(298) "ஜெயலலிதாவை கைது செய்ய பயமா?'' -சீறிய நீதியரசர் சிவப்பா!
சிவப்பா...! நீதியரசர் சிவப்பா...!
1996ல ஜெயலலிதாங்கிற பிம்பத்தை தவிடுபொடியாக்குன நீதியரசர். சென்னை உயர்நீதிமன்றத்துல பதவி வகிச்ச இன்னொரு டி.குன்ஹா.
ஓப்பன் கோர்ட்ல அரசு வழக்கறிஞரப் பாத்து "மிஸ்டர் பி.பி. ஏன் இத்தனை ஆதாரங்க இருந்தும் ஜெயலலிதாவ கைது பண்ணல. உங்களுக்கு அவர் மேல பயமா...?'ன்னு கேட்டவரு.
"என்னப் பாத்து ஆஃப்ட்ரால் ஒரு நீதிபதி பயமான்னு கேக்குறாரு. அதுவும் என்னப் பாத்து ஓப்பன் கோர்ட்ல கேக்கலாமா? கேட்டுட்டு அவரு வீடு போயிரலாமா? இன்னமும் அவரு அந்தப் பதவியில இருக்கலாமா...? என்ன செய்றீங்க? என் ஏவல் அடிமைகளே...''ங்கிற அளவுக்கு ஒரே கோபம்.... டாம் டூம்ன்ன்னு குதியோ குதி...!
ஐயய்யோ... ஆத்தா சாமியாடிருச்சு. இனி அந்த நீதிபதிய ஏதாவது செய்யலன்னா... போயஸ் கார்டன்ல இருந்து என்னென்ன சுனாமி வருமோ தெரியாது. கட்சிக்காரங்க, பொறுப்புல இருக்கிறவங்க எல்லாரும் ஆளாளுக்கு அங்கயும், இங்கயும் பிதுங்கி ஓடுறாய்ங்க. ஆத்தாவ குளிரவைக்கணும்னா... நீதிபதிய ஏதாவது செஞ்சாதான் சாமி மலையிறங்கும்னு நேரம் பாத்துக்கிட்டே இருந்தாய்ங்க.
சரியா 1998 எம்.பி. தேர்தல். அ.தி.மு.க. எம்.பி.க்கள் தயவுல வாஜ்பாய் மத்தியில ஆட்சி அமைச்சார். நித்திய கண்டம் பூரண ஆயுசுங்கிற மாதிரி 13 மாசம் 13 நாளு மட்டுமே இருந்துச்சு அந்த ஆட்சி. அந்த 13 மாசத்துல ஜெயலலிதாவோட தொந்தரவு தாங்காமத்தான், இந்தம்மா தயவால ஆட்சியே வேணாம்னு நொந்தே போயிட்டாரு வாஜ்பாய். அது பெரிய கதை!
அந்த 13 மாசமும் அதாவது... 400 நாட்களும், தினமும் ஒரு கோரிக்கை அல்லது மிரட்டல் விடாம இருந்ததே இல்ல ஜெயலலிதா. வாஜ்பாயும் தனது பதவியை காப்பாத்திக்க ஜெயலலிதா கோபிக்கிற சமயத்துல எல்லாம் அவர சமாதானம் செய்ய யாரையாவது தன் சக அமைச்சர் பெருமக்கள சென்னைக்கு அனுப்பி அவர்ட்ட (வேறு வழியில்லாம) சரணாகதி ஆவாரு. அப்படி சமாதானம் பண்ணவந்த மத்திய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த்சிங் போயஸ் கார்டன் வாசல்லயே 1 மணி நேரம் காத்துக் கிடந்து அம்மணியப் பாக்க முடியாம திரும்புன கதையெல்லாம் ஏராளம். திஸ் இஸ் ஜெயலலிதா...!
தனக்கு எதிரா இருந்தவங்க, தனக்கு எதிரா பேசுறவங்க... அது நீதிபதியா இருந்தாலும், பிரதமரா இருந்தாலும் அவங்கள பழிவாங்க வாஜ்பாய் ஆட்சிய பயன்படுத்திக்கிட்டாங்க ஜெயலலிதா.
வாஜ்பாயோட பதவி ஆசைய தெரிஞ்சு அவர சுழற்றி... சுழற்றி அடிச்சாங்க. அப்படி வாஜ்பாய் ஆட்சியில ஜெயலலிதாவோட வற்புறுத்தலால பழிவாங்கப்பட்ட ஒருத்தர்தான் நீதியரசர் சிவப்பா.
இந்தம்மாவுக்கு ஏன் சிவப்பா மேல இத்தன பழிவெறி... முதல்ல சொன்ன ஏன்? பயமா... ஜெயலலிதா மேலன்னு கேட்டது மட்டுமில்ல... அதோட நிறைய இருக்கு.
அந்த லிஸ்ட் பெருசா இருக்கும்... பாருங்க...
1) ஜெயலலிதா மீதும் அவரது உடன்பிறவா சகோதரி மீதும் -ஜெயலலிதா அரசில் அங்கம் வகித்த அமைச்சர்கள் சிலர் மீதும் தமிழக அரசு தொடுத்த வழக்குகள் தொடர்பாக, ஜெ.வும் அவரது பரிவாரங்களும் முன்ஜாமீன் கோரி போட்ட மனுக்களை விசாரித்த சிவப்பா -அவர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார்.
2) விஜயன் என்ற வக்கீலை தாக்கிய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. தலைவர்களை (எஸ்.டி.எஸ்., ஆதி ராஜாராம் உள்ளிட்டோர்) ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி போட்ட மனுக்களையும் சிவப்பா தள்ளுபடி செய்தார்.
3) ஜெயலலிதாவே முன்ஜாமீன் கோரியபோதும் -அவரது கோரிக்கையை ஏற்க மறுத்தார் அவர். "ஜெயலலிதா மீதான குற்றச் சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறது''ன்னு ஓப்பன் கோர்ட்ல போல்டா சொன்னவரு.
4) அதுமட்டுமின்றி "இன்னும் ஏன் ஜெயலலிதாவை கைது செய்யத் தயங்குகிறீர் கள்?' என்றும் கேட்டார் நீதிபதி சிவப்பா.
5) அப்படி அவர் கேட்ட மறுநாள்தான் தமிழக அரசு அவரை கைது செய்தது.
6) 28 நாட்கள் ஜெயலலிதா சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது சிவப்பாவின் தீர்ப்பால்தான் என்று ஜெயலலிதாவும், அவரது எடுபிடிகளும் சிவப்பா மீது கோபம் கொண்டனர்.
7) "ஆங்கிலம் எனக்குத் தெரி யாது. ஆவணங்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தரவேண்டும் -என்று சசிகலா குழுவினர் கேட்டதற்கிணங்க தமிழக அரசு மொழிபெயர்ப்பு பணிகளுக்காக ஊழியர்களை நியமித்தது. "இந்த நியமனம் செல்லாது, இந்த நியமனங்களில் 69 சத இட ஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படவில்லை' என்று அ.தி.மு.க. எம்.பி. தளவாய் சுந்தரமும் இன்னொருவரும் தொடுத்த வழக்கை விசா ரித்த நீதிபதி சிவப்பா, "தற்காலிக பணி நிய மனங்களுக்கு இட ஒதுக்கீடு செய்யத் தேவை யில்லை'' என்று கூறி தள்ளுபடி செய்துவிட்டார்.
8) கரூர் அருகே காவிரி ஆற்றுப் படுகையில் ராமசாமி என்பவருக்கு 25 ஏக்கர் பரப்பில் மணல் எடுக்க ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த மணலை அவர் கேரளாவுக்கு அனுப்பி மாதம் ஒன்றுக்கு 1 கோடியே 20 லட்சம் வரை சம்பாதித்ததாக கூறப்படுகிறது. இவருக்கு வழங்கப்பட்ட அந்த அனுமதி முறை கேடானது என்று தொடரப்பட்ட வழக்கை நீதிபதி சிவப்பா விசாரித்துவந்தார்.
விசாரணையின்போது ஒரு கட்டத்துல "29 கோடி ரூபாய் வரைக்கும் அபராதம் விதிக்கக்கூட இடமிருக்குது''ன்னு நீதிபதி சிவப்பா கூறியிருந்தாரு. இந்த வழக்குல வக்கீல்கள் வாதம் முடிஞ்சு, தீர்ப்பு 5-3-99க்கு ஒத்திவைக்கப்பட்டிருந்துச்சு.
இந்த தேதிதான் முக்கியம்... 5-3-99
நல்லா கவனிங்க மேப்படி கரூர் -காவிரி ஆறு மணல் கொள்ளை மேட்டர்ல, சிவப்பா கோர்ட் விசாரிச்சு 5-3-99ல தீர்ப்பு. அந்தத் தீர்ப்பு, ராமசாமிங்கிறவருக்கு எதிரா வரும்னு ஓப்பன் கோர்ட்லயே பேசிக்கிறாங்க. மேப்படி ராமசாமி நம்ம அ.தி.மு.க. தம்பிதுரைக்கு வேண்டப்பட்டவரு. புரிஞ்சவங்க புரிஞ்சுக்கங்க... அம்புட்டுதான்!
4-3-99 வியாழனன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பா ஒரு வழக்க விசாரிச்சுக்கிட் டிருந்தப்ப -மத்திய சட்ட அமைச்சர் தம்பிதுரை அனுப்புன ஃபேக்ஸ் செய்தி ஒண்ணு அவர்கிட்ட தரப் பட்டுச்சு. அதுல...
"அரசியல் சட்டம் 217(3) விதியின்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன், குடியரசுத் தலைவர் (சிவப்பாவின் வயது என்ன என்பது பற்றி) கலந்து ஆலோசித்தார். நீதிபதி சிவப்பாவின் வயதை அவர் 11-12-36 அன்று பிறந்தததாகவே கணக்கிடவேண்டும் என்று குடியரசுத் தலைவர் முடிவு செய்துள்ளார்'' என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
இந்த ஃபேக்ஸ் செய்திய வாஜ்பாய் அரசுல சட்ட அமைச்சரா இருந்த தம்பிதுரை, நீதிபதி சிவப்பாவுக்கு அனுப்பி வச்சாரு. இந்த ஃபேக்ஸ் செய்தி அடிப்படையில -அதாவது சிவப்பாவோட பிறந்த தேதி 11-12-36தான்னு குடியரசுத் தலைவர் முடிவு செய்திருக்கிறதா கூறப்பட்ட அடிப்படையில 1998 டிசம்பர் மாசம் 10-ந் தேதியே அவருக்கு வயது 62 பூர்த்தி ஆயிடுது. அன்னியோட அவர் பதவிக் காலம் முடிஞ்சு ஓய்வு பெற்றுருக்கணும்.
ஃபேக்ஸ் செய்தி பத்தி உரியவங்கள்ட்ட கலந்து பேசுன தற்காலிகத் தலைமை நீதிபதி என்.கே.ஜெயின், ஃபேக்ஸ் செய்தி அடிப்படை யில, நீதிபதி சிவப்பாவின் பதவிக்காலம் முடிவடைஞ்சுட்டதுனால, "அவர் வழக்குகள விசாரிக்கக்கூடாது'ன்னு உத்தரவு போட்டாரு. இந்த உத்தரவு வாய்மொழியா... பதிவாளர் மூலம் நீதிபதி நடராஜனோட சேர்ந்து ஒரு வழக்கை விசாரிச்சுக்கிட்டிருந்த நீதிபதி சிவப்பாவுக்கு தெரிவிக்கப்பட்டுச்சு. நீதிபதி சிவப்பா உடனடியா, தான் விசாரிச்சுக்கிட்டிருந்த வழக்க விட்டுட்டு -நீதிபதி இருக்கையில இருந்து இறங்கி தன்னோட அறைக்குப் போயிட்டாரு.
நீதிபதி சிவப்பாவை இப்படி திடீர்னு பதவியில இருந்து நீக்க -நீக்கியவங்க சார்பா சொல்ற காரணம் என்னன்னு, சட்டத்துறை அமைச்சர் தம்பிதுரை வாக்குமூலமாவே சொல்றாரு.
அதன் சுருக்கம்...
சிவப்பாவின் உண்மையான பிறந்ததினம் 11-12-36 என்பதுதான். அது பின்னர் 11-12-38 என்பதாக சிவப்பாவின் முயற்சியால் திருத்தப்பட்டு விட்டது.
இதுகுறித்து பெங்களூரைச் சேர்ந்த சமூகநல ஊழியர் எஸ்.வி.சிங்க்ரே "நீதிபதி சிவப்பா தமது பிறந்ததினம் பற்றிய ரிக்கார்டுகளை மாற்றி எழுதிவிட் டார்'' என்பதாக ஒரு புகார் மனுவை குடியரசுத் தலைவருக்கு 1997-ம் வருடம் நவம்பர் மாதத் தில் அனுப்பி வைத்தார்.
மத்திய அரசின் பரிசீலனைக்காக இந்தப் புகார் மனு, அதே வருடம் டிசம்பர் மாதத்தில் குடியரசுத்தலைவரின் செயலகத்தால் மத்திய நிதித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
1997 டிசம்பரில் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட அந்த புகார் மனு பற்றிய கோப்பினை 7-1-98 அன்று அப்போது மத்திய சட்ட நீதித்துறை யின் இணை அமைச்சராக இருந்த காலப் -மீண்டும் குடியரசுத் தலைவருக்கு திருப்பி அனுப்பினார். அதில் "இது பற்றி அரசியல் சட்ட விதி 217 (3)ன்படி குடியரசுத் தலைவர்தான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.பூஞ்சியுடன் குடியரசுத் தலைவர் கலந்தாலோசித்தார். தலைமை நீதிபதி பூஞ்சி, "இது குறித்து நீதிபதி சிவப்பாவிடம் விளக்கம் கேட்க வேண்டும்'' என்றார்.
மீண்டும் அந்தக் கோப்பு நீதித்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. 3-8-98 அன்று நீதித்துறை "நீதிபதியிடம் விளக்கம் கேட்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு'' என்று குறிப்பெழுதி, மீண்டும் அந்த கோப்பினை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைத்தது
-இப்படியாக தம்பிதுரை, ரெண்டு பக்கம் இருக்கிற ஒரு அறிக்கையில குறிப்பிட்டி ருக்கிறாரு.
அதுக்குப் பின்னாடி, உச்ச நீதிமன்ற தலைமையுடன் கலந்து ஆலோசித்து சிவப்பாவின் வயதை 11-12-36ல் பிறந்தவர் என்ற அடிப்படையிலேயே கணக்கிட வேண்டும் என்பதாக குடியரசுத் தலைவர் முடிவு செய்தார் என்றும் -அதையே தாம் ஃபேக்ஸ் மூலம் சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்ததாகவும்...
(புழுதி பறக்கும்)