ரணி நாடாளுமன்றத் தொகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி, செய்யார், போளூர், வந்தவாசி சட்டன்றத் தொகுதிகளும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி, மயிலம் சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன.

முன்பு இந்தத் தொகுதி வந்தவாசி தொகுதியாக இருந்தபோது, 1971-க்குப் பின்னர் இந்த தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறவே யில்லை. இதனால் தொகுதியை காங்கிரஸ், தா.ம.க., பா.ம.க. என கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கிவருகிறது, வெற்றியும் பெறுகிறது. இதனால் இது காங்கிரஸ் தொகுதியாக அடையாளப்படுத்தப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க. போன்றவை இடம்பெறும்போது இந்த தொகுதியை கேட்டு வாங்கிப் போட்டியிட்டு, வெற்றிபெறுகின்றன. 2019-ல் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர்களில் ஒருவரான விஷ்ணுபிரசாத் போட்டியிட்டு வெற்றிபெற்று தொகுதியின் எம்.பி.யாக இருக்கிறார்.

arani

தொகுதிக்கே வருவதில்லை என காங்கிரஸ் கட்சியினரே விஷ்ணுபிரசாத்தை சமூக வலைத் தளங்களில் விமர்சித்துவருகின்றனர். தொகுதி யில் என் பெயரை டேமேஜ் செய்வதே எங்கள் கட்சியின் மாவட்ட தலைவர் வி.பி. அண்ணாமலைதான் என முடிவுசெய்து தனது டெல்லி லாபி மூலமாக திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவராக இருந்த வி.பி.அண்ணாமலைக்கு பதில் தனது ஆதர வாளரான பிரசாத்தை மாவட்டத் தலைவராக தேசியத் தலைமை மூலமாக நியமித்து, அறிவிக்கச் செய்துவிட்டார்.

“நான் தலைவர் இல்லை என மாநில தலைவர் அழகிரி அறிவிக்கட்டும், அதுவரை நான்தான் மாவட்டத் தலைவர்” எனச் சொல்லிக்கொண்டு செயல்படுகிறார் அண்ணாமலை. இருவரில் யார் தலைவரென கதர் சட்டையினர் குழம்பிக்கொண்டு இருக்கின்றனர். இந்த கூத்துக்களுக்கு மத்தியில் மீண்டும் எம்.பி. சீட் வாங்கினால் தி.மு.க.வினர் தன்னை வெற்றிபெற வைத்துவிடுவார்கள் என ஆரணி தொகுதியை மீண்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கவேண்டுமென அறிவாலயத்தின் கருணைப் பார்வைக்காக இப்போதே காய்நகர்த்துகிறார். டெல்லியில் லாபி செய்து எம்.பி. சீட் வாங்க முயற்சிக்கிறார் அண்ணாமலை, இவருக்கு அழகிரியும் சப்போர்ட் செய்கிறார். இவர்கள் இருவரைத் தொடர்ந்து சிறுபான்மையினத்தவரும், சென்னையில் செட்டிலாகிவிட்ட மார்வாடியுமான வந்தவாசி வசந்தராஜ் சீட் கேட்கும் ஆசையில் உள்ளார் என்கின்றனர்.

"சிட்டிங் எம்.பி.யை அழைச்சிக்கிட்டு ஓட்டுப் போடுங்கன்னு போனால் நம்ம கட்சிக்காரங்களே ஓட்டுப் போடமாட்டாங்க' என தலைமைக்கு சொல்லிவரும் தி.மு.க.வினர், இந்தமுறை கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கக்கூடாது, நாமே போட்டியிடவேண்டும், ஆரணி நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் ஆரணி, போளூர் சட்டமன்றத் தொகுதிகள் அ.தி.மு.க. வசமும், மயிலம் தொகுதி பா.ம.க. வசமும் உள்ளது. இந்த தொகுதிகளில் கட்சி வலிமை பெறவேண்டும், அடுத்த சட்டமன்ற தேர்த லில் நாம் வெற்றி பெறவேண்டுமானால் தி.மு.க.வே போட்டியிடவேண்டும் என திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் அமைச்சர் எ.வ. வேலுவிடம் வலியுறுத்துகின்றனர்.

தி.மு.க. இந்த தொகுதியில் நிற்கும்பட்சத்தில் வடக்கு மா.செ. தரணிவேந்தன் சீட் வாங்கிவிட வேண்டும் என முயற்சி எடுக்கிறார். வந்தவாசி சட்டமன்றத் தொகுதி ரிசர்வ் என்பதால் வந்தவாசி ஒன்றியத்தைச் சேர்ந்த தரணிவேந்தனால் போட்டியிடமுடியவில்லை. எம்.எல்.ஏ.வாகத்தான் ஆக முடியவில்லை எனக்கு எம்.பி. சீட் வாங்கித் தந்து, எம்.பி.யாக்குங்கள் என அமைச்சர் எ.வ.வேலுவை சுற்றி வருகிறார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதியின் கணவரும், வெம்பாக்கம் ஒன்றிய செயலாளருமான சீனுவாசன், எனக்கு எம்.பி. சீட் வாங்கித் தாங்கண்ணே என அவரும் அமைச்சரை கிரிவலம் வந்துகொண்டு இருக்கிறார். ஆரணி முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம், தன் மகனான வர்த்தகர் அணியின் மாவட்ட அமைப்பாளர் பாபுவுக்கு கேட்க முடிவு செய்துள்ளார்.

ff

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி தொகுதியி லுள்ள ஜெகத்ரட்சகனின் உறவினரான தே.மு.தி.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு வந்த சிவா என்கிற ஒப்பந்ததாரர், எம்.பி. சீட் வாங்கிவிட வேண்டுமென ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் வேலு, மஸ்தானை சுற்றிவருகிறார். மயிலம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. மருத்துவர் மாசிலாமணி, எக்ஸ் எம்.எல்.ஏ. மேல்மலைய னூர் செந்தமிழ்ச்செல்வன் போன்றோரும் சீட் கேட்கும் முடிவில் உள்ளனர்.

அ.தி.மு.க.வில் செய்யார் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. வும், கட்சியின் அமைப்புச் செய லாளருமான முன்னாள் அமைச்சர் முக்கூர்.சுப்பிரமணியிடம், ஆரணி தொகுதியில் நில்லுங்கண்ணே எனக் கேட்டுள் ளார் இ.பி.எஸ். எம்.பி. தேர்தலில் நிற்கிற அளவுக்கு என்னிடம் பணமில்லை, எனக்கு எம்.எல்.ஏ. சீட்டே தாங்க என்றுள்ளார். எம்.எல்.ஏ. சீட் வாங்கி னால்தான் மந்திரியாக முடியும் என இப்போதே திட்டமிட்டு எம்.பி. சீட் வேண்டாம் என்கிறார். சுப்பிரமணி எம்.பி.யாகிவிட்டால் எம்.எல்.ஏ. சீட்டுக்கு போட்டி இருக்காது என செய்யார் முன்னாள் எம்.எல்.ஏ.வான மா.செ. தூசி.மோகன், முக்கூராருக்கு சீட் தந்தால் வெற்றிபெறுவார் என அவரை தலைமைக்கு சிபாரிசு செய்துள்ளார்.

ஆரணி தொகுதி சீட் எனக்குத் தாங்க எனக்கேட்டு வருகிறார் போளூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், மத்திய மாவட்டச் செயலாளருமான ஜெயசுதா. ஜெயசுதாவுக்கு முன்னாள் அமைச்சரும், சிட்டிங் ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான சேவூர்.ராமச்சந்திரன், மா.செ. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. இருவரும் சிபாரிசு செய்கின்றனர். ஜெயசுதாவை நிறுத்த லாமா என இ.பி.எஸ். தரப்பில் ஆலோசனை நடந்துள்ளது. ஜெ. பேரவை மாவட்டச் செயலாளராக இரண்டு வாரத்துக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஆரணி நகரமன்ற துணைத்தலைவர் பாரி.பாபு, எம்.பி. சீட் கேட்பது பற்றி தனது ஆதரவாளர்களிடம் ஆலோசித்துள்ளார். வன்னியர் கோட்டாவில் ஆரணி தெற்கு ஒ.செ. கஜேந்திரன் சீட் கேட்டு முன்னாள் அமைச்சரான சி.வி. சண்முகத்தை சந்தித்தார். அவர் சிபாரிசில் இ.பி.எஸ்.சை சந்தித்தபோது, கட்சிக்கு 20சி கட்டுங்க தேர்தலின்போது 40சி தரப்படும் எனச்சொல்ல இவரும் பணத்தை தயார் செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு சீட் உறுதி என்கிறார்கள் ஆரணி ரத்தத்தின் ரத்தங்கள்.

பா.ம.க. எந்த கூட்டணிக்குப் போனாலும் ஆரணி தொகுதியை கேட்கும் பட்டியலில் வைத்துள்ளது. இந்த தொகுதி கிடைக்கும்பட்சத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியை நிறுத்த ஆலோசிக்கிறது. அவர் இல்லாத பட்சத்தில் செஞ்சி முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமாரை வேட்பாளராக நிறுத்த லாமா, ஆரணி மா.செ. வேலாயுதத்தை நிறுத்தலாமா என தலைமை ஆலோசிக் கிறது. தே.மு.தி.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இதனால் கட்சி நிர்வாகிகள் சீட் தந்தால் வேண்டாம் எனச் சொல்லிவிட வேண்டும் என நினைக்கிறார்கள். அதையும் தாண்டி கட்சித் தலைமை நிற்கச்சொல்லி நிதியும் தருவதாக இருந்தால் மா.செ. அனக்காவூர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் பாஸ்கர் இருவரும் சீட் கேட்க முடிவு செய்துள்ளனர்.

அ.தி.மு.க.விலிருந்து பா.ஜ.க.வில் இணைந்த போளூர் ஏழுமலை தற்போது வடக்கு மாவட்டத் தலைவர் பதவியில் உள்ளார். அவருக்கு எம்.பி. பதவி மீது ஆசை வந்துள்ளது. நான் சுயேட்சையாக எம்.எல்.ஏ. தேர்தலில் நின்று அ.தி.மு.க.வை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடம் வந்தவன், அதனால் எம்.பி. சீட் தாங்க. வன்னியர்கள் எல்லாம் எனக்கு ஓட்டு போடுவாங்க எனச்சொல்லி சீட் கேட்கிறார். ஆரணியில் அரசுப்பள்ளி தலைமையாசிரியராக இருந்தவர் சைதை சங்கர். பள்ளி ஆசிரியராக இருந்தாலும் வட்டித் தொழில், பைனான்ஸ் தொழிலில் கோடிகளில் வருமானம் வந்து சொத்து சேர்த்தவர். சில மாதங்களுக்கு முன்பு அரசு வேலைக்கு வி.ஆர்.எஸ். தந்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்து மத்திய அரசு நலத்திட்டப் பிரிவின் மாநிலச் செயலாளர் பதவி வாங்கியுள்ளார். மாநில தலைவர் அண்ணாமலைக்கு லம்பாக கவனிக்கிறேன் எனச்சொல்லி சீட் கேட்டு வருகிறார்.

Advertisment