(74) சாவின் முதுகில் சவாரி!
தமிழன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சுதாங்கன் விஷயத்துக்கு முன்னாடி, வீரப்பனைப் பத்துன ஒரு விஷயத்த பதிவு பண்ணணும்.
வீரப்பன் காட்டுல ரெண்டு மாநில எஸ்.டி.எஃப்.காரங்களும் வெறியா திரிஞ்சாய்ங்க. கண்ணுல பட்டவனயெல்லாம் வீரப்பன் ஆளுன்னு புடிப்பாய்ங்க. முரண்டு புடிச்சா சுட்டுப்போடுவாய்ங்க. பெண்டு புள்ளைங்கன்னா தூக்கிட்டுப்போய் நாறடிச்சுருவாய்ங்க. பாவம்... பொம்பளப்புள்ளைங்க பாடாதபாடு பட்டுக்கிட்டிருந்த நேரம்...
வீரப்பன் வாயாலயே சொன்னத கேளுங்க....
"அப்ப எங்கிட்ட இருந்த பணம் காலியாப் போச்சு. பணம் எடுக்கணும்னா ஒரு நூறு மைல் போகணும். சரி... நான் போயி எடுத்துக்கிட்டு வர்றேன்னுட்டு என் சம்சாரம் முத்துலட்சுமி எல்லாரையும் விட்டுட்டு நான் புறப்புட்டேன். என் மனைவி முத்துலட்சுமிகூட அழுதாள் "நானும் வர்றேன்'னு. "நீ வேண்டாம் இங்கே இரு'ன்னு நான் புறப்புட்டேன். ஏன் என் மனைவிய விட்டுட்டுப் போனேன்னா, அவகிட்டவே சொன்னேன்... "என் பொண்டாட்டின்னு உன்ன மட்டும் கூட்டிப் போனா இங்க இருக்குற மத்த பொண்ணுங்களுக் கெல்லாம் பாதுகாப்பு யாரு... பாவமில்லியா? "அவுங்க நல்லா இருந்தா நீயும் நல்லாயிரு... அவுங்க செத்தா... நீயும் சாவு' அப்படீன்னு சொல்லி சண்ட போட்டுட்டு நான் போயிட்டேன்.''
ஒரு படைத்தலைவனுக்கு இருக்குற பண்புதான இது. வீரப்பன் நெனைச்சிருந்தா தன் பொண்டாட்டிய மட்டும் கூட்டிட்டுப் போயிருந்தா... முத்துலட்சுமி இந்த பிசாசுங்க, அரக்கங்க, ஆள்காட்டிங்க கையில மாட்டாம மானத்தோட இருந்திருப்பாங்க. வீரப்பன் எப்படி அந்தக் காட்டுல மக்கள் தலைவனா இருந்தாருங்கிறதுக்கு இது ஒரு சாம்பிள்... இருக்கட்டும்!
இப்ப மறுபடியும் சுதாங்கன்கிட்ட வருவோம்...
"நான் உங்க நண்பன்னு நினைச்சீங்கன்னா, நான் சொல்றதைக் கேளுங்க'' -சுதாங்கன் படபடப்போட பேசுனாரு.
"என்ன விஷயம்ணே?''
"என்னோட போலீஸ் சோர்ஸெல்லாம் ஒரு பெரிய பயங்கர திட்டத்தைச் சொல்றாங்க. இந்தத் தடவ நீங்க காட்டுக்குப் போனா, திரும்பி வர முடியாதபடி எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிட்டாங்களாம்... அதனால காட்டுக்குப் போறத தவிர்த்திடுங்க''ன்னாரு.
-அக்கறை கலந்த எச்சரிக்கையா இருந்தது சுதாங்கனின் குரல். அவரு சொன்னத அலட்சியப்படுத்தாம நான் கேட்டுக்கிட்டேன்.
கொஞ்ச நேரத்துல, வேல்பாண்டியன் என் லைனுக்கு வந்தாரு. தமிழன் எக்ஸ்பிரஸ்ல ஆக்ட்டிவ்வான ரிப்போர்ட்டரா செயல்பட்ட நல்ல தம்பி. இப்போ அவரு இல்ல. எதிர்பாராதவிதமா ஒரு விபத்துல அவர் மரணமடைஞ்சிட்டாரு.
"அண்ணே... எங்க எடிட்டர் சுதாங்கன் உங்ககிட்டே பேசினாரா? எங்கிட்டயும் ஆபீசுல அது பற்றித்தான் சொல்லிக்கிட்டிருந்தாருண்ணே. "கோபால்கிட்டே பேசிட்டேன்... நீங்களும் இந்த விஷயத்தை சொல்லிடுங்க'ன்னு சொன்னாருண்ணே. அண்ணே.. ரொம்ப கவனம்''ணேன்னு சொன்னாரு வேல்பாண்டியன். அடுத்து தம்பி திருவாரூர் பாபு லைன்ல..., "அண்ணே... சுதாங்கன் பேசினாரா? கொஞ்சம் கவனிச்சு போங்க... பயமா இருக்கு''ன்னார்.
"ஆமா, சுதாங்கன் பேசுனாரு தம்பி... நான் கவனத்துலே எடுத்துக்குறேன்''னு அவர்கிட்ட சொன்னேன்.
காட்டுக்குள்ள நமக்கு ஆபத்து வரப்போகுதுங்கிறத செய்தி தெரிஞ்சவுடனே... கலைஞரின் மனசு சரியில்லங்கிறத அவரோட பேச்சுல இருந்தே என்னால உணர முடிஞ்சது.
அந்த நேரத்துல... ஆசனூர் (வீரப்பன் காடு இருக்குற ஏரியா) மலையில இருந்தது ஒரே ஒரு டெலிபோன் பூத் மட்டும்தான். அதுவும் அரசு பப்ளிக் பூத். அந்த பூத்ல இருந்துதான் வீரப்பன் காட்டு நிலவரங்கள எங்கிட்டப் பேசுவாரு தம்பி ஜீவா.
அந்த டெலிபோன் ஆபீஸ்ல ஒரே ஒரு வேலையாளுதான் இருந்தாரு. பழங்குடி இனத்த சேர்ந்த அந்த நண்பரோட பேரு நஞ்சன். என்கிட்ட பேச தம்பி ஜீவாவுக்கு இவரு போன் குடுத்தாருன்னு தெரிஞ்சு... மோகன் நிவாசும் அவரோட ரெண்டு அல்லக்கைங்களும் சேர்ந்து, ஆசனூர் மேல்காட்டுல வச்சு நஞ்சன விடிய விடிய அடிச்சி நொறுக்கி.... செத்துப் போயிட்டார்னு நெனச்சி தூக்கி வீசி எறிஞ்சிட்டுப் போயிட்டாங்க.
அடுத்த நாளு அங்க போன மலைவாசிங்க நஞ்சனுக்கு உயிர் இருக்குறது தெரிஞ்சு சத்தியமங்கலம் ஆஸ்பத்திரிக்கும், பிறகு கோவையில உள்ள மருத்துவமனையிலயும் சேர்த்து நாலு மாச தீவிர சிகிச்சைக்கு அப்புற மாத்தான் நஞ்சன் உயிர் பிழைச்சாரு.
நக்கீரன் மேல மோகன் நிவாஸ் காட்டுன கொல வெறிக்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம். இப்படிப் பட்ட ரத்தவெறி புடிச்ச எஸ்.டி.எஃப். மோகன் நிவாஸ், அதே மாதிரியே இருந்த போலீஸ்காரங்க... இவங்க கண்ணுல மண்ணத் தூவிட்டுத்தான், நானும் தம்பிகளும் காட்டுக்கு நடையா நடந்து படாத கஷ்டத்தயெல்லாம் பட்டு... இன்னிக்கு உங்க முன்னாடி நான் "போர்க்களம்' எழுதிக் கிட்டிருக்கேன்.
பாதுகாப்புக்குத் துப்பாக்கி வேண்டாம்னு அண்ணன் கலைஞர்ட்ட சொல்லிட்டேன். (அதுக்கு காரணம்... எனக்கு துப்பாக்கி சுடத் தெரியாது. அதோட... வீரப்பன் "அந்த துப்பாக்கிய குடு'ன்னு எங்கிட்ட கேட்டு, நான் குடுத்து... அதுக்கு எம்மேல தனியா ஒரு கேஸ போட்டிருப்பாய்ங்க) சொல்லிட்டு, கோபாலபுரம் வீட்டுல இருந்து கௌம்பி என் வீட்டுக்கு வர்றதுக்குள்ள தம்பி ஜீவா, சுதாங்கன், திருவாரூர் பாபு, வேல்பாண்டியன் என வரிசையாக போன். எல்லார்கிட்ட இருந்தும் ஒரே வகையான தகவல். போலீஸ்காரங்க அப்படியொரு வெறியோடு காத்துக்கிட்டிருக்காங்க அப்படிங்கிறதத்தான் அவங்க எல்லாரோட போன்காலும் எச்சரிக்கையா சொல்லுச்சு எனக்கு. இது எப்படி இருக்குன்னா... "சாவே இங்க வா... கொஞ்சம் என் தோள்மேல ஏறுன்னு சொல்லி தோள்ல சுமந்துக்கிட்டு காட்டுக்குள்ள போற மாதிரிதான்.''
கர்நாடகத்துல கொந்தளிப்பு அதிகமாகிக்கிட்டே இருந்துச்சு. உண்மையிலேயே என்ன நடந்ததுங்கிறத தெரிஞ்சுக்கவும், நாகப்பாவுக்கு ஈமக்கிரியை செய்றதுக்கும் அவரோட சொந்தங்கள்லாம் கலங்கிய கண்களோட செங்கடி காட்டுப் பகுதிக்குப் போனாங்க.
அடர்த்தியான மரப்புதர்களுக்கு இடையில ஒத்தையடிப் பாதையில பயணிச்சு, நாகப்பா சுடப்பட்ட இடத்துல விளக்கேத்தி வச்சு, பூவெல்லாம் தூவி, கண்ணீர் அஞ்சலி செலுத்துனாங்க. சுடப்பட்ட ஸ்பாட்டை அவங்க சுத்திப் பாத்தப்ப... நாகப்பா உடல் கிடந்த இடத்திலிருந்து 500 அடி தொலைவுல சில துணி மூட்டைகளோட, ஒரு டைரியும் கிடந்தது. "இது.. தலைவரோட கையெழுத்துதான்'னு கட்சிக்காரர்களும் உறவுக்காரங்களும் அத புரட்டிப் பார்த்தாங்க. சுடப்படுறதுக்கு முதல்நாள் வரைக்கும் அவர் டைரி எழுதியிருந்திருக்காரு.
10, 15 அடி தூரத்துல இருந்துதான் அவர சுட்டிருக்காங்க. அவரோட கை, காலெல்லாம் கட்டப்படல. அவர காப்பாத்தணும்ங்கிற எண்ணமே இல்லாம... சுடணும்ங்கிற எண்ணத்தோடதான் சுட்டிருக்காங்க. ஏ.கே.47 தோட்டாதான் பாய்ஞ்சிருக்குது.
"இந்தப் பக்கத்துல துப்பாக்கி குண்டுகள்லாம் சிதறிக் கிடக்குது பாருங்க... இங்க சண்டை நடந் திருக்கு' என ஒருத்தரு குரல் கொடுக்க... ஆளாளுக்கு புதர்களையும் பாறை இடுக்குகளையும் சோதனை போட்டு நெறைய துப்பாக்கி ரவைகள பொறுக்கிட்டு வந்தாங்க.
மரங்கள்லயும் பக்கத்துல இருந்த பாறைகள்லயும் துப்பாக்கி ஏற்படுத்தியிருந்த தடங்களப் பார்த்து பதட்டமான நாகப்பாவோட உறவுக்காரங்க, "பார்த் தீங்களா... வீரப்பன் கும்பலோட போலீஸ் காரங்க துப்பாக்கி சண்ட நடத்தியிருக்காங்க. இதுலதான் நம்ம தலைவர் அநியாயமா கொல்லப்பட்டிருக்காரு''ன்னு வேதனையோட சொன்னாங்க.
நாகப்பா காட்டுக்குள்ள இருக்கும்போது நெல்லூர் ரோட்டுல உள்ள கவுதலி கிராமத்துல ஒரு ஜீப்ப ஓட்டிக்கிட்டு தமிழ்நாடு எஸ்.டி.எஃப். இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ. இன்ஸ்பெக்டர் ஆயிட்டாரு) மோகன் நிவாஸ் போனதை அங்கேயிருக்கிறவங்க பார்த்திருக்காங்க. அதுக்கு முன்னாடி நொக்கலிங்கிற இடத்தில் முண்டாசு கட்டிக்கிட்டு ஸ்கூட்டரில் போயிருக்காரு.
அதே மாதிரி, நாகப்பா கடத்தப்பட்ட சமயத்துல... அவரோட வீட்டுக்கு பெரிய பெரிய தலைவர்கள்லாம் ஆறுதல் சொல்லப் போயிருக்காங்க. அப்ப வெளில உக்காந்திருந்த மக்கள் கூட்டத்துல மக்களோட மக்களா உக்காந்து மோகன் நிவாஸ் வேவு பாத்துருக் காரு.
ஜெயலலிதா சொன்ன மாதிரி, "நாங்க இதுல தலையிடல. கடத்தல் எங்க பார்டர்ல நடக்கல''ன்னு புருடா விட்டுச்சுல்ல.... அப்படின்னா எதுக்கு இந்த போலீஸ்காரன்... அதுவும் கர்நாடகாவுல இருக்கிற நாகப்பா வீட்டுக்கு போகணும்? ...இப்படி நெறைய சந்தேகம் இருக்கு.
நாகப்பா மருமகன் கிரண் பட்டேல், "அதிரடிப்படைதான் மாமா நாகப்பாவ கொன்னுருக்கும்னு தோணுது. அதுக்கு காரணம்... மாமாவோட உடல் கிடந்த இடத்துல இருந்து 300 அடி தூரத்துல ஏ.கே.47 துப்பாக்கியில பயன்படுத்துற புல்லட்டுகளும், அத வைக்கிறதுக்கான 27, 28 கவர்களும் கிடைச்சிருக்கு. இத எல்லாத் தையும் வச்சிப் பாக்கும்போது தாக்குதல் நடத்துனது தமிழ்நாடு அதிரடிப்படைதான்னு தெளிவா தெரிய வருது... இத நாங்க சும்மா விடப்போறதில்ல...''
(புழுதி பறக்கும்)