பரபரப்பான அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, தி.மு.க.வின் தலைமை வரை கவனத்திற்கு சென்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வில் வடக்கு ஒன்றியச் செயலாளர் முருகனை மாற்றிவிட்டு காம்பட்டு சக்திவேல் என்பவருக்கு அந்தப் பதவியை பெற்றுத் தருவதற்கு 15 லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் அதற்கு வெளிநாட்டிலுள்ள சக்திவேலின் மருமகன் அவ்வளவு பணம் கொடுத்து பதவி வாங்கினால் அந்த அளவு சம்பாதிக்க முடியுமா அதை விசாரித்துச் சொல்லுமாறு அவரது நண்பர் ஒருவருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதாகவும் ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kalakurichi.jpg)
இதுகுறித்து நாம் விசாரித்த போது காம்பட்டு சக்திவேல் என்பவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் மட்டுமே உள்ளனர். அவருக்கு பெண் பிள்ளைகளே கிடையாது. அப்படி இருக்கும்போது அவரது மருமகன் வெளிநாட்டிலிருந்து ஆடியோவில் பேசியதாக பரவிவரும் ஆடியோ பொய் என்பதும் இது திட்டமிட்டு தி.மு.க.வுக்கு கெட்ட பெயரை உருவாக்க நடக்கும் சதி என்பதும் தெரியவந்தது.
ஒன்றியச் செயலாளர் முருகனை மாற்றவேண்டும் என்ற பேச்சு ஏன் வந்தது? “ ""முருகன் வடக்கு மாவட்டச் செயலாளராக உள்ள உதயசூரியனை மதிப்பதில்லை. அவரது பகுதியில் தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ள கார்த்தி கேயனைஅழைத்துவந்து நிகழ்ச்சி நடத்துகிறார். அவரது பகுதியில் சுமார் 65 கட்சிக் கிளைகள் உள்ளன. அதில் 30-க்கும் மேற்பட்ட கிளைகளில் பொறுப்பாளர்களைத் தேர்வு செய்யாமல் உள்ளார். இதுகுறித்து கட்சித் தலைமை அறிவித்துள்ள பொறுப்பாளர்களிடமும் லிஸ்ட்டை ஒப்படைக்கவில்லை. கிளைப் பொறுப்பாளர்கள் தேர்வில் கட்சிக்கு பாடுபட்டவர்கள், விசுவாசிகள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு'' என்கிறார்கள் நீண்டகால தி.மு.க. விசுவாசிகள்.
இதுகுறித்து ஒன்றியச் செயலாளர் முருகனிடமே கேட்டோம், ""கட்சிக்காக நான் வீடு, காட்டை விற்று செலவு செய்துள்ளேன். கட்சிப் பணியை செவ்வனே செய்துவருகிறேன். முன் னாள் மாவட்டச் செயலாளர் அங்கையற்கண்ணி கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருவதில்லை கட்சிப் பணிகளை சரிவரச் செய்யவில்லை என்று அவர் மீது பல ஒன்றியச் செயலாளர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதுகுறித்து அறிவாலயத்தில் தளபதி தலை மையில் விசாரணை நடைபெற்றபோது நான் அங்கு அவர் மீது நேரடியாக குற்றச்சாட்டை முன்வைத்தேன். அப்போது முதல் உதயசூரியன் என் மீது கோபமாக உள்ளார். அதன் காரணமாக என் பதவியை மாற்றுவதற்கு அவர் முயற்சி செய்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kalakurichi1.jpg)
கிளை பொறுப்பாளர் தேர்வுப் பணிகளை முழுமையாக முடித்து தலைமை நியமித்த பொறுப்பாளர்களிடம் லிஸ்ட்டை ஒப்படைத்து விட்டேன். மாவட்டச் செயலாளர் உதயசூரியன், வசந்தவேல் மூலம் சில கிளைகளில் புதிதாக சிலரிடம் மனு வாங்கி வைத்துக்கொண்டு கிளைப் பொறுப்பாளர்கள் தேர்வுப் பணி முடிக்கவில்லை என்று வேண்டுமென்றே குற்றச்சாட்டு கூறுகிறார்''’என்று படபடப்போடு பேசினார் முருகன்
கிழக்கு ஒன்றியச் செயலாளர் வசந்தவேலுவிடம் கேட்டபோது, “""சமீபத்தில் அ.தி.மு.க. உட்பட மாற்றுக் கட்சியிலுள்ள 1,300 பேர்களை தி.மு.க.வில் இணைத்துள்ளேன். இதன் எதிர்வினையாக எங்கள் கட்சியில் உள்ளடி வேலைகளைத் தூண்டிவிட்டுள்ளனர்''’’ என்கிறார் வசந்தவேல்
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக குமரகுருவும் தி.மு.க. வேட்பாளராக வசந்தவேலும் போட்டியிட்டனர். இரு தரப்பிலும் கடும்போட்டி நிலவ, குமரகுரு 4164 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார்
அந்தத் தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மூன்றாவது அணி சார்பாக நின்று 34,447 வாக்குகளைப் பிரித்தது, பா.ம.க. சார்பில் வழக்கறிஞர் பாலு சுமார் 17 ஆயிரம் வாக்குகளைப் பிரித்தது போன்றவையும் முடிவு மாறுவதற்குக் காரணமானது.
குமரகுரு உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். கட்சி கடந்து அந்த சமூகத்தினர் அவருக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தனர்.
வசந்தவேல் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர். இவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தே.மு.தி.க. விஜயகாந்துக்கும் பா.ம.க. பாலுவிற்கும் பிரித்து வாக்களித்தனர். இதன் காரணமாக தி.மு.க. வேட்பாளர் வசந்தவேலு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். வரும் தேர்தலில் மீண்டும் தி.மு.க. தலைமை வசந்தவேலு போட்டியிடுவதற்கு வாய்ப்பளித்தால் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் வேட்பாளராக நிற்கப்போகும் குமரகுருவிற்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்துவார்
எனவே தி.மு.க.வில் வசந்தவேலுவை தவிர மற்ற யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்தினால் அவர்களை எளிதில் வெற்றிபெற்றுவிடலாம் என்று அ.தி.மு.க. தரப்பில் அழுத்தமான கணக்குப் போடுகின்றனர். அவரை வேட்பாளராக வராமல் தடுப்பதற்கும் தி.மு.க.விற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் அ.தி.மு.க .பிரமுகர்கள் தி.மு.க. விலுள்ள சிலரை ஸ்லிப்பர் செல்களாக மாற்றி தி.மு.க.விற்கும் வசந்தவேலுவிற்கும் மாவட்டச் செயலாளர் உதயசூரியனுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதற்கு உதவிகரமாக உள்ளனர் .
உதயசூரியனைத் தொடர்புகொண்டபோது, “""அந்தளவுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. கட்சி வலுவாக உள்ளது''’என்றார்.
அ.தி.மு.க.வினர் வாரியிறைக்கும் கரன்சிக்கு ஆசைப்பட்டு தி.மு.க.வில் சில ஸ்லீப்பர்செல்கள் உருவாகி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களை சட்டமன்றத் தேர்தல் வருவதற்குள் கட்சித் தலைமை களையெடுக்க வேண்டும் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
-எஸ்.பி.எஸ்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/kalakurichi-t.jpg)