சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ, கடந்த 2019 செப்டம்பர் 12-ஆம் தேதி, தான் வேலை செய்யும் ஐ.டி. கம்பெனியில் வேலை முடித்து மதியம் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பேனர் சரிந்து விபத்தில் சிக்கி பலியானார். துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையில் அ.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி சட்டத்துக்குப் புறம்பாக சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த பேனர் சுபஸ்ரீயின் பைக் மீது விழுந்து நிலை தடுமாறியதில் பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி அவரது உயிருக்கே ஆபத்தாய் முடிந்தது. அடுத்த மாதமே கோவை சிங்காநல்லூர் அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவுக்காக அத்துமீறி வைக்கப் பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததால் அனுராதா என்ற இளம்பெண்ணின் காலை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றும்படியானது. இதனால் மக்கள் மத்தியில் பேனர் கலாச்சார விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தின் கண்டிப்பான குரல்களால் தற்காலிகமாக அடங்கியிருந்த பேனர் கலாச்சாரம், தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் முதல்வர் வருகையையொட்டி மீண்டும் துளிர்விடுகிறது.
டெல்லிப் பயணத்திற்குப் பிறகு காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரச்சாரத்துக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் எடப்பாடி. அதற்காக முன்கூட்டியே செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் ஜரூரான ஏற்பாடுகள் நடந்தன. ""ஜெயலலிதா முதன் முதலில் கட்சி துவங்கி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது, 30-05-1988-ல், திருப்போரூர் முருகன்கோவில் குளத்தருகே பிரச்சாரம் செய்தார். அதனால் சென்டி மெண்டாக ஜனவரி 21-ஆம் தேதி பிரச்சாரம் நடக்கவிருக் கும் இடத்தருகே பேனர் வைக்க திருப்போரூர் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வான தண்டரை மனோகரன் இடத்தைத் தேர்வு செய்தார்.
அதற்குமுன் அந்த இடத்தில் முன்னாள் காஞ்சிபுரம் எம்.பி. மரகதம் குமரவேலின் கணவர் குமரவேல் பேனர் அமைக்க, தனது ஆட்கள்மூலம் முயற்சித்தபோது, தண்டரை மனோகரனுக்கு விஷயம் கசிந்துவிட்டது. ஸ்பாட்டுக்கு விரைந்த அவரின் ஆதரவாளர்களுடன், எதிர்த்தரப்பான குமரவேல் ஆதரவாளர்களுக்கு கைகலப்பு ஏற்பட... போலீசார் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தலையீட்டால் இருவரும் தலா இரு பேனர்கள் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
திருப்போரூர் கந்தசாமி கோபுரத்தையே மறைக்கும் அளவில் பேனர்கள் வைக்கப்பட்டன. நீதிமன்றம் என்னதான் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தாலும், அரசியல்வாதிகள் விளம்பரத்திலும் சுய ஆதாயத்திலும்தான் குறிக்கோளாய் இருக்கின்றனர். "பேனர் விழுந்து செத் தால் கொடுக்க, மக்களின் வரிப்பணம் அரசு கஜானாவில் நிவாரணமாக இருக்கிறது. பிரச்சினையை மறைக்க அதிகாரம் இருக்கிறது...… அப்புற மென்ன கவலை' என்பதே அரசியல்வாதிகளின் மனநிலையாய் இருக்கிறது.