(320) ஆணவம்... அகம்பாவம்... அ.தி.மு.க.வை ஆட்டிப் படைத்த ஜெ!
பெரியவர் ஆர்.எம்.வீ. தொடர்கிறார்...
"எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்று அறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி பயன்படுத்துவார்களே, அந்த வார்த்தையை 1946ம் ஆண்டிலேயே எனக்கு அறிவுரையாக எழுதினார்கள்.
கொள்கைபரப்புச் செயலாளராக ஜெயலலிதா அவர்களை நியமிக்கிறபோது அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நான் ஆளாகிவிட்டேன். தமிழ் இலக்கியத்திலே கையில்லாத; வாய் பேசவியலாததை உதாரணமாகக் கொண்டு ஒரு பாடல் இருப்பதாகச் சொல்லுவார்கள். கொளுத்துகிற வெயிலில் ஒரு பாறையின் மீது வெண்ணெய் உருகிக் கொண்டிருப்பதை ஒரு பேச முடியாதவன் பார்க்கிறான். "உருகி வீணாகிறதே' என மற்றவர்களுச்சொல்ல முடியவில்லை. அவனே அந்த வெண்ணெய்யை எடுத்து இடம் மாற்றலாம் என்றால்... அவனுக்கு கைகளில்லை. அதைப்போல, ஜெயலலிதா அவர்கள் புரட்சித் தலைவர் இடத்திலே பெற்ற உரிமையை வைத்துக்கொண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆதிக்கம் செலுத்துகிற அந்த ஆபத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்றாலும் எனக்குள்ளே ஒரு முழுமையான நம்பிக்கை இருந்தது. புரட்சித் தலைவர் ஒருகட்டம் வரைதான் இவரை அனு மதிப்பார்; இந்த ஆதிக்கத்துக்கு அவரே ஒரு இடத்தில் முற்றுப்புள்ளி வைப்பார். அதுவரை பொறுத்துக்கொண்டிருப்போம் என்பதுதான்.
"அப்படியேதான் அடுத்த ஆண்டிலே நடந்தது...' என எழுதியுள்ளார் ஆர்.எம்.வீ.
"எம்.ஜி.ஆர். யார்?' நூலில் ஆர்.எம்.வீ. தொடர்ந்து எழுதியுள்ள "ஜெ.'வோட அரசியல் விளையாட்டைப் பார்க்கலாம்....
"அதிகாரப்பூர்வமாக ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே இணைந்து, கோலாகலமாக கடலூர் மாநாட்டிலே அறிமுகப்படுத்தியதற்குப் பிறகு, நான் எதிர்பார்த்தபடியே காரியங்கள் தொடர்ந்தன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு பட்டத்து இளவரசியைப்போல, யாருக்கும் இல்லாத ஒரு செல்வாக்குப் படைத்த தலைவராக ஜெயலலிதா அவர்கள் தன்னை உருவாக்கிக்கொண்டார். என்ன காரணத்தி னாலோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் இதை அனுமதித்தார்கள்.
தொடர்ந்து 1983-ல் அவர் கொள்கை பரப்புச் செயலாளராக ஆனதற்குப் பிறகு, சுமார் இரண்டு ஆண்டுகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே அவர் தான் என்பதைப் போல ஆர்ப்பாட்டத்தோடு பவனி வந்தார். இதற்கிடையில் ஒரு நாள், அன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருந்த திரு. ஆர்.டி.சீதாபதி அவர் கள், என்னை வந்து சந்தித்தார். அப்பொழுது தான் ஜெயலலிதா அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக ஆக்கப்பட்டிருந்த நேரம், ஆகவே "அவருக்கொரு பாராட்டுக் கூட்டம் புரசைவாக்கத்திலே நடத்த வேண்டும், அதற்கு நான் வந்து கலந்துகொள்ள வேண்டும்' என்று ஆர்.டி.சீதாபதி என்னை அழைத்தார்.
நான் முன்பே கடலூர் மாநாட்டிலே பேசுவதைத் தவிர்த்துவிட்டு வந்தவன். அதற்குப் பிறகு அவர் கொள்கைபரப்புச் செயலாளராக ஆக்கப்பட்டுவிட்டார் என்பதைச் செய்தி மூலம் அறிந்தவன். நடக்கிற நாடகத்தைத் தொலைவிலிருந்து ஒரு பார்வையாளனாகப் பார்த்துக் கொண்டிருப்பவன். ஆகவே, தேவையில்லாமல் நான் பாராட்டுவதற்கு வரவேண்டும் என்று சீதாபதி ஏன் அழைக்கிறார்? என்று எண்ணிக் கொண்டு, "என்னை ஏன் அழைக்கிறீர்கள்?; வேறு யாரையாவது வைத்து நடத்துங்கள்' என்று சொன்னேன். அதற்கு அவர், "தலைவர் தான் உங்களை அனழத்து நடத்தச் சொன்னார்' என்று வற்புறுத்தினார். "நான் வர மறுக்கிறேன் என்று அவரிடத்திலே போய் சொல்லுங்கள்' என்றேன்.
ஆனால் அவர் என்ன எண்ணினாரோ தெரியவில்லை, என்னைச் சமாதானம் செய்து, “"அண்ணே நீங்கள் இதிலே கலந்து கொள்ளுங் கள். தலைவரே விரும்புகிறபோது நீங்கள் ஏன் இவ்வளவு பிடிவாதமாக மறுக்கிறீர்கள்'’என்று என்னை ஒப்புக்கொள்ள வைத்தார். நானும் கூட்டத்திற்குச் சென்றேன். திரு.மாதவன் அவர்களும் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்.
அந்த நேரத்தில் எதிர்கட்சிப் பத்திரிகை கள், இவரை கொள்கைப் பரப்புச் செயலாளராக புரட்சித் தலைவர் நியமித்ததை கேலி செய்து, விமர்சித்துக்கொண்டிருந்தார்கள். ஆகவேதான் புரட்சித் தலைவர் இவர்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும், நான் அந்த நியமனத்தை அங்கீகரித்து பகிரங்கமாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற உணர்வோடும் என்னை அந்தக் கூட்டத்திலே கலந்துகொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன்.
ஆகவே அந்தக் கூட்டத்திலே பேசும் போது, "செல்வி.ஜெயலலிதா அவர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக ஆக்கியிருப்பதை எதிர்கட்சியினர் ஏளனத்தோடு கேலிபேசுகிறார்கள், எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு விவரம் புரியாதவர்கள் என்பதை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக செல்வி. ஜெயலலிதா அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கறார் என்றால்... இந்தக் கொள்கைகளை அவர்தான் உருவாக்கினார்; அவர்தான் இந்தக் கொள்கைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார் என்று பொருளல்ல. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான கொள்கைகளை பொதுக்குழு உருவாக்குகிறது; புரட்சித்தலைவர் உருவாக்குகிறார்; தலைவர்கள் விவாதித்து உருவாக்குகிறார்கள். அதை ஜெயலலிதா அவர்கள் பரப்புவதற்கு இப்பொழுது நியமிக்கப் பட்டிருக்கிறார். ஜெயலலிதா கொள்கையை உருவாக்குபவர் அல்ல, கொள்கையைப் பரப்புபவர். கொள்கை பரப்புச் செயலாளர். கொள்கையைப் பரப்புவதற்கு என்ன தகுதி வேண்டும்? நல்ல கூட்டத்தைச் சேர்க்கிற ஆற்றல் வேண்டும். அந்தத் தகுதியும், ஆற்றலும் ஜெயலலிதா அவர்களிடம் இருக்கிறது என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வார்கள். ஆகவேதான் புரட்சித் தலைவர் இவரைக் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமித்திருக்கிறார்' என்று பேசினேன்.
ஆகவே அதற்குப் பிறகு, இவர் கொள்கைபரப்புச் செயலாளர் என்ற உரிமையோடு, அதிகாரத்தோடு, இன்னும் ஒருபடி அதிகமாக புரட்சித் தலைவரிடத்திலே தனக்கிருக்கிற செல்வாக்கைப் பயன்படுத்திப் பல இடங்களுக்கு பொதுக்கூட்டங்களிலே பேசச் சென்றார். கூட்டங்களை புரட்சித் தலைவர் ஏற்பாடு செய்தார். ஆனால் அவைகளெல்லாம் ஒரு சாதாரண அரசியல் கட்சிப் பொதுக் கூட்டங்களைப் போலவோ, ஒரு சாதாரணத் தலைவர் கலந்து கொள்கிற பொதுக்கூட்டங்களைப் போலவோ நடைபெறாமல், புரட்சித்தலைவரே கலந்து கொண்டால் எவ்வளவு சிறப்பாக ஏற்பாடுகள் செய்து விமரிசையாக நடத்தப்படுமோ அதற்கும் மேலாக லட்சக்கணக்கிலே செலவு செய்து, ஒவ்வொரு பொதுக்கூட்டமும் ஒரு மாநாட்டைப் போல நடத்தப்பெற்றது. அப்படி நடத்தப்பட்ட கூட்டங்களிலே தான், இவருடைய ஆர்ப்பாட்டங்கள், இவருடைய தர்பார்களையெல்லாம் பற்றி பத்திரிகைகளிலே விமர்சிக்கப் பட்டன.
மேடையிலே யாரும் உட்கார முடியாது. ஒரு நாற்காலிதான் போடப்பட்டிருக்கும். மற்றவர்களெல்லாம் நின்றுகொண்டிருப்பார்கள். இவ்வளவு தடபுடலான பந்தாக்களுடன் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் இவர் பேசினாரா என்றால் இல்லை... எழுதித் தந்ததைப் படித்தார். இதற்கு மிகப்பெரிய விளம்பரங்கள் தரப்பட்டன. ஏதோ இவரால்தான் கட்சிக்குப் புதிய வலிவே வந்துவிட்டது என்பதைப்போல ஒரு தோற்றத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தார். "புரட்சித் தலைவரிடத்திலே இவ்வளவு செல்வாக்கு உள்ளவராக இருக்கிறாரே' என்று அஞ்சி, கட்சியின் மேல்மட்டத் தலைவர்களிலிருந்து கீழ்மட்டத் தொண்டர்கள் வரை அவருக்கு அடி பணிந்து இருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
உண்மையான தொண்டர்களுக்கும் மன வருத்தம் ஏற்பட்டதையும் என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. "நேற்று வந்த பெண்மணிக்கு இவ்வளவு செல்வாக்கை புரட்சித் தலைவர் தருகிறாரே? இவ்வளவு இடமளிக் கிறாரே, கட்சியிலுள்ள மூத்த தலைவர்களுக்கெல்லாம் இல்லாத மரியாதை இவருக்குத் தரப்படுகிறதே, மற்ற தலைவர்களையெல்லாம் இவர் எடுத்தெறிந்து பேசு கிறாரே, அகம்பாவத்தோடு மற்றவர்களை நடத்துகிற உணர்வுகள் இவரிடம் மேலோங்கியுள்ளதே' என்றெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
இந்த அம்மையாரை கொள்கைபரப்புச் செயலாளராக ஆக்கி, தலைமைக் கழகத்திற்குத் தினசரி சென்று அலுவல்களைக் கவனிக்கவேண்டும் என்று புரட்சித் தலைவர் சொன்னவுடன், கட்சியையே ஆட்டிப் படைக்கிற அளவிற்கு இவர் மாறிவிட்டார். கட்சியின் மூத்த தலைவர்கள், இவருக்கு தந்தையைப் போன்ற வயதுள்ளவர்கள். குறிப்பாக, மதுரை முத்து போன்றவர்களைக்கூட "நீங்கள் ஏன் கூட்டத்திற்குச் செல்லவில்லை? கொடுத்த கூட்டத்தை ஏன் ரத்து செய்தீர்கள்?' என்றெல்லாம் காரணங்கள் கேட்கும் ஷோ-காஸ் நோட்டீஸ் கடிதங்கள் அனுப்பி யாருக்கு எந்த அளவிற்கு மரியாதை தரவேண்டும் என்ற நாகரீகமே தெரியாமல் எல்லோரையும் தன்னுடைய அதிகாரத்திற்கு அடிபணிய வைக்க வேண்டும் அல்லது ஆதிக்கத்தை அவர்களிடத்திலே காட்ட வேண்டும் என்று ஒரு எஜமானியைப் போல நடந்துகொண்டார்.
ஆகவே, இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் ஒன்றும் அறியாதவர்கள் ஒரு மயக்கத்தோடு இவரைப் பாராட்டிக்கொண்டிருந்தாலும், விவரம் அறிந்தவர் களெல்லாம்...?
(புழுதி பறக்கும்)