[[

போலீசின் என்கவுண்ட்டர் ப்ளான்!

ராத்திரி ரொம்ப நேரமா லாட்ஜ்ல ஏதோ யோசனையில நடந்துக்கிட்டே இருந்தேன். அப்போ, பெருமாள் சார் என்னோட போனுக்கு வந்தாரு.

Advertisment

அவர்ட்ட நான் படபடன்னு சொல்றேன். "ஸார், தர்மசங்கடமான நெலமயில இப்ப நான் இருக்கேன். தர்மசங்கடம்னு சொல்றதவிட... ரொம்ப கிரிட்டிக்கல்னுதான் சொல்லணும். எங்கயும் என்னால போக முடியல. அந்த லாட்ஜ்காரர் வேற, கிளம்புங்க... கிளம்புங்க...ன்னு கூடவே இருந்து நச்சரிக் கிறாரு. நான் போறதுவரைக்கும் நகரமாட்டாரு போல. ஆளுங்கட்சியில உள்ள ஒருத்தன் எதுத்தாப்புல இருக்கான், அவனால லாட்ஜுக்கு ஏதாவது பிரச்சினை ஆயிருமோன்னு பயப்படுறாரு.

இந்த ராத்திரி நேரத்துல என்ன பண்றதுன்னு எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. அப்படியே எங்கயாவது போனாலும் கட்டாயமா மாட்டிக்குவோம். வீட்டுக்கு போலாமான்னு நெனைச்சேன்... அங்கயும் போலீஸ் காவல் பலமா இருக்குது. இப்போ நான் வாலண்ட்டியரா போய் சரண்ட்டர் ஆயிட்டா என்ன? அப்படிப் பண்ணுனா என்ன நடக்கும்? ஒரு பெரிய சட்டப் போராட் டத்த சந்திக்கவேண்டி வருமோன்னு தோணுது சார். இதுல இருந்து எப்படி எந்திரிச்சி வர்றதுன்னு தெரியாம இருக்கேன். அதுக்காகத்தான் இந்த நேரத்துலயும் உங்க போன எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன்... அப்பதான் நீங்க லைனுக்கு வர்றீங்க.

தம்பி சிவகுமார் எங்கிட்ட சொன்னத வச்சிப் பாத்தா... ஜாம்பஜார் ஸ்டேஷன்ல ஒரே நேரத்துல மூணு எப்.ஐ.ஆர். போட்டிருக்காங்க. அதுமட்டுமில்லாம ஒவ்வொரு ஊருலயும் அ.தி.மு.க.காரய்ங்க போய் எம்மேல கம்ப்ளைண்ட் குடுத்து எப்.ஐ.ஆர். போடணும்னு சொல்லி தர்ணா பண்றானுங்க. ஜெயலலிதாட்ட பேர் எடுக்கணும்னா எதிராளிய தொடர்ந்து நோகடிக்கணும்... சாகடிக்கணும்னே ஒவ்வொண்ணா செய்வானுங்க. புதுசா பதவி கெடைச்சவனும் நம்ம பேரும் பேப்பர்ல வரணும்னு பல வழியிலயும் நமக்கு எதிரா வரிஞ்சுகட்டுறான். புதுசா பதவி கெடைக்கணும்னு நெனைக்கிறவனும், நம்மள என்ன பண்ணலாம்னு யோசிக்கக்கூட விடாம குண்டக்க மண்டக்க ஏதாவது செய்வாய்ங்க. நம்ம மேல எவ்வளவு எப்.ஐ.ஆர். வரும்னும் தெரியல...

Advertisment

தமிழ்நாடு முழுக்க பாத்தீங்கன்னா 1800-க்கு மேல போலீஸ் ஸ்டேஷன் இருக்கு. 200 மகளிர் காவல்நிலையம் வேற இருக்கு. இது எல்லாத்தையும் கணக்கெடுத்தா நாம திரும்பிப் பார்க்கவே நேரம் இருக்காது. தமிழ்நாட்டுல... ஏன் இந்தியாவுலயே அதிக எப்.ஐ.ஆர். நம்ம மேலதான் விழுந்திருக்கும். அத எப்படி கையாள்றதுங்கிறத பிறகு பார்த்துக்கலாம்... எப்படி இதுல இருந்து வெளிய வர்றது?ங்கிறதுதான் இப்ப நம்ம முன்ன இருக்கிற முக்கிய பிரச்சின. அதுக்கான ஏற்பாடுகள நீங்க, எல்லாருமா டிஸ்கஸ் பண்ணி என்ன பண்ணலாம்னு சொல்லுங்க ஸார்... அப்புறமா திரும்பவும் உங்கள காண்டாக்ட் பண்றேன்''னேன்.

தான் ஆட்சியிலிருக்கும் மமதையில்... எதைச் சொன்னாலும் எதிர்த்துப் பேசாத அடிப்பொடிகள், ஆளாயுதங்கள் இவைகளை வைத்து மிகச்சாதாரண ஒரு பத்திரிகைமீது ஏவி நாசம் செய்யச் சொல்ற அந்த பொம்பள ஹிட்லர் பலசாலியா? அல்லது நிராயுதபாணி யாக நின்று அதையெல்லாம் மனத் துணிவு மட்டுமே மூலதனமா வச்சு எதிர்கொள்ற நாம பலசாலியா? நீங்களே சொல்லுங்க மக்களே...?

ரொம்ப நாளைக்கு முன்னாடி... ரெண்டு ரெண்டரை வருஷம் இருக்கும்... அமிஞ்சிக் கரையில இருக்குற பில்ரோத் ஆஸ்பத்திரிக்கு நாகேஷ் அண்ணன (நாகேஷ் அண்ணன் அப்ப, பில்ரோத் மருத்துவமனை டைரக்டரா இருந்தாரு) பார்க்குறதுக்காக அவரோட ரூமுக்கு போனேன். நான் போகும்போது அங்க ஒரு போலீஸ் ஆபீஸர் உக்காந்திருந்தாரு. அவர, நாகேஷ் சார் எனக்கு அறிமுகப்படுத்துனாரு.

"அண்ணனைத் தெரியாதா'' அப்படின் னாரு.

"நீங்கண்ணே...''

"என் பேரு ராஜாராமன். உங்கள்ட்ட ஒரு விஷயம் கேக்கணும்னு ரொம்ப நாளா நெனச் சிக்கிட்டிருந்தேன்... அன்னிக்கி அந்த சம்பவம் நடந்தப்ப நீங்க எப்படிண்ணே தப்பிச்சீங்க?''''ன்னாரு.

என்ன பாத்தவுடனே அவரு கேட்ட கேள்வி...?

"அன்னிக்கி எப்படிண்ணே தம்பிச் சீங்க?''ன்னு.

நாமதான் பலதடவ தப்பிச்சிருக்கமே... எப்படியாவது போட்டுத் தள்ளிறணும்னு கிட்டத்தட்ட 11 முறை என்ன கொலபண்ண ஜெயலலிதாவே முயற்சி பண்ணீருக்கு. அதில்லாம மத்தவன் எவ்வளவோ பேரு முயற்சி பண்ணுனாங்கன்னு வச்சுங்கங்க.

அப்போ நான் சொன்னேன்... "எத்தனையோ வாட்டி தப்பிச்சிருக்கேங்க. உயிரக் காப்பாத்திக்க எத்தனையோ தடவ ஓடி தப்பிச்சிருக்கேன். எப்படியோ பெரியவங்க புண்ணியத்துல இப்போ போனஸ் வாழ்க்க வாழ்ந்துக்கிட்டிருக்கேன். என்னிக்கின்னு நீங்க சரியா சொல்லுங்க... நான் சொல்றேன்''னேன்.

2012, ஜனவரி மாசம் 7-ந் தேதின்னாரு.

அந்த நாள் வாழ்க்கையில மறக்கவே முடியாத நாள்.

"அப்படியா''ன்னேன்.

"என்னண்ணே நீங்க... மறந்துட்டீங்க போலிருக்கு...

அதாண்ணே... அம்மாவ பத்தி நீங்க ஒரு செய்தி போட்டீங்கல்ல?''ன்னாரு.

"உங்களுக்கும் அதுக்கும் என்னண்ணே சம்பந்தம்? நீங்க அப்போ எங்க இருந்தீங்க?''ன்னு கேட்டேன்.

"நான் அயனாவரம் போலீஸ் இன்ஸ் பெக்டர். அன்னிக்கு மத்தியானம் 2:00 மணிக்கு எனக்கு ஒரு ஆர்டர் வந்துச்சு. நாங்க நார்த் ஸோன். நார்த், சவுத், சென்ட்ரல்னு பல ஸோன்ல இருந்தும் 100-பேருக்கு மேல எங்களுக்கு வயர்லஸ் மெஸேஜ். அதாவது இன்னிக்கு 6:30 மணிக்கு எல்லாரும் வயர்லெஸ், துப்பாக்கியோட வந்துருங்கன்னு எங்களுக்கு டைரக்ஷன் வந்துக்கிட்டேயிருந்தது.''

rr

"என்ன டைரக்ஷன்ணே...''

"இன்னிக்கு சாயங்காலம் 6:30 மணிக்கு நக்கீரன் கோபால போட்டுத் தள்ளீரணும்...''னு சங்கேத பாஷையில சொன்னாங்க.

"மேலதிகாரிங்க சொல்லும்போது நாங்க என்ன சொல்ல முடியும்? உடனே நாங்க எல்லாரும் ஸ்டேஷன்லருந்து கௌம்புறோம். மணி... 2:00.... 3:00... ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு இடையில "ஹி இஸ் இன்சைடு, ஹி இஸ் இன்சைடு'னு சங்கேத வார்த்த மட்டும் எங்களுக்கு வந்துக் கிட்டேயிருக்கும். 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப் பேட்டை, சென்னை-14-ன்னு ஆபீஸ் அட்ரஸ்லாம் சொல்லிக்கிட்டிருக்காங்க. ஹி இஸ் இன்சைடு... Mustache Man அப்படின்லாம் சொல்லிக் கிட்டிருக்காங்க.....

நாங்க நாலு வட்டம் போட்டாச்சு... அப்படின்னா... "அரண்'னு சொல்லுவாங் கள்ல... ஆபீஸ சுத்தி நாலு வட்டம் போட்டாச்சு. 6:30 மணிக்கு நாங்க உள்ளே புகுந்துர்றது மாதிரிதான்... உடனே ஆபீசுக்குள்ள புகுந்துற வேண்டியதுதான். ஒரு பயங்கரவாதிய, தீவிரவாதிய நெருங்குறது மாதிரிதான் நாங்க வந்துக் கிட்டிருந்தோம்...''ன்னாரு.

"நம்மள புடிக்கிறதுக்கு இவ்வளவு பெரிய ஃபோர்ஸா?' நாம அவ்வளவு பெரிய ஆளா?'ன்னு "ஆ...'ன்னு அவரு சொல்றதக் கேட்டுக்கிட்டேதான் இருந்தேன். அப்போ எங்கூட இருந்த நாகேஷ் அண்ணனும், ஜெகதீஷ் அண்ணனும் கூடவே கேட்டுக்கிட்டிருந் தாங்க.

திரும்பவும் அவரே சொல்றாரு...

"மணி 6:00 .... 6:10... 6:20... வரைக்கும் நீங்க ஆபீசுக் குள்ள இருக்கிறதாத்தான் எங்களுக்கு தகவல் வந்துக்கிட்டிருக்கு... 6:25...க்கு நாங்க 50 பேருக்கு மேல திபுதிபுன்னு... ஆபீஸ், வீடுன்னு சுத்தி வளைக்கிறோம்...

நீங்க எங்கயும் இல்ல...? எல்லா எடத்தயும் தரோவ்வா செக் பண்ணி தேடியும் ஒங்கள காணல...

நாங்கதான் உங்கள தப்பிக்கவிட்டோம்னு நினைச்சு எங்க மேலதிகாரிங்க அப்படி ஒரு கோபம் எங்க மேல. உங்கள முடிச் சுருப்போம்னு நம்பி அம்மாவுக்கு தகவல் கொடுத்துட்டாங்க போல... அது பொய்யாகிப் போனதால மொத்த டீமுக்கும் பயங்கர கெட்ட பேரு... தெரியுமா?ன்னு ஆதங்கப்பட்டார்.

என்னாங்கய்யா உங்க ஆதங்கம். அப்ப நான் உங்ககிட்ட மாட்டி செத்துருந்தா திருப்தியா...? போங்கய்யா... நீங்களும் உங்க எழவெடுத்த போலீசும்...

(புழுதி பறக்கும்)