fff

(70) தலையில் விழுந்த இடி!

னா... ஒரு விஷயம் மட்டும் ரொம்பவே உதைக்குது. வீரப்பன் -நாகப்பா கடத்தல் சம்பந்தமா யாரு பேசுனாலும், நேர்ல போய் பார்த்தாலும் ஜெயலலிதா சொல்ற மொத வார்த்த நோ தூது. அடுத்து வீரப்பனை விடமாட் டேன்.... சுட்டுப் புடிப்பேன்... இதுதான். தன்னோட எஸ்.டி.எஃப். ஆளுகள வச்சு ஏதாவது கிருத்துருவம் பண்ணி, கிண்ணி ஒரு எண்ட் கார்டு போட்ரும்னு நெனைச்சுக்கிட்டு இருக்கும்போதுதான் இந்த "நாகப்பா ரிலீஸ்' செய்தி.

ஏன்னா வீரப்பன் காடு... கடத்தல்... இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாமே எப்பவும் நக்கீரன சுத்திச் சுத்தியே வரும். வீரப்பன் கடத்தல் சம்பவம் நடந்துச்சுன்னா... "நக்கீரன் என்ன பண்ணப் போறாய்ங்க? நக்கீரன்தான் போகப் போறாய்ங்கன்னு எல்லாரும் பேச ஆரம்பிச்சிரு வாங்க. அப்படியான கருத்து எப்பவுமே நமக்கு ஒரு தெம்ப குடுக்கக்கூடிய கருத்து.

Advertisment

அதாவது, எங்கயாவது ஒரு ஆபத்து நடந்ததுன்னா... காப்பாத்த நக்கீரன் இருக்கான்னு நெனைக்கிறதே பெரிய விஷயம்லியா.

சார்... நாம ஒண்ணும் கோயங்கோ ஃபேமிலியில இருந்தோ... மைசூர் மகாராஜா எங்க தாத்தா வுக்கு கொடுத்த பொற்குவியல் வச்சிருக்கிற குடும் பத்துல இருந்தோ வரல. அன்னாடங்காய்ச்சியா இருக்குற வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழ்ந்த ஒரு கடைநிலை ஊழியர் குடும்பத்துல இருந்து வந்த... சாதாரண ஒரு பத்திரிகைதான் நாம. ஆனா காட்டுல ஒரு பெரிய ஆபத்து நடக்குது அப்படின்னா... "நக்கீரன்காரன் இருக்கான்டா' அப்படின்னு பேச வைக்கிறதே எவ்வளவு பெரிய விஷயம். அதுக்கு நாம குடுத்த வெல ரொம்ப... ரொம்ப ஜாஸ்தி. சரி அத விடுங்க.

Advertisment

ddd

ஓசூர்ல இருந்த தம்பி ஜெயப்பிரகாஷ்ட்ட, "தம்பி நீங்க உடனே கௌம்பி அங்க போயிருங் கன்னேன். ஏன்னா, அவரு மூலமாதான் நாகப்பா வீட்டுல உள்ளவங்க நம்மகிட்ட பேசுனாங்க. எனக்கு கொஞ்சம் லைவ்வா மேட்டர் வேணும்... உடனே நீங்க அங்க போங்கன்னு கேட்டுக்கிட் டேன். எப்பவும் மேட்டருன்னா நம்ம எடிட்டோ ரியல்ல இருக்கிற தம்பி லெனின், ஐயா பெரியய்யா, தமிழ்நாடன் இவங்கதான் நக்கீரன் நிருபர்களத் தொடர்புகொண்டு கேப்பாங்க. இது வீரப்பன் சம்பந்தப்பட்டதுனால நானே மூக்க நுழைச்சேன். ஜெ.பி.யும் உடனே தயக்கமே காட்டாம டூவீலர எடுத் துட்டு கௌம்பிட்டாரு. எவ்வளவு கி.மீ. தூரமா இருந்தாலும் தம்பி ஜெ.பி.க்கு டூவீலர்தான்... மெனக்கெடு வாரு. முன்னாள் அமைச்சர் நாகப்பா விடுதலை பத்தி விரிவான செய்திய குடுக்க ணும்ங்கிற ஆர்வத்துனால தான் நாங்க தொடர்ச்சியா முயற்சி பண்ணிக்கிட்டிருந் தோம். அன்னிக்கு நான் ஆபீஸ்லதான் இருந்தேன். நாமதான் ஆபீஸ முதத் தாரமா கட்டிக்கிட்டோமே... அங்கேயே கிடந்தோம். இரவு 7:00 மணி இருக்கும். எதையோ யோசிச்சிக்கிட்டே நம்ம ராயப்பேட்டை ஆபீஸ் ரிசப்ஷன்ல உக்காந்திருந்தேன். தம்பி ஒருத்தரு வேகமா வந்து "அண்ணே ஈவ்னிங் பேப்பர்ணே...''ன்னு குடுத்துட்டுப் போனாரு.

வாங்கி தலைப்புச் செய்திய பார்த்தா... குபீர்ன்னுச்சு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாம கொஞ்சம் சந்தோஷப்பட் டோம்ல... அந்த சந்தோஷம் ரெண்டு, மூணு மணி நேரம் வரைக்கும் கூட நீடிக்கலண்ணே? அடுத்து விழுந்த அடி இருக்கு பாருங்க... உங்க இடி... எங்க இடி இல்ல. பொக்ரான் குண்டு விழுந்த மாதிரி விழுந்துச்சு பாருங்க.. கர்நாடகத் தமிழர்கள் மேலயும், இங்க நாகப்பாவை எப்படியும் காப்பாத்திறணும்னு நினைக்கிற எங்கள மாதிரி கொஞ்சம்பேர் தலையிலயும் விழுந்துச்சு.

"கெடு முடிந்ததால் ஆத்திரம்! நாகப்பாவை வீரப்பனே சுட்டுக் கொன்றான்! பரபரப்பு தகவல்கள்! -அதே மாலை மலர் பேப்பர் அடுத்த எடிசன்ல.

ஐயய்யோ... இதென்னடா கொடும...!

அந்தப் பேப்பர திருப்பித் திருப்பிப் பாக்குறேன்.... படிக்கிறேன்... மூஞ்செல்லாம் வெளிறிப்போச்சு... குப்புன்னு எனக்கு வேர்த்துருச்சு. இடிஞ்சுபோய் அப்படியே உக்காந்துட் டேன். என்னடா சனியன் இது... எங்கயோ இடிக்குதே... நல்லாயில்லியே... கொஞ்சம்கூட நல்லதாவும் தெரியலியே...!

நாகப்பா விடுதலைன்னு செய்தி வெளிவந்தவுடனே உண்மையிலே நடந்துருக்கும்னுதான் நாமளும் கொண்டாடு னோம். ஆனா இப்ப...?

நாகப்பா கடத்தலுக்குப் பின்னாடி என்னென்னமோ நடந்துச்சு. அங்க போய் வீரப்பன்ட்ட யாரும் பேச முடியல. ஆனா நெறைய பேரு பேசுவானுவோ... இப்பகூட "நான்தான் பெரிய வெண்கலம்... வீரப்பன் விஷயத்துல எல்லாத்தையும் புடுங்குனவன் நான்தான், மார்ச்பாஸ்ட் பண்ணி இந்த மீசைக் காரன நான்தான் கூட்டிட்டுப் போனேன்'னு சொல்றவன்லாம் இருக்கான். ஆனா அப்படிப்பட்டவன யாரும் கேக்கல. கர்நாடகாவுல இருந்து தமிழ்நாட்டுக்கு புறப்பட்டு வந்து நக்கீரன் கோபாலத்தான தூது போக ணும்னு கேட்டாங்க அந்தம்மா. அதான்... நாகப்பா மனைவி பரிமளாம்மா. "எப்படியாவது நக்கீரன் கோபால காட்டுக்கு தூதரா அனுப்புங்க... அனுப்புங்க'ன்னு அந்தம்மாட்ட... ஜெயலலிதாங்கிற நொம்மாட்ட பிச்சை எடுக்கிற மாதிரி கேட்டாங்க. ஆனா பொடதியில அடிச்சு துரத்துறது மாதிரி முடியாதுன்னு திருப்பி அனுப்பிடிச்சி அந்த ஆத்தா.

ff

இதுல பாருங்க... வீரப்பன் -அவ ரோட குடும்பம், அவரோட உறவுக எல்லாரோடயும் நல்லா பழகி வீரப்பன் காடு அத்தனையிலயும் இவரு துணை யில்லாம எதுவும் நடந்திருக்காது, அப்படி அத்துப்படியா இருக்குற அந்த தம்பி சுப்பு அலட்டிக்காம கம்முனு அவர் வேல உண்டு... அவரு உண்டுன்னு இருப்பாரு. அதேபோல தம்பி ஜீவா, அதே வீரப்பன் காட்டுல மலைவாழ் ஜனங்களோடவே வாழ்ந்து, அவர் களுக்கான போராட்டத்துல எல்லாம் கூட நிக்குறவரு... அவரும் கம்முன்னு அவரு வேல உண்டுன்னு இருக்காரு. ஒட்டுண்ணியா இருந்த ஒரு ஈக்குச்சி கெடந்து காலு... காலு...ன்னு கத்துது.

மேப்படி நாகப்பா செய்திய பத்தி திரும்பவும் நான் ஜெ.பி.கிட்ட போன்ல, "என்ன தம்பி திரும்பவும் இப்படி பயங்கரமா செய்தி வந்திருக்கே? எது உண்மைன்னு விசாரிங்க தம்பி''ன்னு படபடத்தேன்.

"அண்ணே அதப்பத்திதான் நானும் விசாரிச்சிக்கிட்டி ருக்கேன். நீங்க மொதல்ல சொல்லும்போது எனக்கு சரியான செய்தி கெடைக்கல. இப்போ அதப்பத்தி முழுசா விசாரிச் சுக்கிட்டிருக்கேண்ணே''னாரு. எனக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு. ஒரு இடத்துல உக்கார முடியல. குட்டி போட்ட பூனையாட்டம் ஆபீஸுக்குள்ளயே நடந்துக்கிட்டிருக்கேன்.

"கர்நாடகத்த பொறுத்தவரைக்கும் ஜனதா தளம் ஒரு பெரிய கட்சி. அந்தக் கட்சியில பல பொறுப்புகள்ல இருந்தவரு. பலமுறை எம்.எல்.ஏ., அமைச்சரா இருந்தவரு. அநியாயமா எல்லாருமா சேர்ந்து அவர கொன்னுட்டாங் களே...'ங்கிற வருத்தம்தான் நமக்கு.

நான் எதுக்காக சொல்றேன்னா... இதுக்கு முன்னாடி நான் மொதல்ல சொன்னது மாதிரிதான். அதாவது அந்தம்மா சொன்னது... "தூதுங்கிற பேச்சுக்கே இடமில்லை'.

ரெண்டாவதா வீரப்பன். வீரப்பன்ங்கிற பேர கேட்டாலே பல்லக் கடிக்கும். நக்கீரன் கோபால்ங்கிற பேரக் கேட்டாலும் பல்ல கடிக்கும்... கலைஞர் நம்மளவிட பெரிய இடத்துல இருக்கிறவரு, அவரு பேர கேட்டாலே அந்தம்மா நறநறன்னு பல்ல கடிக்கும்.

போன இதழ்ல முடிக்கும்போது சொன்னேம் பாருங்க... கடைசியா அல்வா குடுத்தாங்கன்னு. இதுக்காகத் தான் "அல்வா'ல கொண்டுவந்து முடிச்சேன்.

ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்தான் பாவப்படு வாங்க, பரிதாபப்படுவாங்க, அவங்களோட கஷ்டத்த உணருவாங்க. இதெல்லாம் ஜெயலலிதாகிட்ட கெடையாது. எது நடந்தா எனக்கென்ன? யாரு எக்கேடு கெட்டா எனக் கென்ன? நான் புடிச்ச முசலுக்கு மூணு கால்... அப்படின்னு இருக்கிற ஜெயலலிதாங்கிற ஒரு பொம்பளைட்ட ஈவாவது... இரக்கமாவது... மண்ணாவது... ஒரு வெங்காயமும் கெடையாது!

நாகப்பா விடுதலை!ங்கிற செய்தி முதல்ல எப்படி வந்துச்சு? வீரப்பன் தப்பி ஓட்டம்!ங்கிற செய்தி எப்படி வந்தது?

அதுக்கடுத்து...

கெடு முடிந்ததால் வீரப்பன் ஆத்திரம்! நாகப்பாவை வீரப்பனே சுட்டுக் கொன்றான்! பரபரப்புத் தகவல்! இந்தச் செய்தி எப்படி வந்துச்சு?

இந்த ரெண்டு செய்திகளுக்கும் பின்னாடி ஒரு விஷயம் இருக்கு. ஒரு செய்திக்குப் பின்னாடி இன்னொரு செய்தி... அது என்ன? அத கண்டுபிடிக்கிறதுதான் நக்கீரனோட வேல.

நாகப்பா கடத்தல் நடந்ததுல இருந்து என்னென்ன பாலிடிக்ஸ் நடந்ததுன்னு எல்லாத்தையும் நாம பாத்துக்கிட்டிருந்தோம்... வாட்ச் பண்ணிக்கிட்டேதான் இருந்தோம்.

"அவன் இந்தக் காட்டுல இல்ல... அந்தக் காட்டுல இல்ல'ன்னு ஆளாளுக்கு ஒவ்வொண்ண சொன்னாய்ங்க. ஏன்.. ஜெயலலிதாவே... நாகப்பா தமிழ்நாட்டுல உள்ள காட்டுல இல்ல... ஒங்க கர்நாடகா காட்டுலதான் இருப்பாரு'ன்னுல்லாம் சொல்றாங்கன்னா... நடந்தது எல்லாத் தையும் அந்தம்மாவுக்கு அப்டேட் பண்ணிட்டுத்தான இருந்திருக்காங்க.

இதுக்குப் பின்னாடி ஒரு பெரிய ஆரவாரமான சூழ்ச்சியும்.... அதுல ஒரு ஃபெயிலியரும் நடந்திருக்கு. அதனாலதான் முதல் செய்தி சந்தோஷமா ஆதரவாவும்... ரெண்டாவது அதே எழவு செய்தியா?... நாமதான் நெசத்த வெளியக் கொண்டு வராம விடமாட்டோம்ல..

(புழுதி பறக்கும்)