ss

(300) அலுமினிய தட்டில் சாப்பாடு!

வாழ்க்கையில் முதன்முதலாக அழுத "ஜெ.!'

"உங்களை கைது செய்ததுக்கான காரணத்த போலீஸ் சொன்னாங்களா?''ன்னு நீதிபதி கேட்க... "ஆமாம்'னு சொன்னாரு ஜெயலலிதா.

Advertisment

"உங்க சார்பா யாராவது வக்கீல் வந்திருக்காரா...?''ன்னு நீதிபதி கேக்குறப்ப...

"யாரையும் போலீஸ் உள்ள விடல''ன்னு ஜெ. வேகமாவும், கோபமாவும் சொன்னாரு.

கொஞ்ச நேரத்துல கறுப்புக் கவுன் சகிதமா பி.ஹெச்.பாண்டியன் வர, அவர நீதிபதி வீட்டுக்குச் செல்ல அனுமதிச்சாங்க. அவர் பின்னாலயே சஃபாரியில வந்த ஒருத்தர், "என்னய்யா நினைச்சுட்டு இருக்கீங்க? ரூல்ஸ் தெரியாதவன்கிட்ட உங்க வேலையக் காட்டுங்க''ன்னு டென்ஷனா கத்த... அவரையும் உள்ள அனுப்பிச்சது போலீஸ்.

Advertisment

நீதிபதி ராமமூர்த்தி முன்னால ஜெயலலிதா சிலை போல நின்னுக்கிட்டிருந்தாரு. நீதிபதி சோபால உக்காந்திருந்தாரு. பி.ஹெச்.பாண்டியன் வாதிட்டாரு. ஜெயலலிதா, சில பாயிண்டுகள அவருக்கு எடுத்துத் தந்தாரு.

"டி.வி. வாங்கியது முறையாக நடந்த ஒன்று. கேபினெட் கூட்ட முடிவு தான் அது. இந்தக் கைது அரசியல் நோக்கம் உடை யது''ன்னு பி.ஹெச். பாண்டியன் வாதாட...

"அரசியல் பத்தி இங்கே பேச வேண்டாம், வழக்கு பற்றி பேச லாம்...''ன்னு சொன்னாரு நீதிபதி.

"ஊழல் எதுவும் நடக்க வில்லை' அப்படீன்னு ஜெயலலிதா விளக்கம் குடுத்தாரு. அதுவரைக்கும் ஜெயலலிதாவ யாரும் உட்காரக்கூட சொல்லல. இருபது நிமிஷத்துக்கும் மேல நின்னுக்கிட்டிருந்தாரு.

"20 நிமிஷம் ஒரு தலைவிய நிக்க வச்சு... போச்சு.... போச்சு... வாழ்க் கையில ஜெயலலிதா 20 நிமிஷம் அதாவது, 1200 நொடி கால் கடுக்க நின்னு, போச்சு... போச்சு...'ன்னு பதறிப்போயிட்டாரு.

"ஜெ.' வீட்லயும் அவருதான் இருந்து சம்மன செக் பண்ணுனாருன்னு அப்ப போலீஸ்ட்ட வாக்கு வாதம் வேற. "முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டத எதுத்துதான் சுப்ரீம் கோர்ட் போறோம். அதுக்குள்ள எதுக்குய்யா அரெஸ்ட்'னு சத்தம் போட... அதமீறி கைதுபண்ணிட்டு வந்ததுல வக்கீல் சாருக்கு ரொம்ப கடுப்பு. அதே கடுப்புலதான் வேகமா நீதிபதி ராமமூர்த்தி வூட்டுக்கும் வந்தாரு. வந்து பாத்தா... "ஐயோ... எங்க குலதெய்வத்த நிக்கவச்சு பேசுறீங் களே... ஐயோ...'ன்னு பதறியடிச்சு.... ஜெய லலிதா உட்கார்றதுக்கு அனுமதி கேட்டு கோரிக்கை வச்சாரு. அந்த கோரிக்கைய நீதிபதி கண்டுக்கவே இல்ல.

"நான் முதலமைச்ச ராக இருந்தபோது குண்டர் சட்டத்தின் கீழும், தடா சட்டத்தின் கீழும் நிறைய பேர் கைதாகி சிறையில் உள்ளார்கள். அதனால ஜெயிலில் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது''ன்னு அப்போ நீதிபதிட்ட சொல்லியிருக்காரு ஜெயலலிதா.

"அதுக்கு தகுந்த ஏற்பாடு செய்யச் சொல்றேன்'னு நீதிபதி சொன்னாரு.

"கலர் டெலிவிஷன் வாங்கியது, அமைச்சரவை எடுத்த முடிவு'' ன்னு ஜெ. சொன்னப்ப, "இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நான் பார்த்துவிட்டேன்''னு சொன்ன நீதிபதி ராமமூர்த்தி, இறுதியா 15 நாள் காவல்ல வைக்க உத்தரவு போட்டாரு. அதனால லிஃப்ட்ல மறுபடியும் இறங்கி, வேனில் ஏறி வலதுபக்கத்துல ரெண்டாவது சீட் வரிசையில ஜெயலலிதா உக்காந்துச்சு.

ஆங்... சொல்லாம விட்டுட்டேன். ஜெயலலிதாவ போயஸ் கார்டன் வீட்டுல கைதுபண்ணி போலீஸ் வேன்ல ஏத்துறப்ப... அவங்க வளத்த நாய்க... சுத்தி நின்னு ரொம்ப சவுண்டா கத்து... கத்து...ன்னு கத்துதுங்க. யாரும் அத அதட்டல. எல்லாம் போலீஸ மெரட்டுறதுக்கான யுக்தியா இருந்துச்சுன்னு ஒரு போலீஸ்காரரு புலம்புனாரு.

ராஜம்மாள்... அதான், ஜெயலலிதாவோட சமையல்காரம்மா.... அந்த ஜீவன்தான் கதறிக் கதறி அழுதாங்க.

dad

பத்திரிகையாளர்கள் "என்ன சொல்ல விரும்புறீங்க?''ன்னு ஜெ.கிட்ட கேட்டதுக்கு...

"இந்த ஆட்சிக்கு அழிவு காலம் தொடங்கி விட்டது. அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை''ன்னு சத்தம் அதிகம் இல்லாம ஜெ. மெதுவா சொல்ல... அவரோட கண்ணுல கண்ணீர் கொஞ்சம் கசிஞ்சுச்சு. வாழ்க்கைல ஜெயலலிதா அழுதத... இப்பத்தான் பத்திரிகைக்காரங்க பாத்தாங்க.

"அந்தம்மா அழுதுச்சுங்கிறத பாத்து சந்தோஷப்படல... ஆனா, இதுக்கெல்லாம் பின்னாடி வச்சு செய்யுமே...' அத நினைச்சுதான் அடிவயிறு கலங்குச்சு.

பத்திரிகைக்காரங்க விடல்ல... "மேடம்! முகத்த கொஞ்சம் இப்படித் திருப்புங்க, ஐயோ... கையை மறைக்காதீங்க, கண்ணாடிய கொஞ்சம் உள்ள தள்ளுங்க'ன்னு சொன்னதுக்கெல்லாம் கிளிப்பிள்ளை மாதிரி செஞ்சாரு. அவரோட கன்னத்துல இருந்த ரோஸ் பவுடர் கொஞ்சம் அழிஞ்சு போயிருந்துச்சு. கர்ச்சீப்ப எடுத்து முகத்த லேசா துடைச்சுக்கிட்டேயிருந்த "ஜெ.'வ நேரா சென்ட்ரல் ஜெயிலுக்கு கொண்டு போனாங்க.

7-12-96 மத்தியானம் சரியா 11:51க்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை மத்திய சிறைச்சாலையில உள்ள சின்ன கேட் வழியா கூனிக்குறுகி உள்ளே வலது காலை எடுத்து வச்சாரு.

ஜெயில் சூப்ரண்டெண்ட் ரூமுக்கு பக்கத்துல உள்ள அறையில ஜெயலலிதாவ உட்கார வச்சாங்க. அந்த ரூம் லைட் இல்லாம கடும் இருட்டாவே இருந்துச்சு.

சிறைத்துறை அதிகாரிங்க, போலீஸ் கொண்டுவந்த கோர்ட் உத்தரவ சரிபார்த்து பதிவுகள செஞ்சு முடிக்கிறதுக்கு இருபது நிமிஷத்துக்கும்மேல ஆச்சு.

hh

இருட்டு அறையில திருதிருன்னு முழிச்சுக்கிட்டு உக்காந்திருந்தாப்டி ஜெயலலிதா. பக்கத்துல, ரெண்டு பெண் வார்டன் மட்டும் நின்னுக்கிட்டிருந்தாங்க. அவங்கள்ல ஒருத்தர அழைச்ச, சிறைத்துறை உயரதிகாரி ராஜ்குமார், "மேடத்தோட கோட்டை கழட்டிடுங்க'ன்னு உத்தரவு போட, பயந்து... பயந்து போய் அந்தம்மாட்ட "கோட்'ட கழட்டச் சொன் னாங்க.

திரும்பி ஒரு முறை... முறைச்சுட்டு... அடுத்த சில நிமிஷத்துல ஜெ.வோட கோட், ராஜ்குமார் அறைக்கு வந்துச்சு. எந்த மறுப்பும் சொல்லாம, முறைச்சிட்டு தன்னோட "கோட்'ட கழட்டிக் குடுத்துட்டாரு ஜெயலலிதா.

ஜெயலலிதா வீட்டுல இருந்து இரண்டு சூட்கேஸ் கொண்டு வந்திருந்தாரு. சூட்கேஸ் சாவிய பாதுகாப்பு அதிகாரி ராஜேந்திரன், சிறை அதிகாரிகிட்ட தர... தொறந்து பார்த்தப்ப, அதுல மாற்றுத்துணிக, மாத்திரை, சோப்பு, சீப்பு, கண்ணாடி, வெளிநாட்டு சென்ட், கனமான ரெண்டு ஆங்கிலப் புத்தகங்கள்லாம் இருந்துச்சு. எல்லாத்தையும் மேஜையில கொட்டி லிஸ்ட் எடுத்த அதிகாரிங்க, புத்தகங்கள புரட்டி, எந்த வகையான புத்தகம் அதுன்னு படிச்சுப் பார்த்தாங்க.

சரியாக 12:30க்கு ஜெயில் உள்பகுதிக்கு ஜெயலலிதாவ அழைச்சுட்டுப் போனாங்க. ஏற்கனவே கூட்டி சுத்தம் செய்யப்பட்ட அந்த தனி அறைக்குள்ள ஜெ. நுழைஞ்சப்ப நேரம் 12:35. ஊழியர்கள்ட்ட ஜெ. தண்ணி கேக்க... உடனடியாக தண்ணி குடுக்கச் சொன்னாரு உயரதிகாரி ராஜ்குமார். அதோட அறைக்குள்ளயே ஒரு மண்பானையில தண்ணியும், கிளாஸும் வைக்கவும் உத்தரவு போட்டாரு.

dd

பெண் ஊழியர் தண்ணி தர... அது குளிர்ந்த நீரா இருந்தது னால, சுடுதண்ணி வேணும்னு ஜெ. கேக்க... அவருக்கு சுடுதண்ணி குடுத்துருக்காங்க. பிறகு எல்லோரும் ஜெ. இருந்த ரூம்ல இருந்து தங்களோட அறை களுக்குத் திரும்பிட்டாங்க.

"நீதிபதிட்ட, ஜெயில்ல முதல் வகுப்பு தரணும்னு கேட்க ஏன் மறந்துட்டாங்க. இப்போ "பி' வகுப்பில் உள்ள அந்தம்மாவால கொசுக்கடியை தாங்கிக்க முடியாதே''ன்னு அதிகாரிங்க பேசிக்கிட்டிருக்கும்போதே... பெண் ஊழியர் ஒருத்தரு, சூப்பிரண்டெண்ட் ராஜ்குமார் அறைக்கு வந்தாரு. இவர்தான் கைதிகளுக்கு சாப்பாடு கொண்டுபோய் தருவாரு. ஒரு மணிக்கு எல்லா கைதிகளுக்கும் போல அலுமினியத் தட்டுல சாம்பார் சாதத்தையும், பொறியலையும் கொண்டுபோய் "ஜெ.'விடம் கொடுத்திருக்காரு. "எனக்கு சாப்பாடு எதுவும் வேண்டாம்'னு ஜெயலலிதா கோபமா சொல்லியிருக்காரு. அந்த பெண் ஊழியர், ராஜ்குமார்ட்ட இதச் சொல்ல... "அப்படியே வச்சுட்டு வந்திருங்க... பசியெடுத்தா சாப்பிடுவாங்க''ன்னு அவரு சொல்லியிருக்காரு.

சூப்பிரண்டெண்ட் ராஜ்குமார் வேற யாருமில்ல... ஜெயலலிதாவால பழிவாங்கப் பட்டவங்கள்ல ஒருத்தர்...

(புழுதி பறக்கும்)