ff

(146) நீதிபதி மருமகன் மீது கஞ்சா வழக்கு போட்ட ஜெயலலிதா!

ங்க ஆரம்பிச்சு எங்க போயிட்டு இருக்கு பாருங்க... தோண்டத் தோண்ட பூதம் வர்ற மாதிரிதான். போர்க்களத்துல நடந்த சம்பவங்களச் சொல்ல நினைச்சு, ஒவ்வொண்ணா சொன்னா... அதுபாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கு.

ஆனா ஒவ்வொண்ணும் கல்வெட்டு போல செதுக்கி வைக்க வேண்டியது. மேடம் ஆட்சியில பழி வாங்குன சம்பவங்க ஏராளம்... ஏராளம்.

Advertisment

அதுலயும் யாரு? என்ன? அவங்க எந்த பெரிய ஆளா இருந்தாலும், இல்ல... எந்தப் பெரிய உசரத்துல இருந்தாலும் "என்னை எதுத்துட்டா உன்ன கஞ்சி காய்ச்சாம விடமாட்டேன். அது எனக்கு மட்டுமில்ல... என்கூட இருக்கிற என் தொங்கச்சி சசிகலாவ கை வச்சாலும் அதோகதிதான்'.

ஒருவழியா அந்தப் புள்ள ஜனனி (எ) செரினா, தன் புருஷனுக்கு ஆசைநாயகியா வந்து பங்கு போட்டுச்சுன்னு அக்கா போலீஸை வச்சு அதகளம் பண்ணி கொண்டுபோய், கஞ்சா வழக்குல ஜெயில்ல போட்டு களி திங்க வச்சுருச்சு சின்ன அக்கா.

அடுத்தடுத்து, நிறைய இருந்தாலும் ஒண்ணே ஒண்ண மட்டும் சொல்லிட்டு உரிமை மீறலுக்குள்ள போயிருவோம்.

Advertisment

ஊருக்குள்ள இருக்குற கஞ்சாவ மொத்த குத்தகை எடுத்து, எதிரிகள பழிவாங்குறதுக்குன்னே வச்ச மாதிரிதான்... இவிய்ங்களுக்குன்னு கஞ்சா நினைச்சா கிடைக்கும்.

அப்படித்தான் 1994, பிப்ரவரி. "ஜெ.'வோட ஆட்சி.

"அ.தி.மு.க.வோட நிலக்கரி ஊழல் வழக்கை விசாரிக்கலாம்'னு ஆர்டர் போட்டுட்டாரு மரியாதைக்குரிய நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன். பிப்ரவரி 28-ஆம் தேதி காலையிலேயே போலீஸ் கஞ்சா ஆட்டத்த ஆரம்பிச்சுட்டாய்ங்க. யாரு மேலங்கிறீங்க... நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணனோட மருமகன் குமார். இவரு மேலதான் அந்த கஞ்சா வழக்கு.

என்ன... மிரட்சியா இருக்கா? இதுதான்... ஜெயலலிதா!

நடந்தத நீதியரசர் மருமகனே சொல்றாரு பாருங்க...

"1982-ல் என்னோட திருமணம் நடந்துச்சு. அப்ப எங்க மாமனார் (நீதிபதி லட்சுமணன்) வக்கீலாகத்தான் இருந்தாங்க. புரோக்கர்கள் மூலம் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்வேன்.

அதுவும் ஆபீசெல்லாம் கிடையாது. வீட்டிலிருந்தபடியே தான் நண்பர்கள் வட்டாரத்துல பிசினஸ் செய்வேன்.

பிப்ரவரி 28-ஆம் தேதி அதிகாலை அஞ்சரை மணி இருக்கும். மதுவிலக்கு டி.எஸ்.பி. மாதவராஜ், பன்னீர்செல்வம் இரண்டு போலீஸ் அதிகாரிகளும் தி.நகர், ராமன் தெருவில் உள்ள என் வீட்டிற்கு வந்து காலிங்பெல்லை அழுத்த, கதவைத் திறந்து பார்த்தேன். வீட்டிற்கு வந்த போலீஸ்காரங்க, மாட்டியிருந்த எங்க மாமாவோட பெரிய போட்டோவைப் பார்த்து, "இவருதான் ஜட்ஜா... உங்க மாமனாரா?''ன்னு கேட்டாங்க.

ff

நானும் "ஆமாம்''னேன்.

"சட்டையைப் போட்டுக்கிட்டு எங்ககூட வாங்க''ன்னாங்க.

நான் "என்ன விஷயம்? எங்க கூப்பிடுறீங்க?''ன்னேன்.

"மரியாதையா எங்க பின்னாடி வாங்க, இல்லன்னா, நாங்க வேற மாதிரிதான் கூட்டிட்டுப் போவோம்''னு மிரட்டுனாங்க.

"என்னோட வக்கீலுக்கு போன் பண்ணிட்டு வரேன்''னு சொன்னதுக்கு...

"அதெல்லாம் முடியாது''ன்னு சொல்லிட்டு, போன் ஒயரை அறுத்து எறிஞ்சாங்க.

நாலு வயசான என்னோட ஒரே மகன் தூங்கிக்கிட்டிருந்தான். அம்மாகிட்டயும், மனைவிகிட்டயும் "நீங்க தைரியமா இருங்க'ன்னு சொல்லிட்டு, போலீஸ்காரங்க கூட போனேன்.

ரெண்டு அம்பாசிடர், ஒரு மாருதி வேன் வீட்டுக்கு முன்னாடி கொஞ்சம் தள்ளித் தள்ளி நின்னுது. ஒரு அம்பா சிடர்ல என்னை ஏத்திக்கிட் டாங்க. மூணு வண்டியும் என் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் பாண்டி பஜார் போலீஸ் ஸ்டேஷன் எதிர் சைடுல நின்னுது. மாருதி வேன் ஸ்டேஷன் பக்கம் போச்சு. ஒரு போலீஸ் அதிகாரி, ஸ்டேஷன்ல போய் ஏதோ பேசிட்டுத் திரும்பி வந்தாரு.

மூணு வண்டியும் பனகல் பார்க் பக்கம் போனது. அங்க தயாரா ரெண்டு ஸ்டாண்டர்டு வேன்ல போலீஸ்காரங்க இருந்தாங்க. அந்த ரெண்டு வேனும் எங்களைப் பின்தொடர, நேரா செங்கல்பட்டை நோக்கிப் போனோம். இடையில நான் எதுவும் பேசல.

காலை 7 1/2 மணிக்கெல்லாம் நேரா மதுராந்தகம் போனோம். அங்க உள்ள கலால் பிரிவு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுபோய் உள்ள உக்கார வச்சாங்க. பிறகு என்னை அம்பாசிடர்ல ஒரு பாழடைஞ்ச பழைய பங்களா போன்ற ஒரு இடத்துக்கு கொண்டுபோனாங்க.

இடையில ஒரு வெள்ளை பேப்பர்ல இரண்டு வரிகள் மட்டும் எழுதியிருந்தது. அதில் கையெழுத்துப் போடுன்னு சொல்லி மிரட்டி கையெழுத்து வாங்கினாங்க. பிறகுதான் தெரிஞ்சது, ஏற்கனவே பத்து பக்கங்கள் நான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மாதிரியுள்ள ஸ்டேட்மெண்டோட கடைசிப்பக்கம் அது என்று.

ff

மதியம் ரெண்டரை மணி சுமாருக்கு மதுராந்தகம் கோர்ட்டுக்கு கார் உள்ளேயே பின் சீட்டுல தலையைக் குனிஞ்சு படுக்க வச்சபடிதான் கொண்டுவந்தாங்க. கோர்ட்டுக்குப் பின்பக்கமா கூட்டிட்டுப்போய் நீதிபதி முன்னாடி நிக்க வச்சாங்க. பதினைஞ்சு நாள் என்னை ரிமாண்ட் பண்ணினதா சொல்லி வேன்ல ஏத்துனாங்க.

தமிழகத்தையே கலக்கிய நிலக்கரி ஊழல் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரித்தவரான நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனை பணிய வைக்கத்தான் அந்த சதித்திட்டம் போலீஸாரால் உருவாக்கப்பட்டது எனச் சொல்லப்படுகிறது.

நீதிபதியை பணிய வைக்க, அவரது மருமகன் மீது கஞ்சா வழக்கு போட்டு, உள்ளே தள்ளி தனது முதல்கட்ட அச்சுறுத்தலைத் தொடங்கியது. நீதிபதி மருமகன் குமார் என்பவரை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க, ஏற்கனவே போலீஸாருக்குப் பரிச்சயமான 2 நபர்களை போலீஸார் பிடித்து, அவர்களை அடித்து மிரட்டி, "குமாரிடமிருந்துதான் நாங்கள் வழக்கமாக சாராயமும் கஞ்சாவும் வாங்கி விற்பனை செய்தோம்' என்றெல்லாம் வாக்குமூலம் வாங்கி, குமாரை இந்த வழக்கில் சம்பந்தப்பட வைத்தது. குமாரும் ஜெயிலுக்குப் போய் மூன்று நட்கள் கழித்து ஜாமீனில் வெளியே வந்தார்.

"இப்படியெல்லாம் கூட செய்வாங்களா? நீ என்னமோ கஞ்சா, சாராயம் எல்லா வியாபாரமும் செஞ்சதா பொய் கேஸ் போட்டுருக்காங்களாமே?' என்று எங்க அம்மா அப்பாவித்தனமா கேட்டார். எங்க மாமனாரும் (நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன்) என்னை அழைத்து எல்லா விவரங்களையும் கேட்டார்.

"என்னாலதான் உங்களுக்கு இவ்வளவு சோதனைகள் வந்துடுச்சு. எல்லாத்தையும் கெட்ட கனவா மறந்துடுங்க. ஆண்டவன் ஒருத்தன் இருக்கான்.' இந்த நாலு வார்த்தைதான் என்கிட்ட எங்க மாமனார் பேசியது.''

இப்ப குமாரே தொடர்றார்...

"எங்க வீட்டுல டிரைவரா இருந்த அரசு என்பவன் வேலையை விட்டுட்டு மயிலாப்பூர்ல உள்ள "ஆர்.ஆர். ஒயின்ஸ்' என்ற கடையில வேலை பார்த்துவந்தான். போலி மதுபான வழக்கில் அவன் சிக்கியபோது போலீஸில் மாட்டாமல் தப்பிவிட்டான். அவன் வீட்டில் போய் போலீஸார் விசாரித்தபோது, "எங்க வீட்டுக்காரரு செட்டியார் வீட்டில் வேலை செய்கிறார்' (எங்கள் வீடு) என்று அவன் மனைவி சொல்லியிருக்கிறாள்.

எங்கள் வீட்டில் அவன் வேலையை விட்டது, ஒயின்ஷாப்பில் வேலைக்குச் சேர்ந்தது, இதைக்கூட மனைவியிடம் சொல்லாமல் இருந்ததன் விளைவு... போலீஸ் என்னை வந்து விசாரித்தார்கள். வழக்கில் சம்பந்தப்பட்ட அரசு போலீஸிடம் சிக்காததால், ஏழாவது குற்றவாளியாக என்னையும் அந்த வழக்கில் சேர்த்தார்கள். அதை எதிர்த்து நானும், நீதிமன்றத் தில் வழக்கு போட்டேன். நான்கு வருடங்களாகியும் இதுவரை எந்த ஒரு பதிலும் இல்லை.

சட்ட அமைச்சரோ, அந்த வழக்கில் நான்தான் குற்றவாளி என்பது போல இப்போது கூறுகிறார். இன்னொரு வழக்கு என் சகோதரர் சம்பந்தப்பட்டது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் காண்ட்ராக்டராக என் சகோதரர் நான்கு லாரிகளை ஓட்டிக்கொண்டிருந்தார். அதில் ஒரு லாரியை வழக்கமாகக் கழுவி சுத்தம் செய்ய பூந்தமல்லி அருகே ஆற்றில் நிறுத்தியிருக்கிறார்கள். அப்போது ஏற்கனவே மண்பாடி லாரியும் அங்கு இருந்திருக்கிறது. மதுவிலக்கு போலீஸார் அந்த லாரியை பிடித்து மடக்கி சோதனை போட, போலீஸாருக்கும் மண்பாடி லாரியில் இருந்தவர்களுக்கும் அடிதடி ரகளையாகிவிட, நம்ம டிரைவரும் கிளீனரும் லாரியை விட்டுவிட்டு தப்பி ஓடிவந்துவிட்டனர்.

ff

விஷயம் போன் மூலம் அண்ணனுக்கு வந்ததும், மாருதியில போய் அண்ணன் லாரியைத் தேடினாரு, கிடைக்கலை. பிறகு அம்பத்தூர் போலீஸ்காரங்க அண்ணனோட ஆயில் டேங்கர் லாரியையும் சேர்த்து கேஸ் போட்டிருப்பது தெரிந்தது. அதோட அந்த வருஷமே நாலு லாரியையும் அண்ணன் வித்துட்டாரு. இதுதான் நடந்துச்சு. சாராயம் கடத்தி, கஞ்சா வித்துதான் நாங்க வாழ்க்கை நடத்தணும்னு அவசியம் இல்ல. பாரம்பரியம் உள்ள குடும்பத்துல பொறந்தவங்க நாங்க'' என்று உணர்ச்சிவசப்பட்டார் குமார்.

முடிவாக, குமார் பெருமூச்சு விட்டுக்கிட்டே... "ஒரு நீதிபதியோட மருமகனா இருந்தாலும், தப்பு செய்யலைன்னா கூட ஜெயில்ல தள்ள முடியும். எங்களை அவமானப்படுத்த முடியும்னு தமிழக போலீஸார் செஞ்சிருக்காங்க. எனக்கே இந்த கதின்னா...? எங்க மாமா சொன்னதைத்தான் நானும் சொல்ல விரும்பறேன்... ஆண்டவன் ஒருத்தன் இருக்கான்!''

என்ன கொடுமை பாருங்க! ஒரு நீதியரசரும், அவரோட மருமகனும் "ஆண்டவன் இருக்கான் பாத்துக்குவான்'னு பழிய ஆண்டவன் மேல போட்டுட்டாங்க.

சட்டப்படி நடவடிக்கை எடுத்ததுக்கே... இந்தபாடு படுத்தியிருக்கு சூர்ப்பனகை. ஆத்தாடி, நாமகண்டு கஞ்சா விஷயத்துல மாட்டியிருந்தா...?

அதனாலதான் எப்பவுமே "உஷாரு... உஷாரு...'ன்னு என் தம்பிகள்ட்ட சொல்லிக்கிட்டே இருப்பேன். அப்படி உஷாரா இருந்ததுனாலதான் நக்கீரன்... நக்கீரனா இருக்கு.

அடுத்து... ஒரு மீசை கதை ஒண்ணு...!

(புழுதி பறக்கும்)