(86) "கூப்பிட்டு வா... வரலேன்னா தூக்கிட்டு வா...!''
"ராணி மகாராணி' படத்தின் இழப்புகளால் எனக்குக் ஏற்பட்ட வலி, சரத்குமார் சாரிடமிருந்து கிடைத்த நட்பு ஆகிய காரணங்களும் விஜயகாந்த்தை நான் சந்திப்பதை தவிர்க்கும்படியாக ஆனது. அந்த இடைவெளி அதிகமாகிக்கொண்டே இருந்தது.
ஒருநாள் ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒரு படத்தின் பூஜைக்குப் போயிருந்தேன். படத்தின் பெயர் நினைவில்லை. அதே நாளில் தனது படப்பிடிப்பிற்கு வந்த விஜயகாந்த், இந்த பட பூஜையிலும் வந்து கலந்துகொண்டார்.
அவர் வருவதைப் பார்த்துவிட்டு அவர் கண்ணில் படாமல் நான் மறைந்து நின்றேன். நான் மறைவதை அவர் கவனித்துவிட்டார். படக்குழுவினரை வாழ்த்திவிட்டு மேக்கப் ரூமுக்குப் போய்விட்டார். அவர் போய் விட்டார் என்பதைப் பார்த்த பிறகு அங்கிருந்து கிளம்புவதற்காக நான் என்னுடைய காரில் ஏறப் போனேன். விஜயகாந்த்தின் டிரைவர் வேகமாக என் அருகில் ஓடோடி வந்தார்.
"லியாகத் அண்ணே… உங்களை கேப்டன் கூட்டிட்டு வரச் சொன்னாரு''
"எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நான் அவசரமாகப் போகவேண்டும்''
"நீங்க வரலேன்னா உங்களை தூக்கிட்டு வரச் சொன்னாரு''
"தூக்கிவரச் சொன்னாரா...? என்னைத் தூக்கிருவியா?''
"கேப்டன் சொன்னா என்ன வேணும்னாலும் செய்வேன்''
"நீ அவர் சொன்னாத்தான் செய்வே. அவரு சொல்லாமலே அவருக்காக நான் எவ்வளவோ செய்தவன்''
"தெரியும்ணே.… நீங்க அவர் மேல வச்சிருக்கிற பாசமும் தெரியும். அவர் உங்க மேல வச்சிருக்கிற பாசமும் தெரியும். நான் எத்தனை வருஷமா பார்த்துக்கிட்டிருக்கேன். இப்ப வரப் போறீங்களா இல்லியா?''
அவன் என்னைவிட வயதில் சிறியவன். அதனால், ஒருமையில் குறிப்பிடுகிறேன். நான் "முடி யாது' என்றால் அவன் நிச்சயமாக என்னைத் தூக்கி விடுவான். அதற்கான துணிச்சல் மட்டுமல்ல... உடல் வலிமையும் அவனிடம் இருந்தது. அதை யெல்லாம்விட விஜயகாந்த் மீது அளவிட முடியாத அன்பும் நட்பும் என்னிடம் இருந்தது.
நெய்வேலியில் மின்சாரம் எடுப்பார்கள். புரட்சிக்கலைஞரின் ரசிகர்களோ அவருடைய கண் பார்வையிலே இருந்து கூட மின்சாரம் எடுப்பார்கள் என்று பல மன்ற நிகழ்ச்சிகளில் பேசியவன் நான்.
கொடுக்கப் பிறந்தவர்…
தினம் கொடுத்துச் சிறந்தவர்
கடும் உழைப்பில் உயர்ந்தவர்
எங்கள் உயிரில் கலந்தவர்
என்று அவருடைய ரசிகர்களுக் காக எழுதியவன். என் உயிரிலும் அவர் கலந்திருந்த காரணத் தால்தான் அப்படி எழுதினேன்.
அவர் சொல்லியிருக்கிறார் என்னைத் தூக்கிவரச் சொல்லி.…
"நீ தூக்கவெல்லாம் வேணாம், நானே வர்றேன்'' என்ற படி அவனுடன் அவர் இருந்த மேக்கப் ரூமிற்குச் சென்றேன்.
மேக்கப் போடுவதற்காக சேரில் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்தார். நான் அவரையே பார்த் தேன். சில நிமிடங்கள் இருவரும் பேசவில்லை. அவர்தான் ஆரம் பித்தார்.
"இதுதான் நீங்க என்மேல வச்சிருக்கிற பாசமா?''
நான் எதுவும் பேசவில்லை.
"உங்க மேல நான் வச்சிருக்கிற பாசம் உங்களுக்குத் தெரியாதா?'' என்றார்.
"தெரியும்'' என்றேன்.
"ஒருநாள், ரெண்டுநாள் இல்ல… ஒருவாரம் இல்ல… ரெண்டு வாரம் இல்ல… என்னைப் பார்க்காம உங்களால மாசக் கணக்கா இருக்க முடியுதுல்ல?'' என்றார் கோபத்தோடு.
"ராணி மகாராணி படத்துல எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் நான் செத்துப் பொழைச்சிருக்கேன்'' என்றேன்.
"அந்த நேரத்துல என்னால ஏன் உங்களுக்கு உதவ முடியாமப் போச்சு தெரியுமா?''
"தெரியும்''
"யார் காரணம் தெரியுமா?''
"தெரியும்''
"அதுக்கு நான் காரணம் இல்ல.''
"அதெல்லாம் முடிஞ்சு போச்சுண்ணே. அதப்பத்தி பேசி நீங்களும் வேதனைப்பட வேணாம். நானும் வேதனைப்பட வேணாம்'' என்றேன். உடனே மேக்கப்மேன், டிரைவர், இன்னொரு உதவியாளர் மூவரையும் வெளியே இருக்கச் சொன்னார். அவர்கள் வெளியே போனார்கள். அவரும் நானும் மட்டுமே தனியாக இருந்தோம்.
எங்கள் இருவருக்குமிடையே நடந்த உரையாடலை அப்படியே எழுதினால் சிலர் நம்ப மாட்டார்கள். சிலர் கற்பனை என்பார்கள். சிலர் பொய் என்பார்கள். அதனால் அது எனக்குள்ளே மட்டும் இருக்கட்டும்.
மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத் மாவுக்கும், அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் ஒரு வரலாறு. என்னைப் பொறுத்தவரை விஜயகாந்த்துக்கும் எனக்கும் இடையே அன்று நடந்த உரையாடலும் என் வாழ்க்கையில் ஒரு வரலாறுதான்.
"திரைப்படங்களில் மக்கள் பிரச் சினைகளை, அரசியல் அவலங்களை அவர்போல உணர்ச்சிப்பூர்வமாக, ஆக்ரோஷ மாக, ஆவேசமாக பேசிய ஹீரோ யாரும் இல்லை' என்றே நினைக்கிறேன்.
அப்படிப்பட்டவர் அன்று என்னிடம் பேசியது யாரும் பார்த்திராத விஜயகாந்த் என்று எனக்குத் தோன்றியது.
மீண்டும் சொல்கிறேன். அது எனக்குள்ளேயே இருக்கட்டும்.
முடிவாக ஒன்று சொன்னார்.
"சாயங்காலம் நான் ஷூட்டிங் முடிஞ்சு வரும்போது நீங்கள் ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகத்துல இருக்கணும்.''
"நான் அண்ணே..'' என்று ஆரம்பிக்கும்போதே என்னைப் பேச விடாமல் கையால் சைகை செய்தார்.
"என் மீது உங்களுக்கிருக்கிற பாசம் உண்மையா இருந்தா நான் சொன்னதை செய்ங்க'' என்றார். அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் எனக்கு வேதவாக்கு போல என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
"மேக்கப்மேனை வரச் சொல்லிட்டு, நீங்க கிளம்புங்க'' என்றார்.
அங்கிருந்து நான் மட்டுமே வந்தேன். என் மனம் முழுவதும் அவரிடமே இருந்தது.
இந்த அத்தியாயத்தை நான் எழுதும்போது அவர் உடல்நலன் கருதி மியாட் மருத்துவமனையில் சில நாட்கள் இருந்து பூரண நலம்பெற்று இல்லம் திரும்பினார் என்ற மகிழ்ச்சிச் செய்தி கிடைத்தது.
அவர் மருத்துவமனையில் இருந்த நாட்கள் அவர் ஒரு ஒப்பற்ற மனிதர் என்பதை இந்த உலகுக்கு உணர்த்தியது.
தமிழ்நாடெங்கும் ரசிகர்களின் பிரார்த்தனைகள், அவரது கட்சித் தொண்டர்களின் வேண்டுதல்கள், கட்சி வேறுபாடுகள் இல்லாமல் ஜாதி, மத வேறுபாடுகள் இல்லாமல் விஜயகாந்த் அவர்கள் நலம்பெற வேண்டும் என்ற குரல்கள், அறிக்கைகள் வந்துகொண்டேயிருந்தன. ஒட்டுமொத்தமாக எல்லோருடைய அன்பையும் பெற்ற ஒருவராக இருக்கிறார் அவர்.
சகோதரர் ஆர்.வி.உதயகுமார் இயக்கிய சின்னக் கவுண் டர் படத்தில் அவரே எழுதிய பாடல் "அந்த வானத்தைப் போல குணம் படைச்ச மன்னவனே'. அண்ணன் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் ஆர்.வி.உதயகுமார் எழுதிய இந்தப் பாடல் அன்றும், இன்றும், என்றும் விஜயகாந்த்தின் பெருமையை சொல்லிக்கொண்டேயிருக்கும். அந்தப் பாடலோடு இன்று நடப்பவைகளை எல்லாம் நினைத்து கண் கலங்கியவாறு அன்று நடந்ததை தொடர்கிறேன்.
ஏவி.எம். ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்தேன். மாலைவரை வீட்டிலேயே இருந்தேன்.
"நான் ஷூட்டிங் முடிந்து வரும்போது நீங்கள் ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகத்தில் இருக்க வேண்டும்'' என்று விஜயகாந்த் அன்புக் கட்டளையிட்டு விட்டார். அந்தக் கட்டளையை ஏற்றுக் கொண்டால் என்ன நடக்கும், ஏற்க மறுத்தால் என்ன நடக்கும்? என்பதை நான் சிந்தித்துப் பார்க்கவே இல்லை. விஜயகாந்த்தின் பாசம் என்னைச் சிந்திக்க விடவில்லை.
அவர் சொல்லியபடி மாலை ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகம் போனேன்.
(வளரும்...)
படம் உதவி: ஞானம்