வி,ழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல்நிலைய எல்லையில் உள்ளது கோட்டக்கரை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த 55 வயது ஜெயக்குமார், அங்கே இருக்கும் பள்ளியில் சத்துணவுப் பொறுப்பாள ராக இருந்தார். அதோடு தி.மு.க. இளைஞரணி யில் சேர்ந்து கட்சிப் பணிகளையும் செய்து வந்தார்.
இவர் மனைவி, ஏற்கனவே கோட்டக்கரை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளார். இதனால் ஜெயக்குமார் அப்பகுதி மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்.
ஜெயக்குமார், வழக்கம் போல் கடந்த 11-ஆம் தேதி காலையில், தனது வீட்டிலிருந்து திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு தன் டூவீலரில் சென்றார். அங்கு நண்பர்களுடன் உரையாடிவிட்டு, தனது வீட்டுக்கு அவர் திரும்பிவரும் போது, இரும்பை மாகாள ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு கும்பல் அவரை வழிமறித்தது. யார் எதற்காக வழி மறிக்கிறார்கள் என்று ஜெயக்குமார் சுதாரிப்பதற்குள், அந்தக் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டுத் தப்பிவிட்டது.
பலத்த காயத்துடன் அலறித் துடித்த ஜெயக்குமாரை அப்பகுதி மக்கள் ஓடிச் சென்று மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும் அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே ஜெயக்குமாரின் உயிர் பிரிந்துவிட்டது. இது குறித்துத் தகவல் அறிந்த திண்டிவனம் பொறுப்பு டி.எஸ்.பி. அபிஷேக் குப்தா, ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு அடங்கிய போலீஸ் டீம், ஸ்பாட்டுக்கு வந்து விசாரணையில் இறங்கியது. கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
ஜெயக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த ஜிப்மர் மருத்துவமனையில் ஏராளமான பொதுமக்களும் தி.மு.க.வினரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வும் மாவட்ட செயலாளருமான புகழேந்தி, விழுப்புரம் எம்.எல்.ஏ. லட்சுமணன் ஆகியோர் நேரில்வந்து அஞ்சலி செலுத்தி னர். ஜெயக்குமார் படுகொலை செய்யப் பட்ட சம்பவம், பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அந்தப் பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி. கேமராப் பதிவுகளை ஆராய்ந்த போலீஸ் டீம், அதன் அடிப்படையில் ஜெயக்குமாரின் ஊரைச் சேர்ந்த சங்கர் மகனான 20 வயது மனோஜ், சங்கர் மனைவி சரஸ்வதி, இவரது சகோதரி சாந்தி, குமரேசன், சந்துரு உள்ளிட்டோரை தேடினர். இவர்களில் மனோஜ், சரஸ்வதி, சாந்தி ஆகியோரை அதிரடியாக மடக்கிய போலீஸ், அவர்களிடம் விசாரணை நடத்தியது. அப்போது, இருசக்கர வாகன விபத்து காரணமாக நடத்தப்பட்ட பஞ்சாயத்தே கொலைக்குக் காரணம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தது.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல் இதுதான்...
அதே ஊரைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி சங்கர் என்பவரை 2019-ல் அப்பகுதியில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது, ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இது சம்பந்தமாக ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஏழு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சங்கரின் உறவினர் ஒருவர் ஓட்டிவந்த வாகனத்தை, ராயப்பேட்டை மணிகண்டன் என்பவரின் இருசக்கர வாகனம் மோத, இதில் இருதரப்புக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. தன் வாகனம் சேதமானதற்கு மணிகண்டன் நஷ்ட ஈடு கேட்டிருக்கிறார். அதைத் தருவதாகச் சொல்லி அழைத்துச்சென்று அவரை சங்கர் தரப்பு கட்டிவைத்து அடித்ததாம். மேலும், அவரைத் தாக்கிய காட்சியை வீடியோவில் படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி அவரை அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள்.
இதனால் பகைமைத் தீ அதிகரிக்க, இதையறிந்த போலீஸ் டீம், சங்கரின் மனைவி சரஸ்வதி, அவரது தங்கையின் கணவர் குமரவேல் ஆகியோரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, ஊருக்குள் பிரச்சனை எதுவும் வரக்கூடாது என்று எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி உள்ளனர். இதன்பிறகு இரண்டரை ஆண்டுகள் கோட்டைக்கரை கிராமம் அமைதியாகவே இருந்து வந்தது. இருந்தபோதும் மணிகண்டன் தரப்புக்கு ஆதரவாக ஜெயக்குமார் வந்ததால், அவர் மீது கோபம் இருந்திருக்கிறது. இந்த நிலையில் சந்துரு என்பவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அப்போதும் ஜெயக்குமார்தான் இதில் தலையிட்டு சந்துருவை கண்டித்துள்ளார். இதனால் சந்துருவுக்கும் ஜெயக்குமார் மீது கோபம் இருந்திருக்கிறது. இதுபோன்ற விரோதங் களின் அடிப்படையில்தான் ஜெயக்குமார் கொல்லப்பட்டிருக்கிறார்.
சின்னச்சின்ன பிரச்சினைக்கெல்லாம் அரிவாளைத் தூக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருவது அப்பகுதி மக்களை அதிரவைத்திருக் கிறது.
-நமது நிருபர்