல்லவேண்டும்.
(வளரும்...)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/latalikhan-t.jpg)