dd

(100) சிவச்சந்திரனுக்கு 'NO' சொன்ன விஜயகாந்த்!

விஜயகாந்த் விஷயத்தில் ராவுத்தர் அப்படியென் றால்... நான் எப்படி என்பதற்கு ஒரு சம்பவம் சொல்கிறேன்.

விஜயகாந்த் பிஸியாக இருந்த காலத்தில் நடிகர் சிவச்சந்திரனும் பிஸியாக இருந்தவர். நான் முதன் முதலில் வசனகர்த்தாவாக அறிமுகமான "அன்னை என் தெய்வம்' படத்தின் கதை சிவச்சந்திரன் எழுதியது. நல்ல கதை ஞானம் உள்ளவர். என் மீது அன்பும் அக்கறையும் அந்தப் படத்தின் மூலம் அவருக்கு ஏற்பட்டது. அவர் இயக்குநராக வேண்டும் என்பதற்காக ஒரு கதை பண்ணியிருந்ததை என்னிடம் சொன்னார். மிகவும் அருமையாக இருந்தது.

Advertisment

விஜயகாந்த்திடம் கால்ஷீட் கேட்டார். இப்ராகிம் ராவுத்தர் கொடுக்கவில்லை. "இப் ராகிம் முடிவெடுத்துவிட்டான், நான் அவனை மீறி எதுவும் செய்ய முடியாது' என்று விஜயகாந்த்தும் சொல்லிவிட்டார்.

ராவுத்தரைவிட, விஜய காந்த் மீது சிவச்சந்திரனுக்கு பெரிய வருத்தம். கதை நன்றாக இருந்தது. அன்றைய விஜய காந்த்துக்கு என்ன சம்பளமோ அதை கொடுக்கிறேன் என்று சொல்லியும் கால்ஷீட் இல்லை யென்று சொன்னதுதான் சிவச் சந்திரனின் கோபத்துக்கு காரணம்.

சிவச்சந்திரனுக்கு பிரபுவுடன் நல்ல நட்பு இருந்தது. அவருக்காக ஒரு கதை பண்ண முடிவெடுத்தார். அவர் சொன்ன ஐடியா, பிரபுவுக்கு பிடித்துவிட்டது. அந்தக் கதைக் கருவை என்னிடம் சொன்னார் சிவச்சந்திரன்.

Advertisment

அவர் ஒரு சிறந்த கற்பனைவாதி என்பது தெரிந்தது, பாராட்டினேன். "நீதான் வசனம் எழுதவேண்டும்'' என்றார். கதை விவாதத்திற்காக குற்றாலம் போனோம். உதவியாளர்களும் உடன் வந்திருந்தனர். பிரபுவின் நண்பருக்குச் சொந்தமான பெரிய பங்களா.…அங்கே எங்களுக்கு மூன்று வேளையும் விதவிதமாக சமையல் செய்து கொடுப்பதற்காக ஆட்களை ஏற்பாடு செய்து கொடுத்தார் பிரபு சார்.

"பிரபு சாருக்கு உங்க மேல இவ்வளவு பிரியம் இருக்கும்போது நீங்க ஏன் விஜயகாந்த்கிட்ட கால்ஷீட் கேட்டீங்க. நீங்க கேட்டவுடனே பிரபு சார் ஓ.கே.ன்னு சொன்னாரு. அவருக்கும் மார்க்கெட் இருக்கு... பிஸினஸ் இருக்கு'' என்று சொல்லி முடிக்குமுன் சிவச்சந்திரன் குறுக்கிட்டார்.

"அப்புறம் என்ன...க்கு விஜயகாந்த்கிட்ட கால்ஷீட் கேட்டு வந்தேன்னு என்னைத் திட்டணும் அவ்வளவுதானே... நல்லா திட்டிக்கோ'' என்றார்.

"சரி… நீங்க சொல்ற மாதிரியே நான் திட்டுனதா நெனைச்சுக்கோங்க. என்ன காரணம்னு சொல்லுங்க.''

"இல்ல லியாகத்,… நான் முதன்முதலா கதை எழுதுன படத்தில் விஜயகாந்த் நடிச்சாரு. படமும் நல்லா போச்சு... நீதான் எழுதுனே. அதே காம்பினேஷன்ல பண்ணலாம்னு நெனச்சேன். அதை விட முக்கியமான காரணம் ஆக்ஷன் படம் டைரக்ட் பண்ண ஆசைப்பட்டேன். இல்லேன்னா நான் எதுக்கு வரப்போறேன்'' என்றார்.

ஒருநாள் இரவு… கதை விவாதத்தில் இருவருக் கும் வாக்குவாதமாகி, அது சண்டையாகவே மாறிவிட்டது. இரவு மணி பன்னிரண்டு.… கோபத் தில் சாப்பிடாமலே சிவச்சந்திரன் படுத்துவிட்டார். எங்களிருவருக்கும் நடந்த சண்டையைப் பார்த்து மிரண்டு போயிருந்த அவருடைய உதவியாளர் களும் சாப்பிடாமல் உட்கார்ந்திருந்தார்கள்.

டைனிங் டேபிளில் தயாராக இருந்த டிபன் அயிட்டங்களை நானே எடுத்துப் போட்டு சாப்பிட ஆரம்பித்தேன். அவருடைய உதவியாளர் களை அழைத்தேன். அவர்கள் முதலில் மறுத்தார் கள். "எங்க டைரக்டரே சாப்பிடாம படுத்துட்டார், நாங்க எப்படி சார் சாப்பிடறது?''…

"சாப்பிடறதுக்காகத்தான் சார் நாம உழைக் கிறோம். ராத்திரி நேரத்துல பட்டினி கிடக்காதீங்க. இப்ப நீங்க சாப்பிட வரலேன்னா நானும் சாப்பிடாம எந்திருச்சிருவேன்'' என்று சொன்னதும் வந்து சாப்பிட்டார்கள்.

சாப்பிட்டுவிட்டு சூட்கேஸில் என் டிரஸ், மற்ற பொருட்களையெல்லாம் எடுத்து வைத்தேன். எப்படியும் காலையில் என்னை "நீ என் படத்துக்கு வசனம் எழுத வேண்டாம்' என்று அனுப்பிவிடப் போறார் சிவச்சந்திரன் என்று நினைத்து தயாராக இருந்தேன். அந்த நினைவோடு போய்ப் படுத்து விட்டேன்.

aad

அதிகாலை 5 மணியிருக்கும். என் மீது ஒரு உதை விழுந்தது.

"தினமும் நீ முன்னால எந்திரிச்சு என்னை எழுப்புவ... இன்னைக்கு தூங்கிக்கிட்டிருக்க.''

"ஊருக்குப் போடான்னு சொல்லப் போறீங்க,… அதுக்குத்தான எழுப்புறீங்க... நான் நைட்டே ரெடியாயிட்டேன்'' என்றேன்.

"ஏய் லியாகத்,…என்னை அப்படியா நெனச்சுட்ட. நீ என் கூட சொத்துச் சண்டையா போட்டே. என் கதை நல்லா வரணும்கிறதுக்காகத் தான் சண்டை போட்டே. கதையில ஒரு முக்கியமான இடத்துல நான் சொன்ன விஷயம் நல்லா இல்லேன்னு சொன்ன. வேற மாதிரி பண்ணலாம்னு நீ ஒரு ஐடியா சொன்ன.… நான் சொன்னது உனக்குப் புடிக்கல,… நீ சொன்னது எனக்குப் பிடிக்கல. அதுதான் நமக்குள்ள நடந்த சண்டை.… நான் எவ்வளவு கோபப்பட்டாலும் சரின்னு தலையாட்டிட்டுப் போகாம பிடிவாதமா இருந்த பாத்தியா...? அதுதான் உன்கிட்ட எனக்குப் புடிச்சிருக்கு. நான் நைட் யோசனைபண்ணிப் பார்த்தேன். நீ சொன்னது நல்லாத்தான் இருக்கு. அப்படியே வச்சுக்குவோம், வா வாக்கிங் போகலாம்'' என்றார்.

இதற்குப் பெயர் பெருந்தன்மையா, மெச்சூரிட்டியா?… நல்ல விஷயங்களைப் பாராட்டி மனமார ஏற்றுக்கொள்ளும் பக்குவமா?…என் மனம் நெகிழ்ச்சியானது.

என் கதை, என் இஷ்டத்துக்கு என்ன வேணும் னாலும் பண்ணுங்கன்னு சொல் லாம என்னைப் பாராட்டி பேசுன சிவச்சந்திரன் என்னை கடுமையாக திட்டும் சூழ்நிலை வருமென்று நான் நினைக்கவே இல்லை.

கதை விவாதம் முடிந்து சென்னை திரும்பினோம். குற்றாலத்திலேயே சிவச்சந்திரன் திரைக்கதையையும் முடிவு செய்துவிட்டார். எனது வீட்டில் வைத்தே "என் உயிர் கண்ணம்மா' படத்தின் வசனம் முழுவதையும் எழுதி முடித்தேன். எப்பொழுது ரீடிங் வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டேன். அதாவது வசனம் முழுவதையும் படித்துக்காட்டி மாற்றங்கள் இருந்தால் செய்யவேண்டும் என்பதற்கான தேதியும் குறிக்கப்பட்டது.

ss

அந்தநேரத்தில் "உழவன் மகன்' படப்பிடிப்பு கோவை அருகே சூலூரில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. படப்பிடிப்பு செலவுக்கான பணம் கொடுத்துவிடுவதற்கு சரியான ஆள் கிடைக்க வில்லை. இப்ராகிம் ராவுத்தர் என்னைக் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வரச் சொன்னார்.

"நைட்டு ரயில்ல கோவைக்கு கிளம்புறேன். நாளை நைட்டு அங்கிருந்து கிளம்பி மறுநாள் காலையில சென்னை வந்துருவேன். யாராவது என்னை தேடி வந்தா கோயம்புத்தூர் போயிருப்பதா சொல்லாத, வெளியே போயிருப்பதாகச் சொல்லிரு'' என்று மனைவியிடம் கூறிவிட்டுக் கிளம்பினேன்.

நான் சென்னையில் இல் லாத அந்த நாளில் சிவச்சந்திரன் உதவியாளர் மூன்று முறை என்னைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்திருக்கிறார். என் மனைவி நான் கூறியது போலவே நான் கோவை போனதைச் சொல்லவில்லை. மறுநாள் சென்னை வந்தேன். அன்றுதான் வசனங்களை படித்துக்காட்ட முடிவு செய்யப் பட்டிருந்தது.

காலை பத்து மணிக்கு வசன ஃபைல்களுடன் ராயப்பேட்டையில் உள்ள ஆபீஸ் போனேன். சிவச்சந்திரனும், தயாரிப்பாளரும் இருந்தார்கள்.

தயாரிப்பாளர் என்னை சிரித்தவாறு வரவேற் றார். சிவச்சந்திரன் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.

"நேத்து எங்க போயிருந்தே?'' சிவச்சந்திரன் கேட்டார்.

"ஊர்ல இருந்து ஒரு ப்ரெண்ட் வந்திருந்தாரு. அவன் வேலையா காலையிலே வெளியே கிளம்பினேன். திரும்பி வீட்டுக்கு வர்றதுக்கு நைட் லேட்டாயிருச்சு'' என்றேன்.

"நேத்து நம்ம ஆபீசுக்கு காமெடி சீன்களை படித்துப் பார்த்து டிஸ்கஸ் பண்ணலாம்னு நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் வந்திருந்தாரு. அதனாலதான் உன்னை வரச்சொல்றதுக்காக ஆள் அனுப்பினேன்'' என்றார்.

"எனக்கு அவர் வர்றது தெரியாதே?… தெரிஞ் சிருந்தா வெளியே போயிருக்கமாட்டேனே… நீங்க முதல்நாளே சொல்லியிருக்கலாமே...'' என்றேன்.

"அவர் வர்றது எனக்கே தெரியாது. திடீர்னு வந்துட்டாரு. காலையில வந்தவரு மத்தியானம் வரைக்கும் உனக்காக வெயிட்பண்ணுனாரு'' என்றார் சிவச்சந்திரன்.

"சரி டயலாக் படிக்கலாமா?'' என்று கேட்டேன் நான்.

"சரி... படி'' என்றார்.

மொத்தப் படத்திற்கான வச னத்தையும் ஒவ்வொரு காட்சியா கப் படித்தேன். தயாரிப்பாளர் ரசித்தார், சிரித்தார்... கண்கலங்கி னார். ஆனால் சிவச்சந்திரனிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை. எந்தக் காட்சியையும் ரசித்தது மாதிரியே தெரியவில்லை. படித்து முடித்த பிறகு சிறிதுநேரம் அந்த அறையில் மௌனம் நிலவியது.

"எப்படி இருக்கு...… எதுவுமே சொல்லாம இருக்கீங்க?''

"எனக்குப் புடிக்கல''

"எந்த சீன் புடிக்கல?… ஏன் புடிக்கலன்னு சொல்லுங்க, மாத்தி எழுதித் தர்றேன்''

"புடிக்கலன்னு சொல்றேன்... உனக்கு வருத்தமா இல்லையா?'' என்றார் சிவச்சந்திரன்.

"பிறவிக் கவிஞர் கண்ணதாசன் எழுதிக் கொடுத்த பல்லவியே சரியில்லேன்னு சொல்லியிருக்காங்க. அவரும் மாத்தி எழுதிக் கொடுத்திருக் காரு. வாலிபக் கவிஞர் வாலி எழுதிக் கொடுத்த பல்லவி சரியில்ல. சரணம் சரியில்லேன்னு சொல்லியிருக்காங்க. அவரும் மாத்தி எழுதிக் கொடுத்திருக் காருன்னு கேள்விப்பட்டிருக்கேன். அவங்கள விட எல்லாம் நான் ஒண்ணும் பெரிய ஆளு இல்ல.… எந்த சீன் புடிக்கலன்னு சொல்லுங்க, நான் மாத்தி எழுதித் தர்றேன்''னு சொன்னேன்.

"நீ எனக்கு எழுதின எந்த சீனுமே எனக்குப் புடிக்கல'' என்றார் சிவச்சந்திரன்.

(வளரும்...)

படம் உதவி: ஞானம்