(147) என் மீசையை காப்பாத்த நான்பட்ட பாடு!
போன இதழ்ல முடிக்கும்போது... "மீசை கதை ஒண்ணு'ன்னு சொல்லியிருப்பேன்.
நான் வேற தலைமறைவுல இருக்கேன். எம்மேல உரிமை மீறல் பிரச்சினை வேற ஒரு பக்கம் போய்க் கிட்டிருக்கு. அதுக்கு என்ன செய்றது, ஏது பண்றது அப்படிங்கிற பத்தி படுசீரியஸா ஆலோசனை போய்க் கிட்டிருக்கு.
இதுக்கிடையில... நக்கீரன் ஆரம்பிச்சது 1988. 1991ல ஆட்சி மாற்றம் ஏற்படுது. ஜெயலலிதா... அரக்கி ஆட்சி. அப்ப... ஆட்கள வச்சு எதிரிகள அடிக்கிறது, செய்தி போட்டா... ஆட்டோவுல ஆட்கள அனுப்பி ஆபீஸையே நொறுக்குறதுன்னு நடந்துச்சு. நெறைய இடங்கள்ல நான் சொல்லியிருப்பேன். குறிப்பா முன்னாடி நான் எழுதுன "சேலஞ்ச்'லயும் "யுத்த'த்துலயும் சொல்லியிருப்பேன், "போர்க்கள'த்துலயும் சொல்லியிருக்கேன்.
83லிலயே நான் மீசை வைக்க ஆரம்பிச்சிட்டேன். அடிக்க ஆளு அனுப்புறாங்கள்ல... அப்போ ஆட்டோவுல ஆளு வர்றான் அப்படின்னா, நாம உடனே அவனுகள எதுத்து அடிக்க முடியாது. சட்டத்துல நம்ம அடிச்சோம்னா அத கொலைக்குத்தமா ஆக்கியிருவாய்ங்க. அது ஒண்ணு போதும், நாம தலைமறைவாகுறதுக்கு. அதனால பெரிய சிக்கல்கள்லாம் வரும். பத்திரிகைய தொடர்ந்து நடத்த முடியாது. நிறைய நிர்வாகச் சிக்கல்கள் வரும். அதனால நாம எப்பவுமே கையில கேடயத்தை வச்சு, அடிகளத் தாங்கிக்கிறோம்... இன்னிக்கு வரைக்கும் தாங்கிக்கிட்டே தான் இருக்கோம்.
35 வருஷமா நாம எதுத்து அடிக்கவே இல்ல! எதுத்து எதுல அடிக்கிறோம்னா... வலிமையான சகல சக்திவாய்ந்த பேனாவாலதான் அடிக்கிறோம். அத வச்சுத்தான், நம்மள அழிக்க வர்றவன், நம்ம முதுகுல குத்துறவன், நம்மள இல்லாம ஆக்கணும்னு நினைக் கிறவன்... சொங்கி, சோமாறிப் பசங்க, பொட்டப் பசங்க, நம்ம காச தின்னுட்டு பொரட்டு பண்ணுன பிச்சைக்காரப் பசங்க, நம்ம சோத்த தின்னுட்டு நம்ம கண்ணுல குத்த வர்ற எச்சப் பசங்க. மானங்கெட்ட... நன்றிகெட்ட நாதாரிங்க... இப்படிப்பட்டவனுகள பூரா பேனாங்கிற வலிமையான ஆயுதத்த வச்சுதான் நாம அடிக்கிறோம். அதத் தவிர்த்து வேற எந்த ஆயுதத்தையும் நாம கையில எடுக்குறதே இல்ல. அப்படி எசகுபிசகா எதை யாவது எடுத்துட்டோம்னா அவ்வளவுதான்... முடிஞ்சுச்சு கதை!
அந்த நேரம், ஒரு சின்ன யோசனைதான். நம்மள அடிக்கிறதுக்கு ஆளுங்க வர்றாங்கன்னா, நம்மள மாதிரி மீசை வச்ச ஆளுங்க கொஞ்சம்பேர வேலைக்கு வச்சுக்கலாம்னு மதுரை, கமுதி, சிவகங்கை, அருப்புக் கோட்டை, ராமநாதபுரம்...னு தேடி ஒரு 10 பேர வேலைக்கு எடுத்தேன். மதுரையில 3677லின்னு பச்சைக் கலர்ல ஒரு அம்பாசிடர் கார். இப்போ எங்க நக்கீரன் காசாளராவும், நக்கீரன் (ச) ஸ்டுடியோ மேனேஜராவும் இருக்கிற தம்பி ஆனந்த் மேற்பார்வையிலதான் அப்போ அந்த கார் இருந்துச்சு. அந்த கார் டிரைவரோட பேரு ராமலிங்கம். அந்த ராமலிங்கத்துக்கிட்ட சொல்லி. நம்மள மாதிரி மீசை வச்ச ஆட்கள் கொஞ்சபேரு வேலைக்கு வேணும்னு சொன்னேன். அவருதான் கொஞ்சம்பேரை செலக்ட்பண்ணி இங்க வேலைக்கு கொண்டுவந்து விட்டாரு.
அவரு சேர்த்துவிட்ட ஆட்கள் 10 பேர்ல 9 பேரு இப்ப இல்லன்னு வச்சுக்கங்களேன். சிலபேரு வேலைய விட்டுப் போயிட்டாங்க, சிலபேர் ஓடிப்போயிட்டாங்க. சிலபேரு நமக்கு எதிரா திரும்புனானுங்க. அதுல ஒருத்தன் பெருமாள் தேவர்னு பேரு. சேத்தூர்ங்கிற ஊரச் சேர்ந்தவன். படுவா என்ன பண்ணுனான்னா... நடராஜன் ஏற்பாட்டுல எஸ்.டி.எஃப். கூடாரத்துக்குள்ள போயிட் டான். அவர்ட்ட நல்லபேரு எடுக்கணும்னு என்ன போட்டுத் தள்ள ரேட் பேசி, ரொம்ப நாளா நாங்க இருந்த ஹாரிங்டன் ரோட்டு முக்குலயே சாமான வச்சுக் காத்துக் கிடந்தானாம்.
இது எப்படி?
நீங்க நினைப்பீங்க, இப்பதான் எடுவட்ட நாயி ஒண்ணு சிவ... சிவ...ன்னு அலையுதே, அப்பவே இப்படித்தானாண்டு. எட்டப்பன் காலத்துல இருந்தே இது இருக்கே. ஏன், கட்டபொம்மனுக்கு ஒரு புதுக்கோட்டை மகாராஜா இருந்தார்ல அது மாதிரி. அதுக்காக நான் வீரபாண்டியர் இல்ல. சாதாரண பியூனோட பையன் கோபால்தான். இருக்கட்டும்...! அந்தப் படவா பொறுக்கி நாயும் இப்ப செத்துருச்சா, பொழைச்சுக் கிடக்காண்டு தெரியாது. நாசமாப் போக... சரி, டிராக் மாறாம போவோம்...
அப்படி 9 பேரும் இப்ப இல்ல. அதுல மிஞ்சி இப்ப நம்மகூட இருக்கிறது கண்ணன்னு ஒருத்தரு. நாலுகோட்டைக் காரரு. சிவகங்கையில இருந்து திருப்பத்தூர் போற ரூட்ல... பக்கத்துலதான் நாலு கோட்டை. அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பையன். அவன் நம்மள மாதிரி மீசை வச்சிருப்பான்... பாத்தீங்கன்னா தெரியும். அந்தப் பையன் என்ன மாதிரியே முடி வெட்டியிருப்பாப்டி. என்ன மாதிரி மீசை வச்சிருப்பாப்டி. சபாரி டிரெஸ் போட்டுருப் பாப்ல.
அந்தப் பிரச்சினை நடந்துக்கிட்டி ருக்கும்போது... அதுதான், மாட்டுக்கறி மாமி -அடிதடின்னு. அதுல முதநாள் கூத்து முடிஞ்சு, ரெண்டாவது நாள் கூத்து, மூணாவது நாள் கூத்து... இப்படியெல்லாம் போய்கிட்டிருக்கும்போது, அப்ப வீட்டுக்கும் ஆபீசுக்கும் நம்மாளுதான் செக்யூரிட்டி. கூட சிவக்குமார்னு ஒரு செக்யூரிட்டி இருந்தாரு. இப்ப வெளிய, அங்க இங்கன்னு கண்ணன் போய்க்கிட்டிருக்கும்போது ஒண்ணுமில்ல... ஆனா அவன் லாங்க்ல போறத யாராவது பார்த்தா... நான்தான் சபாரி டிரெஸ்ல போறேன்ங்கிற மாதிரியே இருக்கும்.
ஒருகட்டத்துல என் காதுக்கே அந்த ரூமர் வந்துச்சு. "அண்ணே என்னண்ணே, இவ்வளவு பிரச்சினை இருக்கு... நீங்க ஏன் ஆபீஸுல இருக்கீங்க. முதல்ல வெளிய கிளம்புங்கங்கண்ணே. போலீஸ் நீங்க அங்கதான் இருக்கீங்கன்னு சொல்லிக்கிட்டிருக்காங்கண்ணே. நீங்க உடனே கிளம்புங்க...''ன்னு சொல்லுவாங்க.
"அடப்போய்யா... நான் ஏன் அங்க இருக்கேன். நான் ரொம்ப தொலவா இருக்கேன்'' அப்படின்னேன்.
"இல்லண்ணே... போலீஸ் ஆதாரப்பூர்வமா சொல்றாங்கண்ணே. அவரு அங்கதான் இருக்காரு. வெளிய வந்து, வந்து போய்க்கிட்டிருக்காரு. நாம போனா லபக்குன்னு புடிச்சுப்புடலாம்னு சொல்லிக்கிட்டிருக்காங்கண்ணே'' அப்படின்னு எனக்குச் சொன்னாங்க.
எனக்கு ஒரே குழப்பம். யார பாத்திருப்பாங்க... எதை வச்சு அப்படிச் சொல்றாங்கன்னுதான் யோசிச்சுக்கிட்டிருந்தேன்... கண்ணன சந்தேகப் படவே இல்ல.
அப்போ வீட்டுக்கு போன் பண்ணுனேன். பெரியமகள்தான் போன எடுத்தாங்க. அவங்க அப்ப மணிப்பால் யுனிவர்சிட்டில படிச்சிக்கிட்டிருந் தாங்க. இந்தப் பிரச்சினைக்காக அந்த நேரம் வீட்டுக்கு வந்திருந்தாங்க.
அவங்கதான் போன எடுத்தவுடனே, "அப்பா இங்க ஒரே கூத்துப்பா''ன்னு சொன்னாங்க.
"என்னடா என்ன கூத்து? வேற எதுவும் பிரச்சினை இல்லியே?''ன்னேன்.
"இல்லப்பா ஒரே கூத்து... கண்ணன் மாமா வந்து மீசைய எல்லாம் மறைச்சுக்கிட்டு, தொப்பி போட்டுக்கிட்டு நிக்கிறாரு. நான், அம்மால்லாம் அதப் பாத்துப் பாத்து சிரிச்சுக்கிட்டிருக்கோம்'' அப்படின்னாங்க.
"அப்படியா? அப்படி என்னடா நடந்துச்சு?''ன்னேன்.
"மீசைய ஒரு துண்டு வச்சு மறைச்சுக் கட்டிக்கிட்டு, தலையில ஒரு கேப் போட்டுக்கிட்டு, நிக்கிறதப் பார்த்தா, "நீங்கதான்னு நெனைச்சு அவர அடிச்சிடப்போறங்க'ன்னு கண்ணன் மாமா பயந்து... பயந்து நின்னுக்கிட்டிருக்காரு'' அப்படின்னாங்க.
"அப்பத்தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு, ஓ! அவன வச்சுத்தான் நான் அங்க இருக்கிறதா கேட்டாங்களா அப்படி''ன்னு.
இந்த மீசையப் பத்தி நெறையபேரு, "ஏன் இந்த மீசைய வச்சிருக்க?, எப்ப இருந்து வச்ச?'' அப்படின்னு கேட்டிருக்காங்க.
என் மீசைய காப்பாத்துறதுக்கு நான் படுற பாடு எனக்கு மட்டும்தான் தெரியும்.
ஆனா அந்த மீசையே ஒருத்தனுக்குப் பயத்த உண்டுபண்ணியிருக்குதுங்கிறது இருக்குல்ல... அத நினைச்சு எனக்கும் கொஞ்சம் சிரிப்புதான்.
இதுக்கிடையில இன் னொரு கூத்து வேற நடந்து போச்சு.
எனக்கு அந்த நேரத் துல அடைக்கலம் குடுத்தவர் ஒரு டாக்டர். அவரோட அண்ணன் ஒரு போலீஸ் காரர். எங்க வந்து முட்டுது பாருங்க. ரெண்டுபேருக்கும் கொஞ்சநாள் தொடர்பே இல்லாம இருந்திருக்காங்க. நமக்கும் போலீஸ்காரங் களுக்கும்தான் ஏழாம் பொருத்தமாச்சே! முன் னாடியே நான் சொன்னது போல, பல இடங்கள்ல சொல்லியிருக்கேன். அதுல ஒண்ணு, ரெண்டு நல்ல போலீஸ்காரங்களும் இருந்தாங்க. அந்த நல்ல போலீஸ்காரங்களும், அவங்க ரிட்டையர்டு ஆனபிறகுதான் உண்மைய நம்மகிட்ட சொல்லுவாங்க.
சமீபத்துல முன்னாள் டி.ஜி.பி. அலெக்ஸாண்டர நானும் "நெட்' தம்பி வசந்த்தும் சந்திச்சோம். வேற ஒரு பிரச்சினைக்காக. அப்போ அவரு நிறைய விஷயங்களச் சொன்னாரு. (அதை உங்களுக்கு அப்புறமா சொல்றேன்)
டாக்டர் நண்பர் அந்தக் காட்டுக்குள்ள ஒரு அறை குடுத்திருந்தாரு. நான் அங்கேயேதான் இருப்பேன். ஏன்னா... வெளியில போகக்கூடிய சூழ்நிலை அப்ப இல்ல. அதையும் மீறி மரங்களுக்கு நடுவுல யாருக்கும் தெரியாம நடைபயிற்சிக்காக கொஞ்ச நேரம் வெளியில உலாத்திக்குவேன். இருக்குற இரண்டு அறையில அந்த நேரம் பாத்து ஆட்கள் யாராவது வர்றது தெரிஞ்சுதுன்னா டக்குன்னு திரும்பவும் அறைக்குள்ள ஓடிருவேன். ஏன்னா, யாராவது நம்மளப் பாத்து, "இவரு இங்கதான் இருக்காரு'ன்னு சொல்லிட்டா போச்சுல்ல...! ஏன்னா அந்த நேரத்துல கட்சிக்காரய்ங்க யாராவது நம்மள பாத்துட்டா? அது இன்னும் வேற சிக்கல் ஆயிருமே!
நெறையவாட்டி சொல்லியிருப்பேன். போலீசுக்கும் நமக்கும் ஏழாம் பொருத்தம்... ஏழாம் பொருத்தம்னுட்டு.
இந்தமுறை பார்த்தீங்கன்னா அறையிலேயே அடைஞ்சே கிடந்தேன். ஒரே ஒரு தம்பி மட்டும் எனக்குத் துணையா இருந்தாரு. அவருதான் எனக்கு சாப்பாடு, பேப்பர் எல்லாமே வாங்கிக் குடுப்பாரு.
ஒருநாளு ராத்திரியாகப்போற நேரம். அறைக்கு தாழ்ப்பாள் போட்டுட்டு நான் உள்ள உக்காந்திருந்தேன். அப்ப வெளிய சத்தம் கேக்குது. நான் காத, கதவுக்குப் பக்கத்துல வச்சு கேக்குறேன். "இந்த ரூம் ஏன் பூட்டியிருக்கு? இதுல யாரு இருக்கா?''ன்னு ஒருத்தரு கேள்வி கேக்குறது காதுல விழுது. அதக் கேட்டவுடன நான் பதறிட்டேன்... யாரோ போலீஸ் வந்துட்டாங்க போலன்னு. இல்லியே... இங்க அவ்வளவு ஈஸியா போலீஸ்லாம் வந்துர முடியாதுன்னு மனசுக்குள்ள வேற சொல்லிக்கிட்டேன். ஆனாலும் அந்த சவுண்ட், போலீஸ்காரங்க சவுண்ட் மாதிரியே இருந்தது.
"இங்க வாய்யா. ரூம தொற. உள்ள யாரோ இருக்குறது மாதிரி இருக்கே?'' அப்படின்னு
போலீசுக்குன்னு சில மோப்பம் இருக்குல்ல. அந்த மோப்பத்துல கேள்வி வருது.
நான் உடனே என்ன பண்ணுனேன்...
"டக்'னு லைட்ட ஆஃப் பண்ணிட்டேன்.
(புழுதி பறக்கும்)