அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குள், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி என 6 சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. சிட்டிங் எம்.பி.யாக இருப்பவர் ஒன்றிய முன்னாள் இணைஅமைச்சரான தி.மு.க.வின் ஜெகத்ரட்சகன்.
ஏற்கெனவே இந்த தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றவர், மூன்றாவது முறையாக இந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பணத்தை தண்ணீராக செலவுசெய்து வெற்றிபெற்றார். ராணிப்பேட்டை மா.செ.வும் அமைச்சருமான காந்தியுடன் இணைந்து அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்துகொண்டார். காட்பாடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எப்போதாவது கலந்துகொள்வார். எம்.பி., தொகுதிக்கே வருவதில்லை, அவரை சந்திக்கவேண்டுமென்றால் சென்னையிலுள்ள அவரது வீட்டுக்கு தான் செல்லவேண்டும் என்கிற குறை சொந்தக் கட்சியினரிடமே உண்டு. மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் ஜெகத்ரட்சகன் கலந்துகொள்வதில்லை. அவருக்கு மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடும் ஆர்வம் இல்லை, அதனால் தொகுதிப் பக்கம் வருவதில்லை என்கிறார்கள்.
இதுபற்றி அவர் தரப்பில் விசாரித்தபோது, "தொகுதி மக்கள் அவரை சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமணத்துக்கான உதவி, கிராமத்துக்கு தேவை யான உதவிகளை கேட்பவர்களுக்கு செய்து தந்து கொண்டு தான் இருக்கிறார்'' என்கிறார்கள். அரக்கோணம் தொகுதிக்குள் மெஜாரிட்டியாக வன்னியர்கள் அதிகளவு இருப்பதால் இந்த தொகுதியை ஜெகத் விரும்புகிறார். தலைமை சீட் தந்து எங்கு நிற்கச்சொல்கிறதோ அங்கு நிற்கலாம் என்ற மனநிலையில் உள்ளார். தலைமை அவரை மீண்டும் அரக்கோணம் தொகுதியில் களமிறக்க லாமா அல்லது ஜெகத் விரும்பும் வேறு தொகுதியில் களமிறக்கலாமா என யோசிக்கிறது'' என்கிறார்கள்.
தி.மு.க.வில் ராணிப்பேட்டை மா.செ.வும் சிட்டிங் அமைச்சருமான காந்தியின் மகனும், சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச்செய லாளருமான விநோத் காந்தி, மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்துகொள்கிறார். அரசு நிகழ்ச்சிகளிலும் அவருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. நிழல் அமைச்சராக வலம்வரும் அவரும் எம்.பி. தேர்தலில் நிற்க விரும்புகிறார். அமைச்சர் காந்தியுடன் நல்ல நட்பிலுள்ள ஜெகத்ரட்சகன் இந்த தொகுதியில் நிற்காதபட்சத்தில் காந்தி தனது மகனுக்காக சீட் கேட்கும் எண்ணத்தில் உள்ளார் என்கிறார்கள். எம்.பி. சீட் ஆசையில் விநோத் காந்தியும் இருப்பதால் தி.மு.க.வின் மற்ற பிரமுகர் கள் சீட் கேட்கத் தயங்குகின்றனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரமணியின் பினாமியாக இருந்தவர் ஆற்காடு தொழிலதிபர் சாரதி. இவர் இரண்டு ஆண்டுக்கு முன்பு அ.தி.மு.க. விலிருந்து தி.மு.க.வுக்கு வந்தார். அவருக்கு கடந்த உட்கட்சி தேர்தலின் போது மாவட்ட பொருளாளர் பதவி தந்துள்ளார் காந்தி. கட்சியில் உழைத்த, உழைக்கும் பலர் உள்ள நிலையில் கட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக் குள் எம்.பி. ஜெகத்ரட்சகனின் சாதி பாசம், சிபாரிசில் சாரதிக்கு மாவட்ட பொருளாளர் பதவி தரப்பட்டது. இப்போது எம்.பி. சீட் கேட்பது அவரது உரிமை, ஆனால் கட்சித் தலைமை சீட் தந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்கள் மூத்த நிர்வாகிகள்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்கி னால் கட்சியின் மாநில துணைத் தலைவராக உள்ள நாசே.ராமச்சந்திரன், தனக்கோ அல்லது தனது மகன் நாசே.ராஜேஷுக்கோ சீட் கேட்கலாம் என நினைக்கிறார். அவர் யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர், அவரது சமுதாய வாக்குகள் 5 சதவிதம் அளவுக்குத்தான் இருக்கிறது, இருந்தும் கடந்த சில ஆண்டுகளாக இந்தத் தொகுதியில் சில பணிகளைச் செய்து வைத்திருக்கிறார். அதேபோல், சோளிங் கர் முன்னாள் எம்.எல்.ஏ.வான அருள் அன்பரசு கேட்பார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
அ.தி.மு.க.வில் அரக்கோணம் முன்னாள் எம்.பி. திருத்தணி அரிக்கு மீண்டும் சீட் தந்து அவரை நிறுத்த முடிவு செய்து அவரிடம் இ.பி.எஸ். கேட்டபோது, "எனக்கு எல்.எல்.ஏ. சீட் தாங்கண்ணே, எம்.பி. சீட் வேண் டாம்'' எனச் சொல்லியுள்ளார். "தி.மு.க.வில் ஜெகத்ரட்சகன் நிற்கிறாருன்னா சாதிரீதியாக நீங்க நின்றால்தான் சரியாக வரும்'' எனச் சொல்லியுள்ளார். பதிலுக்கு, "அவர் அளவுக்கு என்னால் செலவு செய்ய முடியாது'' எனச் சொல்லிவிட்டார். ராணிப்பேட்டை மேற்கு மா.செ.வாக சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப் பட்ட, கடந்த எம்.எல்.ஏ. தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் வேட்பாளராக நின்று தோல்வியை சந்தித்த முன்னாள் அமைச்சர் வீரமணி ஆதரவாளரான சுகுமார், "தி.மு.க.வில் 5 சதவீதமே உள்ள நாயுடு சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர் காந்தி மகன் விநோத் நின்றால், தொகுதியில் வன்னியர்களுக்கு அடுத்தபடியாக முதலியார் ஓட்டுக் களே அதிகம், இளைஞருடன் இளைஞர் மோதினால் சரியாக இருக்கும் என்கிற கணக்குப்படி முதலியார் சமுதாயத்தை சேர்ந்த என் மகன் கோபிநாத்தை நிறுத்தினால் சரியாக இருக்கும்'' என, காரணங் களை அடுக்கி சீட் கேட்டுள்ளார். "20 கோடி கட்டுங்க, உங்க மகன் ஜெயிச் சிட்டால் அடுத்த எம்.எல்.ஏ தேர்த லில் நீங்கள் சீட் கேட்கக்கூடாது'' என கண்டிஷன் போட்டதும் பின்வாங்கிய தாக கூறப்படுகிறது. "திருத்தணி அரிக்கு சீட் தரவில்லை என்றால் வன்னியர் கோட்டாவில் எனக்கு தாருங்கள்'' என வேலூர் முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை கேட்கிறார். இதற்காக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனு சாமி, வீரமணி ஆகியோரைச் சந்தித்துள்ளார்.
இதற்கிடையே தொகுதியில் 1 சதவீத ஓட்டுக்களே உள்ள மைனா ரிட்டி சமுதாயமான விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த சோளிங்கர் பேரூராட்சி யின் முன்னாள் சேர்மன் விஜயனை, இ.பி.எஸ். டிக் செய்துவிட்டார் என்கிற தகவலும் அ.தி.மு.க. வட்டாரத்தில் உலாவுகிறது. விஜயனை அழைத்து "15 கோடி ரூபாய் தலைமையிடம் கட்டவேண்டும். தேர்தலின் போது 40 கோடி தேர்தல் செலவுக்கு திருப்பித் தரப்ப டும்'' என இ.பி.எஸ். கூறியுள்ளார். விஜயனும் சரியெனப் பணம் தயார் செய்து விட்டார். கடந்த வாரத்தில் திருவள் ளூர் மா.செ.வும் முன்னாள் அமைச்ச ரான ரமணா, ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாவட்டச் செய லாளர்கள் ரவி எம்.எல்.ஏ., சுகுமார், வேலூர் மாநகர செயலாளர் அப்பு வுடன் சென்று இ.பி.எஸ்.ஸை சந்தித்து பூங்கொத்து தந்துவிட்டு வந்துள்ளார். அவருக்கு சீட் உறுதியாகிவிட்டது என்கிற தகவல் ரத்தத்தின் வட்டாரங்களில் உலாவுகிறது.
பா.ம.க.வில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றினால் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாம் என்கிற மனநிலையில் மருத்துவர் ராமதாஸ் உள்ளார். அதற்கு எதிர் மனநிலையில் அன்புமணி உள்ளார். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என எந்தக் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் அரக்கோணத்தை வாங்கிவிட வேண்டும் என பா.ம.க. விரும்புகிறது. பா.ம.க.வுக்கு அரக்கோணம் தொகுதி கிடைக்கும் பட்சத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சராக இருந்த ஏ.கே.மூர்த்தியை இந்தத் தொகுதியில் நிறுத்த 99 சதவிகிதம் வாய்ப்பு என்கிறார்கள் பா.ம.க.வினர். அவர் இல்லாதபட்சத்தில் கூட் டணியைப் பொறுத்து சிலர் கேட்கும் மனநிலை யில் உள்ளதாகத் தெரி கிறது.
அ.ம.மு.க.வில் சோளிங்கர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்திபனை இங்கே களமிறக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெற்றி பெற முடியாத தற்கு நாம் எதற்கு களமிறங்க வேண்டும் என யோசிப்பவர், கட்சியிலிருந்து வேறு யாரை நிறுத்தலாம் எனத் தேடலைத் துவங்கியுள்ளார். அதே நேரத்தில் அ.ம.மு.க. - பா.ஜ.க. - ஓ.பி.எஸ். கூட்டணி அமைவதற்கான வாய்ப்புள்ளதால் ஓ.பி.எஸ். அணிக்கு தள்ளிவிடலாம் என்கிற கணக்கு அ.ம.மு.க. பார்த்திபன் தரப்பில் உள்ளது என்கின்றனர்.
தே.மு.தி.க.வினரோ தேர்தல் பரபரப்பிலேயே இல்லை. தங்கள் இருப்பை வெளிப்படுத்தவே தேர்தலில் நிற்கும் கட்சி நா.த.க. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் ராணிப் பேட்டையை சேர்ந்த சல்மான். இவர் அரக்கோணம் தொகுதியில் நிற்க விரும்புகிறார். இல்லாதபட்சத்தில், பெண் பிரதிநிதித்துவ கோட்டாவில் தனது மனைவி தாரிகாவை வேட்பாளராக்க முயற்சிக்கிறார் என்கிறார்கள். ஆக, பரபரப்புக்குப் பஞ்சமில்லாமலிருக்கிறது அரக்கோணம் தொகுதி!