ரதட்சணைக் கொடுமையால் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார் கேரளாவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி விஸ்மயா. அது அப்போதே கேரளாவைப் புரட்டிப் போட்டது. அது தொடர்பான வழக்கில் கடந்த 24 ஆம் தேதி, அங்குள்ள நீதிமன்றம் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியது. அதுதான் இப்போது கேரளாவின் ஹாட் டாபிக்.

cc

யார் அந்த விஸ்மயா? அவருக்கு என்ன நேர்ந்தது?

கொல்லம் நிலமேல் பகுதியைச் சேர்ந்த பந்தளம் அரசு ஆயுர்வேதிக் மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்தவர் விஸ்மயா. அவருக்கும் மோட்டார் வாகன ஆய்வாளராக இருந்த கிரண்குமாருக்கும் 2020 மே 30-ஆம் தேதி தடபுட லாகத் திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது வரதட்சணையாக 100 பவுன் நகை, 11 லட்சத்தில் கார், பல லட்சம் மதிப் பிலான ஒரு ஏக்கர் நிலம் ஆகியவை கொடுக்கப்பட் டது. இதில் கார் அதிக கி.மீ கிடைக்கவில்லை என்றும் அதற்குப் பதில் கூடுதல் வரதட்சணை தரவேண்டும் என்று கேட்டு, கிரண்குமார் தினம் தினம் விஸ்மயாவை சித்ரவதை செய்ய ஆரம்பிக்க...

அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல், கடந்த ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி குளியலறையில் விஸ்மயா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது கேரளாவையே பரபரப்பாக்கியது. இதையொட்டி, அங்குள்ள இளம் பெண்கள் பலரும், "வரதட்சணை தரமாட்டோம்'’என வீட்டு வாசலில் எழுதி வைத்து, புதுவித போராட்டத்தைக் கையில் எடுத்தனர். இதை அப்போதே நக்கீரன் பதிவு செய்திருந்தது.

விஸ்மயாவின் தற்கொலை வழக்கை கையில் எடுத்த கொல்லம் ரூரல் எஸ்.பி. ரவி மற்றும் சாஸ்தான்கோட்டை டி.எஸ்.பி. ராஜ்மோகன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி 42 சாட்சியங்களுடன் 102 ஆவணங்களை கொல்லம் அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் சமர்ப்பித்தனர். நீதிபதி கே.என். சுஜித் அனைத்து சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை விசாரித்து குற்றவாளியான கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12.55 லட்சம் அபராதமும் விதித்தார்.

மேலும் தனது தீர்ப்பில் நீதிபதி, "கணவன்மார் களுக்கு மனைவி என்பவள் பாரம்பரியமான குடும்பச் சொத்தல்ல. அவளை விலைக்கு வாங்கவோ, விற்கவோ எவருக்கும் உரிமை இல்லை. அவளை ஜடப்பொருள் போல் எவரும் கையாளக்கூடாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் உயிர், உடல், உணர்ச்சி, உரிமை, ஆசை என எல்லாமும் உண்டு. அவள் யாருக்கும் அடிமையல்ல. இதை உணரவேண்டும்''’என்று அழுத்தம்திருத்தமாக, பெண்ணியத்துக்கான மதிப்பையும் நச்சென்று பதிவு செய்திருக்கிறார்.

இந்த வழக்கு குறித்து நம்மிடம் பேசிய ரூரல் எஸ்.பி. ரவி, ”"இந்த விவகாரத்தில் டிஜிட்டல் ஆதாரங்கள்தான் மிக முக்கியப் பங்கை வகித்தன. குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த விஸ்மயாவின் உடலை, கிரண்குமார்தான் அவிழ்த்து கீழே இறக்கி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது, தனது செல்போனை பாத்ரூமில் மறந்து வைத்துவிட்டார். அதை போலீஸ் கைப்பற்றியது. அதில் தேவையான ஆதாரம் இருந்தது. அதேபோல் விஸ்மயா தன்னுடைய செல்போனில் ஒரு ஃபோல்டரில் தனக்கு அன்றாடம் நடக்கும் கொடுமைகளை எல்லாம் பதிவு செய்து வைத்திருந்தார்.

மேலும் சாட்சிகளான விஸ்மயாவின் அண்ணியான ரேவதி, அந்த கிரண்குமார் விஸ்மயாவின் கழுத்தில் குத்துவதையும் தரையில் தள்ளி ஷூ காலோடு மிதிப்பதையும் செல்போனில் படமாக வைத்திருந்தார். விஸ்மயா, தன்னுடன் படித்த மாணவிகளான வித்யா, சைலஜா, மற்றும் சமூக வலைத்தள செயற்பாட்டாளர் நிதின் நிராவத் ஆகியோரிடமும் தான் படும் சித்ரவதைகளைப் பற்றி பகிர்ந்திருக்கிறார். இப்படிப்பட்ட செல்போன் பதிவுகள்தான் டிஜிட்டல் ஆதாரமாக, குற்றத்தை நிரூபிக்க உதவியது''”என்றார் அழுத்தமாக.

அரசுத் தரப்பு வழக்கறிஞரான மோகன்ராஜ் கூறும் போது...’"விஸ்மயா தற்கொலை செய்து கொண்டாலும் அவர் உயிரோடு இருக்கும்போது அவரின் மனதையும் கொலை செய்திருக்கிறார் கிரண்குமார். அதனால் இதைக் கொலைக் குற்றமாகத்தான் பார்க்கவேண்டும் என்று வாதாடினோம்''’என்கிறார் உறுதியான குரலில்.

விஸ்மயாவின் தந்தை திரிவிக்கிரமன் நாயரோ, "ஏதோ எங்கள் மகளின் தற்கொலைக்கு நீதி கிடைத்தது என்றுதான் உணருகிறேன். தான் பட்ட கஷ்டத்தை எல்லாம் விஸ்மயா, தன் அம்மா சுஜிதாவிடம்தான் கூறுவாள். அதனால், கிரண்குமாருக்குக் கொடுக்கப்பட்ட இந்த தண்டனை திருப்தியாக இருக்கிறதா என அவள்தான் சொல்லவேண்டும்''’என்று முடித்துக்கொண்டார்.

விஸ்மயா உருவாக்கி வைத்த ஆதாரங்களே அவர் இறந்த பிறகும், அவருக்கான நீதியைப் போராடிப் பெற்றிருக்கின்றன.

Advertisment