kk

திங்குற சோத்துல மண்ணைப் போட்ட ஜெ!

துக்கிடைல அலுவலகத்தில இருந்த நம்ம தம்பிகள் நிலை என்னன்னா... வழக்கமா கொஞ்சம்பேரு மட்டும் சோறு எடுத்துட்டு வருவாங்க, மத்தவங்க யாரும் கொண்டுவரலை. அவங்களுக்கெல்லாம் வெளில போயும் வாங்கிட்டு வரமுடியாது. அதான் வாசல்ல எடுவட்ட பயலுகளும், விளங்காத மூதேவிகளும் வரிஞ்சுகட்டி நிக்கிறாங்களே... யாராவது வெளிய சோத்துக்குன்னு போனா கொண்டேபுடுவாய்ங்க...

அப்படித்தான் நம்ம பிரஸ்ல இருக்கிற தம்பி ஒருத்தரு சோறு வாங்க வெளிய போனத எப்படியோ ஒருத்தன், அவன் யாருன்னா... நம்ம பைண்டிங்கல முன்னாடி வேல பார்த்த ஒரு நாயி. அது நம்ம தெருவுல தான் இருக்குது. நம்ம பயல அந்த கபோதி பார்த்துட்டு பேசியிருக்கான். இவனும் வெள்ளந்தியா எல்லாருக்கும் சோறு வாங்கப் போறேன்னு சொல்லியிருக்கான். அந்த நாயி சத்தத்த போட்டு ஊர கூட்டிட்டான். உள்ள இருக்கறவங்களுக்கு சோறு வாங்க போறான்டோய்னு அந்த நாய் கத்த... அந்த தம்பிய நையப் புடைச்சுட்டாய்ங்க. வெளிய நிக்குற நம்ம தம்பிகள்ட்ட சொல்லி வாங்கிட்டு வரச்சொல்லலாம்னா... வாங்குன சோத்த உள்ள கொண்டு வரமுடியாது. பரதேசிங்க, அவிய்ங்க புடுங்கி தின்னுட் டாய்ங்கன்னா? இதென்னடா எழவாப் போச்சுன்னு அப்படியே குத்தவச்சுட்டேன். நம்ம தம்பிகளப் பொறுத்தவரை சோத்துக்கு அலையுறவங்க கிடையாது. ஆனா வாசல்ல அந்த மொரட்டுக் கதவ வெளிய இருக்குற பக்கிக தொறந்துட்டு வந்துறாம இருக்க தம்கட்டி கதவ தாங்கிப் பிடிக்கிறாங்க. அதுலயும் ஷிப்ட் போட்டு முழு பலத்தோட நின்னு நமக்கு அரணா இருக்குறவங்கள நாம பாதுகாக்குறது நம்ம கடமை.

Advertisment

முதல்ல, என் வீட்டுக்காரம்மாகிட்ட, "எங்களுக் கெல்லாம் டீ போட்டுக் கொடுங்க தாயி''ன்னு கேட்டேன். அவங்க, இருந்த பால்ல தண்ணியக் கிண்ணிய ஊத்தி, ஒரு மாதிரியா போட்டுக் கொடுத்தாங்க. அது அந்த நேரத்துக்கு உடம்புக்கு கொஞ்சம் தெம்பக் கொடுத்துச்சு. "சாப்பாட்டுக்கும் முடிஞ்சத செய்ங்கன்னு படக்குன்னு சொல்லிட்டு போனை வச்சுட்டேன்.

அந்த விசயத்துல வீட்டம்மா, வீட்டுக்கு வந்த விருந்தாளிகள கவனிக்குறதுல கில்லி. மெரட்டிருவாங்க. எடுக்க எடுக்க அன்னம் வர்ற மாதிரி, புளியோதரையோ, லெமன் ரைசோ 50, 60 பேருக்கு சமையல் செஞ்சாங்க. என்னோட பெரிய மக பிரபாவதியும் துணைக்கு இருந்தாங்க. அத்தன பேருக்கும் சாப்பிட, தட்டோ தொன்னயோ கூட வெளில போய் வாங்கமுடியல. பானை பானையா ஆக்கி அப்படியே அனுப்பினாங்க. எல்லாரும் கையக் கழுவிட்டு, அப்படியே கையாலயே எடுத்துச் சாப்பிட்டோம். அந்த அட்டாக் நேரத்துல வீடு எப்படி இருந்துச்சு? எவ்வளவு பாதிப்பு? அது எப்படி எங்களுக்கு அனுசரணயா இருந்துச்சு?ன்னு எல்லாரும் தெரிஞ்சிக் கணும். அதுக்காகத்தான் இதை எல்லாம் சொல்றேன்.

அ.தி.மு.க. தலைமைக் கழகத்திலிருந்து சுடச்சுட ஒரு அறிக்கை எல்லா மா.செ.க்களுக்கும், மந்திரிகளுக்கும் பரபரப்பா பறந்துச்சு. அதுல என்ன எழவு இருந் துச்சுன்னா...

pp

"மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்".... நக்கீரன் இதழில் மேற்படி தலைப்பில் வெளிவந்த செய்தியின் தாக்கம் காரணமாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், அமைச்சர் கள், ஒன்றிய செயலாளர்கள், கட்சி முன்னோடிகள் அனைவரும் அவரவர் லிமிட் காவல் நிலையங்களில் நக்கீரன் ஆசிரியர் மற்றும் பொறுப்பில் இருப்பவர்கள் மீது புகார் ஒன்றை உடனடியாக கொடுத்து எப்.ஐ.ஆர். பதிவு செய்து தலைமைக்கு அனுப்பவும்.''

Advertisment

இதுதான் நம்ம மேல விழுந்த அடுத்த இடி. இந்தச் செய்தி முதல்ல நம்ம காதுக்கு வந்ததும் காதுல ஈயத்த காய்ச்சி ஊத்துன மாதிரி இருந்துச்சு. ஆத்தாடி... இது என்னடா கொடுமை. இந்த சனியன் புடுச்ச பொம்பள இத்தன ஆங்காரமாவா இருக்கும்... ஆடியேபோயிட்டேன்.

அடுத்து என்ன எழவ கூட்டப்போவுதோ அந்த பொம்பளன்னு பயந்துக்கிட்டேதான் இருந்தேன். நினைச்ச மாதிரி ஓங்கி தலையில கடப்பாரைய எறக்கிடுச்சு. யோசிச்சுப் பாருங்க... அவிய்ங்க கட்சியில பேர் எடுக்கணும்னா எதிரிய கொன்னுறணும்னு நினைக்கிற கும்பல். இதுல வேற தலைமையில இருந்து அறிக்கையும், போனுல தகவலும் பறந்து தமிழ்நாடு பூரா போயிருக்கு. எத்தனை புகாரு! எத்தன எப்.ஐ.ஆரு! நீங்களே யோசிச்சுப் பாருங்க மக்களே... எப்படி இத தாங்கப்போறோம்?

தலையில கைய வச்சு அப்படியே தெகச்சுப்போயி குத்தவச்சேன். நான் உடைஞ்சு போய் உக்காந்தத பார்த்துட்டு நம்மட்ட அப்ப துணையாசிரியரா இருந்த ஐயா பெரியய்யா, "ஏண்ணே... இப்படி இடிஞ்சு போய் உக்காந்துட்டீக''ன்னார். விவரத்த சொன்னேன்.

"தைரியமா இருங்கண்ணே... பாத்துரு வோம் அவுகளா, நம்மளான்னு'' சொல்லிக் கிட்டே வடிவேலு சொன்னதை ஐயாவும் சொன்னார்.

அதான் "ஒரு புறாவுக்கு இவ்வளவு அக்கப் போரா?''ன்னுட்டு புலம்பிக்கிட்டே போனார். இதையெல்லாம் எதிர்கொண்டுதானே ஆகணும்... வேற வழி? அப்படியே படக்குன்னு ஆபீஸ பூட்டிட்டெல்லாம் ஓடிற முடியாது. அது இன்னும் வேற தீராத களங்கமாயிடும். இவங்க செய்ற இந்த மாதிரி அடாவடிக்கு பயந்து பத்திரிகைய பூட்டிட்டு ஓடுனவங்க ரொம்ப பேரு. மறுபடி யும் அவிய்ங்க தலைமைக் கழகத்திலிருந்து இன்னொரு ஃபேக்ஸ் செய்தி. அவசரம்...ங்கிற தலைப்பில போயிருக்கு.

2012, ஜன.07-10 தேதியில் வெளிவந்த நக்கீரன் இதழில், எங்கள் தலைவி ஆருயிர் அம்மாவின் நற்பெயரையும் புகழையும் கெடுக்கும்படியும், சமூகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் செய்தி வெளியிட்ட மேற்படி பத்திரிகை மீதும் அதன் ஆசிரியர் மற்றும் நிருபர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டி வலியுறுத்தி அவசர புகார் அளிக்கவும்... மிக மிக அவசரம்.

இந்தத் தகவலையும் வெளியூரிலிருந்து நம்ம அண்ணன்கன் சங்கரன்கோவில் நிருபர் பரமசிவமும், விழுப்புரம் நிருபர் எஸ்.பி.சேகரும், எங்க இணை ஆசிரியர் மற்றும் தம்பி லெனின் பார்வைக்கு கொண்டு வந்தாங்க. இது என் காதுக்கு வந்துச்சு.

நான் உடனே தம்பி சிவகுமார்ட்ட, "தம்பி, சீனியர் அட்வகேட் பெருமாள் சார், அட்வகேட் எட்விக், அட்வகேட் வர்கீஸ் எல்லாரையும் உடனே வரச்சொல்லுங்க''ன்னு படபடத்தேன்.

ff

"அவுங்க நம்ம தெருவுக்கு வந்துட்டாங்களாம்... தெருமுனையில பேரிகாட் போட்டு தெருக்குள்ள யாரும் வராம இருக்க (அ.தி.மு.க.காரங்க தாராளமா உள்ள வரலாம்) தடுப்பு வச்சிருக்காம் போலீஸ். போலீஸ்ட்ட வாதாடிட்டு இருக்காராம் பெருமாள் சார்''ன்னு சொன்னார்.

அப்பதான் இன்னொரு விஷயமும் காதுக்கு வந்துச்சு. நாம இருக்குற ஜானி ஜான்கான் தெருவ அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பேரிகாட் போட்டு போலீஸ் அடைச்சுருச்சு. நீங்க நெனைக்கலாம், நமக்கு பாதுகாப்புன்னு. அதான் இல்ல... நம்மள அடிக்க அ.தி.மு.க.காரனுங்க வந்தாமட்டும் பேரிகாட திறந்துவிடுவாங்க. மத்த யாரும் நம்மள காப்பாத்த வந்துடாம பாத்துக்கிட்டாங்களாம். தெரு புல்லா அ.தி.மு.க. கரை வேட்டிக. அவ்வளவு பேர், சாரை சாரையா வந்துகிட்டே இருக்கானுகன்னு இங்க வந்த அட்வகேட் பெருமாள் சாரும் சொன்னார். நடந்தத அவர் வாயாலேயே கேளுங்க... அவரே சொல்லுவாரு...

"அது ஒரு விடுமுறை நாள்னு மட்டும் எனக்கு நினைவிருக்கிறது. காலையில் எனக்கு தகவல் வந்தது... நக்கீரன் அலுவலகத்தை தாக்கிக்கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க.காரர்களும், அந்தக் கட்சியில் உயர்ந்த பதவியில் இருப்பவர்களும் என்று. உடனே எங்களது ஜூனியர் அட்வகேட்ஸ் எட்வின், வர்கீஸ் அமல்ராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து ஜூனியர் அட்வகேட்ஸ் களுக்கும் நான் கைப்பேசியில் தகவல் கொடுத்து, உடனே கிளம்பி ஒரு ஆட்டோவில் எல்லோரையும் அங்கே வரச்சொன்னேன். நானும் ஆட்டோவில் கிளம்பி ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷன் முன்பு இறங்கி நடந்துசென்றேன். போலீஸ் முதலில் விட மறுத்தது. வாக்குவாதம் செய்து வரவேண்டியதாயிற்று. அந்த தெரு முழுக்க ஒரே அ.தி.மு.க.காரங்க கூட்டம்... களேபரமாக இருந்துச்சு. ஒரு பெரிய அயோக்கியத்தனமும் நடந்துக்கிட்டிருந்ததையும் பார்த்தேன். கோபால் அண்ணனோட கொடும்பாவிய சுத்தி நின்னு கோஷம் போட்டு எரிக்கிறாங்க. எதை, எதையோ வச்சு அடிக்கிறாங்க. அவங்களுக்கு பாதுகாப்பா போலீஸ் சும்மா நின்னு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித் தேன். சட்டப்படி இது பெரிய தவறு. நிலவரத்தின் சீரியஸ் தன்மையை புரிந்து கொண்டேன். எப்படியோ உள்ளே புகுந்து நக்கீரன் அலுவலகத்தின் இடது பக்கம் இருக்கும் ஒரு சிறிய சந்து வழியாக உள்ளே கூட்டிச் சென்றார்கள். உள்ளே சென்றபோது கீழ் தளத்தில் உள்ள ஒரு திண்டுல நக்கீரன் கோபால் அண்ணன் அமர்ந்திருந்தார். ஒரே குழப்பமும், துணிச்சலும், என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு நிலையான முடிவு எடுக்க முடியாமல், அங்குவரும் கல்லையும் பாட்டில்களையும் மற்ற களேபரங்களையும் பார்த்துக்கொண்டு.... அவருடைய அலுவலக ஊழியர்களுக்கு அவ்வப்போது அவர்களுடைய அந்த மெயின் கேட்டை திறக்கவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

அவர் பக்கத்தில் சென்று என்ன செய்வதண்ணே பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று கேட்டேன். குழப்பத்தில் அவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார். அங்கிருந்து போவது உசிதமாகாது. அலுவலகத்தை காப்பாற்ற வேண்டும், ஊழியர்களை காப்பாற்ற வேண்டும், யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடாமல் தடுக்கவேண்டும் என்ற பொறுப்போடு அங்கு நின்றுகொண்டிருந்தார். அதே நேரத்தில் ஜூனியர் அட்வகேட்ஸ் எட்விக், வர்கீஸ் ஆகியோரும் வந்து சேர்ந்தனர். நான் குழம்பிப் போயிருந்தேன். இதற்கு என்ன தீர்வு. சட்டப்பூர்வமாக தீர்வு காண வேண்டும் என்று மனதுக்குள் ஓடியது. அந்தக் காலகட்டத்தில் காலஞ்சென்ற எம்.ரங்கா என்ற மூத்த வழக்கறிஞர் என் நினைவுக்கு வந்தார். அவர்தான் நக்கீரன் வழக்குகளில் மிக திறமையாக போராடி, ஆரம்ப காலகட்டங்களில் பல உத்தரவுகளை பெற்று நக்கீரனுடைய உரிமைகளை நிலைநாட்டியவர்.

அவர் ஒருமுறை 1993 டிசம்பர் இறுதியில், சனிக்கிழமை அன்று வெளிவந்த நக்கீரன் செய்திக்காக நூற்றுக்கும் மேற்பட்ட எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டபோது சனிக்கிழமை, அன்றைய தலைமை நீதிபதியை சந்தித்து ஒரு ஸ்பெஷல் ஹியரிங்கிற்கு ஏற்பாடு செய்தார். அது என் நினைவுக்கு வந்தது...

(புழுதி பறக்கும்)