"அம்மா'வை மிதித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ!
தெரியாத்தனமா ஒரு செய்திய நக்கீரன்ல பப்ளிஷ் பண்ணிட்டோம். அதுதான் "மாட்டுக்கறி தின்னும் மாமி' மேட்டரு. (நாம சில நேரங்கள்ல புத்திய கடன் குடுத்துருவோம்.) அந்த மேட்டருக்கான தகவல் குடுத்த தம்பி, என்ன சொன்னாருன்னா...
"இது ஜெயலலிதாவுக்கு சாதகமான மேட்டரு. ஜெயலலிதா, "எல்லாரும் என்னைய பிராமின்னு திட்டுறாங்க, ஆனா நான் பிராமின் இல்ல... எல்லாருக்குமான பெண்'ணுன்னு மத்தவங்களுக்கு காட்டணும்னு நெனைச்சி சில விஷயங்கள பண்ணும். அந்தவகையில இந்த செய்தி நம்ம பத்திரிகையில வந்துச்சின்னா, அத பாராட்டாது.... இருந்தாலும் அவங்களுக்கு ஆதரவா நாம ஒரு செய்தி போட்டது மாதிரி இருக்கும்னும், அதுக்கான ஆதாரமும் இருக்குன்னும் சொன்னதால செய்தியா போட்டுத் தொலைச்சோம். அதுல பாருங்க... செய்திய பார்த்துட்டு நம்மமேல விழுந்து ஆக்ரோஷமா பிராண்டு பிராண்டுன்னு பிராண்டுது. "அட்டமத்துச் சனிய வெல குடுத்து வாங்குனது போல'ன்னு பெரியவங்க சொல்லுவாங்கல்ல... அதுதான் ஞாபகத்துக்கு வருது.
ஜெயலலிதாங்கிற ஒத்த மனுஷிக்கிட்ட நல்லபேரு எடுக்கணும், தனக்கு ஏதாவது ஒரு பதவிய வாங்கணும்னு ஜெ.வுக்கு புடிக்காதவங்கள அ.தி.மு.க.காரய்ங்க, வித்தியாசம்... வித்தியாசமா தொல்ல பண்ணுவாய்ங்கன்னு போன அத்தி யாயத்துல சொன்னன்ல. அதுக்கு சாம்பிள்தான் அவிய்ங்க போட்ட பூட்டு. அந்த ஆளு வெவரம் இல்லாம பண்ணுனானா, இல்ல தெரிஞ்சே பண்ணுனானான்னு தெரியாது. ஆனா அது எவ்வளவு பெரிய குத்தம்ங்கிறது இருக்குல்ல. சாதாரண குத்தம் இல்ல. ஒரு எம்.எல்.ஏ., 100 பேருக்கு மேல வேல செஞ்சுக்கிட்டிருக்கிற பிரபல மான ஒரு பத்திரிகை ஆபீஸ... அதுவும் நம்ம மார் தட்டிச் சொல்லிக்கலாம், இந்திய அளவுல இல்ல இல்ல... அது கொஞ்சம் ஓவர்... தமிழ்நாடு அளவுல எங்க கேட்டாலும் நக்கீரனப் பத்தி தெரியும் அப்படிங்கிற அளவுக்கு பேரு வாங்குன ஒரு பத்திரிகைய... எத்தனையோ போலீஸ்காரங்க சுத்தி நிக்கிறப்ப... அவங்களுக்கு நடுவுல வேளச்சேரி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அசோக், ரவுடி குரூப்போட கொக்கரிச்சுக்கிட்டு வந்து ஆபீஸ பூட்டுறாருன்னா... அத எந்த வகையில ஏத்துக்க முடியும்? இந்த அராஜகத்த, அநியா யத்த, அயோக்கியத் தனத்த, பொறுக்கித்தனத்த நீங்க எதுல சேர்ப்பீங்க?
நம்ம சட்டம் என்ன சொல்லுதுன்னா, எந்தவொரு வீடா இருந்தாலும், கடையா இருந்தா லும், அலுவலகமா இருந்தாலும் அங்க உள்ளவங்க அனுமதி இல்லாம அத பூட்டக் கூடாதுங்கிறதுதான் சட்டம். பூட்டவோ, பூட்ட ஒடைக்கவோ எந்தச் சட்டத்துலயும் இடம் இல்ல. எந்த ஒரு நபரையும் முறை இல்லாம சிறை வைக்கிறது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய குத்தம். இப்படிப் பட்ட குத்தத்த செய்றவங்களுக்கு ஒரு வருஷம் வரைக்கும் சிறைத்தண்டனை குடுக்கலாம்னு இந்திய தண்டனைச் சட்டம் சொல்லுது.
நம்ம ஆபீஸுக்கு பூட்டு போட்டது தெருவுல போற ஏதோ ஒரு பொறம்போக்கு இல்ல... மக்கள் பிரதிநிதியா இருக்குற எம்.எல்.ஏ. அதுக்கு சாட்சி, அங்க நின்னுக்கிட்டிருந்த அத்தன போலீஸ்காரங்களும்தான். தமிழ்நாட்டுல எப்படிப்பட்ட ஒரு அரசாங்கம் நடந்துட்டு இருந்துச்சுன்னு பாருங்க. இந்த அநியாயத்த எதுத்து கேக்க யாராலயும் முடியாதுங்கிற தெனாவெட்டு, திமிரு... இருந்ததுனாலதான் இவ்வளவு பெரிய குற்றச்செயல் நடந்துருக்கு. படத்த பார்த்தீங்கன்னா அவன் முகத்துல ஒரு தெனாவெட்டு தெரியும். அதுக்குக் காரணம்... அவன் இருக்கிற கட்சியில, முதலமைச்சரா இருக்கிற ஜெயலலிதா. தனக்குப் பிடிக்காதங்கள விரோதியா, எதிரியா நெனைச்சு... "அவங்கள நீ என்னவேணாலும் செஞ்சுட்டு வா.. நான் ஒனக்கு அள்ளித்தர்றேன்'ங்கிற குணாதிசயத்த அந்தம்மா (ஜெ.) வச்சிருந்ததாலதான், இவனுங்க இந்த மாதிரி ஆட்டம் போடுறாய்ங்க.
ஆபீஸ பூட்டிட்டு அப்படியே, நக்கீரன கொத்துக் கொத்தா எங்கேயோ ஆட்டயப் போட்டு வந்து, அவங்க நொம்மாவ... அதான் நக்கீரன் அட்டையில "ஜெ.'வோட முரட்டுப் படம் போட்டிருந்த அவங்க நொம்மாவையே திரும்பத் திரும்ப மிதிச்சாய்ங்க. நக்கீரன காலால மிதிக்கிறோம்னு நெனைச்சிட்டு அந்த மூதேவிங்க, அவங்க அம்மாவையே அன்னிக்குப் பூரா மிதி மிதின்னு மிதிச்சாய்ங்க. தீயெல்லாம் அணைஞ்சதும் அசோக் எம்.எல்.ஏ. அங்கேயே... ஆபீஸ் முன்னாடி தர்ணாவுல உக்கார்றான். அவன்கூட பெரிய ரவுடி கும்பலே உக்காந்து தர்ணா பண்ணுது.
இந்த விஷயங்கள பெருசு சுந்தர் எங்கிட்ட சொன்னவுடனே, போட்டோ தம்பிங்க எல்லார்ட்டயும் பேசி, மொதல்ல அவிய்ங்க செஞ்ச அட்டூழியத்த போட்டோ எடுங்கச் சொன்னதோட, தம்பி பெலிக்ஸ்ட்ட சொல்லி வீடியோவாவும் எடுத்து அத மொதல்ல ஆவணப்படுத்திக்கிட்டோம்.
நானும் இவிய்ங்க அப்ப போயிடு வானுக, இப்ப போயிடுவானுகன்னு நெனைச் சிக்கிட்டிருக்கேன். ஆனா அப்படி எதுவும் நடக்கல.
நக்கீரனுக்கு எதிரா கூட்டமா வந்தாய்ங்க, கோஷம் போட்டாய்ங்க, கல் எறிஞ்சாய்ங்க, கலவரம் பண்ணுனாய்ங்க, "கேட்'ட அடிச்சி ஒடைச்சாங்க, கொடும்பாவி எரிச்சாய்ங்க, பைக்கையெல்லாம் போட்டு எரிச்சாய்ங்க... இவ்வளவையும் செஞ்சுக்கிட்டு, சுத்தி நின்னு... இன்னிக்கு நம்மள பொலி போடாம போகமாட்டோம்ங்கிற மாதிரி வெறி...
வெறி... வெறித்தனமா... கத்துறாய்ங்க. இது எல்லாத்துக்கும் காரணம்.... ஜெ... ஜெ...
ஜெயலலிதா...
அந்த தழும்பு இன்னும்கூட எங்களவிட்டு மறையல. ஏன்னா... லேசுல மறைஞ்சுப் போற சின்ன தழும்பு கெடையாது. மிகப்பெரிய ரணம். அந்த ஒருநாள்... 48 மணிநேரம் அரக்கத்தனமா, கொஞ்சங்கூட மனுஷத் தன்மையே இல்லாம ஜெயலலிதா & கோ ஆடுன நர்த்தனம் இருக்கே... அத நெனைச்சா.... இப்ப வரைக்கும் ஒடம்பு தகதகன்னு தணலா கொதிக்குது.
"கொடும கொடுமன்னு கோயிலுக்குப் போனா... அங்க ரெண்டு கொடும ஜிங்குடி ஜிங்குடின்னு ஆடுது'ன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. ஜெயலலிதாவுக்கு சாதகமா ஒரு மேட்டர போடுறோம். அது நம்மள குண்டக்க மண்டக்கன்னு போட்டு தாக்குது... "இது ஒனக்கு தேவையா?'ன்னு வடிவேலு அண்ணன் ஒரு படத்துல விரல காட்டி பேசுவாருல்ல... அத அப்போ நெனைச்சிக்கிட்டேன்.
தம்பி எஸ்.பி.சுந்தர கூப்பிட்டு, "ஆபீசுக்கு பூட்டு போட்டது, பூட்டு போடறதுக்கு முன்னாடி போலீஸ்கிட்ட அந்தாளு பேசிக்கிட்டிருந்தது, பூட்டு போட்ட பிறகு வெக்கமில்லாம திரும்பவும் போலீஸ்கிட்ட பேசுனது எல்லாத்தையும் கெல்லிஸ் ரோடுல இருக்கிற வி.எம். ஸ்டுடியோவுல போய் படமா போட்டு எடுத்துட்டு வாங்க. ஒவ்வொண்ணுலயும் 5 காப்பி போட்டு கையோட எடுத்துட்டு 2 செட்ட நம்ம ஆபீசுக்கு யாரு கையிலயாவது குடுத்துவுட்டுட்டு, 3 செட்ட பெருமாள் சார் இருக்குற இடத்துல கொண்டுபோய் கொடுங்கன்னு உடனே அனுப்பி வச்சேன். தம்பி சிவகுமாருக்கும் போன் போட்டேன்... அவர் அட்வகேட் பெருமாள் சாரோட இருந்தாரு.
"தம்பி, இப்ப எங்க இருக்கீங்க?ன்னு கேட்டேன்.''
"தலைமை நீதிபதி வீட்டுலதான் வெயிட்பண்றோம்''னாரு.
இவங்கள வெயிட் பண்ணச் சொல்லிட்டு, தலைமை நீதிபதி அவசர வேலையா வெளியே போயிருந்திருக்காரு. அதுவும் ஒருவகையில நல்லதாப் போச்சு. (முந்தைய அத்தியாயங்களில் இதப்பத்தி ஏற்கனவே சொல்லியிருப்பேன்) போனவங்க உடனே நீதிபதிய பார்த்திருந்தா, டி.வி.யில ஓடுற செய்திய மட்டும்தான் சொல்லியிருப்பாங்க. ஆனா இப்ப நமக்கு மேக்கொண்டு சரியான ஆதாரமா கையில போட்டோவும் வந்திருச்சு. அவங்க வெயிட் பண்ணுன நேரத்துல தம்பி சிவகுமார்ட்ட, "தம்பி, அத்தனை பேருக்கு முன்னாடி அந்த வேளச்சேரி எம்.எல்.ஏ. அசோக், ஆபீசுக்கு பூட்டு போடறத ஆதாரபூர்வமா வெளிப்படுத்துற போட்டோஸ் எல்லாத்தையும் உங்கள்ட்ட தரச்சொல்லி போட்டோகிராபர் சுந்தர அனுப்பி வச்சிருக்கேன். அத நீதிபதி வந்தவுடனே, 100 பேருக்கு மேல வேல பாக்குற அலுவலகத்த ஒரு எம்.எல்.ஏ. பூட்டு போட்டு தர்ணாவும் பண்ணுனத, விலாவாரியா நம்ம பெருமாள் ஸார எடுத்துச் சொல்லச் சொல்லுங்க தம்பி''ன்னேன்.
நானும் இவிய்ங்க ஆத்திரம் செத்த அடங்கட்டும்ண்டு காலாற ஆபீஸ் முன்னாடி இருக்குற திண்டுல உக்காந்து போட்டோகிராபர் சுந்தர் கொண்டுவந்து தந்த பேயாட்ட படங்களப் பாத்துக்கிட்டிருக்கேன். அதுல ஒரு படத்த பார்த்ததுமே சின்னதா எனக்கு அதிர்ச்சி...
"அடேய்... இது அந்த ஆளுல்ல...?''
(புழுதி பறக்கும்)