வருடந்தோறும் சென்னையில் பொங்கலை யொட்டி நடக்கும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்- பதிப் பாளர் சங்கம் சார்பில் நடக்கும் (பபாசி) புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சி, கொரோனா தொற்று அச்சம் காரணமாக இவ்வருடம் சற்றே தாமதமாக பிப்ரவரி 24 தொடங்கி மார்ச் 9 வரை நடைபெற உள்ளது.
படிப்பு, அதற்குப் பின் வேலையென ஒருகட்டத்தில் கற்பதை நிறுத்திவிடுபவர்களே நம்மில் பலர். மாறாக, வாசிப்பவர்களோ, தம் வாழ்க்கை முழுமைக்கும் கற்றலைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். வாசிப்பு என்பது ஆயிரம் சாளரங்களைத் திறந்துவைத்து, அதில் தெரியும் காட்சிகளின்வழி கற்றுக்கொள்வதாகும். வாசிப்பதை நிறுத்துவதென்பதும் வாழ்க்கையில் தோல்வியை ஒப்புக்கொள்வதென்பதும் ஒன்றுதான்.
ஆசிரியர் கற்றுத் தருவதை நிறுத்திய இடத்திலிருந்து நமக்கு கற்றுத்தர முன்வருபவை தான் புத்தகங்கள். ஆனால் இந்தியச் சூழலில் வாசிப்புப் பழக்கம் மிகக்குறைவாக இருக்கிற தென்பதே உண்மை. இந்த யதார்த்தத்தை மாற்ற கிட்டத்தட்ட அரைநூற்றாண்டாகப் போராடிக் கொண்டிருக்கிறது பபாசி.
தேர்தல் நெருங்கிவரும் சூழலில் எழும் அரசியல் சலசலப்புகளிலிருந்து மக்களை ஈர்க்கவும், புத்தகக் கண்காட்சியை நோக்கி கவனம் திருப்பவும் சென்னை வாசி (ரன் டூ ரீட்) என்ற தலைப்பில், சென்னை பெசண்ட் நகர் கடற் கரையில் பிப்ரவரி 21-ஆம் தேதி மினி மராத்தான் நடைபெற்றது. இந் நிகழ்வை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் ஐ.ஜி. திருநாவுக்கரசு, பபாசி தலைவர் ஆர்.எஸ். சண்முகம், செயலாளர் முருகன், பொருளாளர் அ.கோமதி நாயகம், பபாசியின் ஊடகத் தொடர்பாளர் குழுவைச் சேர்ந்த எஸ்.சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 வரை 14 தினங்கள் நடைபெறவுள்ள 44-வது புத்தகக் கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தால் தொடங்கிவைக்கப்பட்டது. 700 அரங்குகள், ஆறு லட்சம் தலைப்பிலான புத்தகங்கள் என அசத்தலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகளும் பார்த்துப் பார்த்து செய்யப்பட்டுள்ளன. பேச்சுப் போட்டி, விநாடி வினா, பிரபல எழுத்தாளர்கள், ஆளுமைகளின் உரை போன்ற வழக்கமான நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிறிய பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய ரேக் என்ற புதிய வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நக்கீரன் பதிப்பகம் புதிய நூல்களுடன், புத்தகக் கண்காட்சிக்கு ஆயத்தமாக உள்ளது. எ 37, 54, 55, 249, 319, 320 ஸ்டால்களில் வாசகர்கள் நக்கீரன் பதிப்பக நூல்களை வாங்கிப் பயன் பெறலாம்.