சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்ச் சமுதாயத்தின் தன்னிகரில்லா மாபெரும் தலைவர்களான பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தையும் திறந்துவைத்து பெருமகிழ்ச்சியடைந்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதற்கான திறப்புவிழா 26-ந் தேதி இரவு 7 மணிக்கு மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் அப்பாவு, சென்னை மேயர் ப்ரியா, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான தி.க. வீரமணி, ம.தி.மு.க. வைகோ, சிறுத்தைகள் திருமாவளவன், சி.பி.எம். பாலகிருஷ்ணன், சி.பி.ஐ. முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் காதர்மொய்தீன், சட்டமன்ற பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவிப்பேரரசு வைரமுத்து, அரசின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அண்ணா மற்றும் கலைஞரின் நினைவிடப் பெயரும், உருவமும் பொறிக்கப்பட்ட நினைவிடங்களின் முகப்பு வாயிலை முதலில் திறந்துவைத்தார் ஸ்டாலின். இதனையடுத்து முகப்பில் இருந்த அண்ணாவின் சிலையையும், அமர்ந்த நிலையில் எழுதும் வடிவிலான கலைஞரின் சிலையையும் திறந்துவைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் ஸ்டாலினோடு இணைந்து சென்றனர்.
இதனைத்தொடர்ந்து, பிரமாண்டமாக கட்டப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கலைஞர் சதுக்கத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார் ஸ்டா லின். கலைஞரின் சதுக்கத்தில், "ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இங்கே ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்' என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த வாசகத்தை சில நொடிகள் உற்றுகவனித்தபடி இருந்தார் ஸ்டாலின். அவருக்கு அருகில் நின்ற ரஜினிகாந்த் இதனை கவனிக்க, "கலைஞருக்கே உரிய வரிகள். அந்த வார்த்தைகளின் வலிமை ஆழமானது''‘என்று சொல்லியிருக்கிறார் ரஜினி. ஸ்டாலின் உட்பட அனைவரும் கலைஞர் சதுக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர்.
"கலைஞர் நினைவிட திறப்புவிழாவுக்கு வரவேண்டும்' என ரஜினியைத் தொடர்புகொண்டு ஸ்டாலின் அழைத்திருந்தார். அப்போது, "தமிழகத்தின் மாபெரும் தலைவர் கலைஞர். அவரது நினைவிட திறப்புவிழாவில் கலந்துகொள்வது எனக்குத்தான் பெருமை. அதனை மிஸ் பண்ணமாட்டேன், அவசியம் வருவேன்''” என்று உறுதி தந்திருந்தார் ரஜினி.
ஸ்டாலினிடம் சொல்லியிருந்தபடி நினைவிடத்திற்கு வந்த ரஜினியை, முகமலர்ச்சியுடன் முதல் ஆளாக வரவேற்று அழைத்துச் சென்றார் அமைச்சர் உதயநிதி. ஸ்டாலினின் இருக்கைக்கு அருகே ரஜினிக்கும் இருக்கை போடப்பட்டிருந்தது. நினைவிடங்களைத் திறந்து வைத்துவிட்டு, அண்ணா மற்றும் கலைஞரின் நினைவிட வளாகத்தை பேட்டரி காரில் சுற்றிவந்தார் ஸ்டாலின். அந்த பேட்டரி காரில் ரஜினியும் சென்றார்.
நினைவிடங்களை சுற்றி வந்தபோது, நினைவிடங்களில் அமைக்கப்பட்ட சிறப்பம்சங்கள் ஒவ்வொன்றையும் ரஜினிக்கு விவரித்தார் ஸ்டாலின். ரஜினியும் மிக ஆர்வமாக கவனித்தார். முழுமையாக சுற்றிப் பார்த்துவிட்டு, "நினைவிடம் எப்படி இருக்கிறது?'' என்று ரஜினியிடம் கேட்க, ”"வெகு பிரமாதம். இப்படி ஒரு நினைவிடம் இனி யாருக்கும் அமையாது. அமைக்கவும் முடியாது. ஏன்னா, அவ்வளவு சிறப்புகள் கொண்டவர் கலைஞர். அவரை போல சாதித்தவர்கள் யாரும் இல்லையே''‘என்று பாராட்டி மகிழ்ந்துள்ளார் ரஜினி.
விழா நிறைவுற்ற நிலையில் அங்கிருந்து கிளம்ப வெளியே வந்த ரஜினி பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, "மிகவும் அருமை; மிக அற்புதம். கலைஞரின் நினைவிடம் என்று சொல்வதைவிட கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம். அந்தளவுக்கு அற்புதம்''’என்று புகழாரம் சூட்டி சிலாகித்தார்.
கலைஞர் நினைவிடத் திறப்பு நிகழ்வினை தி.மு.க.வின் கட்சி சார்ந்த விழா போலவோ, தி.மு.க. ஆட்சியின் அரசு சார்ந்த விழாவாகவோ இல்லாமல், அனைத்து தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்துகொள்ளும் தமிழகத்தின் பொதுவிழாவாக நடத்த விரும்பினார் மு.க.ஸ்டாலின்.
அதற்கேற்ப, அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் நினைவிடத் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்”என்று ஸ்டாலின் அழைத்திருந்தும் அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் விழாவில் கலந்துகொள்வதைத் தவிர்த்து, தங்களுக்குப் பெருந்தன்மை இல்லை என்பதை நிரூபித்தனர். கலந்துகொண்டிருந்தால் அவர்களுக்குத்தான் பெருமை. கலந்துகொள்ளாததால் நினைவிடம் புனிதமாகியிருக்கிறது என்கிறது அறிவாலயம்!
சாதித்த அமைச்சர் எ.வ.வேலு
உலகத்தின் எட்டாவது அதிசயமாக கட்டிமுடிக்கப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது கலைஞர் நினைவிடம்! இதனை ஒன் மேன் ஆர்மியாக சாதித்துக் காட்டியிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.
தி.மு.க. அரசு 2021-மே மாதம் பொறுப்பேற்றதற்குப் பிறகு ஆகஸ்டில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "வாழ்ந்த காலமெல்லாம் வரலாறாக வாழ்ந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவரின் 80 ஆண்டு கால பொது வாழ்க்கையில் 70 ஆண்டுகள் திரைத் துறை, எழுத்தாளர், 60 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப் பினர், 50 ஆண்டுகள் தி.மு.க. தலைவர் என வரலாறாக இருந்தார். அரசியல் களத்தில் இனி ஒருவர் அவரது இடத்தை பிடிக்க முடியாது என்கிற பெருமைக்குரியவர் கலைஞர்.
அவரின் அரும்பணிகளை போற்றும் விதமாகவும், அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும் வருங்கால தலை முறையினரும் அறிந்துகொள்ளக்கூடிய வகை யிலும் நவீன விளக்கப்படங்களுடன் அண்ணா நினைவிட வளாகத்தில் கலைஞருக்கு நினை விடம் அமைக்கப்படும்'' என்று அறிவித்தார்.
அதன்படி மிகப்பிரமாண்டமாக உருவாக் கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் ஒப்படைக்கப்பட்டது. பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து நினைவிடத்தை அமைப்பதில் தன் சக்திக்கும் மீறிய உழைப்பை கொடுத்த எ.வ.வேலு, பணிகள் எந்த இடத்திலும் சுணங்கிவிடாமல் இருக்க அதனை கண்காணித்தபடியே அதிகாரிகளிடம் வேலை வாங்கினார்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "கண்டிக்க வேண்டிய தருணத்தில் கண்டித்தும், தட்டிக் கொடுக்க வேண்டிய நேரத்தில் தட்டிக்கொடுத் தும் எங்களிடம் வேலை வாங்கினார் அமைச்சர் (எ.வ.வேலு). அண்ணா நினைவிடத்தை புதுப்பித்தல், கலைஞர் நினைவிடத்தை அமைப்பது என 2 பணிகளை மேற்கொள்ள அமைச்சரிடம் பணித்தார் முதல்வர் ஸ்டாலின்.
இதற்காக வரைபடங்கள் தயாரித்தபோது, கலைஞர் நினைவிடத்தில் நவீன தொழில் நுட்பங்களுடன் கலைஞரின் பொதுவாழ்க் கையை எப்படியெல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என பல யோசனைகளை மிக அழகாக எங்களிடம் விவரித்தார் அமைச்சர். அவர் விவரிக்கும் பாங்கே கலைஞர் ஆற்றிய பணிகள் நம் கண்முன்னே விரியும். கலைஞரை அருகில் இருந்து கவனித்து முற்றிலும் அவரை உணர்ந்தவர்களால் தான் இப்படி விவரிக்க முடியும். அதில் வல்லவராக இருந்தார் அமைச்சர் வேலு.
அவரது யோசனைகளைப் பிரதிபலிக்கும்படி வரைபடம் தயாரிக்கப்பட்டது. அதில் பல திருத்தங்கள் செய்தார். முதல்வர் நினைத்த மாதிரி நினைவிடம் இருக்கவேண்டும் என்பதில் 100 சதவீதம் திருப்தியடையும் வகையில் வரைபடங்களில் திருத்தம் செய்து, முழு திருப்தி கிடைத்ததும்தான் வரைபடத்தை ஓ.கே. செய்தார் அமைச்சர். அதனை முதல்வரிடம் காட்டிய போது, "நான் நினைத்ததையும் தாண்டி பிரமாண்டமாக இருக்கிறது' என அமைச்சரை பாராட்டினார் முதல்வர்.
வரைபடத்தோடு நிற்கவில்லை. நினைவிடப் பணிகள் தொடங்கியபோது தினமும் இரவு நேரங்களில் விசிட் அடிப்பார். வரைபடத்தில் இருக்கிற மாதிரி பணிகள் முன்னேறுகிறதா என்பதை கண்காணிப்பார். சிறிய மாற்றங்கள் இருந்தாலும் அதைச் சுட்டிக்காட்டி சரியாகச் செய்ய அறிவுரை வழங்குவார். அப்படி உருவானதுதான் நினைவிடத்தில் அமைந்துள்ள கலைஞர் உலகம். இது, இந்தியாவின் இரண்டாவது அதிசயம் என உலகம் சொல்லும். கட்டிடப் பணிகளில் ஈடுபாடுள்ள அதிகாரிகளும், பணியாளர்களும் சோர்ந்துவிடாமல் இருக்க, கலைஞரைப் பற்றிய சுவாரஸ்ய சம்பவங்களையும், கலைஞருடன் தனக்கேற்பட்ட அனுபவங்களையும் உற்சாகமாக விவரித்துச் சொல்வார் அமைச்சர். அதனைக் கேட்கக் கேட்க நமக்கு மெய்சிலிர்க்கும். பணிகள் தொய்வில்லாமல் நடக்க, அவர் கொடுத்த உற்சாகம் எங்களுக்கு உதவியது''’என்று தெரிவிக்கின்றனர்.
இருபெரும் தலைவர்களின் நினைவிட வளாகத்தின் முகப்பில், பேரறிஞர் அண்ணா நினைவிடம் -முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் என்கிற பெயர்கள் அழகுற பொறிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், அரசியல் ஆகிய முத்துறைகளிலும் கலைஞர் முத்திரை பதித்த சாதனைகளை விளக்கும் வகையில் 3 வளைவுகள் நினைவிடத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான யோசனையை முதல்வரிடம் தெரிவித்து அதற்கு சம்மதம் வாங்கியவர் அமைச்சர் வேலு.
பொதுப்பணித்துறை பொறி யாளர்கள் (இன்ஜினியர்ஸ்) பலரிடமும் நாம் பேசியபோது, "முதல்வரின் எண்ணங்களுக்கேற்ப முழு அர்ப்பணிப்புடன் நினைவிடப் பணிகளில் கவனம் செலுத்திய அமைச்சர் வேலுவின் வேகத்துக்கு, தமிழக அரசின் நிதித்துறை ஆரம்பத்தில் ஒத்துழைக்க வில்லை. அதாவது, 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவித்து பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வரைபடங்கள் தயாரானது. நினைவிடப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை தேர்வு செய்ய டெண்டரும் விடப்பட்டு, தகுதியான நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்துப் பணிகள் தொடங்கப்பட வேண்டும். ஆனால், தொடங்கப்படவில்லை.
உடனே துறையின் செயலாளர், தலைமை பொறியாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளை அழைத்து ஆலோசித்தார் அமைச்சர் வேலு. பணிகள் தொடங்காதது குறித்து அவர் கேள்வி எழுப்பிய நிலையில், நிதித்துறையில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதற்காக அனுப்பப்பட்ட கோப்புகள் நிதித்துறையில் காத்திருக்கிறது. கோப்புகளுக்கு ஒப்புதலளித்து நிதி விடுவிக்கப் பட்டால்தான் பணிகளைத் தொடங்கமுடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள்.
அந்த சமயத்தில் முதல்வர் ஸ்டாலினும் தலைமைச் செயலகத்தில்தான் இருந்தார். இதனையறிந்து, அவரை தொடர்புகொண்ட அமைச்சர் வேலு, தங்களை சந்திக்க வேண்டும் என சொல்ல, உடனே வாருங்கள் என அழைத்தார் முதல்வர். ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய அதிகாரிகளுடன் உடனே சென்று முதல்வரை சந்தித்த வேலு, நினைவிடப் பணிகளுக்கான ஆயத்த வேலைகள் அனைத்தும் முடிந்தும், பணிகள் தொடங்கப்படாததற்கான காரணங்களை விவரிக்க, அப்போதே நிதித்துறை அதிகாரிகளிடம் பேசி சில உத்தரவுகளைப் பிறப்பித்தார் முதல்வர் ஸ்டாலின்.
அடுத்த 2 மணி நேரத்தில் நிதித்துறையில் கோப்புகள் க்ளியராகி, நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. பணிகளும் துரிதமாகத் தொடங்கின. இதற்கு காரணம் அமைச்சர் வேலுவின் வேகம்தான். சென்னையை விட்டு வெளியூரில் இருந்தாலும்கூட, இன்றைக்கு என்னென்ன பணிகள் நடந்தது? நேற்று முடிக்கவேண்டிய பணிகள் முடிந்ததா? ஏன் முடிக்கப்படவில்லை? என்றெல்லாம் அதிகாரிகளிடம் விசாரித்தபடியே இருப்பார். பணிகளில் சுணக்கம் ஏற்பட்டால் அது எதனால் என்பதையறிந்து உடனே சரி செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் அமைச்சர் வேலு.
ஆறு மாதங்களுக்கு முன்பு ஒருமுறை முதல்வரை சந்தித்த அமைச்சர் வேலுவிடம், நினைவிட பணிகள் எந்த அளவில் இருக்கிறது? என விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின். நடந்துகொண்டி ருக்கும் பணிகள் குறித்து எ.வ.வேலு விவரிக்க, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நினைவிடத்தை நாம் திறக்க வேண்டும். பிப்ரவரி மாதத்தை டெட்லைனாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் முடித்தாக வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன் பிறகு பம்பரம் மாதிரி சுழன்றார் அமைச்சர்.
உத்தரவுகள் போட்டுக்கொண்டேயிருப்பார். அதற்கேற்ப கட்டுமான நிறுவனத்திடம் நாங்கள் வேலை வாங்குவோம். கட்டுமான நிறுவனமும் அமைச்சரின் வேகத்துக்கு ஒத்துழைத்தது. அமைச்சரின் அர்ப்பணிப்பில் திட்டமிட்டபடி பணிகள் முடிந்து இதோ நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது. கட்டடங்களை கட்டும்போது இப்படி விரட்டி, விரட்டி வேலை வாங்குகிறாரே என நினைத்தோம். திட்டமிட்டபடி நினைவிடங்கள் கட்டிமுடிக்கப்பட்டு திறப்பு விழா நடந்து முடிந்தபோது எங்களுக்கு ஏகப்பட்ட திருப்தி... மெய்சிலிர்க்கிறது''‘என்று அமைச்சரின் அர்ப்பணிப்பு உணர்வையும், வேலை வாங்கும் திறமையையும் விவரித்தார்கள் துறையின் பொறியாளர்கள்.
நினைவிடத்தின் கீழே நிலவறைப் பகுதியில் கலைஞர் உலகம் என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே நுழைந்து வலது புறம் திரும்பினால், அங்குள்ள சுவரில் தமிழ்த்தாய் வாழ்த்து பொறிக்கப்பட்டுள்ளது. பல காட்சிகள் டிஜிட்டலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோபாலபுரத்தில் அமர்ந்திருக்கும் கலைஞருடன் "செல்பி' எடுத்துக் கொள்ளும் வகையில் தொழில்நுட்பம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
அன்னை தமிழ்மொழியை செம்மொழி என்று ஒன்றிய அரசாங்கம் எடுத்த முடிவை தெரிவித்து, இதற்கான முழு பெருமையும் கலைஞருக்கே உண்டு என்று சோனியாகாந்தி எழுதிய கடிதமும், அதற்கு கலைஞர் எழுதிய கடிதமும் கலைஞரின் நினைவிடத்தின் இருபுறமும் தமிழ், ஆங்கில மொழிகளில் புத்தகங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
கலைஞரின் பெயரில் நிறைய அறைகள் அமைந் துள்ளன. கலைஞரின் இளமைக் காலங்கள், வரலாற்றில் அவர் இடம்பெற்ற சம்பவங்கள், சந்தித்த போராட்டங்கள், சாதித்த திட்டங்கள் என கலைஞரின் சாதனைகள் அனைத்தும் புகைப்படங்களாக, கலைஞரின் எழுத்தோவியம் எனும் அறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
"நெஞ்சுக்கு நீதி', "குறளோவியம்', "தென்பாண்டி சிங்கம்' உள்ளிட்ட கலைஞரின் 8 நூல்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதனை நம் கைவிரல்களால் தொட்டால் நூல்கள் குறித்த விளக்கங்கள் வீடியோவாக விரிந்து நம்மை ஆச்சரியப்படவைக்கிறது. டிஜிட்டல் உலகத்தில் வாழ்கிறார் கலைஞர். சரித்திர நாயகனின் சாதனை பயணம் அறையில் நுழைந்து பார்த்தால், திருவாரூர் முதல் சென்னை வரை ரயிலில் பயணித்த அனுபவம் கிடைக்கிறது. பயணத்தின் போது ஒவ்வொரு ஊரிலும் கலைஞரின் அரசியல் வாழ்க்கையோடு தொடர்புடைய சம்பவங்களும், நிகழ்வுகளும் காட்சிகளாக விரிகின்றன.
"மகன் தந்தைக்காற்றும் உதவி' எனும் தலைப்பில் கலைஞரும் ஸ்டாலினும் தோன்றும் பிரமாண்டமான படம் மனதை அள்ளும் வகையில் அமைந்துள்ளது. இந்த அறையில், காந்த விசையின் உதவியில், கலைஞர் அந்தரத்தில் மிதக்கும் அறிவியலின் விந்தை காட்சி நம்மை பிரமிக்க வைக்கின்றது. இப்படி கலைஞரோடு தொடர்புடைய அனைத்தும் நினை விடத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நினைவிட சுவர்களில் கலைஞரின் பொன்மொழிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
நினைவிடத்தை விட்டு முழுமையாக நாம் வெளியேறும்போது, கலைஞருடன் நாமும், நம்முடன் கலைஞரும் வாழ்கிறார் என்கிற பிரமிப்பு தோன்றுகிறது. அந்த பிரமிப்பு விலக, வெகுநாட்கள் ஆகும் என்கிற வகையில் ஒவ்வொரு அங்குலத்தையும் பார்த்துப் பார்த்து முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் எ.வ.வேலுவும் செதுக்கியிருக் கிறார்கள்.
தமிழர்களுக்காகவும், தமிழினத்துக்காகவும், மொழிக்காகவும் வாழ்நாள் முழுவதும் உழைத்த கலைஞர் எனும் உன்னத தலைவருக்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பிரமாண்டமான நினைவிடம் உருவாக்கப்பட்டிருப்பது உலகத்தின் எட்டாவது அதிசயமே!