/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alikhan_83.jpg)
(102) "வாலி'ப கவிஞர்!
எம்.ஜி.ஆரு.க்குப் பின்னால் எம்.ஜி.ஆர். போல் உண்மையோடு இருக்கும் எம்.ஜி.ஆர். போன்றவர்கள் யாருமே இல்லையா?
இப்படி நான் கேட்பதற்கு காரணம் இருக்கிறது. விஜயகாந்த் அவர்கள் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் ஒன்றிரண்டு படங்களை இயக்கியவர்கள் இருக்கிறார்கள். அதற்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் களும் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் அப்படித்தான். அதேபோல கதாநாயகிகளும், மற்ற நடிகர், நடிகைககளும் ஒன்றிரண்டு படங்களில் நடித்தவர்களும் இருக்கிறார்கள். அதற்கும் மேற் பட்ட படங்களில் நடித்தவர்களும் இருக்கிறார்கள். விஜயகாந்த் அவர்களை இயக்கியபோதும், அவரது படங்களில் பணிபுரியும்போதும் நடிக்கும்போதும் ஏற்பட்ட பழக்கங்களில் பலருக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கலாம். அவர் நடித்த படங்களின் வெற்றியில் அவர்களுக்கு பங்கிருக்கலாம். அந்த அடிப்படையில் விஜயகாந்த் அவர்களைப் பற்றி, ஊடகங்களிலும், யூடியூப் பேட்டிகளிலும், மேடைப் பேச்சுகளிலும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே விஜயகாந்த்தைப் பற்றிபுகழ்ந்து பேசுவதைக் கேட்கும் பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். சிலர் அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்ததைப் போல ஓவர் பில்டப் செய்து பேசும் போது எனக்கு சிரிப்பாக இருக்கும். அவருடன் அதிகமாக பழகாதவர்கள் கூட அவரைப் பற்றி எல்லாமே தெரிந்ததுபோல பேசுவதைக் கேட்கும்பொழுது எனக்கு அதிர்ச்சியாக இருக்கும். அவர்களில் இருந்து இப்ராகிம் ராவுத்தரும், லியாகத் அலிகானும் வேறு பட்டவர்கள்.
விஜயகாந்த் நடித்த படங்களின் வெற்றி யைப் பற்றி மட்டும் நாங்கள் சிந்தித்தவர்கள் அல்ல. அதையும் தாண்டி அவருடைய வளர்ச்சியைப் பற்றி, அவரின் பொதுவாழ்க்கை பற்றி, அவரது எதிர்காலத்தைப் பற்றி அவரது அரசியலைப் பற்றி ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நாளும் சிந்தித்துக்கொண்டிருந்தவர்கள். அதற்காகவே செயல்பட்டவர்கள். படங்களின் வெற்றி எல்லா ஹீரோக்களுக்கும் அமைவதுதான். ஆனால் பொதுவாழ்க்கையின் வெற்றியும் புகழும் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. அந்தப் பாக்யத்தை விஜயகாந்த்துக்கு இறைவன் கொடுத்தான். அதற்காகவே அர்ப்பணித்துக் கொள்ள இப்ராகிம் ராவுத்தர், லியாகத் அலிகான் என்ற நண்பர்களையும் கொடுத்தான். எனக்குத் தெரிந்து விஜயகாந்த் மேடைகளிலோ, விழாக்களிலோ ஊடகப் பேட்டிகளிலோ ஆருயிர் நண்பன் என்று எங்கள் இருவரைத்தான் சொல்லியிருக்கிறார். இது நாங்கள் செய்த பாக்யம்.
விஜயகாந்த்துக்காகவே நான் உருவாக்கிய படம்தான் "ஏழை ஜாதி'. அவரது புகழை ஓங்கிப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே அந்தப் படத்திலே வசனங்கள் எழுதினேன். ஏற்கனவே சொன்னதை மீண்டும் நினைவூட்டுகிறேன். "என்னோட கொள்கை தெரியணும்னா "ஏழை ஜாதி' படத்தை பாருங்க'ன்னு விஜயகாந்த்தே சொல்லுமளவுக்கு அவரது அன்பைப் பெற்றவன் நான்.
"ஏழை ஜாதி' படத்திலே ஒரு பாடல் காட்சி. ஏழை மக்களுக்காக குரல் கொடுக்கும் விஜயகாந்த்தை, அவரது கோடீஸ்வர அப்பா கண்டிப்பார். "ஏழைகளுக்காகவும், மக்களுக்காகவும் பாடுபடுவதுதான் லட்சியம்' என்று கூறி வீட்டை விட்டே வெளியேறுவார் விஜயகாந்த். அந்தக் காட்சிக்காக பாடல் எழுதச் சொல்லி கவிஞர் வாலி அவர்களைப் போய் சந்தித்தேன். வாலி அவர்கள் எல்லோரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர். என்னிடம் அவருடைய அன்பு கொஞ்சம் அதிகமாகவே வெளிப்படும்.
"ஏழை ஜாதி' பாடலுக்காகப் போய்ப் பார்க்கும் போதும் என்னைப் பாராட்டினார்.
"உங்க சாதனைக்கு முன்னால் நான் ரொம்ப சாதாரணமானவண்ணே. என்னை அளவுக்கதிகமா பாராட்டறீங்க'' என்றேன் நான்.
"நாம ரெண்டுபேரும் ஒரே ஜாதி... எழுத்தாளர்கள் ஜாதி. நான் பாட்டெழுதறேன், நீ வசனம் எழுதறே. என் பாட்டுக்கு நீ ரசிகன். உன் வசனத்துக்கு நான் ரசிகன்''
"விஜயகாந்த், ரோடுகளில் நடந்து போகப் போக பேக்ரவுண்டில் ஒலிப்பது போல ஒரு பாடல் வேண்டும்''
"நீ வசனத்துல சொல்லாததையா நான் பாட்டுல சொல்லிறப் போறேன்''
"உங்க பாட்டுக்கு ஆயுள் அதிகம்ணே''
"உன் வசனத்துக்கும் ஆயுள் அதிகம்தான். நீ வேணும்னா பாரு நான் சொல்றது நடக்கும்'' என்று சொல்லிவிட்டு, "பாடலுக்கு வார்த்தைகள் எப்படி வேணும்' என்று கேட்டார்.
"அண்ணே நீங்க ஏற்கனவே சிவப்பு எம்.ஜி.ஆருக்கு நிறைய எழுதிட்டீங்க. இந்த பாட்டு கருப்பு எம்.ஜி.ஆருக்கு''
"இந்த ஒரு வார்த்தை போதும். நாளைக்கு வா பாட்டு ரெடியா இருக்கும்'' என்றார். அப்படி அவர் எழுதிக் கொடுத்த பாடல்தான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alikhan1_83.jpg)
"இந்த வீடு நமக்கு சொந்தமில்ல பாடுடா சின்னத்தம்பி. அதனால நமக்கு துன்பமில்ல ஆடுடா சின்னத்தம்பி' என்ற பாடல்.
எந்நாளும் நல்லவர்க்கு ஏழைகளின் மனம்தான்டா/ பொன்னான வீடாகும் அதுக்கு எது ஈடாகும்/ உண்டான செல்வமெல்லாம் அன்றாடம் வரும் போகும் /ஊராரின் வாழ்த்துகள்தான் நிலைத்திருக்கும் பொருளாகும்/ உன்னால முடிந்த வரை பிறருக்காக உழைத்திடு/ இல்லாத வறியவர்க்கு இயன்றவரை உதவிடு/ கண்ணீரைக் கண்டவுடன் கைவிரலால் துடைத்திடு/ உன் பெயரை சரித்திரத்தில் மனிதன் என்று பொறித்திடு/ இன்னொருவன் வாழ ஒரு ஏணியைப் போல் மாறு/ உள்ளம் உள்ள உன்னை வெல்லுபவன் யாரு…/ மண்ணில் வாழும் மக்கள் நெஞ்சில் நிற்கும் உந்தன் பேரு
இப்படிப் போகும் சரணத்தில் வரிகள்.
அண்ணன் இளையராஜாவின் இசையில் அவரே பாடியது.
பாடலைக் கேட்டதும் "இந்தப் பாட்ட எப்படி ஷூட் பண்ணப் போறீங்கண்ணே?'' என்று கேட்டார் விஜயகாந்த்.
"சிட்டியில மக்கள் நடமாட்டம் அதிகமா இருக்கிற இடங்கள்ல, மக்களுக்குத் தெரியாம கேமராவை வைப்போம். உங்கள அந்த இடத்துல எறக்கி விடறோம். நீங்க நடந்து வாங்க. உங்கள திடீர்னு பார்த்ததும் மக்களோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்...… அதை ஷூட் பண்ணுவோம்'' என்றேன்.
"பண்ணிருவோம்ணே'' என்றார் விஜயகாந்த். பதறிப்போனார் இப்ராகிம் ராவுத்தர்.
"திடீர்னு விஜிய ரோட்ல பார்த்தா ஜனங்க பிச்சிப் புடுங்கிடுவாங்கண்ணே'' என்றார்.
"ஏண்டா… நீயா நடக்கப்போற… நான்தான் நடக்கப் போறேன்'' என்றார் விஜயகாந்த். எதற்கும் துணிந்தவர் அவர்.
"லியாகத் அண்ணன் படத்துல இப்படி ஒரு காட்சி வச்சிருக்காரு. எதுக்காக? எதிர்காலத்துல எவ்வளவு மக்களை நாம சந்திக்கணும். மக்களோட மக்களா வாழணும். அதுக்குத்தான?'' என்றார் விஜயகாந்த்.
"தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு' என்று ரமணா படத்தில் வசனம் பேசினார் விஜயகாந்த். நிஜ வாழ்க்கையில் அவருக்குப் பிடிக்காத வார்த்தை பயம்.
நாங்கள் முடிவெடுத்த மாதிரியே அந்தக் காட்சியைப் படமாக்கினோம்.
ரோடுகளில் விஜயகாந்த் நடந்து வரும்போது மக்கள் முகங்களில் தெரிந்த இன்ப அதிர்ச்சியை எழுத்தில் விவரிப்பதைவிட அந்தப் பாடல் காட்சியை படத்தில் பார்க்க வேண்டும். யூடியூப்பில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஒருநாள் என் வீட்டு தொலைபேசி ஒலித்தது. நான் எடுத்து "ஹலோ'' என்றேன்.
"நான் வாலி பேசறேன்'' என்றார்.
"அண்ணே… என்னண்ணே திடீர்னு எனக்கு போன் பண்றீங்க?'' என்று மகிழ்ச்சியில் மனம் பரபரத்தது.
"சன் டி.வி.யில் உன்னோட "ஏழை ஜாதி' படம் பார்த்தேன். பிரமாதப்படுத்தியிருக்க,… வசனமெல் லாம் பின்னி எடுத்திருக்க'' என்றார்.
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கியது போல மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி. எனக்கு பேச்சு வரவில்லை.
"என்ன பதிலையே காணோம்''
"என்மேல உங்களுக்கு ரொம்பப் பிரியம். அதனாலதான் அதிகமா பாராட்டறீங்க''
"வாலி வாயில இருந்து பொய்யே வராது ஓய்''
"அண்ணே… உங்க பாடலை எப்படி எடுத்திருக் கேண்ணே. அதப்பத்தி எதுவுமே சொல்லலியே''
"மக்கள் மத்தியில் விஜயகாந்த் வர்றதப் பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன். அருமையா எடுத்திருக்க'' என்றார்.
"அந்தப் பெருமையெல்லாம் விஜயகாந்த் தையே சேரும்ணே''
"உனக்கு அவரு கிடைச்சதும், அவருக்கு நீ கிடைச்சதும் கடவுளோட அனுக்கிரகம்'' என்றார்.
வாலியிடம் ஒரு சிறந்த குணம். பாராட்டுவ தென்றாலும் மனம் திறந்து பாராட்டுவார். விமர்சனம் செய்வதென்றாலும் வெளிப்படையாக விமர்சனம் செய்வார். மனதில் பட்டதை நேருக்கு நேராகவே கேட்டுவிடுவார்.
"நீ முதல்ல எம்.ஜி.ஆரா ஆகிக்காட்டு... அப்புறமா வைரமுத்துவ வாலியா ஆக்கலாம்'' என ரஜினியிடம் சொன்ன வாலி...
(வளரும்...)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/alikhan-t_6.jpg)