டந்த வருடம் வரை தை 01—ஆம் தேதி தனது ஒவ்வொரு பிறந்த நாளன்றும் சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் இருப்பார் இப்போது துணைமுதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம். இரவு பெரியகுளம் திரும்பும் ஓ.பி.எஸ்., தனக்கு வாழ்த்துச் சொல்ல வருபவர்களுக்கு ஐயப்பன் கோவில் பிரசாதமான அப்பமும் அரவன பாயாசமும் வழங்குவார். கட்சிப் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி மகிழ்வார்கள்.

ops

இந்த ஆண்டு நிலவரம் வேறு.…முதல்வர் கெத்தில் விவசாயி கெட்டப் போட்டு விளம்பரப் படத்தில் நடித்தார் எடப்பாடி பழனிசாமி. பதிலுக்கு வயல்வெளிகளில் கும்பிடு போட்டு விளம்பரப் படத்தை ரிலீஸ் பண்ணினார் பன்னீர். இதெல்லாம் போதாது இன்னும் அதிகமா இருக்கணும், இ.பி.எஸ்.சை தெறிக்கவிடணும் என்ற முடிவுடன் தனது பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடித் தீர்த்துவிட்டார் ஓ.பி.எஸ்.

அதிலும் ஜன.16-ஆம் தேதி உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இ.பி.எஸ். வருகிறார், கூடவே துள்ளிக்கிட்டு சில அமைச்சர் களும் வருவார்கள் எனத் தெரிந்ததும் 14-ஆம் தேதி பெரியகுளம் நகரத்தையே திக்குமுக்காட வைத்தார்கள் ஓ.பி.எஸ்.ஆதரவாளர்கள்.

Advertisment

ஓ.பி.எஸ். வீடிருக்கும் அக்ரகாரம் தெருவே, அ.தி.மு.க. தொண்டர்களாலும் நிர்வாகிகளாலும் அல்லோலகல்லோலப்பட்டது. மாலைகள், சால்வைகள், நினைவுப் பரிசுகளுடன் அதிகாலையிலேயே குவிந்துவிட்டனர். காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு, தனது தாயாரிடம் ஆசி வாங்கி விட்டு, குடும்பத்தாருடன் பொங்கலையும் வைத்து இறக்கிவிட்டு, காலை 9 மணிக்கு வெளியே வந்தார் ஓ.பி.எஸ்.

கூடியிருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள், ""ஐயா ஓ.பி.எஸ். வாழ்க, வருங்கால முதல்வர் வாழ்க, மக்களின் முதல்வர் வாழ்க'' என கோஷத்தை எழுப்பி துணை முதல்வரை உற்சாகப்படுத்தினார்கள்.

முதல்வர் எடப்பாடி வாழ்த்துவதற்கு முன் பாகவே பிரதமர் மோடியின் வாழ்த்துக் கடிதமும் அதன்பின் போனிலும் வாழ்த்து வந்தது. பிஜேபி பெருந்தலைகளான அமித்ஷா, ஜேபி.நட்டா போன்றோரும் வாழ்த்தியதில் நெகிழ்ந்து போனார் பன்னீர். தமிழக அமைச்சர்கள் சைடிலிருந்து உதயகுமாரும் செல்லூர் ராஜுவும் மட்டுமே நேரில் வாழ்த்தினார்கள். மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் பெரியகுளத்தில் ஆஜராகியிருந்தார்.

Advertisment

தேனி மாவட்டத்தின் நான்கு தொகுதி பொறுப்பாளர்கள் தாங்களாகவே வந்தார்கள் என்றால், சென்னை மற்றும் பிறமாவட்ட நிர்வாகிகளை ஓபிஎஸ்.சை நேரடியாக அழைத்திருந்தார். மறுநாள், ஜன.15-ஆம் தேதி, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, பாலார்பட்டி பொங்கல் விழாவில் மாட்டு வண்டி ஓட்டி, அதையும் பப்ளிசிட்டி செய்தார் பன்னீர்.

அத்தனை கொண்டாட்டங்களும் அமர்க் களங்களும் யாரையோ அதிர வைத்தது.

-சக்தி