செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க சென்னை வந்திருந்த பிரதமர் மோடியை அவர் தங்கியிருந்த ராஜ்பவனில் சந்தித்துவிட வேண்டும் என எடப்பாடியும் பன்னீரும் பகீரத முயற்சியை எடுத்தனர். "காத்திருங்கள்; நேரம் ஒதுக்கப்படலாம்' என்று மட்டுமே புதன்கிழமை வரை அவர்களின் சோர்ஸ்கள் சொல்லிக் கொண்டே இருந்தனர்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு வேட்புமணு தாக்கல் செய்தபோது அந்த நிகழ்வில் கலந்துகொள்ள டெல்லி சென்ற ஓ.பி.எஸ்.ஸும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கான பிரிவு உபச்சார விழாவில் கலந்துகொள்ள டெல்லி சென்ற எடப்பாடியும் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்கும் திட்டத்துடன்தான் சென்றனர். ஆனால், இருவரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்க இருவருமே நேரம் ஒதுக்கவில்லை. அதனால்தான், சென்னை வந்த பிரதமர் மோடியை சந்திக்க இருவரும் ஏகத்துக்கும் முயற்சித்தனர்.
டெல்லி பயணத்தில் மோடியை சந்திக்க முடியாவிட்டாலும் மிக முக்கியமான ஒரு அதிகாரியை சந்தித்துவிட்டே சென்னைக்கு எடப்பாடி திரும்பினார் என்கிறார்கள் அவரது ஆதரவு சீனியர் தலைவர்கள்.
எடப்பாடிக்கு நெருக்கமான மூத்த தலைவரிடம் நாம் பேசியபோது, "மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க ஒன்றிய அமைச்சரும் கடந்த காலங்களில் தமிழகத் தின் அரசியலை கவனித்து வந்தவருமான பியூஸ் கோயல் மூலமாக எடப்பாடி எப்போதும் முயற்சிப்பார். இந்த முறை யும் அதே வழியில் முயற்சிக்க, பல்வேறு அலுவல் பணிகள் காரணமாக எடப்பாடிக்கு உதவ பியூஸ்கோயலால் முடியவில்லை.
பியூஸ்கோயாலால் முடியாதபோது, பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா மூலம் முயற்சிப்பார் எடப்பாடி. அதேபோல இந்த முறையும் முயற்சிக்க, பி.கே. மிஸ்ராவை ரீச் பண்ணவே முடிய வில்லை. அதேபோல, அமித்ஷாவிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவதற்காக அவரது பிரைவேட் செக்ரட்டரி சேக்கட்குமார் மூலமாக முயற்சிப்பது வழக்கம். அப்படி முயற்சித்தபோதும் எதுவும் நடக்கவில்லை.
பிரிவு உபச்சார விழாவில் அண்ணாமலை உதவியால் பிரதமர் மோடியை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு எடப்பாடிக்கு கிடைத்தது. ஆனால், எடப்பாடியை மோடி கண்டுகொள்ளவில்லை. எடப்பாடிக்காக மோடியிடம் அண்ணாமலை பேச, தனிப்பட்ட சந்திப்புக்கு நேரம் இல்லைன்னு சொன்ன மோடி, தமிழ்நாட்டில் சாதி பாலிடிக்ஸ் பண்றீங்களா? என்று அண்ணாமலையிடம் கடிந்துகொண்டார். அதேசமயம், அமித்ஷாவை பாருங்க என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.
இதனையடுத்து, எடப்பாடிக்காக அமித்ஷாவை சந்திக்க அண்ணாமலையே முயற்சித்தபோது, நேரம் இல்லை என அமித்ஷாவும் சொல்லிவிட, மூட் அவுட்டாகிப் போனார் எடப்பாடி. அவருக்கு மனசே சரியில்லை. டெல்லிக்கு வந்திருக்கக்கூடாதோ என்று கூட அவருக்கு தோன்றியது.
இந்த நிலையில்தான், தங்களை சந்திக்க எடப்பாடி எடுக்கும் முயற்சியை மோடியும் அமித்ஷாவும் விவாதித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து தனது ஆலோசகர்களில் ஒருவரான பாஸ்கர்குல்பேவிடம் மோடி பேசியிருக்கிறார். அதனையடுத்து, பாஸ்கர் குல்பேவிடமிருந்து எடப்பாடிக்கு ஃபோன் வந்திருக்கிறது. அடுத்த அரைமணி நேரத்தில் அவரை சந்தித்துள்ளார் எடப்பாடி.
அந்தச் சந்திப்பில், "பன்னீர் செல்வம் டெல்லி வந்தபோது அவரை பி.எம்.மும் (ப்ரைம் மினிஸ்டர்), ஹெச்.எம்.மும் (ஹோம் மினிஸ்டர்) சந்திக்கலை. அதே மாதிரிதான் உங்களையும் தனிப்பட்ட முறையில் சந்திக்க அவர்களுக்கு நேரமில்லை. நீங்க சொல்ல வேண்டியதை சொல்லுங்கள். நான், பி.எம்.முக்கு கன்வே பண்ணிடுவேன்' எனச் சொல்லியிருக்கிறார் பாஸ்கர் குல்பே.
பாஸ்கர் குல்பே இப்படி சொன்னதும், "பன்னீர்செல்வம் துரோகம் பண்றார். அவருக்கு தி.மு.க. மறைமுகமாக உதவுகிறது. அ.தி.மு.க.வை உடைச்சி தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கக் கூட அவர் தயாராகியிருக்கிறார் என்று எடப்பாடி சொல்லிக் கொண்டே போக, இடைமறித்த பாஸ்கர் குல்பே, "இதெல்லாம் உங்க கட்சி விவகாரம். இதுல நாங்க எதுவும் சொல்வதற்கில்லை. ஆனா, ஒரு விசயம், எல்லோரும் ஒண்ணா வந்தீங்கன்னா நல்லாயிருக்கும்னுதான் ஹோம் மினிஸ்டர் எதிர்பார்க்கிறார்.
அதேமாதிரி, பிரதமரும், அ.தி.மு.க. சரியாகத்தானே போய்க்கிட்டு இருந்தது. எதற்கு இந்த அவசர அதிகார மாற்றம்னுதான் நினைக்கிறார். அதனால உங்க கட்சி விசயத்தை நீங்களே முடிவு பண்ணிக்குங்க. வேற விசயம் ஏதும் இருக்கா?' என்று கேட்டிருக்கிறார்.
அப்போது எடப்பாடி, "பா.ஜ.க.வுடன் நல்ல உறவுடன் இருக்கவே நான் விரும்புகிறேன். ஆனாலும், ஐ.டி. ரெய்டுகள் நடத்தி எங்களை காயப்படுத்துகிறீர்கள். அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் எல்லாம் அப்-செட்டாகிறார்கள்' என்று சொல்ல, "கடந்த 10 வருசத்துல எவ்வளவு கொள்ளை யடிச்சி வெச்சிருக்கீங்க? கம்ப்ளைண்ட் ஏகப்பட்டது வருது. இப்போ நடந்த ரெய்டுல கூட 40,000 கோடின்னு கணக்கு வருதே. இதெல்லாம் உங்க அ.தி.மு.க. தலைவர்களின் பினாமிகள் தானே? இந்த ரெய்டுல மட்டும் 640 கோடி ஹாட் கேஷ் கிடைச்சிருக்கே. தமிழ்நாட்டோட கஜானாவே நீங்கதானா?' என்றெல்லாம் விளாசியிருக்கிறார். எடப்பாடியால் எதுவும் பேசமுடியவில்லை.
தொடர்ந்து பேசிய பாஸ்கர் குல்பே, "ரெய்டெல்லாம் சட்டப்படி நடக்கிறது. இதுல மோடியோ, அமித்ஷாவோ தலையிட விரும்பமாட்டாங்க. துறை ரீதியா எடுக்கப்படுற நடவடிக்கைகளை நீங்களே பார்த்துக்குங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது. அதனால், இந்த விசயத்துக்காக நீங்க டெல்லியில காத்திருக்க தேவையில்லை' என காட்டமாக பேசி எடப்பாடியை அனுப்பி வைத்துள்ளார் பாஸ்கர் குல்பே. அதனால்தான், புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளாமல் உடனடியாக சென்னைக்கு திரும்பினார் எடப்பாடி பழனிச்சாமி'' என்று டெல்லியில் நடந்ததை விவரித்தார் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்.
அதேபோல, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும் டெல்லியில் செம டோஸ் விழுந்திருக்கிறது. "அ.தி.மு.க. பஞ்சாயத்தை தேசிய தலைமை டீல் செய்யும்னு சொல்லி எடப்பாடியை இங்கு அழைச்சிட்டு வந்தீங்களா? நீங்களும் அவரும் சேர்ந்து ரகசியமாக தமிழ்நாட்டுல என்ன அரசியல் செஞ்சிட்டு இருக்கீங்கன்னு நாங்க கவனிச்சிக்கிட்டுதான் இருக்கிறோம்'' என்று டோஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஏமாற்றத்துடன் எடப்பாடி சென்னை திரும்பிய நிலையில், பிரதமர் மோடியை சந்தித்திருக்கிறார் எடப்பாடியின் ஆதரவாளரான அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை. இவர் எப்படி சந்தித்தார்? என ஓபிஎஸ் தரப்பு விசாரித்தபடி இருந்தது.
அந்த சந்திப்பு குறித்து டெல்லி சோர்ஸ்களிடம் நாம் விசாரித்தபோது, "ஜனாதி பதி தேர்தலில் பா.ஜ.க. ஜெயித்ததற்கு வாழ்த்துக்கள் சொல்வதற்காகவே பிரதமரை சந்தித்தார் தம்பிதுரை. அதைப் பயன்படுத்தி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து சி.பி.ஐ., ஐ.டி. ஆகியவை செயல்படுவது குறித்து பேச்சை ஆரம்பித்திருக்கிறார் தம்பிதுரை. பிரதமரோ, ’"நீங்கள் சீனியர் லீடர். விசாரணை அமைப்பு கள் எப்படி இயங்கும்னு உங்களுக்குத் தெரியும். அவர்களது விசாரணை யில் அரசு குறுக்கிட்டது கிடையாது. தப்பில்லைன்னா எதுக்கு பயப்படணும்?' என்று சொல்லி, தம்பிதுரை மேலும் பேசுவதை தடுத்துவிட்டார் மோடி.
"சென்னைக்கு நீங்கள் வரும்போது, உங்களை சந்திக்க எடப்பாடி விரும்புகிறார். மரியாதை நிமித்தமாக சந்திக்கவாவது நீங்கள் நேரம் ஒதுக்கினால் அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சியடை வார்கள்' என தம்பிதுரை சொல்ல, "நேரம் ஒத்துழைத்தால் பார்க்கலாம்' என்று மட்டும் சொல்லி அவரை அனுப்பி வைத்துவிட்டார் பிரதமர்''’என்கிறார்கள்.
இப்படிப்பட்ட அரசியல் சூழல்களில், எடப்பாடியின் டெல்லி பயணம் ஏமாற்றத்துடன் முடிந்ததை அறிந்து உற்சாகமாக இருக்கும் ஓ.பி.எஸ்., அ.தி.மு.க.வில் தனது அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கான ஆலோசனையை நடத்தியுள்ளார். அந்த ஆலோசனையின்படி, எடப்பாடி பழனிச்சாமி கூட்டியது போல ஓ.பி.எஸ்.ஸும் அ.தி.மு.க.வின் பொதுக்குழுவைக் கூட்ட முடிவு செய்திருக்கிறார். அதற்கு முதல்கட்டமாகத்தான், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை எல்லாம் மீண்டும் அதே பொறுப்பில் நியமித்ததோடு, புதிதாக மாவட்டச் செயலாளர்களையும் நியமித்துள்ளார். அதற்கேற்ப, எடப்பாடியின் ஆதரவாளர்கள் பலரும் நீக்கப்பட்டு வருகிறார்கள். இந்த பணிகள் இன்னும் கொஞ்சம் இருக்கிறது. அது முடிந்ததும் போட்டி பொதுக்குழுவைக் கூட்டி, தனது பலத்தை நிரூபிக்கும் முயற்சியில் வேகம்காட்டி வருகிறார் ஓ.பி.எஸ்.
பிரதமர் மோடி தங்களுக்கு உதவவில்லை யெனில், பா.ஜ.க.வுடன் மோதிப் பார்த்துவிடுவது என்கிற ரகசிய திட்டத்துடன் எடப்பாடி இயங்கி வருவதால், மூன்றாவது முறையாக உடையும் அபாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது அ.தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி அ.தி.மு.க., பன்னீர்செல்வம் அ.தி.மு.க. என்று உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.