(119) ஐந்தாம்படையாக மாறிய சகுனி!
"ஜெ.' வீட்டில் கிடைத்த ஃபேக்ஸ் நகலில் உள்ள பாயின்ட்ஸ் தொடர்ச்சி...
"கொள்ளேகால் காவல்நிலையத்தில் கோபாலுக்கு எதிராக இருக்கும் சில குறிப்பிட்ட சட்டவிரோதச் செயல்பாடுகள் மற்றும் அரசுக்கு எதிராகச் செயல்பட்டது தொடர்பான வழக்குகளை திரும்பப் பெற பேரம் பேசியுள்ளார்'' -இது ஒரு பாயின்ட். அதுக்கடுத்து...
"சுதந்திர தமிழ்நாட்டை உருவாக்க பெரும் சதியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. தங்கள் சதியைச் செயல்படுத்த முக்கிய நபர்கள் கடத்தப்பட்டும், குண்டுகள் வெடிக்கப்பட்டும்... என பல செயல்கள் நடத்தப்பட்டுள்ளன.
நக்கீரன் கோபால் இவ்விஷயத்தில் பின்வரும் வழக்குகளில் உதவியாக இருந்தாரா? என விசாரிக்கப்பட்டு வருகிறது...''
கொள்ளேகால்ங்கிற ஊரு கர்நாடகத்துல இருக்கு. கொள்ளேகால் கோர்ட்ல என்மேல எந்த வழக்கும் கிடையாது. இன்னிக்குப் போய் பாத்தாக்கூட தெரியும்.
கொள்ளேகால் -நக்கீரன் மேல முதல் முதலா ஈஹள்ங் சர்: 100/2000-ன்னு ஒரு வழக்கு. அதுல அக்யூஸ்ட் யாருன்னா ஒரு பேதியில போறவன் ஒருத்தன்... தாயா, பிள்ளையா பழகிட்டு எவனோ போடுற எச்ச சோத்துக்காக எட்டப்பன் ஆன சில்லறைப்பய. அவன் பேர சொல்றதுக்கே நமக்கு நா கூசுது.
அந்தச் சிறுகன் மேல ஜெயலலிதாவும், தேவாரமும் சேர்ந்து போட்ட கொடுமையான வழக்குக ஏராளம். அத்தன வழக்குல இருந்தும் மேப்படி சண்டாளன பொத்திப், பொத்திக் காப்பாத்தி... அந்த எடுவட்ட நாய்க்கு பூ வச்சு, பொட்டு வச்சு சீராட்டுனோம். நாம மட்டும் இல்லன்னா, ஜெயில்லயே களி தின்னு... புழு வச்சு... நாசமா போயிருக்கும்.
இத்தன நல்லது பண்ணுன நமக்கு கைமாறு என்ன செஞ்சான்னு கேக்குறீங்களா? பரதேசி... பரதேசி... "நாய குளிப்பாட்டி நடுவீட்ல வச்சாலும் அது போய் திங்கிறது அந்த நரகலத்தான்'னு சொல்லுவாய்ங்க. நம்ம மேலயே சேத்த வாரி இறைச்சு, வளத்த கடா மார்ல குத்துச்சும்பாய்ங்கள்ல அதவிட மோசமா உடம்பெல்லாம் குத்திப்புட்டான் பொறம் போக்கு. இத்தனை வசவு அவன திட்றேன்னா... எத்தன, எத்தன கொடும பண்ணியிருப்பான் பாருங்க. கேவலம் காசுக்காக நரகலத் திங்கிறான் மடப்பய.
ஜெயலலிதாவாச்சும் நம்மள எதிரின்னு டிக்ளேர் பண்ணி அடி... அடின்னு அடிச்சுச்சு. அத்தனையும் தாங்கி எதுத்து நின்னோம். இந்த பொசகெட்ட சொறிநாய்... கூடவே இருந்து வீடு, வாசல்னு மொத்த சுகத்தையும் அனுபவிச் சுட்டு... எல்லாம் முடிஞ்சதும் பெப்பே காமிச்சதுனாலத்தான் இத்தன ஆத்திரம்.
இப்ப இந்த களவாணிப்பய, எந்த போலீஸ்காரனால நானும் இவனும் பெரும்பாடு பட்டோமோ, அதே பொம்பள பொறுக்கிய... ராமர் மாதிரி சித்தரிச்சு எழுதுறான் எச்சப்பொறுக்கி. டேய், இதுவரைக்கும் செஞ்ச கொடுமையவிட... இந்தப் பித்தலாட்டத்த மறக்கவே முடியாது.
சரி, விடுங்க... நாம சொல்ல வந்த மேட்டரு மறந்துரும்... அத தொடர்றேன்.
முதல்ல சொன்ன மாதிரி அவன்மேல வழக்கு எண்:100/2000-ங்கிறதுக்கு, அடுத்தடுத்து ஏழு வழக்கு போட்டாய்ங்க. அந்த எச்சப் பொறுக்கிக்கு ஒருபைசா கூட செலவு வைக்காம, நாமதான் விடாம சட்டப் போராட்டம் நடத்துனோம். அதுக்கு நம்ம அட்வகேட் டீம் சீனியர் அட்வகேட் பி.டி.பெருமாள் சார், ப.பா.மோகன் சார், இவங்களோட தலைமையில நக்கீரன் குடும்பமே இந்த ஐந்தாம்படைக்காக வேலை பாத்து அத்தன வழக்குகள்ல இருந்தும்... நம்ம கூடவே இருந்து பேசிக்கிட்டே கழுத்தறுத்த சகுனி ராஸ்கல அரும்பாடுபட்டு விடுவிச்சு வெளிய கொண்டு வந்தோம்.
இன்னொரு தம்பி சுப்பு, பாவம் அப்புராணி. இவரையும் அந்த கொள்ளேகால் வழக்குல சேர்த்துட்டாய்ங்க. இரண்டரை வருஷமா தன்னோட குடும்பம், குட்டிங்கன்னு எல்லாத்தையும் விட்டுட்டு கேரளாவுல தலைமறைவா இருந்தாரு.
கொள்ளேகால் கோர்ட்ல நக்கீரன் கோபால் மேல வழக்கு கிடையாதுங்கிறத முதல்ல உறுதிப்படுத்திக்கிறேன். ஆனா என்மேல கொள்ளேகால்ல வழக்கு இருக்குதுன்னு ஒரு தப்பான விஷயத்த கொண்டுவந்ததும் இல்லாம...
"சட்டவிரோதச் செயல்பாடுகள் மற்றும் அரசுக்கு எதிராக செயல்பட்டது தொடர்பான வழக்காம்...''
வௌக்குமாறு! அதுல வேற... "வழக்கை திரும்பப்பெற பேரம் பேசியிருக்கமாம்''
பேரமும் பேசல... ஒரு வெங்காயமும் இல்ல...!
அள்ளி விடுறாய்ங்க பாருங்க. ஜெயலலிதாங்கிற ஒத்த பொம்பளயோட ஆசைய நிறைவேத்தணும்ங் கிறதுக்காக... அவ னவன் என்னென்ன வெல்லாமோ பண்ணி யிருக்காய்ங்க. அதுல ஒரு விஷயம்தான் கொள்ளேகால்ல என்மேல வழக்கு இருக்குதுன்னு கப்ஸா விட்டது.
இதுக்குப் பின் னாடி யாருன்னு நினைக்கிறீங்க... தேவாரம்தான். அந்தாளு ஏற் பாட்டுலதான் கர்நாட காவுல சங்கர் பிதாரின்னு எஸ்.டி. எஃப். தலைவன் ஒருத்தன வச்சு, இத்தன சேட்டையும் பண்ணுனது மேப்படி மீசைதான்.
இப்பதான் புரியுது... அந்த மீசை போலீஸுக்கு கையாளா, மேப்படி ஐந்தாம்படை இருந்திருக்கலாம்னு சந்தேகம் வலுக்குது.
ஃபேக்ஸ்ல இருந்த நாலாவது குற்றச்சாட்டு. (நெறைய இருக்கு, அதுல குறிப்பா சில விஷயங்கள உங்கள்ட்ட சொல்றேன்) இந்த கடத்தல் வழக்கில் மறுவிசாரணையில, அந்த திருட்டு ராஸ்கல் ஐந்தாம்படை இருக்கான்ல நம்ம கூடவே இருந்து குழிபறிச்ச படவா...
"சி.... சு...ங்கிற பையன் சொன்ன ஒரு குற்ற ஒப்புதல் அடிப்படையில், நக்கீரன் கோபால் வழக் கில் சம்பந்தப்பட்டிருக்கிறார். நக்கீரன் கோபால் இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்''
ஒரு விஷயம் என்னன்னா, அந்தப் பையன், சிறையில இருக்கும்போது... நானும் நாலு மாசமா தலைமறைவா இருந்தேன். அப்ப பொழுதன்னைக்கும் எங்க வக்கீல்கள்ட்ட சிறையில அவனப் பாத்து ஏதாவது கையெ ழுத்து கிய்யெழுத்து போட்டானா? இல்ல என்ன எழவ கூட்டியிருக்கான்னு அடிக்கடி ஜெயில்ல பாருங்கன்னு தலையில அடிச்சுக்கிட் டேன். அவுங்களும் ஒவ்வொரு முறையும் அந்த நாய ஜெயில்ல பாத்து... "எதுலயாவது கையெழுத்து போட்டீங்களா?... கையெழுத்து போட்டீங்களா?'ன்னு பொழுதன்னைக்கும் கேட்டுருக்காங்க. அப்படிக் கேட்டப்ப... "நான் எதுலயும் கையெழுத்தும் போடல ஒண்ணும் போடல'ன்னு சத்தியம் பண்ணாத குறையா அடிச்சுச் சொல்லிட்டான் அந்தப் பச்சோந்தி. நாங்களும் நம்பித் தொலைச்சோம்.
என்னை அரெஸ்ட் பண்ணி, பல மாசமா... கிட்டத்தட்ட 9 மாசம் ஜெயில்ல இருந்தேன். அதுக்கு முன்னாடி ஒண்ணர வருஷம்... ரெண்டு வருஷம் தலைமறைவா இருந்திருப்பேன். அதாவது... 6 மாசம், 4 மாசம், 3 மாசம், 2 மாசம், 1 1/2 மாசம், 15 நாளு, 10 நாளுன்னு... விசா ரணைக் கைதியா ஜெயலலிதாவுடைய சிறைக் கொட்டடியில நான் இருந்தப்பவும் சரி, எப்ப வும் சரி... இதுவரைக்கும், ஒரு கையெழுத்து கூட எதுலயும் போட்டது இல்ல, அதாவது... "நீ அத பண்ணுன... இத பண்ணுன...'ன்னு சொல்லி பொய்யா எழுதி எங்கிட்ட கையெழுத்துக் கேப் பாங்க. அந்த மாதிரி நேரங்கள்ல நான் அதுக்கு ஒப்புதல் சொன்னது இல்ல. எதுவா இருந்தா லும் கோர்ட்ல போய் நேரடியா எழுதித்தான் கையெழுத்து போட்டுக் குடுத்திருக்கேன்.
அந்த ஐந்தாம்படை பயபுள்ள ஒரு வழக்குல குடுத்த குற்ற ஒப்புதல் அடிப்படையில அவன் நெறைய இடத்துல (அதாவது... 25 பக்க வாக்குமூலம்) கையெழுத்து போட்டுக் குடுத்துருக்கான்.
செக்கு எது, சிவலிங்கம் எதுன்னு நக்குற மாட்டுக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம்... மனுசப்பயலுக்கு தெரியணுமா... வேணாமா?
எங்ககிட்ட "ஒரு கையெழுத்துமே போடலண்ணே'ன்னு மிகப்பெரிய பொய்ய சொல்லிட்டான். அப்படிப் பொய்யும் புழுகும் சொன்ன ஐந்தாம்படையத்தான் மேனி நோகாம வெளியகொண்டு வந்தோம்.
இதுல என்ன புது தகவல்னா... மேப்படி ஐந்தாம்படை, பல பக்கங்களுக்கு ஒப்புதல் வாக்குமூலம் குடுத்திருக்கிறதாலதான்... அந்த வழக்கு என்மேல வந்துச்சுன்னு 2002-ல நமக்கு வந்த ஃபேக்ஸ் மெஸேஜ பாத்த பிறகுதான் எனக்கே தெரியவந்துச்சு. இப்ப சொல்லுங்க, நான் திட்டுனது சரியா, தப்பான்னு?
அடுத்து அஞ்சாவதா...
"தாளவாடி காவல்நிலையத்தில் விசாரிக் கப்படும் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், நக்கீரன் கோபாலின் பங்கு ஏற்கனவே நிறுவப்பட்டிருக் கிறது''
எப்படி? எத்தன அண்டப்புளுகு பாருங்க.
அந்த வழக்குல இன்னிக்குவரைக்கும் நிறுவப்படவும் இல்ல... ஒரு டவுசரும் இல்ல!
ஜெயலலிதாங்கிற ஹிட்லரம்மா... "நான் போகக்கூடாதுன்னு சொன்ன பிறகும் நீ போனேல்ல. நான் உன்னைய போக வேணாம்னு சொல்றேன். நீ என்ன ம.....க்கு போன? நீ போகாம விட்டுருந்தா... பல பிணங்கள் விழுந்திருக்கும். அத சாக்கா வச்சு நான் அப்பவே தமிழ்நாட்டு அரியணையில ஏறியிருப்பேன். எதுவுமே செலவு செய்யாம ரொம்ப சொகுசா தமிழகத்த ஆண்டிருப்பேன். அதக் கெடுத்து குட்டிச்சுவராக்கிட்டியேடா... பாவி!' அப்படிங்கிற வெறியிலதான்...
2001-ல ஆட்சி மாற்றம் வந்தவுடனயே, (நான் முன்னாடியே பலமுறை உங்களுக்கு சொல்லியிருப்பேன்), அவங்க வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே... "நாங்க ஆட்சிக்கு வந்தால் நக்கீரன் கோபாலை விசாரிப்போம்'' அப்படின்னு சொல்லியிருந்தாய்ங்க.
அவங்கள்லாம் பெரிய மகாராணிங்க. ஒருதடவை சபதம் போட்டுட்டாங்கன்னா... அத நிறைவேத்துறதுக்காக எத்தன உசுரயும் பலி வாங்குவாய்ங்க... எந்த உசுரா இருந்தாலும் காவு வாங்குவாய்ங்க. எத்தன உசுர வேணும்னாலும் நர வேட்டையாடுவாய்ங்க.
அந்த வகையிலதான்... நம்ம மேல இந்த வழக்கு. அந்த வழக்கோட ஈஹள்ங் சர்: ஈழ்.சர்.90/2002. அதாவது... ரொம்பக் கொடுமையான வழக்கு.
எந்தவொரு ராஜ்குமார காப்பாத்துறதுக் காக உசுரப் பணயம் வச்சு 108 நாள் தவமா தவம் கிடந்தோமோ... அதையெல்லாம் கால்ல போட்டு மிதிச்சு, ஆட்சி மாற்றம் வந்தவுடனே, "நீதாண்டா கடத்துன நொன்னை'ன்னு சொன்னா... அதுல கொஞ்சமாவது நியாயம் வேணாம்? யோசிச்சுப் பாருங்க...! இதுமாதிரி நம்ம மேல விழுந்த பல பழிகளயும் தாங்கி... தாங்கி... கல்லாகி உறைஞ்சு போனோம். எல்லாத்தையும் பாத்துப் பாத்து சலிச்சுப் போச்சு.
ஆனா அந்தம்மா ஆசைப்பட்டது மாதிரி, இந்த போலீஸ்காரனுவோ அதுக்குன்னும் வால் புடிச்சாய்ங்கள்ல...! அவிய்ங்க நெனைச்ச மாதிரி நமக்கும் அதுக்கும் சம்பந்தமும் இல்ல... அது நிறுவப்படவும் இல்ல. அதுக்காகத்தான் சொல்லவர்றேன்.
அதே பாயின்ட்ல...
(புழுதி பறக்கும்)