தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் தூசு தட்டத் துவங்கியிருக்கிறது.
கடந்த 2011-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து, அவரிடம் தோற்ற அ.தி.மு.க.வின் சைதை துரை சாமி வழக்கு தொடுத்தார். சுமார் 6 ஆண்டுகாலம் நடந்த இந்த வழக்கின் முடிவில், மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று கடந்த 2017-ல் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்போதே மேல் முறையீடு செய்தார் சைதை துரைசாமி.
மு.க.ஸ்டாலினுக்கு எதிரான இந்த தேர்தல் வழக்கு நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அபய் எஸ் ஓகா அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஆகஸ்ட் 24-ந் தேதி விசாரணைக்கு வந்தது. ஸ்டாலின் தரப்பின் கோரிக்கைக் கேற்ப விசாரணையை செப்டம்பர் 28-ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர் நீதிபதிகள்.
இந்த நிலையில், எடப்பாடிக்கு நெருக்கமான அ.தி.மு.க.வின் சீனியர் வழக்கறிஞர் ஒருவரிடம் நாம் பேசியபோது, தி.மு.க.வுக்கு தேர்தல் வேலை பார்த்த இளைஞர்களுக்கு அரசு வேலை தருவோம் என்று வாக்குகள் சேகரித்தது, மகளிர் அணியினருக்கு பணம் பட்டுவாடா செய்தது, தேர்தல் பிரச்சாரத்திற்கு ஸ்டாலின் வந்தபோது பல இடங்களில் பட்டாசு வெடிகள் போட்ட கணக்கை தேர்தல் செலவினங்களில் காட்டாமல் மறைத்தது உள்ளிட்ட பல விசயங்கள் மேற்கோள்காட்டப்பட்டு, துணை முதல்வர் என்ற பதவியை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்; இது தேர்தல் முறைகேடு என சைதை துரைசாமியின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
கோர்ட் விசாரணையின் போது ஆஜரான மு.க.ஸ்டாலினிடம் சில வீடியோக்களைக் காட்டி, இவர்களெல்லாம் யார் என்று சைதை துரைசாமி வழக்கறிஞர்கள் கேட்க, தி.மு.க.வினர்தான் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். எனினும், வழக்கு விசாரணையின் முடிவில், ஸ்டாலின் வெற்றிபெற்றது செல்லும் என்று தீர்ப்பு வந்தது. அதில் கடைசியில் உள்ள சில பாராக்கள் தான் ஸ்டாலினுக்கு சாதகமாக இருக்கும். மற்றபடி நெகட்டிவ்கள் தான் நிறைய இருக்கும்.
உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலினுக்கு சாதகமாக வந்த இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சைதை துரைசாமி. அதில் பல ஆதாரங்கள் இணைக்கப்பட்டன. ஒருகட்டத் தில் இந்த வழக்கு விபரங்களை முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் போது அறிந்துகொள்கிறார் அன்றைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. உடனே, எடப்பாடி பழனிச்சாமியிடம் விவாதிக்கிறார் வேலுமணி. அருகில் இருந்த தங்க மணி, ’அதெல்லாம் வேண்டாம்பா… உயர்நீதிமன்ற தீர்ப்பைத்தான் உச்சநீதி மன்றமும் உறுதிப்படுத் தும். "இதில் கவனம் செலுத்தினால் நமக்குத் தான் நேரம் விரயமாகும்' என்று சொல்ல, எடப்பாடியும் அதனை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஆனால், சீனியர் வழக்கறிஞர்கள் பலரிட மும் வேலுமணி விவாதிக்க, "வழக்கு விசா ரணைக்கு வந்து தீர்ப்பளிக்கும் சூழல் உருவானால் ஸ்டாலினின் பதவிக்கு நிச்சயம் சிக்கல் தான்' என்று வழக்கறி ஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
வழக்கை லைம்- லைட்டிற்கு கொண்டு வர என்ன செய்யலாம் என யோசித்த வேலுமணி தரப்பு, 2011-சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட சரவணன் என்பவரை கையிலெடுத்தது. ஸ்டா லினுக்கு எதிரான தேர்தல் வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. அதனை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று உச்சநீதிமன்ற பதிவாளரிடம் கடந்த 2020-ல் அந்த சுயேட்சை சரவணன் மூலம் மனு ஒன்றை தாக்கல் செய்து வழக்கை விரைவுபடுத்த வைத்தது வேலுமணி தரப்பு.
இந்த நிலையில்தான் கடந்த 24-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது தி.மு.க. தரப்பில் வாய்தா கேட்டனர். வாய்தா கொடுக்கப்பட்டது. இந்த மாதம் 28-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது இந்த வழக்கு. ஓரிரு ஹியரிங் முடிந்ததும் வழக்கின் தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு உண்டு. தேர்தல் முறைகேடு தொடர்பாக பல ஆதாரங்கள் இணைக்கப்பட்டிருப்பதால், ஸ்டாலினுக்கு எதிராக தீர்ப்பு வரும்பட்சத்தில் அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவார். அப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அடுத்த 6 ஆண்டு காலத்துக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது''’என்று விரிவாக சுட்டிக்காட்டினார் அ.தி.மு.க. வழக்கறிஞர்.
இந்த வழக்கு விவகாரங்களை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது தமிழக பா.ஜ.க. இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஜே.பி.நட்டா எடுத்துச் சென்றுள்ளதாக பா.ஜ.க.வினர் தெரிவிக் கிறார்கள். அதேசமயம், எடப்பாடி பழனிச்சாமி யிடம் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் சொல்ல, தனது டெல்லி லாபி மூலம் பிரதமர் மோடியின் அலுவலக உயரதிகாரிகளின் பார்வைக்கு தகவல் அனுப்பியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
ஸ்டாலினுக்கு எதிரான இந்த வழக்கை அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் சத்தமில்லாமல் கையாளத் துவங்கியுள்ளன. இந்த நிலையில், தி.மு.க.வின் மூத்த வழக்கறிஞர்கள் சிலரிடம் இது குறித்து விசாரித்தபோது,”"ஜெயலலிதாவின் தூண்டுதலில் போடப்பட்ட வழக்கு இது. உயர் நீதிமன்றத்திலேயே, வழக்கை உடைத்துவிட்டோம். காழ்ப்புணர்ச்சிக்காக போடப்பட்ட வழக்கு என்பதையும் நிரூபித்திருக்கிறோம். உச்சநீதிமன்றத் திலும் தலைவர் ஸ்டாலினின் வெற்றி உறுதி செய்யப்படும். எதிரிகளின் சதிகள் எடுபடாது'' என்கிறார்கள் ஆவேசமாக.