/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alikhan_84.jpg)
(104) அரசியல்: எம்.ஜி.ஆர். -விஜயகாந்த் -விஜய்!
அரசியலில் வெற்றிபெற, திரைப்படங்களின் வெற்றியைவிட அந்த ஹீரோவிடம் மக்களுக் கும் பிடித்த விஷயங்கள் மக்களைக் கவர்ந்த விஷயங்கள், மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் நடந்துகொள்ளும் விதங் கள், தனிப்பட்ட அவருடைய குணங்கள், அவருடைய செயல் பாடுகள் ஆகியவை சிறப்பாக இருக்க வேண்டும். அதனால் தான் விஜயகாந்த்துக்கு அரசியலிலும் வெற்றி கிடைத்தது.
மக்களால் சினிமாவில் சம்பாதித்த பணத்தை அந்த மக்களுக்காகவே அள்ளித் தரும் குணம் எம்.ஜி.ஆரிடம் இருந்தது. அதே குணம் விஜயகாந்த்திடமும் இருந்தது. பசியென்று வருவோருக்கு உணவு கொடுத்து மகிழும் குணம் எம்.ஜி.ஆரிடம் இருந்தது, விஜயகாந்த்திடமும் இருந்தது. கல்விக்காக அள்ளிக் கொடுக்கும் குணம் எம்.ஜி.ஆரிடம் இருந்தது, விஜயகாந்த்திடமும் இருந்தது.
உதவும் குணம், உணவு கொடுத்து பசியாற்றும் குணம் மற்ற ஹீரோக்களிடமும் இருந்தது. நான் இல்லையென்று சொல்லவில்லை. எம்.ஜி.ஆரிடமும், விஜயகாந்த்திடமும் அதிகமாக இருந்தது. அது படித்தவர்களிடமும், பாமர மக்களிடமும் போய்ச் சேர்ந்தது. "அநியாயத்திற்கு எதிராக, அராஜகத்திற்கு எதிராக, அநீதிக்கு எதிராக மற்ற ஹீரோக்கள் குரல் கொடுக்கவில்லை' என்று நான் சொல்ல மாட்டேன். அவர்கள் நடிப்பிற்காகச் செய்தார்கள்.
எம்.ஜி.ஆரும், விஜயகாந்த்தும் நிஜமாகவே அந்த உணர்வுடன் வாழ்ந்தார்கள் என்று மக்கள் உணரும் வகையிலே இருவருக்கும் படங்கள் அமைந்தன. அப்படி உருவாவதற்கு அவர்கள் இருவருக்கும் ஆருயிர் நண்பர்கள் அமைந்தார்கள். அதனால்தான் மக்கள் மனதிலே அவர்கள் உயர்ந்தார்கள். எம்.ஜி.ஆருக்காகவே வசனம் எழுதப்பட்டது. அதேபோல விஜயகாந்த்துக்காகவே வசனம் எழுதப்பட்டது. அதில் மிகப்பெரிய பங்கு லியாகத் அலிகானுக்கு உண்டு.
இது தவிர உலகமெங்கும் ஆக்ஷன் ஹீரோக்கள்தான் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்கள். தமிழில் பல ஹீரோக் கள் சண்டைக் காட்சிகளில் அசத்தினாலும் எம்.ஜி.ஆரும் விஜயகாந்த்தும் தனியாகப் பேசப்பட்டார்கள். எம்.ஜி.ஆர். ஸ்டைல் வேறு, விஜயகாந்த் ஸ்டைல் வேறு என்றாலும் இரு வரின் சண்டைக் காட்சிகளுக்கும் தனி வரவேற்பு இருந்தது.
இவ்வளவு காரணங்கள் இருந்ததால் இருவருக்கும் அரசியலிலும் வரவேற்பு இருந்தது.
அன்புத்தம்பி விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி நான் கருத்துச் சொல்லவில்லை. அதற்கு முன்னால் நடந்த விஷயங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். விஜய்யின் அரசியல் வருகை பற்றி அதற்கான நேரம் வரும்போது என் கருத்துக்களை எழுதுகிறேன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alikhan1_85.jpg)
எம்.ஜி.ஆர். அவர்கள் திடீரென திட்டமிட்டு அரசிய லுக்கு வரவில்லை. தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தில் மாபெரும் சக்தியாக இருந்தார். அ.தி.மு.க. என்பது புதிதாக தொடங்கப்பட்டாலும், அது தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு. தி.மு.க.வின் ஒரு பிரிவு. அப்படி பிரிந்து வந் தாலும் தி.மு.க.வைவிட அதை பெரிய சக்தியாக எம்.ஜி.ஆர். மாற்றிக் காட்டினார்.
விஜயகாந்த் எந்த இயக்கத்திலும் இல்லையென்றாலும் அவரது அரசியல் பிரவேசமும் திடீரென ஏற்பட்டதல்ல. அதுவும் பல ஆண்டுகள் திட்டமிடப்பட்டு உருவானதுதான். இந்தத் தொடரில் பல இடங்களில் நான் அதை எழுதியிருக்கிறேன். அவருக்காகவே திட்டமிட்டு வசனங்கள் எழுதினேன். திட்டமிட்டு காட்சிகள் அமைத்தோம். எப்பொழுது விஜயகாந்த் வெற்றிப்பட ஹீரோவாக ஆனாரோ, என்று மக்கள் மனங்களில் இடம்பெற ஆரம்பித்தாரோ, அப்பொழுதே விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசமும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அவரது படங்களைப் பார்த்தவர்கள் சரியாகப் புரிந்துகொண்டிருப்பார்கள். அதைவிட விஜயகாந்த்தின் ரசிகர்கள் நன்றாகவே புரிந்துகொண்டார்கள். எப்பொழுது கட்சி தொடங்குவார் என்ற ஏக்கத்தை ஏற்படுத்துவதற்கு இப்ராகிம் ராவுத்தரும், லியாகத் அலிகானும் முக்கிய கருவியாக இருந்தோம்.
விஜயகாந்த்தின் விசுவாசமான ரசிகர்கள் வீரமிக்க ரசிகர்களாக உருவாவதற்கு அச்சாரமாக அடையாளமாக... கட்சி தொடங்குவதற்கு சில வருடங்களுக்கு முன்பே மன்றத் தினருக்காக கொடியும், கரை போட்ட வேஷ்டியும் அறிமுகப் படுத்தப்பட்டது. அவை இரண்டோடும் தமிழ்நாட்டில் ஏற்கனவே பலமாக இருந்த கட்சிகளைப் போல விஜயகாந்த் ரசிகர்கள் நடை போட ஆரம்பித்தார்கள். மன்றங்கள் பெருக ஆரம்பித்தன. இளைஞர் பட்டாளம் திரள ஆரம்பித்தது.
எப்பொழுது வேண்டுமானாலும் கட்சி தொடங்கப்பட லாம் என்றிருந்த நேரத்தில் கட்சியை உடனே தொடங்க வேண்டும், உறுதியாகத் தொடங்க வேண்டும் என்ற நிலைமையை ஒரு சம்பவம் உருவாக்கியது.
விஜயகாந்த் நடித்த "ரமணா' என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அவரது திருமணம் கள்ளக்குறிச்சியிலே 20-06-2004’ல் நடந்தது. அந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள விஜயகாந்த்துடன் நானும் போனேன். போகும் வழியெங்கும் விஜயகாந்த்தின் முகம் பார்த்து மகிழ்ந்த மக்கள், கை அசைத்து ஆரவாரம் செய்த மக்கள், அந்த மக்கள் வெள்ளத்தைக் கடந்து திருமணம் நடைபெறும் மண்டபத்தை அடைந்து திருமணத்தை நடத்தி வைத்தார் விஜயகாந்த்.
அது திருணம் நடக்கும் மண்டபம் போல தெரியவில்லை. திமிறி எழும் காளை யர் கூட்டத்தால் மண்டபம் திணறியது. அங்கிருந்த அத்தனை பெண்களின் கண்களும் விஜயகாந்த்தையே மொய்த்தன.
திருமண மண்டபத்திலிருந்து நான்கைந்து கிலோமீட்டர் தூரத்தில் விஜயகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றத்தினர் ஒரு நலத்திட்ட உதவி விழாவினை ஏற்பாடு செய்திருந்தார்கள். திருமணம் முடிந்து விஜயகாந்த் அவர்களுடன் நானும், முக்கிய நிர்வாகிகளும் சென்றோம். சுட்டெரிக்கும் வெயிலில் நடந்த விழா அது. ரசிகர் கூட்டமோ அலைமோதியது. இந்த வெய்யிலில் இவ்வளவு கூட்டமா என்று வியந்து போனார் விஜயகாந்த்.
அந்தக் கூட்டத்தில் அந்தத் திருப்புமுனை ஏற்படும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
அரசியலையும், அரசியல்வாதிகளையும் வெள்ளித் திரையிலே போட்டுத் தாக்கிய விஜயகாந்த் வெட்ட வெளியிலே போட்டுத் தாக்குவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மகாபாரதத்தில் அர்ஜுனன் வில்லேந்தி சமர்புரிந்தது போல விஜயகாந்த் சொல்லேந்தி சமர் புரியும் சூழ்நிலை உருவானது. அப்படியொரு சூழ்நிலையை ஏற்படுத்தி வைத்தவர் லியாகத் அலிகான்.
கள்ளக்குறிச்சியில் நடந்த நலத்திட்ட விழாவில் கூட்டம் அலைமோதியது. யார் பேசினாலும் என்ன பேசுகிறார்கள் என்று கேட்க முடியாத அளவுக்கு விசில் சத்தம்... ஆரவாரம்... கட்டுப்படுத்த முடியாமல் போய்க்கொண்டிருந்தது. திடீரென எழுந்தார் விஜயகாந்த். மைக் முன்னே வந்தார். "அண்ணன் லியாகத்அலிகான் பேசுவார்' என்று சொல்லி அமர்ந்தார்.
நான் பேச ஆரம்பித்தேன். விசில் சத்தமும், கூச்சலும் நின்றுபோய் கைதட்டல்கள் ஆரம்பித்தது. விஜயகாந்த் புகழ் பாடியதால் எழுந்த கைதட்டல். தமிழ்நாட்டின் எதிர்காலமே அவர்தான் என்று பேசியதால் எழுந்த கைதட்டல்.
அரசியல் விஷயங்களைப் பேசும்பொழுது வட மாவட்டங்களில் மிக வலுவாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சனம் செய்து பேசினேன். அந்தப் பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியை விட விஜயகாந்த் அவர்களுக்கு ஆதரவு அதிகம் என்று பேசினேன். அது உண்மையென்று நிரூபிக்கும் விதத்தில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
எனக்குப் பின்னால் முத்தாய்ப்பு வைப்பது போல விஜயகாந்த் பேச எழுந்து வந்தார். மைதானத்தில் இருந்த ஆயிரக் கணக்கான ரசிகர்களும் எழுந்து நின்று ஆரவாரம் செய்தார்கள். அதைப் பார்க்கும்போது போர்க்களத்தில் படைவீரர்கள் பரணி பாடியதுபோல இருந்தது. இதைவிட சிறந்த உதாரணம் இருக்கமுடியாது. விஜயகாந்த் அவர்கள் மைக்கைப் பிடித்தார். அராஜகம் செய்யும் அரசியல் கட்சிகளை ஒருபிடி பிடித்தார். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை ஒருபிடி பிடித்தார். அண்ணன் லியாகத் அலிகான் சொன்னதுபோல என்று கூறி பாட்டாளி மக்கள் கட்சியை ஒரு பிடி பிடித்தார்.
நான் என்ன பேசினேன் என்பதையும், விஜயகாந்த் என்ன பேசினார் என்பதையும் விரிவாகச் சொல்வதை தவிர்க்க நினைக்கிறேன். அதற்குக் காரணம்...?
(வளரும்...)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-03/alikhan-t.jpg)