குமரி மாவட்டத்தில் இந்து அறநிலையத் துறையின் கீழுள்ள கோவில்களில் நடக்கும் திரு விழா நிகழ்ச்சிகளில் மாவட்டத்தின் அமைச்சரான மனோதங்கராஜ் கலந்துகொள்வதற்கு பா.ஜ.க., இந்து முன்னணி, விஸ்வஹிந்து பரிஷத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பு அவர்களுக்குப் பின்னடைவாகியுள்ளது..
கடந்த ஜூன் 11-ஆம் தேதி குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் நடந்த வைகாசி விசாகத் தேரோட்டத்தில் தேரின் வடம்பிடித்து இழுப்பதற்கும், ஜூன் 14-ஆம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பௌர்ணமியன்று 108 திருவிளக்கு பூஜை திட்டத்தை மனோ தங்கராஜ் தொடங்கி வைப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அமைச்சர் மனோதங்க ராஜின் பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட 108 வைணவத் தலங்களில் 76-ஆவது கோவிலான திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபுவுடன் மனோ தங்கராஜும் கலந்துகொள்வதாக அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது.
அழைப்பிதழ் வெளியான அன்றே பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ், "கும்பாபிஷேக நிகழ்ச்சியில் மனோதங்கராஜ் கலந்துகொண்டால் தடுத்து நிறுத்துவோம்'' என பத்திரிகையாளர் களிடம் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்துமுன்னணி கோட்ட செயலாளர் மிசா சோமன், "ஜூலை 6-ஆம் தேதி நடக்கும் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழில் அமைச் சர் மனோதங்கராஜ் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்து மதத்தின் மீது நம்பிக்கையில்லாத மாற்று மதத்தினரை கோவிலுக்குள் அனுமதிப்பது ஆச்சாரத்துக்கு எதிரானது. கோவிலின் புனிதம் கெட்டுப் போவதற்கான வாய்ப்புள்ளது. அந்த கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது'' என உத்தரவிடக்கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு, "கோவில் கும்பாபிஷேக விழாக்களில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக் கூடாது என்று அறநிலையத் துறையில் விதிகள் எதுவும் இல்லை. இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர், இந்துக் கடவுள்கள் மீது நம்பிக்கை வைத்து அந்த கோவிலுக்கு வருவதைத் தடுக்க முடியாது. கோவில் கும்பாபிஷேக விழாக் களில் பங்கேற்பவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர் கள் என அடையாளம் காண முடியாது. அவரவர் நமபிக்கையின் அடிப்படையில் கோவில் தலங்களுக் குச் செல்கின்றனர். எனவே இந்த விவகாரத்தை நீதிமன்றம் குறுகிய பார்வையில் பார்க்காமல் தொலைநோக்கு பார்வையில் கையாள்கிறது'' எனக் கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.
நீதிபதிகளின் இந்த தீர்ப்பு பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்பினருக்கு உஷ்ணத்தை ஏற்றியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மிசா சோமன், "தமிழ்நாடு இந்து சமய அறக்கட்டளைகள் சட்டம் 1959 உட்பிரிவு 4-ல் "இந்துவாக இல்லாத ஒருவர் இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோவில் வளாகத்தில் அல்லது அதற்குண்டான இடங்களில் நுழைவதற்கு அங்கீகாரம் அளித்ததாக கருதுதல் கூடாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மண்டைக்காடு கோவிலில் மேற்கூரை தீப்பிடித்து எரிந்தபோது கோவிலின் கருவறைக்குள் போய் மனோதங்கராஜ் ஆய்வுசெய்திருக்கிறார். அங்கு சமீபத்தில் நடத்த திருவிளக்கு பூஜையில் ஜெபமாலை அணிந்து வந்த கிறிஸ்தவப் பெண்களை அழைத்து வந்து திருவிளக்கு பூஜை நடத்தி அவர் களுக்கு 500 ருபாய் மதிப் பில் சேலை, ரவிக்கை, சில்வர் தட்டுகள் கொடுத் திருக்கிறார்கள்.
கிறிஸ்தவ சர்ச்களில் ஒரு இந்துவை அங்குள்ள கொடிமரத்தில் கொடியேற்ற அனுமதிப்பார்களா? கோர்ட் தந்திருக்கும் தீர்ப்பை இந்துக் கடவுள்களுக்கு எதிரான தீர்ப்பாகத் தான் கருதுகிறோம். உண்மையான தீர்ப்பு கிடைக்கும் வரை இந்துக் கடவுள்களுக்காக போராடுவோம் மேல்முறையீடு செய்ய இருக்கிறேன்''’என்றார். இதுகுறித்து தி.மு.க. பிரமுகர் வழக்கறிஞர் ஜெகதேவ் கூறும்போது, "மனோதங்கராஜின் முயற்சியால்தான் குமரி மாவட்டத்திலுள்ள இந்துக் கோவில்களுக்கு 50 கோடி ருபாய் செலவில் புனரமைப்பு, அத்தியா வசிய கட்டுமானப் பணிகளுக்கென நிதி ஒதுக்கி பல கோவில்களில் பணிகள் நடந்துவருகிறது. மண்டைக் காடு கோவிலில் தீ விபத்து நடந்தபோதும் பலமுறை அங்குசென்று பார்வையிட்டு பக்தர்களின் வேண்டுகோள்படி அதன் பழமை மாறாமல் புனரமைக்க நடவடிக்கை எடுத்தார்.
418 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தாம லிருந்த திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்கு நடவடிக்கை எடுத்ததே மனோதங்கராஜ்தான். பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலுக்கு நிதி ஒதுக்கி கும்பாபிஷேகத்துக்கான பணிகள் நடந்துவருகிறது. இந்துக்களுக்கோ, இந்து கோவில்களுக்கோ பா.ஜ.க.வினர் ஏதாவது செய்திருக்கிறார்களா?
பத்மநாபபுரம் பா.ஜ.க. எம்எல்.ஏ.வாக வேலாயுதன் இருக்கும்போதுதான் குமாரகோவில் முருகன் கோவிலுக்கு சொந்தமான பல நூறு ஏக்கர் சொத்தை தனியாருக்கு பட்டா போட்டுக் கொடுத்த னர். பா.ஜ.க. சாதிய, மத ரீதியான துவேஷங்களை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்து வதில்தான் அக்கறையாய் இருக்கிறது''’என்றார்.
இந்நிலையில் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் பா.ஜ.க.வின் பொன்.ராதாகிருஷ்ணனைத் தவிர பெரும்பாலோர் கலந்துகொள்ளவில்லை. “