(59) ஷாக் அடிக்கும் கொடூரங்கள்!
சொல்ல வந்தத சொல்லக்கூட முடியாம தேம்பித் தேம்பி அழுதுகிட்டே சொல்றாங்க... சின்னப்பொண்ணு.
"பிள்ளை பெறந்து செத்து பத்து நாள்தான் ஆச்சு. முழு நிர்வாணமாக்கி, கரண்ட் ஷாக் குடுத்தாங்க. கண்ணுல, பிறப்புறுப்புல பச்ச மிளகாய் போடறது, பின்னாடிகூடிக் கையக் கட்டிப்புட்டு அசிங்கமா பண்ணுவாங்க. எங்க வூட்டுக்காரருக்கும் எனக்கும் ஒண்ணா கரண்டுபொட்டிய சேத்து வச்சி ஷாக் கொடுப்பாங்க. காதுல கொக்கிய மாட்டி கரண்டு கொடுத்தாங்க.
"உனக்கும் வீரப்பனுக்கும் என்ன சம்பந்தம், அவனுக்கு சாப்பாடு கொடுத்தீங்கள்ல'ன்னு கேட்டு மிதிப்பாங்க.
வெறகு வெட்டப் போவோம். நாங்க அவரை பாத்தது கூடக் கெடயாது. சித்ரவதையோ சித்ரவதைங்க. அப்பிடிக் கொடுமை செஞ்சாங்க. நைட்டு ஒரு எட்டு மணி இருக்கும். ஆறுமுகம்ங்கிற பேர்ல ரெண்டு பேரு, அண்டாகவலி, சண்முகம்னு நாலு பேரையும் கூப்பிட்டுப்போய் சுட்டுக் கொன்னுட்டாங்க.
இந்தாம்மா... தலைல பூ வச்சுக்க, ஒன் முடிதான் நீட்டமா இருக்குனு சொல்லி செவந்த ரோசா பூவெல்லாம் நெறைய கொண்டு வந்து, இந்த தல நெறய்ய வச்சாங்க, குங்குமம் எல்லாம் வச்சி சாப்புட பிரியாணி கொடுத்தாங்க.
அங்க பேப்பர் இருந்துச்சு. எனக்குப் படிக்கத் தெரியாது.. யாராவது படிச்சு சொல்லுங்க சார்னு சொன்னேன்.
அதுல ஒரு போலீஸ்காரர் நல்ல மனுஷன். ஒன் வூட்டுக்காரரை எல் லாம் சுட்டுக் கொன் னுட்டாங்கம்மா. அதான் பேப்பர்ல வந்துருக்குன்னு சொல்லி, அதுக்குதான் ஒனக்கு பூ, பொட்டு கொடுத்தாங்கன்னு சொல்றாரு.
அந்தப் பூவெல் லாம் பிச்சு எறிஞ்சுபுட்டு, குங்குமத்த எல்லாம் அழிச்சுப்போட்டு பாத்ரூம்ல போயி ஏதாவது சிக்குனா செத்துப் போயிரலாம்னு போனேன். ஒண்ணுமே கெடைக்கல. பதினாறு வயசுலயே இப்பிடி புருசனக் கொன்னுப்புட்டாங்களே. எப்பிடியாவது செத்துப் போயிரலாம். புருசன் உசிரோட இருந்தப்பவே இத்தனை சித்ரவதை செஞ்சாங்களே. இன்னும் என்னென்ன கொடுமை செய்வாங்களோ?
இங்க பாரு, ஒனக்கு ஒங்க அப்பா, அம்மா செய்ய வேண்டிய சாவு மொறைமை எல்லாத்தையும் நாங்களே செஞ்சுட்டோம்னு சொல்லி தாலி, பொட்டு, தோடுகள எல்லாம் வாங்கி வச்சிக்கிட்டாங்க.
அப்புறம் என்னெல்லாம் கொடுமை பண்ணணுமோ எல்லாமே பண்ணு னாங்க..
பண்ணாரி கேம்ப்ல நாங்க இருக்கறது ஒரு அறை. சித்ரவதை பண்றது இன்னொரு அறை. நடுவுல பண்ணாரி அம்மன் கோவில் வீதி. அங்கருந்து என்னை மட்டும் தனி அறைக்கு கூட்டிட்டுப் போனாங்க. பாத்ரூம் சுத்தம் பண்ண, அது... இதுன்னு எனக்கு நெறைய வேலை கொடுத்தாங்க. அப்பத்தான் கொழந்த பெறந்து இறந்ததுனால என் ஒடம்பு ரொம்ப மோசமா இருந்துச்சு. காச்சல் வந்துடுச்சி. பதினாறு வயசுதான் எனக்கு. பைத்தியக்காரி மாதிரி ஆக்கிட்டாங்க. எனக்கு எதுவுமே மண்டைல ஏறல. அவ்வளவுதான். நம்ம வாழ்க்க முடிஞ்சி போச்சுன்னு.
வீரப்பனைப் பத்தி எதுவுமே இவளுக்குத் தெரியாதான்னு சொல்லி நல்லா இத்தாம் பெரிய கட்டைய (கையால் அளவு காண்பிக்கிறார்) எடுத்து வந்து தொடை மேலயே அடிச்சாங்க.
அது ரெண்டா ஒடஞ்சி போச்சு. நல்ல வலி... நடக்க முடியாமப் போச்சி. தேவிடியானு சொல்லிக்கிட்டே என் காதுல கரண்டு கம்பி வச்சு ஷாக் குடுத்து, "இப்ப நட... நட'ன்னு சொல்லி அடிச்சாங்க. நட, நடன்னு மிதிச்சாங்க... கரண்டு குடுத்த அதிர்ச்சில உதுரம் (ரத்தம்) அப்டியே காலோட போவுது. கொழந்த பெறந்த கொஞ்ச நாள்லயே கரண்ட் ஷாக் குடுத்ததும் அந்த அதிர்ச்சில ரொம்ப அதிகமா ரத்தம் போச்சு. அதப் பாத்த அவனுக நீயெல்லாம் ஒரு பொண்ணானு சொல்லிக் கிட்டே பின்பக்கமா காலால ஒதைச்சிட்டாங்க. கரண்டு மெஷினோட அப்படியே முன்னாடிபோய் விழுந்துட்டேன். கரண்டுனால காதுல வலி தாங்காம கொக்கிகளப் பிச்சுப்போட்டேன். காது கிழிஞ்சு ரத்தமா ஊத்துச்சு.
அப்றமும் ஒன்ன விடப்போறதில்லன்னு சொல்லி நாங்க ஏற்கெனவே இருந்த ரூமுக்கு கூட்டிட்டுப் போய் திரும்பவும் கரண்டு ஷாக் குடுத்து அடிச்சாங்க.
ஏங்கையா! ஒங்களுக்கெல்லாம் ஈவு இரக்கமே இல்லயா? வூட்டுக்காரரையும் கொன்னு போட்டீங்க.. அந்தப் பொணத்தக் கூட கண்ணுல காட்டல. நீங்களா பூவைக் கொடுத்து நீங்களா பொட்டக் கொடுத்து நீங்களாவே அதையும் அழிச்சிட்டீங்க. இப்பிடியெல்லாம் சித்ரவத பாவம் செய்றீங்களே. நாங்க என்ன பாவம் செஞ்சோம்... கூலி வேலைதான செஞ்சோம்.....?''
தனக்கு நடந்த கொடுமைய சொல்ற இன்னொருத் தங்க பேரு... பெரியதாயி:
"அப்பா பொன்னுசாமி. அம்மா மினியம்மா. நாங்க நல்லூர் கிராமம். கர்நாடகால காட்டு வேலை செஞ்சிக்கிட்டிருந்தோம். கர்நாடகப் போலிசு நைட்ல ஒரு மணி இருக்கும். திபுர் திபுர் திபுர்னு வந்தாங்க. எங்க அம்மா அப்ப தமிழ்நாட்டுக்கு போயிருந்தாங்க.
எங்கப்பாவ செருப்புக் காலாலேயே உதைச்சாங்க. அப்ப எனக்கு பத்து வயசுதான் இருக்கும். ஏன் எங்கப்பாவ அடிக்கிறீங்கன்னு கேட்டேன். அப்பான்னு கத்திக்கிட்டே போயி அவரை சேத்துக் கட்டிக்கிட்டேன்.
என்னைய இடிச்சுத் தள்ளிட்டு அப்பாவ இழுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. எங்க அண்ணனையும் சந்தேகம்ங்கிற பேருல கூட்டிட்டுப் போயிட்டாங்க. தம்பியையும் சேத்து இழுத்துட்டுப் போயிட்டாங்க. எங்கம்மாவையும் பிடிச்சுட்டு வந்து ஒம்பதரை வருஷம் ஜெயில்ல போட்டுட்டாங்க. ஒரு தம்பியையும் அண்ணனையும் எங்க வச்சிருக் காங்கன்னே தெரியலை. சின்னவனுக்கு பத்து வயசுக்கு கீழ. பெரியவனுக்கு பன்னிரெண்டு வயசுதான். நான் நடுவு.
பண்ணாரி கேம்ப்லதான் வச்சிருந்தாங்க. எங்க அண்ணன அடிச்சி சித்ரவதை பண்ணி எங்க அம்மா முன்னாடியே நிர்வாணமா நிறுத்தி ஒன் பையனுக்கு உயிர் நிலைல கரண்டு வைடின்னு சொல்லி எங்கம்மாவ எட்டி உதைச்சாங்க.
ஐயோ நான் பெத்த பையனுக்கு நான் எப்படி கரண்டு கொடுப்பேன்னு அம்மா அழுதாங்க. அந்தக் கர்நாடகா இன்ஸ்பெக்டர் அசோக்குமார் எங்க அம்மாவ எட்டி உதைச்சி எங்க அண்ணனுக்கு உயிர்நிலைல கரண்டு வைக்கச் சொன்னாங்க. ஒரு பெத்த தாய்க்கு நடக்கக் கூடாத கொடுமை அது. தெனம் சித்ரவதை. (அழுகிறார்...)
எங்க குடும்பத்துல எட்டு பேரு செத்துட்டாங்க. எட்டு பேரையும் சுட்டுக் கொன்னுட்டாங்க. அப்பா, அண்ணன்மாரு ரெண்டு பேரு, எங்க தாய்மாமன் ரெண்டு பேரு, எங்க சித்தப்பா, பெரியப்பா.
எங்க பாட்டிக்கெல்லாம் கையே இல்லாமப் பண்ணிட்டாங்க. அந்தக் கிழவிக்கு அந்த வயசுல அப்படிக் கொடுமையெல்லாம் நடந்துருக்கக்கூடாது. பாட்டியோட மார்ல கரண்டு வச்சி ரொம்பக் கொடுமை பண்ணுனாங்க. (அழுகிறார்)
என் அண்ணன், தம்பிய அடிச்சே மெண்டலாக்கிட்டாங்க. பத்து ரூபா காசக் கையில குடுத்தாக் கூட எண்ணத் தெரியாத அளவுக்கு ஆக்கிட்டாங்க. “பைத்தியக்காரப் பிள்ளைக ரெண்டுபேரப் பெத்துவிட்டுப் போயிட்டா மினியம்மான்னு’ பாக்குறவங்க பேசுனாங்க. அவங்க எல்லாத்துக்கும் நல்லது கெட்டது எல்லாம் நானே பாத்து அவங்களுக்கு செய்றதெல்லாம் செய்றேன். (அழுகிறார்...)
ஒம்பதரை வருஷம் கழிச்சு ஜெயில்லருந்து அம்மா வந்தா. அவளை அடிச்சு கரண்டு வச்சதுனால கிட்னி எல்லாம் போயிடுச்சு. ரெண்டு வருசத்துல அம்மாவும் செத்துட் டாங்க.''
என்ன...? ஜெயலலிதா மேடம் இப்ப விளங்குதா? உங்க நொஸ்டிஎப் என்ன பணிகள கண்ணும் கருத்துமா அந்தக் கானகத்துல ஆற்றுனாங்கன்னு...!
"அட த்தூ... வெட்கங்கெட்டவய்ங்களா! நீங்கள்லாம் அக்கா, தக்கச்சியோட பொறக்கல... உங்களுக்கு அம்மா இல்ல? அட கல்யாணமாகியிருந்தா உங்களுக்கும் ஒரு பொம்பள வாக்கப்பட்டு வந்துருக்கும்ல. மத்தவய்ங்க உசுருன்னா உங்களுக்கு கேவலம்.... கேட்க ஆளில்லாமலா...? இந்தப் பாவம் ஏழேழு ஜென்மத்துக்கும் ஒங்கள சும்மாவே விடாது.
இப்ப சொல்றேன்.... இந்தப் படுபாதகத்த செஞ்ச போலீஸ் உடுப்பு போட்ட அரக்கனுக நல்ல சாவு சாகமாட்டானுக. வேணும்னா பாருங்க... வயிறு பத்திக்கிட்டு எரியுது... எவ்வளவு அக்கிரமம்...
ஒரு பொம்பள தனக்கு நேர்ந்த இத்தன அசிங்கத்தயும் வெக்கம் இல்லாமச் சொல்றாங்கன்னா...?''
இந்த மாதிரியான "நேர்மையான' போலீஸுக்கு மேடம் சப்போர்ட்... வௌங்கிரும் நாடு...!
(புழுதி பறக்கும்)