புத்தக திருவிழாவில் போலீஸ் வேட்டை!
"யோவ்... யாரக் கேட்டு கடை போட்டுருக்கீங்க?ன்னு மிரட்டுறாங்கண்ணே...''
"நீங்க என்ன சொன்னீங்க?''ன்னேன்.
"ஒங்க மேல கம்ப்ளைண்ட் வந்திருக்கு, இங்க ஒளிஞ்சிருக்கானான்னு ரொம்ப கடுமையா நடந்துக்கிறாங்கண்ணே''ன்னு சொன்னாரு தம்பி கிறிஸ்டோபர்.
"தனுஷ்ட்ட குடுங்க தம்பி''ன்னேன். கூடவே தம்பிகள் பார்த்தி, சத்யசீலன், விளம்பரம் சுரேஷ், சிவகுமார்னு நெறைய தம்பிகள் இருந்தாங்க.
"கவர்ன்மென்ட்டுக்கு எதிரான புக்கெல்லாம் ஏன் விக்கிறீங்க?''ன்னு அந்த ஏ.சி. எங்கள சத்தம் போட்டாருண்ணே...''
பப்ளிகேஷன்ல எல்லாரும் எல்லா தரப்பு புத்தகங்களையும், பலவிதமான தலைப்புகள்ல விற்பனைக்கு வச்சிருப்பாங்க. இது எப்படி கவர்மென்ட்டுக்கு எதிரானதா ஆகும்?
இவங்கள்ட்ட பேசிக்கிட்டிருக்கும்போதே, லேடி கான்ஸ்ட்பிள்கள் ரெண்டு பேரு உட்பட சில போலீஸ்காரங்களும் சேர்ந்து புக் ஸ்டால் உள்ளே போய் எல்லா புத்தகத்தையும் கிளறி செக் பண்றாய்ங்க.
கவர்மென்ட்டுக்கு எதிரா, ஜெயலலிதாவுக்கு எதிரா... அதாவது அவங்க சொன்னது, அம்மாவுக்கு எதிரா (போலீஸ் காரய்ங்களே அம்மாவுக்கு எதிரான்னு கேக்குறாய்ங்கன்னா வௌங்குமா அது) ஏன் புக் போடுறீங்கன்னு கேக்குறாய்ங்க.
அதக்கேக்க இவிய்ங்க யாரு?
நக்கீரன உருத்தெரியாம ஆக்கணும்னு நெனைச்சி அதோட கிளைகள் எங்கெல்லாம் இருக்கோ அங்கெல்லாம் நோண்டி நொங்கெடுக்கணும்னு வெறியா அலையுறாய்ங்க... அதனாலதான் இந்தப் புத்தகச் சந்தையில... ஆயிரக்கணக்கான வாசகர்க, பொதுமக்கள் இருக்குற இடத்துக்கு வந்து, "ஏன் புத்தகங்கள்லாம் விக்கிற, கடைய உடனே குளோஸ் பண்ணு'ன்னு போலீஸ்காரங்க அதிகார தோரணையில மிரட்டிப் பாக்குறாய்ங்க.
"பபாஸி'ங்கிற அமைப்ப நம்பித்தான் நாம கடை போட்டுருக்கோம். ஒவ்வொரு கடைக்கும் குறிப்பிட்ட அளவு பணத்த, கடைகளுக்கு ஏத்த மாதிரி வாடகை கட்டுவோம். அப்படி பணம் கட்டித்தான் எங்களுக்கு குலுக்கல் முறையில கடைகள ஒதுக்கியிருந்தாங்க. பபாஸிங்கிற அமைப்பு மூலமா நாம எடுத்த கடைய ஆட்சியில இருக்குறவங்க அதிகாரத் திமிர்ல பூட்டச் சொல்றாங்க. அதாவது, சுத்தி... சுத்தி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
அப்போ தம்பி தனுஷ் என்ன சொல்லியிருக்காருன்னா... "எங்களுக்கு பபாஸினு ஒரு அமைப்பு இருக்கு. அவங்க வந்து சொல்லட்டும்''னு சொல்ல... உடனே கடைய பூட்டச் சொன்னவய்ங்க, அங்க போயிருக்காங்க.
பபாஸில உள்ளவங்க என்ன சொல்லியிருக்கணும்...?
அப்போ பொறுப்புல இருந்த சண்முகம் அண்ணனும் அவரோட இருந்தவங்களும்... "பிரச்சினை வேணாம் அவங்க சொல்றத கேளுங்க''ன்னு நம்ம பக்கம் திருப்பிட்டாங்க. அவர்ட்ட "ஆசிரியர தேடிக்கிட்டிருக்காங்க'ன்னு போலீஸ்காரய்ங்க பொய் சொல்லியிருக்காங்க. பொறுப்புல இருந்த சண்முகம் அண்ணனும் அவர்கூட பொறுப்புல இருந்தவங்களும் உடனே, கடைய பூட்டிருங்க, பிரச்சினை வேணாம்னு நம்மள கைகழுவிட்டாங்க. நானும் உடனே "கடைய பூட்டிருங்க, ஆனா நான் வருத்தப்பட்டேன்ங்கிறத சண்முகம் அண்ணன்ட்ட பதிவு பண்ணிருங்க தம்பி'ன்னு சொல்லிட்டேன். உடனே துணிய கொண்டுவந்து கடைய மூடிட்டாய்ங்க. ஏதோ பெரிய கொலைகாரன நாங்க இங்க கொண்டுவந்து ஒளிச்சி வச்சிருக்கோம்னு நெனைச்சிட்டாய்ங்க போல. ரெண்டு நாளா எங்க கடைகள தொறக்க விடல. சனி, ஞாயிறு இந்த ரெண்டு கிழமையும்தான் அதிகமா மக்கள் புத்தகச் சந்தைக்கு வருவாங்க. புக்கெல்லாம் சொல்ற மாதிரி எல்லாருக்கும் விற்பனையாகும். அத தடுத்து நிறுத்திட்டாய்ங்க. பபாசியில உள்ளவங்க நெனைச்சிருந்தா, "எப்படிங்க ஒரு செய்திக்காக புத்தகக் கடையை பூட்டலாம்? அதுக்கு நாங்க இடங்கொடுக்க மாட்டோம்''னு நமக்கு பாதுகாப்பா இருந்திருக்கணும்.
அவங்க என்ன நினைச்சிருப்பாங்கன்னா, இப்ப நீங்க கடைய மூடலன்னா... பபாசி மூலமா கிட்டத்தட்ட 600-க்கு மேல புக் ஸ்டால் போட்டுருக்காங்க. இவனுக நம்ம ஆபீஸுக்கு 1000 பேருக்கு மேல வேன், பஸ், லாரி, கார்னு வந்த மாதிரி ஒரு வேன அப்படியே திருப்பி புக்ஃபேர் பக்கம் வந்தா கத முடிஞ்சது... அத யோசிச்சிருப்பாங்க இந்தப் பெருசுக. அவங்களும் காசு கட்டித்தான கடை போட்டிருக்காங்க. குண்டக்க மண்டக்க வேற மாதிரி ஏதாவது ரசாபாசம் ஆயிச்சின்னா அது வேற மாதிரி டிஸ்டர்ப் ஆயிரும். மக்கள் வந்துபோற இடம் அப்படின்னுதான் அவங்க யோசிச்சிருக்காங்க. ஆனா அதுல எனக்கு கொஞ்சம் வருத்தம்தான். அவங்க நமக்கு அரணா நின்னுருக்கணும்னு நான் நெனைச்சேன். ஏன் அரணா இருந்திருக்கணும்னு சொல்றேன்னா... அந்த புத்தகச் சந்தையில நக்கீரன் பதிப்பக புத்தகங்கள மட்டும்தான் விற்பனைக்கு வச்சிருந்தோம். அப்படியிருக்கையில கடைய மூடுங்கன்னு அவிய்ங்க சொன்னா... இதுதான் சர்வாதிகார ராணியோட ஆட்டமாச்சே... பயப்படத்தானே செய்வாங்க.
ஜி.எம். சுரேஷ்ட்ட சொன்னேன்... "விட்ருங்க தம்பி, போனா போய்த் தொலைறாய்ங்க. இவுங்களுக்கு எங்க போச்சு? நம்ம பக்கம்தான நின்னுருக்கணும். சரி... விடுங்க, வேற என்ன செய்வாங்க? அவங்களும் பயப்படுறாங்கள்ல, அதுனால மூடித் தொலைக்கச் சொல்லுங்க. ஆனா அதுக்கான விளைவுகள் இருக்குல்ல... அத அப்புறமா சந்திப்பாங்க''ன்னுட்டு கடைய மூடித் தொலைச்சோம்.
"சந்தோஷத்துல கை குலுக்குற ஐந்து வெரல்கள விட, கஷ்டத்துல கண்ணீரத் தொடைக் கிற ஒரு வெரலே மேலானது'ன்னு ஒரு சொலவட இருக்கு. அதுமாதிரி நமக்கு ஆதரவா அண்ணன் கலைஞர்ட்ட இருந்து மொத மொதல்ல போன் வந்தது. அடுத்து, உடனே ஒரு அறிக்கையும் வந்தது.
அவர் தனது கண்டன அறிக்கையில, "நக்கீரன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரைக்காக அந்த அலுவலகத்தில் நடைபெற்றுள்ள தாக்குதல், எத்தகைய வாதங்களை அல்லது நியாயங்களை எடுத்து வைத்தாலும், பாதிக்கப்பட்டோர் சட்டப்படி நீதிமன்றங்களில் தங்களுக்குள்ள நியாயங்களை நிலைநிறுத்த முயற்சிக்க வேண்டுமேயல்லாமல் பத்திரிகையாளர்களையோ அல்லது பத்திரிகை அலுவலகத்தையோ தாக்குவது என்பது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல'' என கண்டித்துள்ளார்.
கலைஞரோட கண்டன அறிக்கையைத் தொடர்ந்து, அடுத்து "இந்து' என்.ராம் சார் என் லைனுக்கு வர்றாரு.'What is going on Gopal?''-ன்னாரு. ஆபீஸ்ல நடந்த அசம்பாவித சம்பவங்கள், பூட்டு போட்ட விஷயங்கள் எல்லாத்தையும் சொன்னேன். அவங்க ""Dont worry... இந்த நேரத்துல ஒங்களுக்கு சப்போர்ட்டா இருப்பேன்''னாரு. அவங்க பல விஷயங்கள்ல நமக்கு சப்போர்ட்டா இருந்திருக்காங்க.
அடுத்து "விடுதலை சிறுத்தைகள்' சார்பா அண்ணன் திருமாவளவன் வெளியிட்ட கண்டன அறிக்கையில்... "நக்கீரன் அலுவலகம் மீது அணி, அணியாகச் சென்று தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கின்ற வாய்ப்பு இருக்கும் போது, அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்து வது என்பது ஜனநாயகப் படுகொலையாகும்'' என அழுத்தமாக குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரா இருந்த அண்ணன் ஞானதேசிகன், ஒரு அறிக்கை குடுத்திருந்தாரு. (அவங்க இப்ப இல்ல). "மனித நேய மக்கள் கட்சி' ஜவாஹிருல்லா அண்ணனும் தாக்குதல கண்டிச்சி ஒரு அறிக்கை குடுத்திருந்தாங்க.
இப்படி நமக்கு ஆதரவா பத்திரிகையாளர் அமைப்பினர், மனித உரிமை அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள் என பலரும் அறிக்கையாவும், போன் மூலமாவும் ஆறுதலும், தாக்குதலுக்கு கண்டனமும் தெரிவிச்சிருந்தாங்க. வசந்த அண்ட் கோ வசந்தகுமார் அண்ணாச்சியும் அப்ப நமக்கு பலத்த ஆறுதலும் ஆதரவும் தெரிவிச்சிருந்தார்.
அப்புறம் ஆபீஸ் நிலவரம் கேட்டு, எனக்கு ஆறுதல் சொல்லி, தைரியமா இருக்கச் சொல்லி ஒரு போன்கால் வந்தது. அது... தோழர் நல்லகண்ணு ஐயாகிட்ட இருந்து.
"எது நடந்தாலும் அத எப்படி எதிர்கொள்றதுன்னு ஒங்களுக்கு நல்லாவே தெரியும். எதையும் சந்திக்கிற தைரியம் ஒங்களுக்கு உண்டு, ஆனாலும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க''ன்னு ஐயா சொன்னாங்க.
(புழுதி பறக்கும்)