எடப்பாடியின் மகன் மிதுனை கோவையில் அவசர அவசரமாக சந்தித்திருக் கிறார் ஆடுமலை. இந்த சந்திப்பு பரபரப்பாக பேசப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி உடையும் சூழ்நிலையில் ஆடுமலையை மாற்றியே தீரவேண்டுமென போர்க்கொடி உயர்த்தினார் எடப்பாடி. அந்த சூழ்நிலையில் எடப்பாடியை நேரடியாக சந்தித்தார் ஆடுமலை. “"நீங்கள் அழுத்தம் கொடுப்பதால்தான் பா.ஜ.க. என்னை தலைமைப் பதவியிலிருந்து மாற்ற முடிவுசெய்திருக்கிறது. எனவே, என்னை மாற்ற வேண்டுமென கோரிக்கை வைக்காதீர்கள்''’என ஆடுமலை எடப்பாடியிடம் கதறியிருக்கிறார்.
அதை எடப்பாடி மதிக்கவில்லை. இவர்கள் இருவருக்குமிடையே ‘கவுண்டர் சமுதாயத்தில் நீ பெரியவனா.. நான் பெரியவனா?’ என்று ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. எடப்பாடி, தன்னை மிஞ்சி ஆடுமலை வளர்வதை விரும்பவில்லை. ஆடுமலையும் எடப்பாடியை சமுதாய விசயங்களில் ஓவர்டேக் செய்துவந்தார்.
எடப்பாடியை வெறுப்பேற்ற “"ஜெயலலிதா ஒரு ஊழல் அரசியல்வாதி.. அவர் ஒரு ஊழல் குற்றவாளி'' என ஆடுமலை பேசினார். இது இருவருக்குமான மோதலை உச்சகட்டத்துக்குக் கொண்டு சென்றது. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமையவேண்டு மென்றால் ஆடுமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும் என்ற உறுதியான நிலையை எடுத்தார் எடப்பாடி. இதனால் பா.ஜ.க. மேலிடம் டென்ஷனானது. கூட்டணி முறியும் சூழல் உருவானது. அப்பொழுது எடப்பாடியின் காலில் வந்து விழுந்தார் ஆடுமலை. ஆனால், ஆடுமலை சொல்வதை எடப்பாடி கேட்கவில்லை. அவர் ஆடுமலை மீதான எதிர்ப்பை மேலும் கடுமையாக்கினார்.
அதற்குப் பதிலடியாக “"எடப்பாடி இல்லாமல் நான் இருபது பாராளுமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க.வை வெற்றிபெற வைக்கிறேன்''’என ஆடுமலை, அமித்ஷாவை கன்வின்ஸ் செய்தார். ஆடுமலையின் வாதத்தை ஏற்றுக்கொண்டார் அமித்ஷா. அதனால் குஷியான ஆடுமலை ‘"எடப்பாடிக்கு அறிவு இல்லை''’ என மட்டரகமாகச் சாடினார். ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. பெருவெற்றி பெற்றது. ஆடுமலையும் எடப்பாடியும் படுதோல்வியடைந்தார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இந்த தோல்வி தொடரக்கூடாது என முடிவெடுத்த பா.ஜ.க., எடப்பாடி -ஆடுமலை இருவருக்கும் நெருக்க மானவர்களின் வீடுகளில் ரெய்டுகள் நடத்தியது.
எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் வீட்டில் 140 கோடி ரூபாய் வருமானவரித்துறை கைப்பற்றியது. ஆடுமலை யின் மச்சான் சிவக்குமாரின் பார்ட்னரான செந்தில் வீட்டில் ரெய்டு நடத்தி 240 கோடி ரூபாய் கைப்பற்றியது. இப்படி ரெண்டு பக்கமும் அடித்து ஆடிய பா.ஜ.க. தலைமை, அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி, அதில் பா.ஜ.க.விற்கு ஐம்பது சீட், பா.ஜ.க. சீட்களில் ஓ.பி.எஸ், தினகரன் கட்சி என ஒரு சமாதான பார்முலாவை முன்வைத்து ‘அ.தி.மு.க. + தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என ஒரு வியூகம் வகுத்திருக்கிறது.
இந்த வியூகத்தை ஏற்க எடப்பாடி தயாராகவில்லை. அதனால் இரட்டை இலைச் சின்னத்தை உரிமை கோரும் வழக்குகள் தேர்தல் கமிஷனுக்கு வந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சின்னத்தை முடக்குவதற்கு பா.ஜ.க. தயாரானது. இரட்டை இலை முடக்கப்படுமானால் அ.தி.மு.க., ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என எடப்பாடி ஆலோசித்து வந்தார். கடந்த வாரம் இரட்டை இலை தொடர்பான வழக்கு தேர்தல் கமிஷனில் விசாரணைக்கு வந்தது. அதில் "நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க.' என சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்களி டம் பெற்ற கையெழுத்துகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களிடம் பெற்ற கையெழுத்துக்கள் ஆகியவற்றுடன் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக டெல்லிக்குச் சென்று தேர்தல் கமிஷனில் வாதிடத் தயாரானார். அதற்காக பயண ஏற்பாடுகள் உட்படத் தயாராக இருந்தது.
இதற்கிடையே அமைச்சர் வேலுமணி, பா.ஜ.க. தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி.தினகரன், “"நான் சட்டமன்றத் தேர்த லில் போட்டியிட மாட்டேன்''’என அறிவித்தார். இது பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எடப்பாடிக்கு போட்டியாக தினகரன் வருவார் என்ற எடப்பாடியின் பயத்தை தகர்க்க பா.ஜ.க. செய்த உளவியல் ரீதியான காய் நகர்த்தல் ஏற்பாடு. இது முழுக்கவே வேலுமணியின் பேச்சுவார்த்தையால் ஏற்பட்ட விளைவுதான். எடப்பாடி தனது டெல்லி புரோகிராமை திடீரென கேன்சல் செய்தார். அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அமைவதற்கான சிக்னல்கள் வேகம் பெற்றன.
இதைத் தெரிந்துகொண்ட ஆடுமலை தன்னைப் பதவியிலிருந்து நீக்கி விடுவார்களோ எனக் கருதி, சாட்டையால் தன்னை அடித்துக் கொள்ளும் கவன ஈர்ப்பு விசயங்களைச் செய்தார். அது பெரும் கேலிக் கூத்தாகிப் போனது. அவரது கட்சிக்குள் இருப்பவர்களே ‘"காமடி பீஸ் ஆடு.. நூல் சாட்டை.. இதற்கா வெளிநாடு போய் அரசியல் கோர்ஸ் படித்து வந்தது ஆடு'’என நக்கலடித்து பேட்டிகள் கொடுத்தார்கள்.
அதனால் நொந்துபோன ஆடுமலை சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என முடிவு செய்து நேரடியாக எடப்பாடி மகன் மிதுனை கோவையில் சந்தித்து, “"நாமெல்லாம் ஒரே கவுண்டர் ஜாதி.. நமக்குள் எதற்கு மோதல்.. அப்பாவை ஒருமுறை என்னை மன்னிக்கச் சொல்லுங்கள்''’என கெஞ்சியிருக்கிறார். அதற்குப் பதில் சொன்ன எடப்பாடியின் மகன் மிதுன், “"நாங்கள் வேண்டுமானால் மன்னிக்கலாம்.. ஊழல் குற்றவாளி ஜெயலலிதா என நீங்கள் சொன்னதை அ.தி.மு.க. அடிப்படைத் தொண்டன் எப்படி மன்னிப்பான்''’எனத் திருப்பிக் கேட்டிருக்கிறார். இப்படியாக டெல்லி மூலம் வேலுமணி வழி யாக கூட்டணி வேலைகள் வேகம் பெற்றுக் கொண்டிருக்க, ஆடுமலையோ தனது பா.ஜ.க. மாநிலத் தலைவர் பதவி பறிபோகப் போவதை எண்ணி, தனியாகப் புலம்பிக்கொண்டிருக்கிறார் என்கிறது கமலாலய வட்டாரங்கள்.