துணை முதல்வர் பொறுப்பை உதயநிதி ஏற்பதற்கு முன்பாகவே அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வரிந்துகட்டிக்கொண்டு விமர்சித்தார்களே. அதே மனநிலையில்தான் மக்கள் இருக்கிறார்களா?
அமைச்சராக இருந்தபோதே உதயநிதியின் செயல்பாடுகள் மக்களை கவர தொடங்கிவிட்டது. சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை பணிகளை கவனித்தபோதே டெபுடி சி.எம். போலதான் இருந்தார். மாவட்ட ஆய்வுக்கூட்டங்கள் நடந்தது. கலெக்டர்களோடு பல்வேறு வளர்ச்சிப்பணி கள் குறித்து ஆய்வு செய்தார். மதுரை பேருந்து நிலையத்திற்கு சென்றபோது பயணி கள் அமருமிடம், காத்திருப்பு அறைக்கு சென்றது மட்டுமல்லாமல், பயணிகள் பயன்படுத் தும் கழிவறை வரை சென்று அந்த இடம் எப்படி உள்ளது என்றும் ஆய்வு செய்தார். 'என்ன பாத்ரூம் வரை போய் பாக்குறாரு' என மக்களின் கவனத்தை ஈர்த்தது இந்த ஆய்வுகள். இந்த ஆய்வுகளின்போது அலுவலர்கள் பணிகளில் தொய்வுடன் பணியாற்றி யது தெரியவந்தது. பணியில் தொய்வாக இருந்த அரசு அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப் பட்டனர். இது அரசு ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற செயல்களே டெபுடி சி.எம். போல செயல்படுகிறார் என்று மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால் அவர் டெபுடி சி.எம். பொறுப்பு ஏற்றதை மக்கள் பெரியதாக விமர்சிக்கவில்லை.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஒரு சில விஷயங்களை அவரது கவனத்திற்கு கொண்டு செல்லவே அதிகாரி களும், அமைச்சர் களும் தயங்குவார்கள். சென்னை வெள்ளம் ஏற் பட்டதற்கு அதுவே காரணம். ஆனால் அதற்கு நேர்மாறாக இப்போது எந்த விஷயமாக இருந்தாலும் அதிகாரிகளோ, அமைச்சர்களோ... முதல்வர், துணை முதல்வரிடம் தெரிவிக்கலாம். மாவட்ட ஆய்வுகளின்போது உதயநிதியிடம் நேரடியாக கருத்துக்களை தெரிவிக்கலாம் என்ற மனநிலை பொதுமக்கள் மத்தியில் வந்துவிட்டது. சாமானிய மக்களிடம் வாரிசு அரசியல் என்ற பேச்சு இல்லை. எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக விமர்சித்துவருகிறார்கள். அந்த விமர்சனமும் எடுபடவில்லை.
தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஈடுபட்ட தில் இருந்து தொடர் வெற்றிகளை சந்தித்துவருகிறார். அதனால் கட்சியினரும் வரவேற்கின்றனர். துரைமுருகன்போல் ஓரிருவர் வருத்தத்தில் இருந்தாலும், கட்சியில் பெரும்பாலானவர்கள் வரவேற்கின்றனர். சேலம் மாநாடே அதற்கு சாட்சி.
முதல்வர் மகன் என்பதால்தான் துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று அ.தி.மு.க. சொல்கிறதே?
ஜெயவர்தன் எம்.பி. ஆனது ஜெயக்குமார் மகன் என்பதால்தான். ராஜ்சத்யன் எம்.பி.க்கு போட்டியிட்டது ராஜன்செல்லப்பாவின் மகன் என்பதால்தான். இப்படியே அ.தி.மு.க.வில் சொல்லிக் கொண்டே போகலாம். ஜெயலலிதா வாரிசு அரசியலை ஏற்கமாட்டார் என்று சொன்னபோதே அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கினார். எடப்பாடி பழனிசாமியே தற்போது தனது மகனை களம் இறக்கத் தயாராகிவருகிறார். சேலம் மாவட்டத்திலேயே போட்டியிட வைக்கலாமா, ராஜ்யசபா உறுப்பினராக்க லாமா என யோசித்துவரு கிறார். தே.மு.தி.க.வின் விஜய பிரபாகரனுக்கு ராஜ்யசபா சீட் வழங்குகிறார் எடப்பாடி. அந்த நேரத்திலேயே தனது மகனை யும் எம்.பி. ஆக்க நினைக்கிறார். ஆகையால் இந்த விஷயத்தில் தி.மு.க.வை விமர்சிக்க அ.தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை. பா.ஜ.க.வை பொறுத்தவரை அரசியல் செய்ய வேறு எதுவுமே இல்லை என்பதால், உதயநிதி துணை முதல்வர் பொறுப்பு ஏற்றதை விமர்சிக்கிறார்கள். பா.ஜ.க.வின் இந்த விமர்சனத்தை மக்கள் ரசிக்கவில்லை.
செந்தில்பாலாஜிக்கு அவசர அவசரமாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது ஏன் எனவும், தியாகி, உறுதியாக இருந்தார் என முதல்வர் சொன்ன தற்கும் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததே?
இந்த விமர்சனத்தை வைக்கும் எதிர்க்கட்சி யினர் கக்கன், காமராஜர்போல் நடந்து கொண் டார்களா? மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புனே பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டபோது, "அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது. லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகின்றனர். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. நமது அமைப்பில் ஏராளமான விஞ் ஞானி நியூட்டனின் தந்தையர்கள் சிலர் உள்ளனர். ஆவணங் கள் மேல் எடை (லஞ்சம்) வைத்தால் அது வேகமாக நகரும். எவ்வளவு பணம் லஞ்சமாக தரப்படுகிறதோ அதற்கு தகுந்தாற் போல் வேலை நடக்கிறது' என பேசினார். பேசியது எதிர்க்கட்சி யைச் சேர்ந்தவர் இல்லை. ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி. பா.ஜ.க.வின் அடுத்த பிரதமர் பட்டிய லில் இருப்பவர். ஆகையால் தி.மு.க.வை குறை சொல்ல பா.ஜ.க.வுக்கு எந்தத் தகுதியும் இல்லை.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் சொன்னதுபோல, தமிழ்நாட்டில் ஒரு சிட்டிங் சி.எம். ஆக இருந்த ஜெயலலிதா தண்டனை விதிக்கப்பட்டு பதவி விலகி, சிறைக்கு சென்றார். அந்த வழக்கில் இன்றுவரை அவர் நிரபராதி என நிரூபிக்கப்படவில்லை. இந்தியாவிலேயே சிறைக்கு சென்ற முதல்வர் இவர்தான். தண்டனைக்கு உள்ளானவர், ஜாமீனில் வெளியே வந்து, அவசர அவசரமாக சிட்டிங் எம்.எல்.ஏ.வை ரிசைன்பண்ண வைத்து, எம்.எல்.ஏ.வுக்கு நின்று, மீண்டும் முதல்வர் ஆகலாமா? செந்தில்பாலாஜி மீதான வழக்கு நீதிமன்றத்தில் இருக் கிறது. அதன் விவரம் எல்லோருக்கும் தெரிந்தது. விசாரணை நடக்கும்போது இவ்வளவு காலம் சிறையில் வைத்திருந்தது ஏன் என்பதுதான் கேள்வி. தண்டனை பெற்றவர் முதல்வர் ஆகலாம். விசாரணை நடக்கும்போது இவர் அமைச்சராக இருக்கக்கூடாதா?
செந்தில்பாலாஜி தி.மு.க.விற்கு வந்த பிறகு அவரது செயல்பாடுகள் எப்படியிருக்கிறது. 2021ல் எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க.தான் வெற்றிபெற்றது என்றார். கொங்கு எங்கள் கோட்டை என்று அ.தி.மு.க.வினர் சொல்லிவந்த நிலையில், அதனை உடைத்தவர் செந்தில் பாலாஜி. உள்ளாட்சித் தேர்தல் என்றாலும், நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும் கொங்கு பகுதியை தி.மு.க. கோட்டையாக மாற்றியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் ஆகியோரின் கொள்கையே செந்தில் பாலாஜியை அரசியலில் வீழ்த்தணும் என்பதுதான். அந்த கனவை சிறையில் இருந்தபடியே தவிடுபொடி யாக்கியவர் செந்தில்பாலாஜி. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க.வை காணாமல் ஆக்கியவர். உள்ளாட்சித் தேர்தல் நடக்க விருக்கிறது, 2026 சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நேரத்தில் ஜாமீனில் வந்துவிட்டாரே என்று அச்சத்தில் உள்ளது அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும். கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருக்கிறார், கட்சியை அடுத்த கட்டத்திற்கு அவரது பகுதியில் கொண்டுசெல்கிறார் என்பதால் கட்சித் தலைமை அவருக்கான முக்கியத்துவத்தை கொடுத்தது. அவருக்கான சட்டப் போராட்டத்தில் கட்சி துணை நின்றது.
கோவி.செழியனுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததும் அம்மாவட்டத்தில் உள்ள சீனியர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்கிறார்களே?
டெல்டா பகுதியில் அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. அப்போது டெல்டா பகுதியைச் சேர்ந்த முதலமைச்சராகிய நான், டெல்டாவிற்கு அமைச்சராக இருப்பேன்’ என்றார் ஸ்டாலின். இருந்தாலும் நடிகர் சிவாஜியை தோற்கடித்தவரும், ஐந்தாவது முறை எம்.எல்.ஏ.வாக இருப்பவருமான துரை.சந்திரசேகரன் அமைச்சர் பதவியை பெற பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இதேபோல் சாக்கோட்டை அன்பழகன், திருவாரூர் பூண்டி.கலைவாணன் என பலரும் அமைச்சர் பதவியை பெற முயற்சிகளை எடுத்தனர். இந்த சூழ்நிலையில் மன்னார்குடி தொகுதியை சேர்ந்த டி.ஆர்.பி.ராஜா அமைச்சரானார். தொழில்துறை அமைச்சராக இருப்பதால் அந்த துறையை பார்ப்பது, முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்துவதால் மாவட்ட அரசியலில் ஈடுபட அவரால் முடியவில்லை. அப்பகுதியில் மேலும் ஒரு அமைச்சரை நியமிக்கலாம் என்று வரும்போது, கோவி.செழியனை தேர்வு செய்தார் கள். கட்சித் தலைமைக்கு அவர் விசுவாசமாக இருந்தாலும், ஸ்டாலின் மற்றும் உதயநிதி இருவரின் குட்புக்கில் அவர் இருந்தாலும், அவர் அமைச்சராக தேர்வு செய்யப் பட்டதற்கு காரணம் அர்ஜுன் ரெட்டிதான். வி.சி.க.வுக்கு என்ன தகுதி இல்லை? அதிகாரத்தில் பங்கு கொடுத்தால் என்ன? அமைச்சர் ஆகக்கூடாதா? துணை முதல்வர் ஆகக்கூடாதா? என அர்ஜுன் ரெட்டி வெளிப்படையாகப் பேசி விவாதத்தை கிளப்பினார். அர்ஜுன் ரெட்டி விமர்சனத்தை பார்த்தால், கூட்டணியில் அவர்கள் நீடிப் பார்களா என்று தெரியாது. பட்டியலின சமூகத்திற்கு நாம் என்ன செய்தாலும் குறை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நம்ம கட்சியிலேயே பட்டியலின சமூகத்தை சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் என்ன என்று கோவி.செழியனை முடிவு செய்ததோடு, உயர் கல்வித்துறையையும் கொடுத்து எல்லோருடைய வாயையும் அடைத்துவிட்டார் ஸ்டாலின். பனமரத்துப்பட்டி ராஜேந்திரனும், வீரபாண்டி ஆறுமுகம் இருந்தபோதே, ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். அமைச்சரவை மாற்றத்தில் கனிமொழிதான் வருத்தத்தில் உள்ளார். தன்னோட ஆதரவாளர் என்று மனோதங்கராஜ் ஒருவருக்குத் தான் அமைச்சர் பதவி கொடுத்தீர்கள். அவரையும் எடுத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறார். சமீபமாக கவனித்துப் பாருங்கள், எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்பதில்லை.
(தொடரும்)
சந்திப்பு: -வே.ராஜவேல்
படம்: நவீன்