கலைஞரின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தை (ஆகஸ்ட்-7) முன்னிட்டு அவரது நினைவைப் போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்ட மிட்டுள்ளனர் தி.மு.க. உடன்பிறப்புகள். அந்த வகையில், ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக ’கலைஞர் நினைவு மாரத்தான்’ போட்டிகளை மிகப் பிரமாண்டமாக நடத்துகிறார் மாரத்தான் சாதனையாளரும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன்.
கலைஞரின் மறைவுக்குப் பிறகு அவரது நினைவு நாளில் ஒவ்வொரு ஆண்டும் இந்த மாரத்தான் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கொரோனா காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளும் இந்த போட்டிகள் மெய் நிகர் வடிவில் நடந்தது. இந்த ஆண்டு இதனை நேரடியாக நடத்துகிறார் மா.சுப்பிரமணியன். இதற்காக பிரத்யேகமான பல்வேறு புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிர மணியனிடம் பேசியபோது, "தலைவர் கலைஞரின் நினைவுகளைப் போற்றும் வகையில் 2020-ல் இந்த போட்டிக்கான களம் அமைக்கப்பட்டது. அந்தாண்டு நடந்த மாரத்தானில் 8,541 பேர் கலந்துகொண்டு ஓடினார்கள். அவர்களிடம் வசூலிக்கப்பட்ட பதிவுக் கட்டணம் 23,41,776 ரூபாய். இந்த தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக முந்தைய அ.தி.மு.க. அரசின் நிதித்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.ஸிடம் ஒப்படைத் தோம்.
அதேபோல, 2021-ல் நடந்த மாரத்தானில் 19,596 பேர் கலந்து கொண்டனர். இதன் மூலம் கிடைத்த பதிவுக் கட்டணம் 56,02,693 ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்காக முதல்வரிடம் (மு.க.ஸ்டாலின்) வழங்கினோம். இந்தாண்டு ஆகஸ்ட் 7-ல் நடக்கவிருக்கும் மாரத்தானில் ஓடுவதற்கான பதிவுகள் முடிந்துவிட்டன. இதுவரை 42,000 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் மூலம் கிடைக்கும் பதிவுக் கட்டணம் (சுமார் 1 கோடியே 15 லட்சம் ரூபாய்) முழுவதும் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மற்றும் தாய்-சேய் நல மருத்துவமனைகளின் நலன்களுக்காக முதல்வரிடம் ஒப்படைக்கப் படவிருக்கிறது. இதற்காக ஒரு அறக் கட்டளையும் உருவாக்கப்படும். இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர் களோடு வரும் ஏழைகளுக்கு தங்கும் வசதி, உணவு வசதி ஆகியவை அறக்கட்டளை மூலம் ஏற்படுத்தித் தரப்படும்.
கலைஞர் நினைவு மாரத்தான் போட்டிகள் 42 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., 5 கி.மீ. என 4 வழி களில் நடத்தப்படுகிறது. அந்த 4 போட்டிகளில் ஒரு போட்டியை தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. துவக்கி வைக்கிறார். மற்ற 3 போட்டிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மெய்யநாதன் துவக்கி வைக்கிறார்கள்.
இந்த போட்டிகளில் வெற்றி பெறு பவர்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசுத் தொகையை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வரோடு இணைந்து இந்த மேடையைச் சிறப்பிக்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தூதர்கள் பங்கேற்கிறார்கள். உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்த்தவும், சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த போட்டிகள் நடத்தப் படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் நினைவு மாரத்தானில் கலந்து கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருவது மகிழ்ச்சியைத் தருகிறது''’என்கிறார் மிக பெருமிதமாக.
42,000 பேர் கலந்து கொள்ளும் இந்த மாரத்தானில் 9 நாடுகள் மற்றும் இந்தியாவின் 19 மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் ஓடுகின்றனர். மத்திய -மாநில அரசுகளின் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், இங்கிலாந்து நாட்டின் தூதர், திரைத்துறை யினர் என பல்வேறு தரப்பினரும் இதில் பங்கேற்கிறார்கள். வட மாநிலத்தை சேர்ந்த பார்வையற்ற 70 வயது மாரத்தான் வீரர் ஒருவர் இதில் கலந்துகொண்டு 21 கி.மீ. ஓடுகிறார்.
"பார்வையற்ற அந்த முதியவர் தனது கையில் நீண்ட ஒரு தடியைப் பிடித்திருக்க, அந்த தடியின் மற்றொரு முனையை வேறு ஒருவர் பிடித்திருப்பார். அந்த நபர் ஓடும் ஓட்டத்திற்கேற்ப பார்வையற்ற முதியவரும் ஓடுவார். அந்த முதியவரின் ஓட்டம் மிக சிறப்பாகப் பேசப்படும்' என்கிறார்கள் மாரத்தான் வீரர்கள்.
மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு ஓடும் வீரர்களை ஊக்கப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் சென்னைவாசிகள் இதுவரை அறியாத 4 கலைக் குழுக்கள் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்படவிருக்கின்றன. இதற்காக போட்டிகள் நடக்கும் பாதைகளில் 4 இடங்களில் வித்தியாசமான மேடைகள் அமைக்க திட்டமிட்டுள்ளார் அமைச்சர் மா.சு.ப்பிரமணியன். அழிந்துகொண்டிருக்கும் கலைக் குழுக்களை வாழ்விப்பதற்கான முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
மாரத்தான் போட்டி நிறைவு நிகழ்வில், "ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனையாளர்' விருதினை மா.சுப்பிரமணியனுக்கு வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.