ff

(103) சின்ன பத்திரிகையை விழுங்க நினைத்த பெரிய திமிங்கலம்!

பெரிய மாப்ள மூர்த்திக்கு தாங்க முடியாத நெஞ்சுவலி. தம்பி கௌரியும், டிரைவர் கணேசனும் பரபரத்து... அவசர அவசரமா தூக்கிட்டு ஓடியிருக் காங்க. எங்கள் மகள் பிரபா, மாமன் இப்படி நெஞ்சப் புடிச்சுக்கிட்டு ரயில்வே பெஞ்ச்லயே பொத்துன்னு உக்காந்ததப் பாத்து பதறி, ரயில் படியிலேயே நின்னு... பரிதவிப்போட ஏக்கமா பாத்துக்கிட்டே கடந்து போகுது. அந்தப் புள்ள மனசு அந்நேரத்துக்கு எப்படி இருந்திருக்கும்? ஒருபக்கம் அப்பா தலைமறைவு வாழ்க்கை, தாங்க முடியாத மனக்கஷ்டமும், அதோட எந்த விடுமுறையும் எடுத்துக்காம வாழ்க்கை பூரா இருக்கிற வங்களுக்கு தன் தங்கச்சி யோட சேர்ந்து ஆக்கிப் போட்டுக்கிட்டு... தன் புருஷனுக்கு என்ன ஆகுமோன்னு தினம், தினம் புழுங்கிக்கிட்டு இருக்கிற அம்மா..., அம்மா வுக்குத் துணையா இருக் கிற பெரிய மாமனுக்கு நெஞ்சு வலி... இந்த மாதிரி கொடும யாருக்கும் வரக் கூடாதுடா சாமி...!

Advertisment

லக்கேஜ தூக்கிட்டு லொங்கு... லொங்குன்னு வேகமா ஓடுனதுனாலதான் அட்டாக் வந்திருக்குன்னு காரணம் சொன் னாங்களாம். அந்த சமயத்துல நான் வீட்டுக்கு வரவே ரொம்ப நாள் ஆச்சு. நான் வீட்டுக்கு வந்தபிறகு இப்படியெல்லாம் நடந்ததுங் கிற தகவல என் துணைவியார்கூட அப்ப சொல்லல. பல வருஷம் கழிச்சு, சமீபத்துல இந்த தொடருக் காக, நான் உக்காந்து குடும்பத்தோட பேசிக்கிட்டி ருக்கும் போதுதான் சொன்னாங்க. அதக் கேட்டதும்... நெஞ்சு ரொம்பவே பாரமாயிடிச்சு.

பெரிய மாப்ள மூர்த்தி இருக்காரே அவரு... தங்கச்சி வாழ்க்கை, நம்ம நிலமை இப்படியெல்லாம் இருக்கேன்னு நெனைச்சிக்கிட்டே இருக்குறவரு. எங்க மாமனார் இல்லாததுனால, அவர் இடத்துல இருந்து பொறுப்பா பாத்துக்குவாரு. நடந்ததை யெல்லாம் நினைச்சு மனசு ரொம்ப பாதிச்சு... ஹார்ட் அட்டாக் வரைக்கும் வந்து அட்மிட் ஆகுற அளவுக்கு போயிருக்கு.

இப்பேர்ப்பட்ட கஷ்டத்தயெல்லாம் என் குடும்பம் அனுபவிச்சிருக்குன்னு நினைக்கும்போது... இதுக்கு காரணமான ஜெயலலிதாவ எப்படி சும்மா விடுறது... சொல்லுங்க நீங்களே?

Advertisment

"வெளிய பத்திரிகைக்காரங்க, டி.விக்காரங் கள்லாம் வந்து குவிஞ்சிட்டாங்க. அவங்கள்ட்ட மழுப்பலா பேசிட்டு, டி.சி. ஏ.சி. டீம் எல்லாமே கௌம்பிடிச்சி.

இதுக்குமேல ஒண்ணும் வராதுன்னும் நம்மளால நெனைக்க முடியல. அடுத்ததா என்ன எழவக் கூட்டுவானுகளோ தெரியாது. ரெண்டாவது நாளா, கிட்டத்தட்ட 48 மணி நேரம்... ஒரு சின்ன பத்திரிகைய, ஒரு பெரிய திமிங்கலம் விழுங்க நெனைச்சது. அதுல இருந்து குத்துயிரும் கொலையுயிருமா அதோட வாயில சிக்காம தப்பிச்சு... நான் ஒருபக்கம், தம்பிங்க ஒருபக்கம்னு எப்படியோ தப்பிச்சோம்.

வீட்டுல ஸர்ச் நடந்துக்கிட்டிருந்த அந்த நேரத்துல, எடிட்டோரி யல்ல அன்னிக்கு முடிக்க வேண்டிய நக்கீரன் இஷ்யூவ தம்பி லெனின் தலைமையில எல்லாருமா பரபரப்பா... செய்திகள ரெடிபண்ணி லே-அவுட் முடிச்சிக் குடுத்துட்டு அவங் களும் ஜூட்.

ff

பத்திரிகைய பிரிண்ட் பண்ணணும், அடுத்தநாள் காலைல ரெடிபண்ணி ராத்திரிக்குள்ள எல்லா கடைகளுக்கும் போட்டாகணும். அந்த வேலைக்கு என்னென்ன செய்யணும்ங்கிறத, தயாரிப்பு மற் றும் சர்க்குலேஷன் டீம்கிட்ட... எந்தெந்த டைம்ல பிரிண்டிங்? நம்மகிட்ட கொஞ்சம் அடிச்சுட்டு, மீதி முக்கால்வாசிய வெளிய பிரிண்டிங் குடுங்க. வெளிய யார், யார்ட்டல்லாம் நக்கீரன் பைண்டிங் பண்ணணும், யாரெல்லாம் பயப்படாம செஞ்சு குடுப்பாங்கன்னு கணக்குப் பண்ணி, எவ்வளவு... எவ்வளவு பார்சல் போடணும், அத அந்தந்த பைண்டிங்லயே பண்ணி, அங்க இருந்தே வெளிய அனுப்பணும்னும் அவங்கள்ட்ட திட்டமிடச் சொன்னேன். எல்லா பார்சலும் டிரெய்ன்ல புக்பண்ணாம, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பாதி டிரெய்ன்லயும், ஒரு பாதிய நம்ம பர்வீன் பஸ்ல அனுப்பவும் ஏற்பாடு பண்ணச் சொன்னேன். ஒருவேள... டிரெய்ன்ல பார்சல் புக் பண்ணுனத போலீஸ் சீஸ் பண்ணீட்டாய்ங்கன்னா... பண்ணுனாலும் பண்ணுவாய்ங்க சண்டாளனுங்க... அவிய்ங்கதான் வெறியா அலையுறானுவளே...!

ரயில்வே சட்ட விதி என்ன சொல்லுதுன்னா, ரயில்வேயில புக் பண்ணுன பிறகு ரயில்வே போலீஸ் தான், சந்தேகமான பார்சல்கள சீஸ் பண்ணணும். ஆனா ஜெயலலிதா கவர்மெண்ட்டுலதான் எதுவும் முறைப்படியோ, சட்டப்படியோ நடக்காதே! லா அண்ட் ஆர்டர் போலீசு வெளியில இருந்து வந்து ரயில்ல புக்பண்ணுன பண்டல்களயும் வந்து சீஸ் பண்ணிட்டுப் போவாய்ங்க. கேக்குறதுக்கு ஒரு நாதியும் இருக்காது. இந்த மாதிரிதான் காட்டாட்சி நடந்துக்கிட்டிருந்தது. யாரும் அத பெருசா கண்டுக்கிறதும் இல்ல. இது சம்பந்தமா, இதுக்கு முன்னாடி நடந்த... மறக்கவே முடியாத ஒரு சம்பவம். அத இப்பச் சொல்றேன்.

வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் சார், நக்கீரனுக்கு போட்டியா "ராஜரிஷி'ன்னு ஒரு பத்திரிகை ஆரம்பிச்சாரு. எனக்கு வலம்புரி ஜான்தான் குரு. இருந்தாலும் நம்மள போட்டியா எடுத்துக்கிட்டு, வார இதழா அந்தப் பத்திரிகைய கொண்டுவந்தாரு. அண்ணன் ராபின்ங்கிறவருதான் அதுக்கு பப்ளிஷர். வலம்புரி ஜான் எடிட்டர். அதுவும் கொஞ்சநாள் பரபரப்பா பேசப்பட்ட பத்திரிகைதான்.

ஆரம்பிச்ச நாலாவது இஷ்யூவுல ஒரு விளம்பரம் பண்ணுனாங்க. அதுக்கான போஸ்டரும் தயாரிச்சாங்க. வலம்புரி ஜான் எழுதும் "ஜெ.வின் கதை!' அடுத்த இதழில் ஆரம்பம்.... படியுங்கள் ராஜரிஷி-ன்னு முடிச்சிருப்பாங்க. அதுக்காக ஜெயலலிதா படத்த பெருசா போட்டு பெரிய... பெரிய போஸ்டர்களா தமிழ்நாடு முழுக்க ஒட்டியிருந்தாய்ங்க. எல்லா தின, வார, மாத பத்திரிகைகளையும் டிரெய்ன்ல புக் பண்ணி பார்சல் அனுப்புவாங்க. முதல்ல எக்மோர் ஸ்டேஷன்ல புக் பண்ணீருவாங்க. அதுக்கடுத்ததா சென்ட்ரல் ஸ்டேஷன்ல இருந்து டிரெய்ன்ல அனுப்புவாங்க.

ஒருநாள் சென்ட்ரல் ஸ்டேஷன்ல இருந்து பேப்பர், புக்ஸ்லாம் புக் பண்ணுற தம்பி ஒருத்தர் எனக்கு போன் பண்ணுனாரு. "நக்கீரன் பார்சல் எல்லாத்தையும் போலீஸ்காரங்க சீஸ் பண்றதா அவருக்குத் தெரிஞ்ச ரயில்வே போலீஸ் ஒருத்தரு சொன்னதா சொல்றாரு.

"நக்கீரன் பார்சல சீஸ் பண்றாங்களா?''ன் னுட்டு நானும் டிரைவர் மோகனும் நைட் 10 மணிக்கு மேல பரபரப்பா கிளம்பி சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு போய் பாத்தா... லோக்கல் போலீஸ்தான் சீஸ் பண்ணி வச்சிருக்காய்ங்க. ஒரு பெரிய போலீஸ் பட்டாளமும் சுத்தி நின்னுக்கிட்டி ருந்தது. அந்த பண்டல்களையெல்லாம் பாத்த வுடனே எனக்கு சின்னதா ஒரு அதிர்ச்சி. ஏன்னா... போலீஸ்காரங்க சீஸ்பண்ணி வச்சிருந்தது நம்ம நக்கீரன் பண்டல் இல்ல... "ராஜரிஷி' பண்டல். இருந்தாலும், நான் போலீஸ்கிட்ட கேக்குறேன்.

"சார், நீங்க சீஸ் பண்ணி வச்சிருக்கிறது ராஜரிஷி பண்டலு. லா அண்ட் ஆர்டர்ல இருக்கிற நீங்க வந்து எப்படி இத சீஸ் பண்ண முடியும்?''னு கேட்டேன்.

"உங்க பண்டல் இல்லல்ல... பேசாம பொத்திக்கிட்டு உங்க வேலைய பாருங்க''ன்னு பட்டுன்னு சொல்லிட்டாய்ங்க.

ff

உடனே நான், வலம்புரி ஜான் சாருக்கு போன் போட்டு, "ஸார், இந்த மாதிரி உங்க ராஜரிஷி பார்சல எல்லாம் சீஸ் பண்ணிக்கிட்டி ருக்காய்ங்க. நான் சென்ட்ரல் ஸ்டேஷன்லதான் இப்ப இருக்கேன். ரயில்வேல புக் பண்ணுன பிறகு ரயில்வே போலீஸ்தான சீஸ் பண்ணணும்... ஆனா லோக்கல் போலீஸ் வந்து சீஸ் பண்ணியிருக்கு. இதுவே பெரிய தப்பு. நீங்க உடனே வாங்க சார், அவங்கள கொஞ்சம் சவுண்ட் வுடணும்.... அப்பதான் அவங்க அடங்குவாங்க. இல்லன்னா அது ரொம்ப தப்பான ஒரு உதாரணமா ஆயிடும். இப்படியே விட்டுட்டா அது நமக்கு நல்லது இல்ல. இப்ப நாம இத அனுமதிச்சிட்டா, நாளைக்கு எல்லாரோட பார்சலையும் எடுப்பாங்க''ன்னு வலம்புரி ஜான் சார்ட்ட சொல்றேன். இதுல நம்ம சுயநலமும் கொஞ்சம் இருக்கு. உடனே சார், "இதோ இப்போதே நான் கிளம்பி வந்துவிடு கிறேன்''னு சொன்னாரு. அவருக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருந்தோம். ஒருமணி நேரம்... 2 மணி நேரம்... 3 மணி நேரம்... நேரம்தான் போய்க் கிட்டேயிருக்கு... அவரு வரவே இல்ல. அப்புறமா நாங்களும் கிளம்பிட்டோம்.

காலைல சாருக்கு போன் போட்டா போன் அடிச்சிக்கிட்டேயிருக்கு... யாருமே எடுக்கல. அப்புறந்தான் தெரிஞ்சது, நைட்டே வலம்புரி ஜான் சார அரெஸ்ட் பண்ணுறதுக்கு ஒரு பெரிய போலீஸ் பட்டாளம் வீட்டுக்குப் போயிருக்கு. அது தெரிஞ்ச வலம்புரிஜான் சார் வீட்ட முன்னமே பூட்டிட்டு எங்கேயோ போயிட்டாரு. இப்போ, சீஸ் பண்ணுன புக் எல்லாம் சீஸ் பண்ணுனதுதான்... முடிஞ்சு போச்சு. அதோட ராஜரிஷியையும் குளோஸ் பண்ணிட்டாய்ங்க.

ஜெயலலிதா கதைய எழுதப் போறோம்னு சொன்னதுக்கே ஒரு பத்திரிகைய சிறு வயசுலயே குரல்வளைய நெறிச்சுத் தூக்கி எறிஞ்சுருச்சு அந்த மகாராணி ஜெயலலிதா. இத எதுக்கு இப்போ சொல்றேன்னா... இந்த அரசாங்கம்... அதுவும் அந்த சண்டாளி ஜெயலலிதா சாதாரண ஆளு கிடையாது. அந்தம்மாவ திருப்திப்படுத்துறதுக்காக... எந்த அளவுக்கு வேணும்னாலும் எக்ஸ்ட்ரீமா இறங்கிப் போவாங்க அவங்க ஆட்கள்.

முன்னாடி இந்த சம்பவம் நடந்ததெல்லாம் எனக்கு தெரியும். அந்த முன்யோசனையிலதான் நக்கீரன் பார்சல "பாதிய பர்வீன் பஸ்ல அனுப்புங்க, பாதிய ட்ரெய்ன்ல அனுப்புங்க'ன்னு சொன்னது. ஒரே ஊருக்கு பாதி பஸ்ஸுல... இன்னொரு பாதி டிரெய்ன்ல. ஏன்னு கேளுங்க அத சீஸ் பண்ணுனா இது கிடைக்கும், இத சீஸ் பண்ணுனா அது கிடைக்கும்... எதாவது ஒண்ணு கண்டிப்பா கிடைக்கும்ல? அதனாலதான் வெளி பைண்டிங்ல இருந்து நக்கீரன் பார்சல் அனுப்பும்போது ரெண்டு வகையாவும் அனுப்பச் சொன்னேன். என்ன கொஞ்சம் மெனக்கெடணும், காசு செலவழிக்கணும். மெனக்கெடுறதுக்கு எங்க தம்பிங்க சளைக்கமாட் டாங்க. சும்மா சொல்லக்கூடாது... அதுவும் இந்த மாதிரி இக்கட்டுல ஓடி ஒளியறதில்ல. பரபரப்பாவும், சுறுசுறுப்பாவும் கச்சிதமா வேலைய முடிப்பாங்க. அதேபோல நம்ம நக்கீரன் முகவர்களும் சும்மா இல்ல. கண்ண மூடி முழிக்கிறதுக்குள்ள கடைகள்ல போட்டுருவாங்க. நாங்க எள்ளுன்னா... அவங்க எண்ணெய்யா இருப்பாங்க.

இப்போவரைக்கும் பேயாட்டம் ஆரம்பிச்சு 48 மணி நேரம் முடிச்சிருச்சு... இதுக்கப்புறம் என்ன அப்படிங்கிறது எல்லாருக்கும் கேள்விக்குறிதான். நாங்க இருந்த அந்த ஏரியாவே மயான அமைதி யோடத்தான் இருந்தது. அதாவது 105, ஜானி ஜான்கான் தெரு இருக்குதுல்லியா... அதுல இந்தப் பக்கம் பத்து வீடு, அந்தப் பக்கம் பத்து வீடு... எதுத்தமாதிரி 20 வீடு... எல்லாமே ரொம்ப அமைதியா, நடக்கக் கூடாத ஒரு சம்பவம் நடந்த வீடு எப்படி மயான அமைதியில இருக்குமோ... அதுமாதிரிதான் இருந்துச்சு.

"மக்யாநாளு என்ன பண்ணப்போறோம்? கோர்ட் இருக்கு... வேற என்னென்ன அநியாயங் கள் வரிச கட்டி வரப்போகுதோ... அத எப்படி நாம எதிர்கொள்ளப்போறோம்? கோர்ட்ல என்ன சொல்லப்போறாங்களோ?'ன்னு அது ஒருபக்கம் பக்... பக்... பக்..னு அடிச்சுக்கிது.

(புழுதி பறக்கும்)