(89) "கோபால் கைதின் உள்நோக்கம்'' -சுஜாதா!
ஆனந்த விகடனில் எழுத்தாளர் சுஜாதா...
"நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகை நிருபர்களும் சில என்.ஜி.ஓ. நிறுவனத்தைச் சேர்ந்த வர்களும் கூடியிருந்தார்கள். கோபாலின் நீண்ட கால நண்பன் என்கிற முறையில் நான் கலந்து கொண்டேன். கவிஞர் மனுஷ்யபுத்திரன், கனிமொழி, வாசந்தி, சன் நெட்வொர்க் ஏ.எஸ். பன்னீர்செல்வன் போன்றவர்களும் வந்திருந்தார்கள், பேசினார்கள். பொடா சட்டத்தைப் பற்றி என் அறிவு மிகக் குறைவானது. பல சந்தேகங்கள் இருந்தன. அவர்களிடமே கேட்டேன்.
முதலில், "இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதால் என்னை பொடா சட்டத்தில் போட்டுத் தள்ளமுடியுமா?'' என்று கேட்டேன். "முடியும். உங்களிடம் ஈழம் தொடர்பான ஏதாவது புத்தகம், கவிதைத் தொகுப்பு, துண்டுப் பிரசுரம் போன்றவை விமர்சனத்துக்கோ, அன்பளிப்புக்கோ வந்திருக்கிறதா?'' என்று கேட்டனர்.
"வந்திருக்கு'' என்றேன். "அதுபோதும். இந்தக் கூட்டத்துக்கு டீ சப்ளை பண்றவரிடம் ஒரு நாட்டுத் துப்பாக்கியை கையில் தந்து, வெச்சுக்கோ பாத்ரூம் போயிட்டு வர்றேன் என்று திட்டமிட்டு விதைத்து, கூட்டத்தில் இருப்பவர்களையெல்லாம் உள்ளே போடமுடியும்'' என்றார்கள். "எல்லாரும் வருவதாக இருந்தால் சரி.. ஒருநாள் உள்ளே போய் விட்டு வந்தால் ஒரு சிறுகதை தேறும்'' என்றேன். "ஒரு நாளில் வெளிவர முடியாது'' என்றனர். பொடாவுக்கு ஐ.பி.சி., (இந்திய தண்டனைச் சட்டம்) சி.ஆர்.பி.சி. (குற்றவியல் நடைமுறைச் சட்டம்) தேவைகள் ஏதும் கிடையாதாம்.
கைது செய்துவிட்டு கேள்வி கேட்காமல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வருஷக்கணக்கில் ஆஜர்படுத்தாமல், அந்த ஆளை மறந்துபோய் விடலாமாம். வி.ஐ.பி. என்றால் ஜெயிலில் வேளா வேளைக்கு ஒரு அலுமினியத் தட்டில் ஆகாரம் கொடுத்தால் போதுமானது என்றனர். எதற்கு இத்தனை கடுமையான சட்டம்? அப்படி நம் நாடு ஆபத்தில் உள்ளதா? இதென்ன சார்ஸ் வைரஸா?
பொடா சட்டம் முதலில் பொடோ என்ற பெயரில் ஆர்டினன்ஸாக இருந்து, சட்டமாக மாறியது. லோக்சபா, ராஜ்யசபா இரண்டும் கூடி, மெலிதான பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட சட்டம் இது. நம்நாட்டுக்கு, குறிப்பாக காஷ்மீர் தீவிரவாதிகளையும் பிரிவினைவாதிகளையும் சமாளிக்கத் தேவை என்று கருதியதால் அத்வானி யின் பிடிவாதத்தால் அது பாஸாகிவிட்டது. வைகோகூட ஆதரித்து வோட்டுப் போட்டிருக் கிறார். இந்த சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்த மாட்டோம் என்று மக்களவையில் பேசினார்களே தவிர, சட்டத்தின் வாசகத்தில் ஏதும் உத்தரவாதம் இல்லை. மாநில அரசுகளுக்கு இது வரப்பிரசாத மாகிவிட்டது.
இதற்கு முன்பிருந்த மிசா, தடா போன்றவை காலாவதியானதும் பொடா போன்ற சட்டங்கள் அவ்வப்போது உள்துறை அமைச்சுக்கு மறுஅவதார மாகத் தேவைப்படுகிறது. பொடாவை முதலில் நீக்குகிறேன் என்று வரும் தேர்தலில் வாக்குறுதி கொடுத்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வரலாம். கேன்சலாகலாம். அதற்குப் பதில் ஒரு லொடா வரலாம். உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, காஷ்மீர், ஆந்திரா போன்ற மாநி லங்களுக்கு பொடா பயனுள்ள ஆயுதம். கோபால் கைதின் உள்நோக்கமே வேறு என்கிறார்கள். முதுகுக்குப் பின்னால் ரொம்ப வலிக்குமாறு அவரை முழங்கை முறுக்கி கலைஞர்- வீரப்பன் -ராஜ்குமார் விஷயத்தில் பணம் வாங்கினார் என்று சொல்ல வைத்து அவரை பொடாவில் போட்டு போட்டோ எடுக்கத்தான் இந்த ஏற்பாடு என்றெல்லாம் செய்தி வருகிறது. இதெல்லாம் யார் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை'' என்று முடித்திருப்பார்.
சுஜாதா சார் சொன்னத ரொம்ப பெருமை யான விஷயமா ஏன் சொல்றேன்னா... அவரு ஆனந்த விகடன்ல எழுதும்போது ஆரம்பத்துல சொல்லியிருப்பாரு, என்னுடைய நீண்டகால நண்பன்னு சொல்லித்தான் ஆரம்பிப்பாரு.
கடைசியா கட்டுரைய முடிக்கும்போது, இதோட உள்நோக்கமே "முதுகுக்குப் பின்னால ரொம்ப வலிக்கிற மாதிரி கைய முறுக்கி..'.ன்னு சொல்லிருப்பாரு. என் கைய முறுக்குனத... இன் னிக்கு வரைக்கும் எனக்கு நடந்த ஒரு சாபக்கேடாத் தான் நெனைக்கிறேன். இன்னிக்கும் அந்தக் கையினால என்னால அதிக வெயிட் எதுவும் தூக்க முடியாது... இடது பக்கம் சாய்ஞ்சி படுக்க முடி யாது.... அந்தக் கை வலுவிழந்து போனது மாதிரி ஆகிப்போச்சு. அதத்தான் சுஜாதா சார் குத்திக் காமிப்பாரு. கையை முறுக்கி கலைஞர் -வீரப்பன் -ராஜ்குமார் எபிசோடுல பணம் வாங்கினார் என்று சொல்ல வைக்க முற்பட்டாங்க அப்படிங்கிறதத் தெரிஞ்சு, விகடன்ல பதிவு பண்ணிருப்பாரு சுஜாதா.
"நாம் பயணிக்கிற பாதை சரியா போய்க்கிட்டு இருந்தா, பக்கத்துல நின்னு குரைக்கிற நாய்கள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை' அப்படின்னு ஒரு சொலவட இருக்கு. இத எதுக்குச் சொல் றேன்னா... சுஜாதா சார் மாதிரி பெரிய ஜாம்பவான் கள் வந்து நம்ம நேர்மைய, நம்மகிட்ட இருக்கிற நியாயத்த, நம்ம பத்திரிகையோட தரத்த வச்சி அசைக்க முடியாத ஆதரவ நமக்கு குடுக்கும்போது, கூடவே இருந்து ஏதோ ஒண்ண சாப்பிட்டுட்டு... சேறு வாரி இறைச்சதயெல்லாம் புறந்தள்ளிறணும்... அதுதான் சரியா இருக்கும்.
நம்மோட பயணம் சரியா இருந்ததுனாலதான் நம்மகூடவே கக்கத்துல இருந்த நாயெல்லாம் வெளிய போய் காலு... காலு...ன்னு கத்துறதப் பத்தி யெல்லாம் நாம வருத்தப்படத் தேவையில்ல அப்படிங்கிறத இந்த நேரத்துல சொல்றேன். இப்படிச் சுட்டிக்காட்டாம இருந்தோம்னா, சொரணையே இல்லாமப் போயிரும் அந்தக் கால்நடைகளுக்கு. நமக்கு ஆதரவளிச்சு அள்ளி அணைச்ச அத்தன உள்ளங்களுக்கும் இந்த நேரத்துல நன்றி சொல்லுற விதமாத்தான், சுஜாதா சார் நமக்கு ஆதரவு குடுத்து பிரஸ் கிளப் கண்டனக் கூட்டத்துல பேசுனதையும், அவங்களோட சேர்ந்து, பெரிய பெரிய ஜாம்பவான்களும், கவிஞர் பெருமக்களும், எழுத்தாளர்களும் தொடர்ந்து நமக்காக குரல் குடுத்ததையும் நினைவுல வச்சுதான் அவங்களுக்குப் மீண்டும் ஒருமுறை நம்ம நன்றிய இந்த நேரத்துல பதிவு செய்றோம். ஏன்னா, என்னிக்குமே மறக்க முடியாத... காலத்துக்கும் நிலைச்சு நிக்கிற ஒரு பதிவு அது.
ஆபீசுக்கு ரெய்டு வந்ததோட நோக்கமே, முதல்ல சொன்னமாதிரி, ஒண்ணு நக்கீரன நிறுத்தணும்... மொரட்டுப் பழியத் தூக்கி நம்மமேல போட்டு, ஆபீஸ இழுத்து மூடணும்...னு இப்படி எல்லாத்தையும் சேர்த்து வச்சு வெயிட்டா ப்ளான் பண்ணித்தான் ரெண்டாவது நாளும் வந்திருக்காய்ங்க.
நம்ம ஆபீஸ்ல பைண்டிங்ல வேல பாத்த ஒண்ணு ரெண்டு பேரு நமக்கு எதிரா ஐந்தாம் படையா மாறிட்டானுக. ஒண்ணுமண்ணா காட்டுலயும் மேட்டுலயும் படுத்து உறங்கி, ஒரே இலையில நான், தம்பி சுப்பு, தம்பி பாலு, எங்க ளோட சேர்ந்த ஐந்தாம்படையும் சேர்ந்து தின்னு... கால் வலிக்க அலைஞ்சு... திரிஞ்சு வந்தோம்.
ஆங்... ஒரே இலைன்னதும் ஞாபகம் வருது. வீரப்பன் காட்டுல இலையில சோறு சாப்பிடுறது இல்ல. ஒரு பிளாஸ்டிக் காகிதம் (மழைக் காகிதம்), 3 அடிக்கு 3 அடி. சுத்தி நாலு பேர் உக்காந்துக்கு வோம். பிளாஸ்டிக் காகிதத்துல ஒவ்வொரு மூலையிலயும் சோறு போட்டு சாப்பிட்டுட்டு, மறுபடியும் கழுவி, அந்த பிளாஸ்டிக் காகிதத்த பைக்குள்ள வச்சுக்குவாய்ங்க. வீரப்பன் காடு... சோறுன்னதும் எனக்கு இந்த ஞாபகம் வந்துச்சு. உங்களுக்கும் இது புது ஐட்டமா இருக்கும்னுதான் சொன்னேன். சரி விஷயத்துக்கு வர்றேன்...
அப்போ அந்த பையனுக மூலமா நம்மளப் பத்துன சில விஷயங்கள நைஸா பேசி வாங்கிட் டாய்ங்க.
அந்த நேரம் பெருமாள் ஸார், போலீஸ்ட்ட, "ஸார்... கோபால் அண்ணாச்சி பத்திரிகைய எப்படிக் கொண்டு வர்றதுங்கிற யோசனையிலதான் எப்பவுமே இருப்பாரு. நீங்க நெனைக்கிறது மாதிரி வேற எங்கயும் போகமாட்டாரு. என்ன நடந்தாலும் சரி... பத்திரிகை சரியான நேரத்துக்கு வரணும்னு ஓடுவாரு. இங்க ஒங்க தொந்தரவுகள் நெறைய இருக்குறதுனால நக்கீரனுக்கான அட்டைப் படம்லாம் வேற, வேற இடங்கள்ல குடுத்து அடிப்பாங்க... நீங்க விசாரிச்சிப் பாருங்கன்னு அவங்கள டைவர்ட் பண்ற மாதிரி பேசியிருக்காரு.
அவிய்ங்க அசர்ற மாதிரி தெரியல...
திடீர்னு மஃப்டியில ஒரு குரூப் வருது. எதையோ போலீஸ்காரய்ங்க காதுல குசு...குசு...ன்னு சொல்லுது. சடசடன்னு எல்லாரும் கீழயிருந்து உடனே கிளம்புறாய்ங்க. என்ன, ஏதுன்னுல்லாம் காரணம் எதுவுமே தெரியாது. பின்னாடிதான் பைண்டிங்ல வேலை பாத்த பரதேசி ஒருத்தன் சொல்லித்தான் பிரிண்டிங் பண்ற ஆப்செட்டு களுக்கு போலீஸ் போயிருக்காய்ங்கன்றது தெரிய வந்துச்சு. அங்கதான் நான் ஒளிஞ்சிருக்கேன்னு ஒரு பொசகெட்ட நாய் சொல்லியிருக்கு. அடேங்கப்பா... பயங்கரமான புலனாய்வு... இவிய்ங்களுக்கு ஜனாதிபதி மெடல் தரணும்!
அந்த ஆப்செட்டுக்கு ஒரு குரூப்பா வேன்ல போய் இறங்கியிருக்காய்ங்க. அன்னிக்கு ஞாயித்துக்கிழமைங்கிறதுனால ஆப்செட்ல யாருமே இல்ல. வாட்ச்மேன் மட்டும்தான் இருந்திருக்காரு. அவர்கிட்ட கோபால் வந்தாரா? எப்ப வந்தார்... உள்ள இருக்காரா? பிரஸ் ஓடுதா... ஓடலையா?, எத்தன மணிக்கு பிரஸ் ஓடும், யாரு ஓனரு? சூப்பர்வைசர் யாரு?'ன்னுல்லாம் கேள்வி மேல கேள்வியா கேட்டுருக்காய்ங்க. வாட்ச்மேன் "எனக்கு எதுவுமே தெரியாது சார், நான் வேலைக்கு சேர்ந்து கொஞ்சநாள்தான் ஆச்சு''ன்னு கைவிரிச்சிட்டாரு.
வாட்ச்மேன் சொன்னதக் கேட்டதுக்கப்புறம் "ஒண்ணுமே பண்ண முடியல்லியே ச்சே... நமக்கு டைமே சரியில்ல'ன்னு நம்மள தேடிவந்தவய்ங்க, தலையில அடிச்சுக்கிட்டு சர்... சர்னு வெளிய கௌம்பிட்டாய்ங்க. ஒருவகையில பார்த்தா அவங்களுக்கு அன்னிக்கு பெப்பேதான்!
இதெல்லாம் எதுக்குன்னா... "மாட்டுக்கறி தின்னும் மாமி' செய்திய அச்சடிச்துக்கான ஆதாரங்கள எப்படியாவது தேடி எடுத்து கைப்பத்தணும்ங்கிற வெறி ஒருபக்கம்...
இன்னொரு பக்கம்... "எப்படியும் இங்கிட்டுத் தான் திரிவான் கோவாலு... அவன கொத்தா தூக்கி டவுசர கழட்டி, அவங்க எஜமானிகிட்ட நல்ல பேர் எடுக்கணும்'னு கிடந்து துடிக்கிறாய்ங்க. நிசமா அன்னிக்கு மட்டும் நான் இவிய்ங்க கையில மாட்டியிருந்தேன்... தொவைச்சிக் காயப்போட்டி ருப்பாய்ங்க. எப்படி வீரப்பன புடுச்சு வச்சு மீசைய எல்லாம் புடுங்கி கொன்னாய்ங்களோ... அந்த கதிதான் எனக்கும் நடந்திருக்கும்.
இன்னிக்கு வரைக்கும் பாக்குற போலீஸ்லாம் எங்கிட்ட கேக்குற முதல் கேள்வியே... "அன்னிக்கு நீங்க எப்படி தப்பிச்சீங்க....?''ன்னுதான்.
(புழுதி பறக்கும்)