அரசின் கவனக் குறைவால் உருவான ஒரு கோரச் சம்பவத்திலிருந்தே தொடங்கியது மருத்துவர் காஃபீல்கானின் துரதிர்ஷ்டம். கோரக்பூர், பி.ஆர்.டி. மருத்துவமனையில் 2017, ஆகஸ்ட் மாதம் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சுமார் 60 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தது தேசிய அளவில் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியது. தனது சொந்தக் காசில் அவசரமாக சில ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி குழந்தைகளைக் காக்கமுயன்ற மருத்துவர் காஃபீல்கானின் முயற்சி இந்திய அளவில் பேசப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bjpgovt..jpg)
விரைவிலேயே அதற்கான விலையை காஃபீல்கான் செலுத்தவேண்டியிருந்தது. தனது மருத்துவப் பணியில் அலட்சியமாக இருந்து குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமானதாகக் கூறி பணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். எல்லா தவறுகளுக்கும் அவர்தான் காரணமென கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். தன்மீது தவறெதுவும் இல்லையென நிரூபித்து வெளியில் வருவதற்கு அவருக்கு பதினொரு மாதங்கள் பிடித்தன. மீண்டும் ஒரு சிறைவாசம் காத்திருப்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.
மத்திய அரசு, குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்தபோது அதை எதிர்த்து தேசிய அளவில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. முக்கியமாக மாணவர்கள் தரப்பிலிருந்து பெரிய அளவில் எதிர்ப்புக் கிளம்பியது. ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், அலிகர் பல்கலைக்கழகம் போன்றவை இந்த எதிர்ப்பில் முதலிடம் வகித்தன.
அலிகர் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மருத்துவர் காஃபீல்கான் கலந்துகொண்டு உரையாற்றினார். அதற்கெதிராக டிசம்பர் 12ஆம் தேதி காஃபீல்கான்மீது வழக்குப் பதியப்பட்டது. பல்வேறு குழுவினருக்கு இடையே மதப் பகைமையுணர்ச்சியைத் தூண்டுவதாக அதில் கூறப்பட்டிருந்தது. ஜனவரி 29ஆம் தேதி அவர் கைதுசெய்யப்பட்டு மும்பை கொண்டு செல்லப்பட்டார். காஃபீல்கானின் தாயார் உச்சநீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல்செய்தார்.
உச்சநீதிமன்றம் அதைப் பரிசீலித்துவிட்டு அலிகர் நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்தது. கொரோனாவைக் காரணம் காட்டி தாமதமாக விசாரணைக்கு எடுக்கப்பட்டு, பிணை வழங்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கும்படி உத்தரவு வழங்கப்பட்டது. மூன்று முறை நீதிபதியால் ரிலீஸ் ஆர்டர் தரப்பட்டும் காஃபீல்கான் விடுவிக்கப்படாமல் மூன்று நாட் கள் சிறைத்துறை வேண்டுமென்றே தாமதம் செய்தது. பின் அலிகார் மாவட்ட நீதிபதி. மூலம் புதிய புகார்கள் தரப்பட்டு, அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.
.இதையடுத்து காஃபீல்கான் குடும்பம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கை விசாரித்து செப்டம்பர் 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம் அலிகார் பல்கலையில் காபீல்கானின் பேச்சு அரசின் கொள்கைகளை எதிர்த்துதான் இருக்கிறதே தவிர, வெறுப்பையோ வன்முறையையோ தூண்டுவதாக இல்லை எனக் குறிப்பிட்டது. மேலும் அவர் அலிகாரில் பேசி இரண்டு மாதங்களுக்குப் பின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்தது ஏன் என கேள்வி யெழுப்பியது.
தற்சமயம் உ.பி.க்குத் திரும்பும் எண்ணமில்லை எனும் காபீல் கான், ""அரசாங் கத்தால் என் மேல் புனையப்பட்ட வழக்கு தவறானது, அடிப்படையற்றது என்பதை நீதிமன்றம் நிரூபித்திருக்கிறது. மேலும் உ.பி.யிலிருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டபோது என்னை உயிரோடு விட்டுவைத்த தற்காக சிறப்புக் காவல் படைக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றிருக்கிறார்.
காஃபீல்கான் விடுதலை செய்யப்பட்டு விட்டார். பீமா கொரோகான் வழக்கில் பிரதமர் மோடியைக் கொலைசெய்யத் திட்டமிட்டதாகக் கூறி வரவர ராவ், அருண் பெரரியா, சுதா பரத்வாஜ், கௌதம் நவல்கா, சுரேந்திர காட்லிங், சுதிர் தவாலே, ரோனா வில்சன், சோமா சென், மகேஷ் ரௌத் உள்ளிட்ட இரண்டு டஜன் பேரைக் கைதுசெய்தனர்.
வெறும் ஒரு கடிதம், சில துண்டறிக்கைகளின் அடிப்படையில், பிரதமரைக் கொல்லத் திட்டமிட்டதாகக் கூறி இந்தியாவின் புகழ்பெற்ற ஆளுமைகளை கைது செய்திருப்பது தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியது.
ஆகஸ்டு 2018-ல் கைதுசெய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனநிலையிலும் இவர்களில் யாரும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையிலும், கைதிகளுக்கு நடுவில் இவர்கள் சிறையிலடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்துவருகின்றனர்.
கவிஞர் வரவரராவ் உடல்நிலை குன்றிய நிலையிலும் கூட, அவரைக் கவனித்துக்கொள்ள அவரது மனைவி, மகளைக்கூட அனுமதிக்காமல் கெடுபிடி காட்டியது மத்திய அரசு. இந்நிலையில் மற்றொரு சமூகச் செயற்பாட்டாளரான சுதா பரத்வாஜ் சிறையில் உடல்நலமின்றி இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அவரது மகள் மாய்ஷா, “ஏழை மக்களைத் தூண்டிவிட என்னுடைய தாய் அமெரிக்க குடியுரிமையைத் துறந்த தாக இந்த அரசு குற்றம் சாட்டுகிறது. சேவை செய்ய வந்தவரை தேசத்துரோகி என இந்த அரசு முத்திரை குத்துகிறது’’ என ஊடகங்களுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் தனது தாயைப் பார்க்க அணுகியவரை பெண் காவல் அதிகாரி தள்ளிவிட்டதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
பொருளாதாரம், மக்கள் நலம், ஆரோக்கியம் என பல விஷயங்களையும் நலிவடைய வைத்துவிட்டு, தேசத்தையே சிறைச்சாலையாக மாற்றிக்கொண்டிருக்கிறது இந்த அரசு என ஆதங்கப்படுகின்றனர் அரசின் அணுகுமுறையை எதிர்ப்பவர்கள்.
-க.சுப்பிரமணியன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/bjpgovt-t.jpg)