ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் அ.தி.மு.க.-தி.மு.க. இரண்டையும் அலறவிட்டது டிடிவி.தினகரனின் அ.ம.மு.க. சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகும் சூழலில், அ.ம.மு.க.வின் ரோல் எப்படி இருக்கும் என அரசியல் களத்தில் எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், அதன் இன்றைய நிலை?
தினகரனுக்கு சகல வழிகளிலும் சப்போர்ட்டாக இருந்தவர்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், மேலூர் சாமி, செந்தில் பாலாஜி ஆகியோர். சென்னையில் தினகரனுக்கு எல்லாமுமாக இருந்தவர் வெற்றிவேல். சினிமா பிரபலங்களான தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், நடிகர் செந்தில் போன்ற அ.தி.மு.க. விசுவாசிகளும் தினகரன் பின்னால்தான் இருந்தார்கள்.
இவர்களைப் போலவே விசுவாசம் காட்டிய மாஜி மந்திரியும் வெயிட்டான கரன்சி பார்ட்டியுமான இசக்கிசுப்பையா, ஒருகட்டத்துக்கு மேல் தினகரனின் அன்புத் தொல்லையைத் தாக்குப்பிடிக்க முடியாமல், எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க.வுக்கே ரிட்டர்ன் ஆனார். அடுத்து, மைக்கேல் ராயப்பனும் அ.தி.மு.க.வுக்கு ஜம்ப் ஆனார். 2018-ல் மேலூர் சாமியின் மரணம் ரொம்பவே அப்செட்டாக்கியது. பின்னர் செந்தில்பாலாஜியும் 2019-ல் தங்க தமிழ்ச்செல்வனும் தி.மு.க.வுக்கு ஜம்ப் ஆனார்கள்.
இப்படி கட்சியின் நம்பிக்கை வி.ஐ.பி.கள் விலகியபின், தாம்பரம் நகராட்சியின் மாஜி சேர்மன் கரிகாலனின் கை ஓங்க ஆரம்பித்தது. இராமநாதபுரம் மாவட்டம் அபி ராமத்தைச் சேர்ந்த கரிகாலனின் முழுநேர தொழிலே கந்துவட்டியும் சினிமாவுக்கு ஃபைனான்ஸ் பண்ணுவதும்தான். கரன்சி ரீதியாகவும் சாதி ரீதியாகவும் தினகரனை கரிகாலனால் ஈஸியாக நெருங்க முடிந்தது. தினகரனின் பி.ஏ.வான ஜனாவும் இவரும் கூட்டணி அமைத்தனர்..
சமீபத்தில் கொரோனாவுக்கு வெற்றிவேலும் பலியானார். இதன் பின், அ.ம.மு.க.வில் கரிகாலனின் ராஜ்ஜியமே கொடிகட்டிப் பறக்க ஆரம் பித்தது. கட்சியின் எந்த ஒரு பொறுப்புக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது, பழைய ஆட்களிடம் கட்சி வளர்ச்சி நிதி கேட்டு நச்சரிப்பு ஆரம்பமானது. முக்குலத்துப் பாசம் -சசிகலா விசுவாசம் இவற்றால், ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க.விலிருந்து அ.ம.மு.க.வில் ஐக்கியமானார் நடிகர் செந்தில். 18 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்குக் கூட தனது சொந்தப் பணத்தில் சென்று வந்தவர் செந்தில். அப்படிப்பட்ட செந்திலிடம் கட்சி வளர்ச்சி நிதி கேட்டு சில மாதங்களாக நச்சரித்துள்ளாராம் கரிகாலன். கேட்டது கிடைக்காத கடுப்பில், கட்சிப் பணிகளை சரிவர செய்யவில்லை என தினகரனிடம் போட்டுக் கொடுத்து, அ.ம.மு.க.வின் அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து நடிகர் செந்திலுக்கு கடந்த வாரம் கல்தா கொடுத்துவிட்டனர்.
சசிகலா விடுதலை ஆகும்போது அ.தி.மு.க.வில் பூகம்பம் வெடிக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் சசிகலா பக்கம் தாவுவார்கள் என அ.ம.மு.க.வினருக்கு நம்பிக்கையும் அ.தி.மு.க. விஐபி.க்களுக்கு பதட்டமும் இருந்தது. ஆனால் கட்சியினரின் நம்பிக்கைக்கு வேட்டு வைக்கும் விதமாகவே, நிர்வாகச் செயல்பாடுகள் உள்ளன.
அ.ம.மு.க.வின் திருவள்ளுர் தெற்கு மா.செ. ஜீவானந்தம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது நீண்டகால விசுவாசிகளை அதிரவைத்துள்ளது. எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க. விசுவாசியான ஜீவானந்தம், கட்சியில் படிப்படியாக வளர்ந்து 2001 உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு, மதுரவாயல் நகராட்சி சேர்மனானார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் -சசிகலா விசுவாசியாகவும் இருந்தார். அ.ம.மு.க.வை தினகரன் தொடங்கியதும் அவர்பக்கம் சென்ற ஜீவானந்தம், மாவட்ட அமைச்சர்களான மாஃபா பாண்டியராஜனையும் பெஞ்சமினையும் எதிர்த்து தீவிர அரசியல் நடத்திவந்தார். மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் பெஞ்சமினுக்கு சகல வழிகளிலும் டஃப் கொடுத்து வந்த ஜீவானந்தம், மேலே வரமுடியாதபடி லக்கி முருகன் டீம் கட்டைகளைப் போட்டு வந்தது. அதையெல்லாம் மீறி, தினகரனின் பார்வையால், 2020 பிப்ரவரியில் அ.ம.மு.க.வின் மா.செ.வாக நியமிக்கப்பட்டார் ஜீவனாந்தம்.
அவர் நியமிக்கப்பட்ட சமயத்தில்தான் கொரோனா பரவி ஊரடங்கு வந்தது. அந்த நேரத்தில் நலிவுற்ற ஏழை, எளியோருக்கு தனது சொந்தப்பணம் பல லட்சத்தை செல வழித்தார். தேர்தல் ஆணையம் அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னத்தை உறுதிப்படுத்திய நிலையில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் பெஞ்சமினை தோற்கடித்து, மதுரவாயல் தொகுதியில் குக்கர் சத்தத்தை கேட்க வைக்க வேண்டும் என தீவிரமாக இருந்த ஜீவானந்தத்தை மா.செ. பதவியிலிருந்து தூக்கிட்டாங்க. கரிகாலன் மூலம் இப்ப லக்கி முருகனுக்கு லக்கி பிரைஸ். தினகரன் தன்னை காப்பாற்றிவிட்டதாக நிம்மதியாக இருக்கிறார் அமைச்சர் பெஞ்சமின்.
"கட்சியில் நடப்ப தெல்லாம் தினகரனுக்குத் தெரியுமா? தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக் கிறாரா?' என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் அ.ம.மு.க. நிர்வாகிகள்.
-கீரன், பரமேஷ்